தெள்ளுற்ற தமிழமுதின் சுவை!

மகாத்மா காந்தி 1897-இல் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அப்போது இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்ச நிவாரண நிதி திரட்டினார் அண்ணல் காந்தி. அதற்கான ஏற்புச் சீட்டு (ரசீது) ஆங்கிலம்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை!

மகாத்மா காந்தி 1897-இல் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அப்போது இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்ச நிவாரண நிதி திரட்டினார் அண்ணல் காந்தி. அதற்கான ஏற்புச் சீட்டு (ரசீது) ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் அச்சிடப்பட்டன. ஏன்?
"இந்தியன் ஒப்பினியன்' என்ற ஏடு காந்தியால் நடத்தப்பட்டது. அது தமிழிலும் வெளியிடப்பட்டது. ஏன்?
தமிழர்கள் பெரும்பான்மையராக இருந்தார்கள். காந்தியின் சத்தியாகிரகத்தில் அதிக தீவிரத்துடனும், எண்ணிக்கையுடனும் பங்கு கொண்டவர்கள் தமிழர்களே!
தென் ஆப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் காந்தி.
லண்டன் பல்கலைக்கழகத்தில் தேர்வுகளுக்குத் தமிழையும் விருப்பப் பாடமாக்க வேண்டும் என்று எழுதினார்.
"திராவிட மொழிகளில் மிகப் பெரிய மொழி தமிழ். இம்மொழி மாபெரும் இலக்கிய நயம் கொண்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு - லத்தீன் மொழி எப்படியோ - அப்படி இந்தியாவிற்குத் தமிழ் மொழி ஆதி மொழி என்று கருதப்படுகிறது.
எந்த வகையில் பார்த்தாலும் தமிழ் மொழி லண்டன் பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடமாக ஏற்கத் தகுந்தது' என்று இந்தியன் ஒப்பினியனிலும் கட்டுரை வரைந்தார்.
தமிழில் உள்ள பழமொழிகளில் காந்தியடிகளுக்குப் பிடித்தமானது "திக்கற்றவருக்குத் தெய்வமே துணை' - என்பதாகும்.
இந்தியாவில் காந்தி அடிகள் ஏற்படுத்திய ஆசிரமத்தில் பிரார்த்தனை நடைபெறாத நாளே கிடையாது. தமிழர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்பிரார்த்தனை பாடல்களில் ஒன்று - மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள - "முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை' என்று தொடங்கும் பாடலாகும்.
தமிழின் சிறப்பும், தொன்மையும், அருமையும் பயன்பாடும் இவ்வாறிருக்க, தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலே உள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வது ஏற்புடையதாகாதா?
வழிபாடு என்பது வழிபடுவது. எதை நோக்கி வழிபாடு செய்கின்றோமோ அதன் வழிப்படுவது என்பதே பொருள்!
பக்தனுக்குப் புரிந்தால் என்ன - புரியாவிட்டால் என்ன - நான் மந்திரத்தை ஓதி விட்டேன் என்று கூறுவது எப்படிப் பொருத்தமாகும்?
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக் கீழ்...'
- என்றார் மாணிக்கவாசகர். சிவன் பாதத்தை அடைய, தாம் சொல்லும் தோத்திரத்தின் பொருளை உணர்ந்து சொல்ல வேண்டும் என்று கூறுகிறார் திருவாசக ஆசிரியர்.
"சொல் ஒன்று வேண்டும்
தேவ சக்திகளை நம்முள்ளே
நிலைபெறச் செய்யும் சொல்வேண்டும்...'
- என்றாரே பாரதியார் - அது எந்த மொழிச் சொல்லாக இருக்கக் கூடும்?
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' - என்றும் "அதைத் தொழுது படி' என்றும் தெய்வத்திற்கு இணையாக - ஏன் தெய்வமாகவே தமிழைச் சொன்னவன் பாரதியன்றோ!
தொழுவதற்குரிய மொழி - தொழுகையில் வழிபாடு செய்வதற்கு உரியதாகாதா?
ஞானசம்பந்தருக்கு வடமொழி தெரிந்தும் அவர் தமிழிலே தானே பாடினார்!
ஞானசம்பந்தர் பாடிய 4,196 பாடல்களில் 147 இடங்களில் தம்மை "தமிழ் ஞானசம்பந்தன்' என்று தமிழோடு தொடர்புபடுத்தியும் பேசுகிறாரே!
பக்திச் சுவை சொட்டச் சொட்டப் பாடிய கவி சேக்கிழார், சிவபெருமான் சுந்தரரைப் பார்த்து,
"அருச்சனை பாட்டேயாகும் - ஆதலால்
மண்மேல் நம்மை சொற்றமிழால் பாடுக' - என்று வேண்டிக் கொண்டதாகக் கூறுகிறார்.
திருமால் உலா வரும்போது முன்னால் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிச் செல்வர். இறைவன் பின்னாலே வருவார். தமிழ்ப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே, தமிழைக் கடந்து போகாமல், தமிழில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டே பசுந்தமிழ்ப் பின்னே செல்வார் பச்சைப் பசுங்கொண்டல்!
மந்திரம் என்றால் மனதை உறுதிப்படுத்துவது, என்றும் நினைப்பவரைக் காப்பது என்றும் பொருள்படும்.
