அனைவரும் ஆதரிப்போம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கள்ளப் பண, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கிய நாள் முதலே பணத்திற்காக நடக்கும் குற்றச் செயல்களான வழிப்பறி
Updated on
3 min read

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கள்ளப் பண, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கிய நாள் முதலே பணத்திற்காக நடக்கும் குற்றச் செயல்களான வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வந்த நாள் முதல் தற்போது வரை நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இத்தகைய வழக்குகள் மிக மிக குறைவாகவே பதிவாகி உள்ளன.
ஏனென்றால் பணத்தை கொள்ளையடிப்போர் 1000, 500 ரூபாய் நோட்டுகளை செலவழிக்க முடியாது என்கிற நிலை உருவாகி உள்ளது. குற்றச்செயல்கள்குறைந்து நாட்டில் சட்டம் } ஒழுங்கு மேம்படுவது நாட்டின் முன்னேற்றத்திற்கான நல்ல அறிகுறியாகும்.
காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதி பர்ஹான் வானி இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பிறகு வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெருகி வந்தன. ராணுவத்தினர் மீதும், காவல் படையினர் மீதும் கல்வீச்சு சம்பவங்கள் தினசரி நடந்து வந்தன. பள்ளிக்கூடங்களை தீ வைத்து கொளுத்தும் சம்பவங்கள் அரங்கேறின.
சமீபத்தில் நடைபெற்ற பள்ளிக்கூட தேர்வுகளை மாணவர்கள் புறக்கணிக்கும் படி பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத குழுக்கள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அதைப் புறக்கணித்து 80 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பிரிவினைவாத தலைவர்களின் எதிர்ப்பை மீறி பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு ராணுவத்தினர் மீதும், காவல்துறையினர்மீதும் ஒரு கல்லெறி சம்பவம் கூட நடைபெறவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானில் கள்ளத்தனமாக அச்சடிக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகள் பயங்கரவாத குழுக்கள் மூலம் இந்தியாவில் புழக்கத்திற்கு விடப்பட்டு வந்தது. குறிப்பாக 1000, 500 ரூபாய் நோட்டுகள் கல்லெறியும் சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு கூலியாக வழங்கப்பட்டது.
தற்போது இந்த நோட்டுகள் மதிப்பிழந்துவிட்டன. எனவே, கல்லெறியும் சம்பவங்கள் நிகழ்வதில்லை. மேலும், காஷ்மீர் மாநில அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பணத்தாசை காட்டியும், மூளைச்சலவை செய்தும் பயங்கரவாதிகளாக மாற்றி இந்தியாவிற்குள் அனுப்பி எல்லைதாண்டிய பயங்கரவாத செயல்களை செய்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் தடையை ஏற்படுத்திஉள்ளது. காஷ்மீரில் தற்போது ஓரளவிற்கு அமைதி திரும்பியுள்ளது நல்ல அறிகுறி ஆகும்.
இந்தியாவின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் மாவோயிஸ்டுகளும் நக்ஸலைட்டுகளும் பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மலைவாழ் மக்கள், கிராம மக்கள் மத்தியில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிலவுகிறது.
மாவோயிஸ்டுகளுக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நேபாளம், வங்கதேசம் வழியாக வரும் கள்ளப் பணத்தின் மூலமாக அவர்கள் தங்கள் நிதி நிலைமையையும் ஆயுத பலத்தையும் பெருக்கி கொள்கின்றனர். மாவோயிஸ்டுகள் வங்கிகளையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கொள்ளையடித்து சுமார் 7,500 கோடி ரூபாய் வரை காடுகளில் புதைத்துள்ளனர்.
பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு பிறகு இந்த பணமெல்லாம் செல்லாக் காசாகிவிட்டன.
மாவோயிஸ்டுகள் தங்களின் பணத்தை கிராம மக்கள் மூலம் வங்கியில் மாற்றும் முயற்சிக்குப் பொதுமக்களிடம் ஆதரவு இல்லை. எனவே பணம் பிணமாக மாறிவிட்டதால் பிணத்தை எரிப்பது போல மாவோயிஸ்டுகள் பணக்கட்டுக்களை எரித்து வருகின்றனர். இந்தியாவில் நக்ஸல்களின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான நல்ல அறிகுறி தோன்றி வருகிறது.
ஊழல் செய்தும், கமிஷன் பெற்றும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ள ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆண்ட கட்சி, ஆளப்போகிற கட்சி, சாதி கட்சி, மாநில கட்சி, தேசியக் கட்சி இப்படி அனைத்து கட்சிகளிளுமே ஊழல் அரசியல்வாதிகள் ஊடுருவி தங்கள் பணபலத்தினாலேயே கோலோச்சி வந்தனர்.
ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றிய இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு பிரதமரின் அறிவிப்பு பேரிடியாக உள்ளது. தங்களது கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது என வழி தெரியாமல் மனம் வெதும்புகின்றனர்.
