மகிழ்வித்து மகிழ்வோம்

நவராத்திரி விழா கடந்து சென்றிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை கூப்பிடு தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது.
Published on
Updated on
2 min read

நவராத்திரி விழா கடந்து சென்றிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை கூப்பிடு தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது.
நமது இந்திய தேசத்தைப் பொருத்தமட்டில், கொண்டாட்டங்களின் உச்ச கட்டம் என்பது தீபாவளியாகத்தான் இருக்க முடியும்.
அன்றாடங்காய்ச்சிகள் முதற்கொண்டு கோடீசுவரர்கள் வரை அத்தனை மக்களும் தங்களால் இயன்ற வரையில் கொண்டாடித் தீர்த்துவிட முயற்சிக்கும் வருடாந்திரப் பண்டிகை தீபாவளி.
இப்பண்டிகையை ஒட்டி, ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிடுவது அவசியம் என்றே தோன்றுகின்றது.
அடித்தட்டு வர்க்கத்தினரை விடச் சற்றே உயரத்தில் இருக்கும் மகா ஜனங்களே....
நம் எல்லோரது வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள், இன்ப துன்பங்கள் இருப்பது இயல்புதான். அவரவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செய்யும் தொழில், குடும்ப உறவு, ஆரோக்கியம் போன்ற பல்வேறு தளங்களில் அன்றாடம் பல சோதனைகளையும் சிரமங்களையும் கடக்க வேண்டியிருக்கிறது.
அத்தகைய சோதனைகளையும் சிரமங்களையும் அவ்வப்போது மறக்கடிக்கும் விதமாகத்தான் நம் வாழ்வில் பல்வேறு கொண்டாட்டங்கள், விழாக்கள் வருகின்றன.
திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், குழந்தை பிறப்பு, காது குத்து, புதுமனை புகு விழா, பதவி உயர்வு, வெளி நாட்டுப் பயணம், விளையாட்டில் வெற்றி, விருதுகள் - பரிசுகள் என்று எவ்வளவோ நிகழ்வுகள் நம்மைக் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தி, நமது துயரங்களையும் தோல்விகளையும் தாற்காலிகமாகவேனும் மறக்கடிக்கின்றன.
அதுவும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கென்று நம்மில் பலர் தங்களது சக்திக்கு மீறிக் கடன் வாங்கி செலவழித்துவிட்டு பிறகு கடனை அடைக்கவே கஷ்டப்படுவதும் உண்டு.
எது எப்படி இருந்தாலும், நமது குடும்ப நிகழ்வுகளுக்கான கொண்டாட்டங்கள், அதற்கான படாடோபமான செலவுகள் எல்லாம் நம்மையும் நம்மைச் சேர்ந்த நெருங்கிய உறவுகளையும் மட்டுமே பாதிப்பன என்று கூறலாம்.
ஆனால், தீபாவளிக் கொண்டாட்டங்களும், அதற்காக நாம் செய்யும் அதிகமான செலவுகளும் ஓர் உளவியல் பாதிப்பினை, நம்மை அண்டி வாழுகின்ற அடித்தட்டு மக்களின் மனதில் ஏற்படுத்துமென்பது உண்மையிலும் உண்மை.
அதுமட்டுமல்ல, அந்த அடித்தட்டு மக்களின் இளம் வாரிசுகளின் மனதில் சொல்ல முடியாத ஏக்கத்தையும் இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஏற்படுத்துகின்றன.
ஓர் இல்லத்தில் திருமணம் அல்லது பிறந்தநாள் விழா என்றால் அதற்காக ஆயிரங்களிலும் செலவழிக்கலாம், அவரவரது வசதியினைப் பொறுத்து. அத்தகைய செலவுகளைச் செய்ய முடியாதவர்கள் அதைக்கண்டு வியக்கலாம், வாய் பிளக்கலாம். ஆனால், பொறாமைப் படக் காரணம் எதுவும் இருக்கப்போவதில்லை.
