

மனிதர்கள் அறிவு கொண்டவர்கள். அதன் வழியாக அதிகாரம் பெறுவதில் பேராசைப் பிடித்தவர்கள். சமூக நிகழ்வுகளும், சரித்திர சம்பவங்களும் அதனையே மெய்ப்பித்துக் கொண்டு வருகின்றன. அதற்கு முற்காலம், நிகழ்காலம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. எல்லா காலத்திலும் பிரச்னைகளை உருவாக்கி, எளிய மக்களை காவு கொடுத்து காரியம் சாதித்துக் கொள்கிறார்கள்.
அதற்கு சமீபத்திய நிகழ்வு காவிரி ஆறு. அமைதியாக தண்ணீர் ஓடி கொண்டிருந்த காவிரி ஆறு அதிகார வெறி பிடித்தவர்களின் கரங்களில் சிக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது. அது காவிரி ஆற்றின் பிரச்னை அல்ல. வாக்கு வங்கி அரசியலில் காவிரி பலி இடப்படுகிறது.
காவிரி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் குடகு பகுதியில் உற்பத்தியாகி மைசூரு வழியாக ஓடி வந்து தர்மபுரி, சேலம், கரூர், ஈரோடு மாவட்டங்களைத் தாண்டி திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் வழியாக பாய்ந்து நாகை மாவட்டத்தில் பூம்புகார் என்ற காவிரிபூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. காவிரி 765 கி.மீ. ஓடி வருகிறது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
காவிரி ஆறு தண்ணீர் ஓடிவரும் ஆறுதான் என்றாலும் அது கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, நர்மதா, கிருஷ்ணா, கோதாவரி போல ஜீவநதி இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ காலத்தில் பொழியும் தண்ணீரே காவிரி ஆற்றில் ஓடிவருகிறது.
பெருமழை பொழிந்தால் நிறைய தண்ணீர் வருகிறது. மழை பொய்த்துப் போனால் நீர் வரத்து குறைந்து போகிறது. குறைவாக இருக்கும் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதுதான் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் உள்ள பிரச்னை.
தண்ணீர்தான் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம். நீரின்றி எந்த உயிரும் ஜீவிக்க முடியாது. அதனை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லவே யுனெஸ்கோ நிறுவனம் மார்ச் 22-ஆம் தேதியை சர்வதேச தண்ணீர் தினமாக அறிவித்திருக்கிறது.
இந்திய ஆறுகளிலேயே குறைந்த தூரம் ஓடிவரும் புனித நதியாகவும், வேளாண்மைக்கு அதிகமாகப் பயன்படும் ஆறாகவும் காவிரி ஆறு இருந்து வருகிறது. சிலப்பதிகாரம் உட்பட பல இலக்கியங்களில் காவிரி ஆறு பாடப்பட்டு உள்ளது.
1,800 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ நாட்டை ஆண்ட கரிகால சோழன் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணைக் கட்டி தண்ணீரைத் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்தினான்.
இன்றும் கல்லணை இருக்கிறது. அதுதான் காவிரியில் கட்டப்பட்ட முதல் அணை. அது தண்ணீர் ஓடும் ஆற்றில் அணை கட்டும் தொழில்நுட்பத்துக்கு சாட்சியாக இருக்கிறது.
மைசூரை ஆண்ட கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் பொறியாளராக இருந்த விஸ்வேஸ்வரய்யா காவிரி ஆற்றின் குறுக்கே கண்ணம்பாடி என்ற இடத்தில் ஓர் அணையைக் கட்டி தண்ணீரைத் தேக்கி மைசூரின் கரிசல் நிலங்களை நெல்லும், கரும்பும் விளையும் நிலங்களாக்கலாம் என்ற யோசனை கூறினார்.
கர்நாடகத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட குடகாக இருந்தாலும், அது ஓடி கடலில் கலக்கும் பகுதி வரையில் சென்னை ராஜதானியில் இருந்தது. எனவே காவிரி ஆற்றில் மைசூரு பகுதியில் அணைக் கட்டிய பிறகு எவ்வாறு நீரைப் பகிர்ந்து கொள்வது? எத்தனை ஏக்கர் நிலம் காவிரி தண்ணீர் பாசனத்திற்குள் கொண்டுவருவது என்பது பற்றியெல்லாம் ஆலோசிக்கப்பட்டது.
1924-ஆம் ஆண்டில் மைசூரு அரசுக்கும், சென்னை ராஜதானி நிர்வாகத்திற்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அது ஐம்பதாண்டு கால ஒப்பந்தம். பின்னர் புது ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டியது என்று குறிப்பிடப்பட்டது.
காவிரி ஒப்பந்தத்தின்படி, கேரளாவில் வயநாட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் கபினி ஆற்றிலோ, மைசூரில் தொடங்கி காவிரியில் இணையும் ஹேமாவதி, ஹாரங்கி ஆற்றிலோ அணைகள் கட்டி காவிரியின் நீர் பெருக்கைத் தடுக்கக் கூடாது என்பது ஒரு விதியாக சேர்க்கப்பட்டிருந்தது.