வாக்காளர்களுக்கு லஞ்சமாக ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்ய முடியாது எனும் நிலை தோன்றியுள்ளது. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக மோடியின் அறிவிப்பு உள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் கட்டணங்களையும் செலுத்தாமல் தங்களுக்கு வருகின்ற கொள்ளை லாபத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருக்கின்ற நேர்மையற்ற வியாபாரிகள், பெரும் தொழில் அதிபர்கள் ஆகியோர் தாங்கள் சேர்த்து வைத்த கருப்பு பணத்தை இனி கைவிட்டுவிட வேண்டியதுதான்.
வருங்காலத்தில் தொழில் மற்றும் வியாபாரங்களை வரி ஏய்ப்பு செய்யாமல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் மட்டுமே நடத்த முடியும் என்கிற நிலை தோன்றியுள்ளது. கந்து வட்டி, மீட்டர் வட்டி, போலி நிதி நிறுவனங்கள் ஆகியவை ஒழிந்து போகும். பெருமளவு கருப்பு பணம் புழங்கக்கூடிய ஹவாலா தொழில் திவாலாகும் சூழல் இந்த அறிவிப்பால் உருவாகியுள்ளது.
கல்வி, தனியார்மயமாகி, வியாபாரமயமாகி விட்ட காரணத்தினால் மருத்துவ - பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நன்கொடை எனும் பெயரில் கணக்கில் வந்தும் கணக்கில் வராமலும் லட்சக்கணக்கான ரூபாயைப் பறிப்பது இனி சாத்தியம் இல்லை.
மருத்துவமும் தனியார் மயமாகி வியாபார மயமாகிவிட்ட காரணத்தால் தனியார் பல்நோக்கு மருத்துவமனைகள் மூலம் உயர்தர மருத்துவம் எனும் பெயரில் கணக்கில் சேர்க்கப்பட்டும், கணக்கில் இல்லாமலும் பணம் பறிப்பதும் இனி சாத்தியம் இல்லை.
மிகப்பெரிய தொகைகள் காசோலைகள் மூலமாகவும், இணையதளம் மற்றும் வங்கி அட்டை மூலமாகவும் மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும் என்கிற காரணத்தால் மணல் கடத்தல், கிரானைட் கொள்ளை, காடுகளில் மரம் வெட்டிக் கடத்துதல் போன்ற சட்ட விரோத காரியங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.
அரசு அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் பெரும் தொகையாக லஞ்சம் வாங்குவது கட்டுப்படுத்தப்படுகிறது. இடம் அல்லது வீடு விற்பனையில் சந்தை விலை ஒன்று, வழிகாட்டி மதிப்பு விலை ஒன்று என்கிற நிலை மாறும்.
இதன் காரணமாக வீடு, நிலத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படி பல்வேறு வழிகளிலும் லஞ்சம் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு நல்ல அஸ்திவாரத்தை மோடியின் இந்த அறிவிப்பு உருவாக்கி உள்ளது.
இந்தியாவில் பணப் பரிவர்த்தனையில் எண்பது சதவீதம் 1000, 500 ரூபாய் நோட்டுகளின் மூலமாக மட்டுமே நடந்து வந்துள்ளது. இவ்வளவு நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை ஓரிரு நாட்களில் விநியோகம் செய்ய முடியாது. இதனால் மக்கள் தாற்காலிக சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மக்களுக்கு உண்மை நிலையை புரிய வைக்க மோடி பெரு முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் மோடி எது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்று முடிவு கட்டி செயல்படும் மோடி எதிர்ப்பாளர்கள் மக்களிடையே பீதியையும், பதற்றத்தையும் உருவாக்கி வருகின்றனர்.
அவர்கள் முன்வைக்கும் மிக முக்கியமான கேள்வி - வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வருவேன் என சூளுரைத்த மோடி சுவிஸ் வங்கி பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரவில்லை. மாறாக பொது மக்களை துன்பப்படுத்தும் வகையில் 1000, 500 ரூபாய் நோட்டுக்களை ஏன் ஒழித்துள்ளார் என கேட்கின்றனர்.
உண்மையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற அந்த பணத்தை இனி இந்தியாவில் பயன்படுத்த முடியாது என்கிற நிலையை மோடி உருவாக்கியுள்ளார். அந்த கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கியில் பதுக்கியவர்கள் இந்தியாவில் அதை அனுபவிக்க முடியாத சூழல் மோடியின் அறிவிப்பால் உருவாகியுள்ளது.
மேலும் பணப் பரிவர்த்தனை அனைத்தையும் வங்கி கணக்கின் மூலமாக மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலையைஉருவாக்க அரசு முயற்சித்து வருகிறது.
இன்னும் ஒரிரு வாரத்தில் நிலைமை சீராகும் என நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மோடியின் நடவடிக்கையை 85 சதவீத மக்கள் ஆதரிக்கின்றனர். பண பதுக்கல் காரர்களின் தூண்டுதல் பேரில் மோடி எதிர்ப்பாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரளாமல் போனதற்கு இதுவே காரணம் ஆகும். லஞ்சம், ஊழல், கருப்புப் பணம் இவற்றை ஒழித்து இந்தியாயை வல்லரசாக மாற்றும் மோடியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com