கூடாது குழந்தை திருமணம்

குழந்தைகளை பாதுகாப்போம் என்ற அரசுசாரா அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில் இந்தியாவில் 18 வயதாகும் முன்பே 47 சதவீத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
Updated on
2 min read

குழந்தைகளை பாதுகாப்போம் என்ற அரசுசாரா அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில் இந்தியாவில் 18 வயதாகும் முன்பே 47 சதவீத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
144 நாடுகளில் குழந்தைத் திருமணம், பள்ளிப் படிப்பு, பேறுகால இறப்பு, தேசிய அரசியலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் போன்ற பல வரையறைகளின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அதில் பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் 3 சிறுமிகளுக்கு திருமணம் நடந்தால் அதில் ஒரு சிறுமி இந்தியாவை சேர்ந்தவர் எனஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை பிகாரில் அதிக அளவு (68 சதவீதம்) குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகிறதாம். இதனைஅடுத்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் 51.9 சதவீதம் முதல் 68.2 சதவீதம் வரை குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன.
இந்தியாவில் இது அதிகரித்து வருவதாக கூறும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுதுறை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய குற்றவியல் ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தேசிய அளவில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 2013-இல் 222 வழக்குகளும், 2012-இல் 168 வழக்குகளும், 2011-இல் 113 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்ந்தால் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 14 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் குழந்தைத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறது ஐ.நா. மக்கள்தொகை நிதியம்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குறைந்திருந்த குழந்தைத் திருமணங்கள் தற்போது மீண்டும் தலைதூக்கி வருவது கவலையளிக்கிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர்,சிவகங்கை, விழுப்புரம், திருவள்ளுர் போன்ற பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய வறட்சி மாவட்டங்களில்தான் இது அதிகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தமிழக மலை கிராமங்களில் நடைபெறும் திருமணங்களில் 70 சதவீதம் குழந்தைத் திருமணம் என்கிறது ஆய்வு.
2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி சென்னையில் மட்டும் குழந்தைத் திருமணமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 480. கோவையில் 3 ஆயிரத்து 25, மதுரை, திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் தலா 2 ஆயிரத்துக்கும் அதிகம்.
2011-இல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 82 லட்சத்து 52 ஆயிரம். இவர்களில் 62 ஆயிரத்து 500 பேர் திருமணமானவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
2014-இல் அளிக்கப்பட்ட மத்திய குற்றவியல் ஆவண காப்பகத்தின் தகவல்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன என்பது தெரியவருகிறது. 2014-இல் இந்தியா முழுவதும் இது தொடர்பாக 275 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைத் திருமணத்துக்கு முக்கிய காரணம் வறுமை, ஆணாதிக்கம், கல்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாக கருதுவது, சமூகத்தில் பெண்ணை அடிமைப்படுத்துவது, வரதட்சனை கொடுமை, குறைந்துவரும் பாலின சதவீதம் போன்றவைதான்.
மேலும் இப்போது அதிகரித்துவரும் பாலியல் கொடூரங்களை கண்டு பயந்துபோகும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்துவைக்கும் முடிவில் இறங்குகின்றனர் என்பதும் அதிர்ச்சியான விஷயம்.
மேலும் போதுமான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இல்லாமல் இருப்பது. வீட்டின் அருகில் பள்ளி இல்லாமல் இருப்பது. பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதியின்மை ஆகிய காரணங்களாலும் சிறுமிகள் படிப்பு நிறுத்தப்பட்டு திருமணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம் பெயரும் அன்றாட கூலிகளுக்கு பருவமடைந்த பெண்களை பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது. எனவே பிழைப்புக்காக இடம் பெயர்வதற்கு முன்பு பெண்ணை யாரிடமாவது ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்து திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.
குழந்தைத் திருமணத்தை தடுப்பது தொடர்பாக பல சட்டங்கள் உள்ளன. இருந்தும் இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் தடுக்க முடியவில்லை.
கட்டாய கல்வி சட்டத்தை 18 வயது வரை அதிகரித்து மேல்நிலை படிப்பை அனைவருக்கும் பொதுவானதாக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆண் பெண் பாகுபாட்டை முற்றிலுமாக களைய வேண்டும். வரதட்சிணை, குழந்தைத் தொழிலாளர் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான பிரசாரத்தை வலுபடுத்திட வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலமாக குழந்தைத் திருமணத்தை பற்றி குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தல் வேண்டும்.
குழந்தைத் திருமணத்திற்கு முடிவுகட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய - நகர அளவில் சமூகத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், அப்பகுதி பொதுமக்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்கலாம். திருமண பத்திரிக்கை அச்சிடும்போது மணமகன், மணமகள் வயதை குறிப்பிடலாம்.
இதுபோன்ற குறைந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் சிறுமிகள் பிஞ்சிலே கருகிவிடுவார்கள். பெண் அடிமைதனம் வளரும். உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை அரசும் மக்களும் இணைந்து எடுப்பதன் மூலம் குழந்தைத் திருமணத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com