முயற்சிதான், தீர்வல்ல!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விபத்துகளில் சிக்கி உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விபத்துகளில் சிக்கி உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பொதுவாக சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் இயற்கை மரங்கள் அல்ல. செயற்கை மரணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மீறுதல், சாலைகள் சரியில்லாமல் இருப்பது - இப்படி எந்தக் காரணமாக இருந்தாலும் அவை செயற்கைக் காரணங்களே.
அதாவது, மரணத்தை நாமே வலிய சென்று விலைக்கு வாங்குவதற்குச் சமமானதாகும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 4 நிமிடங்களுக்கு ஒருவர் இறப்பதாகவும், சாலை விபத்துகளில் தினமும் 16 குழந்தைகள் இறப்பதாகவும் அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.
குழந்தைகள் எப்படி சாலை விபத்தில் இறக்கிறார்கள்?
சாலைகளில் விளையாடுவது, காலை, மாலை வேளைகளில் பள்ளி விட்டு வரும்போது, பள்ளி வாகனங்களில் செல்லும்போது - இப்படி பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக, பெற்றோருடன் பைக்கில் செல்லும்போது விதிகளை மீறி 2 அல்லது 3 குழந்தைகளை ஏற்றிச் செல்லுதல் காரணமாக 2 சதவீதம் குழந்தைகள் இறப்பதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.
அதேபோல, தினமும் நிகழும் 1,214 சாலை விபத்துகளில் சுமார் 400 பேர் வரை இறக்கின்றனர். தமிழகத்தில் 2001-இல் நிகழ்ந்த 51,978 சாலை விபத்துகளில் 9,571 பேர் இறந்துள்ளனர்.
தொடர்ந்து 2002, 2003, 2004 என்று ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 15,000 பேர் வரை இறந்துள்ளனர்.
2015- இல் 69,054 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 15,642 பேர் இறந்துள்ளனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 60,000 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் அதில், 15,000 பேர் வரை இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சாலை விபத்துகளைப் பொருத்த வரையில் 55 சதவீத விபத்துகள் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ளதாகவும், 85 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலைகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் மட்டும் இந்த அளவுக்கு விபத்துகள் நிகழக் காரணம், அதிவேகம், சாலை விதிகளை மீறுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
சாலை விபத்துகளுக்கு மற்றுமொரு முக்கிய காரணம் வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கமடைந்திருப்பதுதான். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கொரு மதிவண்டி இருப்பதே பெரிய விஷயமாக இருந்தது.
இன்றைக்கு வீட்டுக்கு குறைந்தது இரண்டு இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. சுலப மாத தவணையில் கார் கிடைப்பதால், வீட்டுக்கொரு கார் இருப்பதும் சகஜமாகி விட்டது.
ஓரளவு வசதி படைந்த நடுத்தர வர்க்கத்தினர் கார் வைத்திருப்பதை கெளரவமாகக் கருதும் மனநிலையை விளம்பரங்கள் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. இதனால் வாகனப் பெருக்கம் உருவாகியுள்ளது. ஆனால், அந்த வாகனங்களை எங்கே ஓட்டுவது?
சாலைகளின் தரமின்மை, விரிவாக்கம் செய்யப்படாமை இதுபற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகனம் விற்க வேண்டும். மக்களுக்கு வீட்டில் ஒரு வாகனம் நிற்கவேண்டும் அவ்வளவுதான்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தினமும் 6,210 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மாதந்தோறும் 1,36,622 வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. ஆனால், அவற்றை ஓட்டத்தான் நல்ல சாலைகள் இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் வீணவதோடு, சுற்றுப்புறச் சூழலுக்கு கேடும் நிகழ்கிறது. மேலும், மனித ஆற்றலும் விரயமாகிறது.
மேலும், புவியில் இருக்கிற ஆற்றல் மூலங்களை எல்லாம் நாமே அபகரித்துக் கொண்டால், எதிர்கால சந்ததிக்கு என்ன மிஞ்சும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
வெளிநாடுகளில் இவற்றையெல்லாம் உணரத் தலைப்பட்டுள்ளனர். எனவே எரிபொருள் வாகனங்களைப் பெருமளவில் தவிர்த்துவிட்டு, அங்கு பொதுப் போக்குவரத்துக்கு மாறியுள்ளனர்.
குறைவான தூரமுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் மிதிவண்டியிலோ அல்லது நடந்தோ செல்கின்றனர்.
பல நாடுகளில் மிதிவண்டிக்கென்றே தனிப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாமோ அது பற்றிச் சிந்திப்பது கூட இல்லை. இதனால் சுற்றுப்புற மாசு ஏற்பட்டு, தில்லி போன்ற நகரங்கள் விழி பிதுங்கிநிற்கின்றன.
தற்போதைய சூழலில் மத்திய அரசு புதிய சாலைப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தப்படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை பல மடங்காக அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் விபத்துகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது. இது ஒரு முயற்சிதான். நிச்சயமான தீர்வல்ல.
எனவே சாலை விதிகளை மதித்தல், வாகனப் பெருக்கத்தைக் குறைத்தல், தரமான சாலைகளை அமைத்தல் இவையே நிரந்தரத் தீர்வு வழிவகுக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com