1932-ஆம் ஆண்டில் காவிரி ஆற்றில் கண்ணம்பாடியில் கட்டப்பட்ட அணை திறக்கப்பட்டது. மைசூரு மன்னர் கிருஷ்ணராஜ உடையாரைப் போற்றும் விதமாக, அந்த அணைக்கு கிருஷ்ணராஜ சாகர் அணை என்று பெயரிடப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956-ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. மன்னர் ஆண்ட மைசூரு, சென்னை ராஜதானியில் இரு பகுதியாக இருந்த பெங்களூரு, கோலார், நிஜாம் ஆட்சிபுரிந்த பிஜாபூர், மும்பையின் சில பகுதிகள் எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு, கன்னட மொழி பேசும் மக்களைக் கொண்ட கர்நாடக மாநிலம் அமைக்கப்பட்டது.
கன்னடர்கள் தங்கள் மொழிக்கெனவும் மாநிலம் உதயமானது பற்றி பெருமிதம் கொண்டார்கள். ஆனாலும் சில அரசியல்வாதிகள் புது மாநிலம் அமைத்ததில் தங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படவில்லை என்று குறை கூறிவந்தார்கள்.
குறிப்பாக காவிரி ஒப்பந்தம் நியாயமானது இல்லை என்றும், தங்களுக்கு அதிகமான தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டு வந்தார்கள். ஏனெனில் தரிசு நிலத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் பயிரிட்டு வந்த வேளாண் குடிமக்கள் முதன்முதலாகத் தண்ணீர் கொண்டு நெல், கரும்பு பயிரிட ஆரம்பித்தார்கள். அதிகமான பணம் கிடைத்தது.
அதிகமான நிலப்பரப்பில் பணப்பயிரான நெல், கரும்பு பயிரிட ஆர்வம் கொண்டார்கள். அதற்காகத் தண்ணீர் வேண்டி பேரணிகள் நடத்தவும், போராட்டங்களில் ஈடுபடவும் செய்தார்கள். அரசியல் கட்சிகள் அவர்களோடு சேர்ந்து கொண்டுவிட்டன.
கர்நாடக மாநிலத்திற்குள் பாயும் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆறுகளில் புதிய அணைகள் கட்டி கிருஷ்ணராஜ நகர்க்கு வரும் தண்ணீரை மறித்துவிட்டார்கள். அதனால் 125 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகருக்கு நீர் வரத்துக் குறைந்து போனது. தமிழ்நாட்டிற்கு ஒப்பந்தப்படி தண்ணீர் கிடைக்காமல் போனது.
மைசூரு மன்னரோடு 1924-ஆம் ஆண்டில் போடப்பட்ட ஐம்பதாண்டு கால ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டில் காலாவதியானது. அது கர்நாடக அரசுக்கு சாதகமாகிவிட்டது. புது ஒப்பந்தம் போட்டுக்கொள்ள மறுத்து, "காவிரி எங்களுடையது. போராட்டங்கள் நடத்தியோ, உச்சநீதிமன்றம் சென்றோ தண்ணீர் பெற முடியாது. ஒரு சொட்டுகூட தரமாட்டோம். அதில் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்' என்று ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, விவசாயிகள், அமைச்சர்கள் எல்லோரும் ஒரு குரலில் சொல்கிறார்கள்.
காவிரி ஆற்றுப் பிரச்னையைத் தீர்க்க 1986-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காவிரியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் பெற வேண்டிய நீரின் அளவு குறித்து தீர்ப்பு வழங்கியது. அதோடு நீர் பங்கீட்டிற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.
கர்நாடக அரசு நடுவர் மன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டது. ஏராளமான தமிழர்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளானார்கள். தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தண்ணீர் வழங்கவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவு பெற்று வந்தது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை உதாசினப்படுத்தியது.
உச்சநீதிமன்றம் தன் மாண்புகளைக் காத்துக்கொள்ளவும் தேசத்தின் இறையாண்மை, கூட்டாட்சி முறையை நிலைநாட்டவும், கர்நாடக அரசுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதோடு காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது.
கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசினப்படுத்த வேண்டும் என்று ஆளும் காங்கிரஸுக்கு ஆலோசனை வழங்கின. மத்திய முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். இந்திய முன்னாள் பிரதமர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக்கூடாது என்று சொல்வதில் யார்க்கு முதலிடம் என்ற போட்டிவந்துவிட்டது.
பலவீனமாக இருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வெளியே அனுப்ப காவிரி பிரச்னையை எடுத்துக்கொள்வது சரியாக இருக்குமென்று மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி கருதியது.
எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அது நாடாளுமன்ற விவகாரம் என்று ஒரு மனுவை தலைமை வழக்குரைஞர் மூலம் கொடுத்தது.
காவிரி ஆற்றின் தண்ணீர் பிரச்னை ஆரம்பித்த இடத்திற்கே போய்விட்டது. ஆட்சியை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வெற்றியே முக்கியம். அரசியலுக்கு தர்மம், நியாயம் என்பதெல்லாம் கிடையாது.
வெற்றி பெற ஓர் அரசு எல்லாவிதமான உத்திகளையும் கையாண்டு வெற்றிகனியை வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்ததெல்லாம், முடிமன்னர்களுக்கும் சர்வாதிகளுக்கு மட்டுமானதில்லை. ஜனநாயகத்தின் பெயரால் கட்சிகள் நடத்தி ஆட்சிக்கு வருகிறவர்களுக்கும்தான் என்பதை ஒவ்வொரு தலைமுறையிலும் அரசியல்வாதிகள் நிரூபித்து வருகிறார்கள். அது காவிரி நதி நீர்ப் பிரச்னையில் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.