மந்திரத்தை மூன்று விதத்தில் கூறலாம். தன் நெஞ்சுக்குள்ளேயே நினைத்துக் கொள்ளுதல். தன் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் தனக்குத்தானே கூறிக் கொள்வது. பிறர் கேட்குமாறு கூறுவது. திருமுருகாற்றுப்படையில் தன் செவிப்புலனுக்கு மட்டும் கேட்குமாறு ஐது உரைத்தான் - மந்திரம் உரைத்தான்.
அதாவது குறத்தி ஆண்டவன் முன்னால் மந்திரம் ஓதிக் கொண்டாள் என்பது இங்கே செய்தி... குன்றுதோறும் ஆடிவரும் குமரவடிவேலனை இக்குறிஞ்சி மகள் தமிழில்தானே வழிபட்டாள்.
அந் நாட்களில் நீரும், பூவும் சுமந்து சென்று மக்கள் இறைவனை வழிபட்டார்கள்.
நீர் விட்டும் பூ இட்டும் வணங்கினார்கள்.
பூவால் வழிபாடு செய் என்ற பொருளில் வந்த "பூ செய்' என்பதே "பூஜை' என்றாயிற்று என்று சுநிதி குமார் சாட்டர்ஜி போன்ற மொழிநூல் வல்லார்கள் கூறுகின்றனர்.
மரபு வழியாக வருவதும், சட்டத்திற்குச் சமமாவதாகும் - ஏன், அதற்கு மேலானதாகக்கூட எண்ணப்படும்!
சாதிகள் இல்லை - சாதிப் பிரிவு கூடாது என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் விவாதத்திற்காக நடைமுறையில் உள்ள சான்றுகளைத் தரவேண்டியுள்ளது.
எங்கெங்கே யார் யார் வழிபாடு நடத்தும் உரிமை பெற்றுள்ளார் என்பதைப் பார்ப்போம்!
ராசவல்லிபுரம் - முதலியார்
சிறுவாச்சூர் - உடையார்
பெரியபாளையம் - நாயக்கர்
பெங்களூரு - அரிசன்
குரங்கணி - நாடார்
கல்லங்குறிச்சி - வன்னியர்
திருவேற்காடு - அண்மைக்காலம் வரை கிராமணியும் அரிசனும் (தற்போது சிவாச்சாரியார்)
பழனி - 1644 வரை பண்டாரம் (தற்போது சிவாச்சாரியார்)
சில காமாட்சியம்மன் கோவில்களில் - விசுவகர்மா
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெருமக்கள் எம்மொழியால் வழிபாடு நடத்தியிருப்பார்கள்? நடத்துகிறார்கள்?
தமிழில்தானே!
24-9-1977-இல் நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகள் 27-8-1982-இல் அரசிதழில் வெளியிடப் பெற்றன.
அந்தப் பரிந்துரைகள் யாவை?
"வழிபாடு தமிழில் நடத்தினால் ஏழை எளிய பாமர மக்களும் இறைவன்பால் அன்பு செலுத்தவும் ஆலயங்களைப் பேணவும் வழி உண்டு!'
மகாராஜன் குழுவின் நோக்கம் மட்டுமல்ல - இறையன்பர்களாகிய நம் நோக்கமும் இறைவன்பால் அன்பு செலுத்தவேண்டும், இறையுணர்வு வளர வேண்டும் என்பதுதாம்!
"தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்...'
என்றார் அப்பர்.
கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் கூறியபடி திருவாசகத்தை ஓதினால் கருங்கல் மனமும் கரைந்து இறைவனைச் சேர்ந்து விடும் என்பது உண்மையன்றோ?
இணையானதொரு பொருளைப் பேச எண்ணுகிறேன்.
தமிழில் பாடுவதா என்ற விவாதம் எழுந்தபோது
"தமிழ்ச் சபைகளிலே எப்போதும்
அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில்
பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் ஞாயமில்லை...' என்று பாரதி சொன்னார்.
"தமிழ்நாட்டினிலேயே வளர்ந்து, தமிழ்த் தேசத்திலே புகழ்பெற்ற தியாகய்யர் தெலுங்கில் பாடினார். தெலுங்கு அவருடைய தாய் பாஷையானதால் அவர் அதில் பாடினார். நாமும் நம் தாய் பாஷையில் பாடினால்தான் நம் ஆத்மாவுக்கும் திருப்தி கிடைக்கும், கடவுளுக்கும் காது கேட்கும்' - என்று தமிழிசையைப் பற்றிக் கூறினார் கூர்த்தமதியும் - ஆழ்ந்த பக்தியும் கொண்ட இராஜாஜி.
"பாடுவோன்' கருத்தைக் "கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே
இசையாம்
"அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
இசை எனப் படுவதன் இன்பம் தருவது'
- என்று பாடும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள், தம் நோக்கம்
"கடுகளவும் பிறமொழிமேல் கடுப்பதல்ல'...
- என்று உண்மையைக் கூறி நம் நெஞ்சில் உயர்ந்து நிற்கிறார்.
ஆம்! நாம் தாய்மொழியில் வழிபாடு வேண்டும் என்பது; தமிழர்கள் இறைவனோடு பக்திப் பரவசமாகி ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தானே தவிர வடமொழியின் மீது வெறுப்புக் கொண்டல்ல. சாகுந்தலத்தை அந்த மொழியிலேயே படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் கொண்டவன் நான்.
இதயத்தை இசைய வைப்பது தாய்மொழி. எனவே தமிழ்நாட்டில் தமிழ் வழிபாடு இறையுணர்வை வளர்க்கும்.
எல்லோரும் அமர நிலை எய்த வேண்டும் என்று கூறிய பாரதி -
"தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவைகண்டார் - இங்கு
அமரர் சிறப்புக் கண்டார்'
- என்று வழிமுறையும் கூறினான்.
அவன் தமிழில் வழிபடுகிறான்... நாமும் அவன் வழியில் நிற்போம்.

கட்டுரையாளர்:
மூத்த காங்கிரஸ் தலைவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com