ஆனால், தீபாவளி பண்டிகை வசதி உள்ளவர், வசதியற்றவர் என்று எல்லோராலும் ஒரே நாளில் கொண்டாடப்பட வேண்டியது. வசதியுள்ளவர்கள் அதனை கும்மாளமிட்டுக் கொண்டாடும்போது, வசதியற்றவர்கள் - குறிப்பாக அந்த வசதியற்றவர்களின் வாரிசுகள் - அது குறித்த ஏக்கத்துடன் வளையவரவேண்டிய நிலை இருக்கவே செய்கிறது.
சரி, இதற்கு நாம் என்ன செய்துவிட முடியும்?
முதலில் செய்ய வேண்டியது செலவுக் குறைப்பு. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றுக்காக நாம் செய்யும் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு, தேவையான அளவுக்கு மட்டுமே செலவிட வேண்டும்.
அது சரி, இது போன்ற பண்டிகைகளை நம்பித்தானே வியாபாரப் பெருமக்கள் பிழைக்கின்றார்கள், அவர்கள் பிழைப்பில் மண்ணைப் போடலாமா?
நம்மில் பல உழைப்பாளிகளுக்கும் போனஸ், ஊக்கத்தொகை என்று கையில் கொஞ்சம் அதிகமாகவே பணம் புரளும் தருணத்தில்தான் இதற்கெல்லாம் செலவழிக்க முடியும்.
நமது செலவுகளைக் குறைத்துக் கொண்டு, வணிகர்களின் வயிற்றிலடிப்பது கூடாதுதான்.
இப்பண்டிகைக்காக நமது சக்திக்கும் மேலாகக் கடன் வாங்கி செலவழிப்பதைக் குறைத்துக் கொள்வதோடு வசதியற்ற வேறு சிலருக்காகவும் கொஞ்சம் செலவழிக்கலாம்.
மிகுந்த வசதி இருப்பவர்கள் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு உடையோ, இனிப்புகளோ வழங்கலாம்.
குறைவான வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தினர், தத்தமது வீடுகளில் பத்துப் பாத்திரம் துலக்கி, துணிகளைத் துவைக்க வருகின்ற பெண்மணிகளுக்கோ, அவர்களது குழந்தைகளுக்கோ புதுத் துணிகள் வாங்கிப் பரிசளிக்கலாம்.
தங்கள் வீட்டில் செய்கின்ற அல்லது தங்களுக்குப் பரிசாக வருகின்ற இனிப்புகளை தத்தமது அண்டை வீடுகளில் வசிக்கின்ற வசதியற்றோர்களது குழந்தைகளுக்கு அளித்து மகிழலாம்; மகிழ்விக்கலாம்.
தாங்கள் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் சிதறவிட்டு மகிழ்ந்திருக்கும்போது, சற்றுத் தொலைவில் நின்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஏழைச்சிறுவர்களின் கையில் ஒரு மத்தாப்பு பெட்டியைக் கொடுத்து அவர்களின் முகங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு ஊற்றெடுப்பதைப் பார்க்கலாம்.
மொத்தத்தில் இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக நாம் இது நாள் வரையில் செய்து வருகின்ற ஆர்ப்பாட்டங்களையும் படாடோபங்களையும் ஓரளவுக்காவது குறைத்துக் கொள்வது மூலம், நம் அளவுக்குச் செலவழித்துக் கொண்டாட முடியாதவர்களிடத்தில், குறிப்பாக அந்த வசதியற்றோர்களின் வாரிசுகளாகப் பிறந்துவிட்ட பிஞ்சுகளின் மனத்தில் ஓர் ஏக்கம் பெருக்கெடுப்பதைத் தவிர்க்கலாம்.
தீபாவளிப் பண்டிகை நம்மிடம் மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் மனத்திலும் உற்சாகத்தை ஏற்பத்துவதாக அமைய வேண்டும். சமூகத்தின் ஒரு பகுதியினர் மிகையாகக் கொண்டாடி மகிழ்வதும், இன்னொரு பகுதியினர் இயலாமையில் ஏங்குவதும் பண்டிகையின் இலக்கணமாகாது.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்ற தாயுமானவரின் சிந்தனையை நடைமுறைப்படுத்துவோம்  இந்த தீபாவளியிலிருந்தாவது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com