
அடிமை இந்தியாவில் பாரதத்தாயின் முகத்தில் ஒரே ஒரு பொட்டுத்தான் சிவந்த குங்குமப்பொட்டு. ஆனால், சுதந்திர இந்தியாவில் அவள் உடம்பெல்லாம் சிவந்த பொட்டுக்கள், இரத்தத் துளிகளால் ஆனப் பொட்டுக்கள்.
காமுகர்களும் காதகர்களும் வன்கொடுமையினால் சீரழித்த வனிதையர்களின் சதைநார்களிலிருந்து, பீறிட்டெழுந்த இரத்தத்துளிகளால் உருவான பொட்டுக்கள். வதைக்கப்படுகின்ற ஒவ்வொரு பெண்ணும் விடுகின்ற சாபங்கள்தாம், பாரதத்தின் மீது படிகின்ற பாவங்கள் ஆகும்.
பாரதியார் இந்திய நாட்டின் பெருமையைப் பாட வந்தபோது, "அன்னையர் தோன்றி மழலைகள் கூறி, அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னியராகி நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே' எனப் பெண்மையை முதன்மைப்படுத்திப் பாடினார்.
ஆனால், இந்த நாட்டில்தான் பெண் கொலைகள் காலங்கள்தோறும் நடந்தேறி வருகின்றன. சங்கக் காலத்தில் நன்னன் என்றொரு மன்னன் இருந்தான். பெண் கொலை புரிந்த நன்னன் என்று இன்றும் இகழப்படுகிறான்.
பாழி பரம்பு மலைக்குத் தலைவன் நன்னன். அவன் உயிரோவியம்போல் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தினுடைய பூவை, பிஞ்சை, காயை, கனியை யாரும் தொடக்கூடாது என்பது அரண்மனை ஆணை. அவனுடைய நாட்டிலிருந்து ஓடிவந்த ஆறு, பக்கத்துக் கோசர்கள் நாட்டைக் கடந்து செல்லும்.
அந்த ஆற்றில் நீராடச் சென்ற கோசர் குலத்துக் குமரி, நீரில் மிதந்து வந்த ஒரு மாங்கனியை எடுத்துக் கடித்துச் சுவைத்துவிட்டாள். அதியமானுடைய நெல்லிக்கனிக்கு ஈடானது, அந்த மாங்கனி. செய்தியறிந்த நன்னன், கோசர்நாட்டுக் குமரியைப் பிடித்து வந்து, கூண்டிலேற்றி மரணதண்டனை விதித்துவிட்டான்.
செய்தியறிந்த கோசர் குலமக்கள் நன்னன் நாட்டிற்கு விரைந்தனர். அந்தப் பெண் புரிந்த தவற்றுக்கு எண்பத்தொரு யானைகளும், அவளுடைய எடைக்கு ஈடாகத் தங்கத்தில் துலாபாரம் தருவதாகவும், அவளை மட்டும் மன்னித்து விடும்படியும் வேண்டினர். ஆனால், ஆத்திரத்தின், அதிகாரத்தின் விளிம்பிற்கே சென்ற மன்னன் நன்னன், அவளை ஊரறிய படுகொலை செய்தான்.
அதனால், நன்னனுடைய வம்சமே அழிந்து நரகத்திற்கும் சென்றதாகப் பரணர் (குறுந்தொகை 292-வது பாடல்) பாடுகின்றார்.
பாரதக் கதையை மகாகவி பாரதி, "பாஞ்சாலி சபதம்' எனும் தலைப்பில் பாடினார். அதில் பாஞ்சாலி, கொல்லுங் கொலைக்கு ஈடான கொடும் பாதகத்திற்கு உள்ளாகிறாள். அந்தத் துச்சாதனன் இழைத்த அநாகரிகச் செயலை, ஆடை குலைவுற்று நிற்கிறாள் - அவள் ஆவென்று அழுது துடிக்கின்றாள் - வெறும் மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள் மைக்குழல் பற்றி இழுக்கின்றான் என வருணிப்பார்.
அப்பொழுது பாஞ்சாலி, "பெண்டிர் தமையுடையீர், பெண்களுடனே பிறந்தீர் பெண்பாவ மன்றோ, பெரியவசை கொள்வீரோ கண்பார்க்க வேண்டும்' என்று கையெடுத்துக் கும்பிட்டாள் என்று சித்திரிக்கின்றார், கவிஞர்.
