இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் உயர்வுக்கு வழிவகுத்த தலைவர்களை ஆய்வுசெய்து பட்டியலிடுகிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர். அவரது கணிப்பின்படி, "மகாத்மா இந்திய மக்களால் போற்றப்படுகிறார்; சர்தார் வல்லபபாய் படேல் மதிக்கப்படுகிறார்; மௌலானா அபுல்
கலாம் ஆசாத் உயர்வாகப் பேசப்படுகிறார்; அம்பேத்கர் வியந்து பாராட்டப்படுகிறார்; பண்டித ஜவாஹர்லால் நேரு எல்லோராலும் பெரிதும் நேசிக்கப்படுகிறார்'.
ஆம். இந்திய தேசத்தின் குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், முதியவர், படித்தவர், படிப்பறிவற்றோர், விளிம்பு நிலை மனிதர்கள் - இப்படி
எல்லாராலும் இதயபூர்வமாக நேசிக்கப்படுகிறவர் அவர்.
நேருவுக்குப் பின்னால் என்ன நிகழும்? இந்த கேள்வியை நிராத் சி. சௌத்ரி என்ற எழுத்தாளர் எழுப்பினார். அதற்கு அந்த ஆய்வாளர் அளித்த பதில் "சிக்கலும் குழப்பமுமே' என்பதாகும். அவருடைய அரசியல் ஆருடம் பொய்த்துப் போனது.
"நேருவுக்குப் பின் யார்?' என்ற நூலை வெல்லிஸ் ஹேங்கன் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதினார். அந்நூலில் நேருவுக்குப் பின் என்று லால்பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நந்தா, சவான், எஸ்.கே. பாட்டீல், அதுல்யா கோஷ், நிஜலிங்கப்பா ஆகிய எட்டு பேரைக் குறிப்பிடுகிறார்.
இவர்களில் எவரும் நேருவின் உயரத்தை எட்ட முடியாது என்றாலும், இவர்களை இந்திய ஜனநாயகம் பிரதமராக ஏற்றுக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த அளவிற்கு உறுதியான ஜனநாயக தளத்தை அமைத்துத் தந்தவர் ஜவாஹர்லால் நேரு என்கிறார் அந்த எழுத்தாளர்.
பிற்காலத்தில் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவெ கௌட, ஐ.கே. குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியவர்கள் மட்டுமல்ல, மிகச் சாதாரண நிலையில் பொதுவாழ்வைத் தொடங்கி, இன்று இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி உயர்ந்திருக்கிறாரே இதற்கும் பண்டித ஜவாஹர்லால் நேரு அமைத்துத் தந்த வலுவான, உறுதியான அசைக்க முடியாத ஜனநாயக அடித்தளமே காரணம்.
மத்தியில் ஜனதா அரசு 1977-ஆம் ஆண்டு பொறுப்பேற்றது. அப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட வாஜ்பாய், பொறுப்புகளை கவனிக்க, தன் அறைக்குச் செல்கிறார். அறையின் சுவரை உற்றுப் பார்க்கிறார், அங்கே மாட்டப்பட்டிருந்த ஒரு படம் நீக்கப்பட்டிருக்கிறது, அங்கு ஒரு வெற்றிடம் தெரிகிறது.
"இங்கே இருந்த நேருஜியின் படம் எங்கே? முதலில் அதை மாட்டுங்கள்' என்று ஆணை இடுகிறார். படம் மாட்டப்படுகிறது. நேரு பெருமகன் படத்தை வணங்கிவிட்டுத்தான், தன் நாற்காலியில் அமர்கிறார் பெருந்தன்மைக்குப் பெயர்போன வாஜ்பாய்.
பண்டித நேரு மறைந்தபோது "ஓர் இனிய கீதம் அமைதியாகிவிட்டது. சூரியன் அஸ்தமித்துவிட்டது. இனி இருக்கும் நட்சத்திரங்களின் ஒளியில் நாம் தொடர்ந்து நடப்போம். அவர் கண்ட கனவில் பாதியைத்தான் அவர் நிறைவேற்றியிருக்கிறார். மீதியை நாம் நிறைவேற்றுவோம்' என்று நேருவுக்குப் புகழாரம் சூட்டினார் அவர்.
