ஏன் இந்த அலட்சியம்?
கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிக எளிமையாகவும், விரைவாகவும் சேவைகளை செய்து வருபவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்.


கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிக எளிமையாகவும், விரைவாகவும் சேவைகளை செய்து வருபவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்.
இச்சங்கங்கள் மூலமாக சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு உள்ளிட்ட சேமிப்பு வகைகளும், விவசாயக் கடன், நகைக் கடன், அடமானக் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குதலும் நடைமுறையில் இருந்து வருகின்றன.
அதோடு, விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை, பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை, மருந்துக் கடையில் தள்ளுபடி விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை உள்ளிட்டவற்றையும் கூட்டுறவுச் சங்கங்கள் செய்து வருகின்றன.
விவசாயிகள், படிக்காத பாமரர்கள், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் கூட்டுறவு கடன் சங்கங்களிலேயே அதிக அளவில் கணக்கு வைத்துள்ளனர். அதற்கு காரணம் எளிமையான நடைமுறையேயாகும்.
கூட்டுறவு சங்கங்களிலிருந்து, சங்க உறுப்பினர்கள் பல கோடி ரூபாய் விவசாயக்கடன், நகைக்கடன், வீட்டு அடமானக் கடன் உள்ளிட்டவற்றைப் பெற்று முறையாக செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 9ஆம் தேதிமுதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அந்த ரூபாய் நோட்டுகளை டிச.30ஆம் தேதிக்குள் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் கிராம மக்களுக்கு வங்கி சேவைகளை எளிதாக வழங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் அத்தகைய வசதிகளை ஏற்படுத்த மத்திய, மாநில அரசு நிர்வாகங்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்க வில்லை.
மாறாக கூட்டுறவுச் சங்கங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்காமல் இயங்க வலியுறுத்தப்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்காமல், இருக்கும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு சங்கங்களை திறந்து வைப்பது என்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தவே செய்யும்.
ஆனால் இது சாத்தியமில்லாதது என்ற காரணத்தால், கூட்டுறவுச் சங்கங்கள் இயங்காமல், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகி, தற்போது சங்கங்கள் செயலிழந்து முடங்கிக் கிடக்கின்றன.
தமிழகத்தில் 4,654 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், அதன் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சேவையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவற்றில் கணக்கு வைத்துள்ளோர் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. வைப்புத்தொகை வைத்துள்ளவர்கள் ஒருவித பதற்றத்துடன் காணப்படுகின்றனர். கடன் வாங்கியோர் கடனுக்கு வட்டிக் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
அனைத்து தேசிய வங்கிகளும், தனியார் வங்கிகளும் விடுமுறை நாள்களில் கூட பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், கூட்டுறவு கடன் சங்கங்கள் மட்டும் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது அதன் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சங்கத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் அவசரத் தேவைக்காக பணத்தை மாற்றுவதற்கு மற்றொரு வங்கியின் உதவியை நாட வேண்டியது உள்ளது. இதன் மூலம் சங்கத்தின் வாடிக்கையாளர்கள் பலர், அதிருப்தி காரணமாக தேசிய வங்கிகளுக்கு மாறும் நிலை அதிகரித்து வருகிறது.
அண்மையில் நகைக் கடன், அடமானக் கடன் உள்ளிட்டவற்றைப் பெற்றவர்கள், அந்தப் பணத்தை செலவும் செய்ய முடியாமல், கூட்டுறவு சங்கத்திலும் திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
விரைவிலேயே பிள்ளைகளின் திருமணத்தை வைத்துள்ள பெற்றோர், அடகு வைத்துள்ள நகைகளை எப்படி திருப்பப் போகிறோம் என்ற அச்சத்தில் உள்ளனர். அத்தியாவசிய செலவுக்கு கூட பணம் இல்லாமல் திணறுகின்றனர்.
மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கூட ஏடிஎம் அட்டை, நெட் பாங்கிங், பற்று அட்டை போன்றவை வைத்திருப்பார்கள். ஓரளவுக்கு நிலமையை சமாளித்துக் கொள்வர். ஆனால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அத்தகைய வசதிகளும் கிடையாது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கும், சங்க ஊழியர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருவதுடன், கூட்டுறவு கடன் சங்கங்கள் மீதான மக்களின் நம்பிக்கையும், நல்ல அபிப்பிராயங்களும் குறைந்து வருகின்றன.
ஏற்கெனவே அரசின் கொள்கை முடிவுகளால் மானியம் சரிவர வழங்கப்படாமல் ஏராளமான சங்கங்கள் அழிவின் விளிம்பில் இருந்து வருகின்றன. நன்றாக செயல்படும் சங்கங்களையாவது சிறப்பாக நடத்த வேண்டுமானால், அரசு இதுபோன்ற சூழ்நிலையில் சங்கங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த நேரத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, மற்ற வங்கிகளை போல் அனைத்து சேவைகளும் செய்ய சங்கங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், தங்களுடைய வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக் கொள்ளும்.
தாங்கள் வழங்கியிருக்கும் கடன் தொகையை பெருமளவு வட்டியுடன் சேர்த்து திரும்ப வசூலும் செய்திருக்கும். இதன் மூலம் நலிந்து கிடக்கும் பல சங்கங்கள் எழுச்சி பெறவும் வாய்ப்பாக அமைந்திருக்கும்.
ஆனால் தற்போது, கூட்டுறவு சங்கங்களுக்கு வரவேண்டிய கடன் தொகைகளும் வசூலாகாமல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
63-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ.14முதல் 20ஆம் தேதிவரை நடைபெறும் நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படாமல் மூடிக்கிடப்பது, வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி ஊழியர்களிடையேயும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களும் இதர வணிக வங்கிகளை போன்று பணப் பரிவர்த்தனைகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...