துரியோதனன் தம்பி துச்சாதனன் மாண்டுவிட்டான். ஆனால், அவனுடைய பங்காளிகள் காஷ்மீரத்திலிருந்து கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கிறார்கள். பாஞ்சாலியின் குரலை நிருபயாவும், சுவாதியும், சோனாலியும், பிரான்சியாவும், மோனிகாவும் ஒலித்துக் கொண்டிருப்பார்கள்.
"பெண்ணென்னு பூமிதனில் பிறந்துவிட்டால், மிகப் பீழையிருக்குதடி தங்கமே தங்கம்' என அந்தக் கவிஞன், பாடியது வரமா அல்லது சாபமா என்றே தெரியவில்லை. தொழுவத்தில் இருக்கும்போதே ஆட்டுக்குட்டியை வெட்டுவதுபோல், தேவாலயத்தில் தொழுது கொண்டிருக்கும்போதே வெட்டுகின்ற கொடூரத்திற்குப் பிராயச்சித்தம் ஏது?
ஆங்கிலேய ஆட்சியை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் செய்ய வேண்டும் எனக் களத்தில் இறங்கிய பாரதி, பெண்கள் படும் கொடுமையை ஒழித்தமைக்காக வேல்ஸ் இளவரசருக்கு நன்றி தெரிவிக்கவும் தயாராகிவிட்டார்.
"ஆற்றினில் பெண்களை எறிவதூஉம், ... பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும், எனப்பல தீமைகள் இறந்து பட்டனவால்' என இடைக்காலத்தில், வடபுலத்து நடந்த அநீதிகளை நினைவுபடுத்தவும் செய்கிறான், அந்த மகாகவி. "பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீராது' என்றார், பாவேந்தர் பாரதிதாசன்.
ஒரு தாயின் கருவறையிலிருந்து வந்தவனே, கரூரில் கல்லூரியின் கருவறை போன்ற வகுப்பறையில், கட்டையால் அடித்து ஓர் அரிய உயிரைக் கொல்லுகின்றான். "பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு பேயும் இரங்கும் என்பார் - தெய்வமே நினது எண்ணம் இரங்காதோ' எனப் பாரதி பாடினான். ஆனால் பேய் மனங்கொண்டவர்களே, ஆடவர்கள் உருவத்தில் வரும்போது தெய்வம் என்ன செய்யும்?
ஒரு காலத்தில் பிஜித் தீவிலே கரும்புத் தோட்டங்களிலே பாரத புத்திரிகள் பட்ட அவமானங்களை எல்லாம் எண்ணி, நெஞ்சம் குமுறினவன் பாரதி.
"நெஞ்சம் குமுறுகின்றார் - கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே - அந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமுமில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ ஹே வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி' எனப் பாடிய பாரதியின் நாடி அடங்கினாலும், அவன் பாடிய பாடல் அடங்கவில்லையே.
"மடிந்து மடிந்து மடிந்தொரு' என்ற வரியில் அக்கவிஞன் எவ்வளவு "ஒடிந்து ஒடிந்து ஒடிந்து' போயிருப்பான் என்பதை, இப்போதும் உணர முடிகிறது.
தமிழகத்து வெறித்தனங்கள், மகாராட்டிர மாநிலத்து நிகழ்வுகளுக்கு உறைபோடக்கூட முடியாது என்று எண்ணுகின்ற அளவில், சதாரா மாவட்டத்தில் வை எனும் ஊரில் சந்தோஷ்பால் எனும் ஹோமியோபதி மருத்துவர், ஐந்து பெண்களை ஈவு இரக்கமின்றி அரக்கத்தனத்தோடு கொன்றிருக்கிறார்.
சதாரா மாவட்டத்தில் பி.இ.எம்.எஸ். மட்டுமே படித்த சந்தோஷ் பால், கெஞ்சிக் கூத்தாடி கேட்டதின் பேரில் கோடாவேடகர் மருத்துவமனையில், மயக்க மருந்து தருபவராகப் பணியமர்த்தப்பட்டார். பெண்கள் அணிந்திருக்கும் நகைகளுக்காகவும், நில அபகரிப்புக்குமாக ஐந்து பெண்களைக் கொன்று குவித்திருக்கிறார்.