அமெரிக்காவில் நம் பிரதமர் "பாம்பு பிடிக்கும் கைகள் அல்ல எங்கள் கை;
கணினியைக் கையாளும் கைகளே இந்தியர்களின் கை' என்று முழங்கி பலத்த கைத்தட்டலைப் பெற்றார். அந்தப் பாராட்டும் பெருமையும் கிடைக்க பாதை போட்ட பெருமகன் நேரு அல்லவா?
விதியை மட்டுமே நம்பி வாழ்ந்த இந்தியர்களுக்கு விஞ்ஞான ரீதியான
கல்விக்கு வித்திட்டவர். இந்திய இளைஞர்களுக்கு கணினி உலகின் கதவுகளை
முதலில் திறந்து வைத்தவர் முதல் பிரதமரான பண்டித நேருவே.
"பிற நாடுகளை அடிமைப்படுத்தி, அந்நாட்டு மக்களைக் கொடுமைப்
படுத்துவதற்கு எங்கள் இந்தியத் துருப்புக்களை பிரிட்டிஷ் அரசு அனுப்புவது கண்டு நான் வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்' என்று பிரஸ்ஸல்சில் நடைபெற்ற "ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஒருங்கிணைப்புக் கூட்ட'த்தில் பேசி, உலகின் 60 நாட்டுத் தலைவர்களின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் நேரு.
"மேற்கத்திய நாடுகளுக்கு நாங்கள் இனி மனு போட்டு உதவி கேட்கமாட்டோம், எங்கள் தலைவிதியை நாங்களே நிர்ணயித்துக் கொள்வோம்' என்று 1947-இல் நடைபெற்ற ஆசிய நாடுகளின் இணைப்பு மாநாட்டில் பேசி, ஆசிய நாடுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதியைப் பெற்றுத் தந்தவர் பண்டித நேரு.
"எனக்குப் பின்னர் எனது வாரிசு நேருவே' என்று அண்ணல் காந்தி அறிவித்ததற்குப் பல காரணங்களை ஆய்வாளர்கள் கூறுவார்கள். படேலைவிட நேரு வயதில் இளையவர், மக்கள் செல்வாக்குப் பெற்றவர் என்பதையெல்லாம்விட, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் தகுதி படைத்தவர் நேருவே என்று காந்திஜி கருதியதே முக்கிய
காரணம்.
ஆகவே உலக நாடுகள் நம் தேசத்திற்கும் தேசத் தலைமைக்கும் இன்று அளிக்கும் அங்கீகாரத்திற்கு, முக்கியத்துவத்திற்கு, தேசத்தின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பே முதன்மையானது என்பதே உண்மை.
தேசம் விடுதலை பெற்றபோது, அண்ணல் காந்திஜி சொன்னார், "சுதந்திரம் கிடைத்திருப்பது காங்கிரஸýக்கு மட்டுமல்ல, இந்திய தேசம் முழுமைக்கும்தான்.
ஆகவே எல்லோரையும் இணைத்துச் செயல்படுங்கள்'.
ஆகவேதான் நேருஜி அமைத்த அமைச்சரவையில் இடம்பெற்ற
பதினான்கு பேரில் ஆறு பேர் காங்கிரûஸச் சேராதவர்கள்; காந்திஜியையும் காங்கிரûஸயும் எதிர்த்து வந்தவர்கள். ஷியாம் பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர், ஆர்.கே. சண்முகம் செட்டி, பல்தேவ் சிங் உள்ளிட்ட மேதைகளே அவர்கள். எதிர்த்தவர்களைக்கூட அரவணைத்துச் சென்றார் நேருஜி.
தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும், எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து, தனது பயணத்தின் நோக்கம் பற்றி விரிவாக விளக்குவாராம் பிரதமர் நேரு. அதுபோலவே பயணம் முடிந்து திரும்பியதும் பயணத்தின் விளைவுகளைப் பற்றியும் கூறுவாராம்.
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றக் குழு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, தானே சபாநாயகர் அறைக்குச் சென்று பயணம் மேற்கொள்ளும் குழுவினருக்கு தகுந்த ஆலோசனைகளையும் வழங்குவாராம்.
பண்டித ஜவாஹர்லால் நேரு 44 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் பயணித்தவர். அதில் 27 ஆண்டுகள் இந்திய விடுதலைக்கான போராட்டம்; 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அறிவாற்றல், அர்ப்பணிப்பு உணர்வு, தியாகம், தேசபக்தி, மனிதநேயப் பண்பு, உலகளாவிய பார்வை - இவற்றின் மொத்த உருவமே ஜவாஹர்லால் நேரு.
அவரை இந்திய மக்கள் உளமார நேசித்ததுபோலவே உலகத் தலைவர்களும் மிகவும் நேசித்தார்கள். தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நேருவைப் பற்றி கூறும்போது, "சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர், நவயுக இந்தியாவின் சிற்பி, மானுட விடுதலைக்காகவும் இந்திய தேசத்தின் உயர்வுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்' என்று கூறுகிறார்.
"உலக அமைதிக்காக பண்டித நேரு ஆற்றிய பணி வரலாற்றில் இடம் பெறத்தக்கது' என்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
"உலக அமைதி, அனைத்து நாடுகளும் இணைந்து ஒற்றுமையாக வாழ்தல், அணிசேரா அனுகுமுறை இவைதான் அந்த மாமனிதரின் சிந்தனையாகவும் செயலாகவும் இருந்தது' என்கிறார் ரஷியாவின் முன்னாள் பிரதமர் குருச்சேவ்.
"வரலாற்றின் மிக உயர்ந்த தலைவர்
களில் ஒருவராக நேருவை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன், போற்றுகிறேன்'
என்றார் லார்ட் மௌண்ட் பேட்டன்.
"மனித சமுதாயத்திற்கு நேருஜி ஆற்றிய பணி மகத்தானது' என்கிறார் தத்துவ மேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.
"சிறந்த சிந்தனையாளர், செயல்வீரர், மிகச்சிறந்த மனிதாபிமானி' என்கிறார் எகிப்து அதிபர் நாசர்.
"ஜவாஹர்லால் நேரு காந்திஜியின் முதன்மைச் சீடர், அவரது வழியே மனித சமுதாயத்தை உய்விக்கும்' என்றார் வினோபா பாவே.
"இந்திய தேசத்தின் தலைவிதியை நிர்ணயித்தவர், உலக நாடுகள் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானித்தவர் பண்டித
ஜவாஹர்லால்' என்றார் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் நார்மன் கசின்ஸ்.
அந்த எழுத்தாளர் 1964-ஆம் ஆண்டு பண்டித நேரு உடல் நலிவுற்ற நிலையில் இருந்தபோது, அவரைச் சந்தித்து
"இந்திய தேசத்திற்கு நீங்கள் விட்டுச் செல்லும் சொத்து என்ன' என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு நேருஜி, "தங்களைத் தாங்களே ஆட்சிசெய்து கொள்ளும் தகுதி படைத்த ஐம்பது கோடி மக்கள்தான் நான் விட்டுச் செல்லும் சொத்து'என்றார்.
அன்றைய 50 கோடி மக்கள்தொகை இன்று 127 கோடியாக உயர்ந்திருக்கலாம். எண்ணிக்கை கூடினாலும், இந்திய மக்களின் எண்ணத்தில் ஜனநாயகம் என்றும் நிலைத்து நிற்கும். அது குன்றாது, குறையாது. இப்படி நமக்கு ஓர் அசைக்க
முடியாத ஜனநாயக உணர்வை ஊட்டிய பெருமகன் நேரு.
ஆனாலும் அதனை அவர் தன் சாதனையாக ஒருபோதும் சொன்னதில்லை.
"எல்லாப் பெருமைகளும் இந்திய மக்களையே சாரும்' என்றார்.
நேருஜி நெஞ்சார நேசித்த ஜனநாயகம், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி, மதச்சார்பின்மை, சுயச்சார்பு ஆகிய
லட்சியப் பாதையில் இந்திய தேசம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
அதுவே அந்த மாமனிதருக்கு இந்நாடு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
(இன்று ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.