கோடாவேடகர் மருத்துவமனைக்கு வரும் பெண்களை மயக்க மருந்து கொடுத்துச் சோதிப்பதாகச் சொல்லி, உயிர்க்கொல்லி மருந்தையும் (கங்ற்ட்ஹப்) சேர்த்துச் செலுத்திக் கொன்றுவிடுவார். பின்னர் கொன்ற பிணங்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டுபோய், தம்முடைய பண்ணைத் தோட்டத்தில் புதைத்துவிடுவார்.
இத்தகைய கொடூரங்களை இழைத்துவரும் அவர் தம்முடைய அறைக்கதவில் சுவாமிஜி விவேகானந்தர் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார். மேலும், தம்மேல் சந்தேகம் வராமலிருப்பதற்காகக் கொன்றவர்களைக் காணவில்லை எனத் தகவல் அறிந்து தரும் துறைக்கு விண்ணப்பமும் செய்து விடுவார். இவருடைய கொலைத் தொழிலுக்கு உடந்தையாக இருந்த சல்மா ஷேய்க் எனும் செவிலியப் பெண்ணையும் கொலை செய்து, தம் பண்ணைத் தோட்டத்திலேயே எருவாக்கிவிட்டார்.
சந்தோஷ் பால் அரசன் அன்று கொல்லாவிட்டாலும், தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கேற்ப, பலநாள் கொலைகாரன் இப்பொழுது பிடிபட்டு, குற்றவாளிக் கூண்டிலே ஏற்றப்பட்டிருக்கிறான். அவனால் கொல்லப்பட்ட சுரேகா சிக்னி, வனிதா கெய்க்வாட், ஜெகாபாய், சல்மா ஷேய்க், மங்கள் ஜேத் ஆகிய ஐந்து பெண்களின் எலும்புக்கூடுகளையும், சந்தோஷ் பாலின் துணைக்கொண்டே தோண்டி எடுத்திருக்கின்றனர்.
ஓர் ஆடவன் அநியாயமாகக் கொல்லப்பட்டதற்காகக் கண்ணகி, "சான்றோரும் உண்டுகொல்' "பெண்டிரும் உண்டுகொல்' "தெய்வமும் உண்டுகொல்' எனக்கேட்டுக் கூவி அழுதாள். இன்றைக்கு இத்தனைப் பெண்கள் நாடோறும் கொல்லப்படுகிறார்களே, எந்த ஆடவராவது வந்து, "சான்றோரும் உண்டுகொல்', "தெய்வமும் உண்டுகொல்' எனக் கேட்கக்கூடாதா?
"பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா' என்பதைக் கற்பிப்பதற்கு எந்தப் பள்ளிக்கூடம் திறந்திருக்கிறது. வீட்டுத் தோட்டத்திலே கொஞ்சம் தலை நீட்டி வளர்ந்துவிடும் சவுக்குச் செடிகளைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரித்துச் சமப்படுத்துகிறார்களே அதுபோல், பெற்ற பிள்ளைகளில் தன்முனைப்போடு செயல்படும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் எப்போது கத்தரித்து அனுப்பப்போகிறார்கள்?
தன் வீட்டு ஆடு அடுத்தவர் தோட்டத்து வேலிக்கு அப்பாலே போய் மேய்ந்துவிடாமல் இருப்பதற்காகக் கழுத்திலே கிட்டி கட்டி அனுப்புகிறானே மேய்ப்பவன், அதுபோலத் தன் வீட்டுப் பிள்ளை வேலி தாண்டும்போது, எந்தப் பெற்றோர் கிட்டி கட்டி தடுக்கப்போகிறார்கள்?
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்குப் பாசத்தைக் கொட்டி வளர்ப்பதோடு, கொஞ்சம் ஒழுக்கத்தின் உயர்வையும் நாளும் போதித்து வர வேண்டும். ஆசிரியர்கள் பாடங்களைச் சொல்லித் தருவதோடு, அறப்பண்புகளையும் போதிப்பவராக அமைய வேண்டும். அவர்கள் குருகுலத்து ஆசான்களாக மாறினால் மட்டுமே வழி பிறக்கும். செல்லிடப்பேசி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே என்பதை வீட்டுப் பெரியோர்கள், இளம் நாற்றுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
பால் தரும் விலங்குகளைப் பராமரித்து வளர்ப்பதுபோல், பாலியலையும் பராமரித்து வளர்ப்பார்களே ஆனால், மனித இனம் மகத்தானதாகப் போற்றப்படும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தி. இராசகோபாலன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.