திறன் அறிந்து சொல்லுக...

சந்தைக்குள் நுழைந்து நாம் அவசரம் அவசரமாகக் காய்களை அள்ளிப்போட்டுக் கொண்டு வருவதில்லை.

சந்தைக்குள் நுழைந்து நாம் அவசரம் அவசரமாகக் காய்களை அள்ளிப்போட்டுக் கொண்டு வருவதில்லை. ஒவ்வொரு காய்க்குவியலையும் குடைந்து அழுகல்களை நீக்கி, பழுதானவற்றை விலக்கி நல்ல தரமான காய்களைத்தெரிவுசெய்து வாங்குவதே நடைமுறை. நகைக்கடையிலும், புடவைக் கடையிலும், பழக்கடையிலும் இப்போக்கினை அழுத்தமாகக் காணலாம்.
புழங்கும் பொருட்களில் தரத்தை விழையும் நாம் பேச்சு, எழுத்து இரண்டிலும் பிறருக்கு வழங்கும் சொற்களிலும் தரத்தை நாடவேண்டியது இன்றியமையாமை ஆகிறது. "பயனில் சொல்', "வெல்லும்சொல்', "பயனுடைச் சொல்' போன்றவற்றைத் திருவள்ளுவர் நயமுறக் காட்டுவது உடன் வைத்து எண்ணத்தக்கது.
சொல், தரமான சொல் ஆகிய இரண்டினையும் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது சரியான கேள்வியாகும். தஞ்சை, தமிழ்ப்பல்கலைக்கழகம் மருத்துவச் சொற்களைத் தரப்படுத்த எடுத்துக் கொண்ட முயல்வு ஒன்றைப் பதிவு செய்தல் உகப்பானது.
மருத்துவச் சொற்களின் தரப்படுத்தம் (Standardization or Medical Terms) என்ற பயிற்சிப் பட்டறை ஒன்றை அந்தப் பல்கலைக்கழகம் நடத்தியது. ஒரு மருத்துவச் சொல்லுக்கான பல சொற்கள் வழக்கில் இருக்கலாம். அவற்றில் சரியான, பொருத்தமான, ஏற்புடைய சொல்லைத் தெரிவு செய்வதே இதற்காக அமைக்கப்பெற்ற குழுவின் முதன்மைப் பணி.
இக்குழுவில் மருத்துவர் ஒருவர், மொழியறிஞர் ஒருவர், அறிவியல், தமிழ் இரண்டிலும் பயிற்சிபெற்ற ஒருவர் உறுப்பினர்களாயிருந்தனர் Head என்பது ஓர் உறுப்பின் பெயர். இதற்கேற்ற தமிழ்ச் சொற்கள் முதலில் திரட்டப்பட்டன. மண்டை, தலை, சிரசு, சிகை போல்வன பட்டியலிடப்பெற்றன. பின்னர்த் தரப்படுத்தும் பணி தொடங்கியது. இச்சொற்களில் சிகை என்பது தலைக்குமேல் உள்ள, கூந்தலுக்குரிய ரோமக் கற்றையைக் குறிக்குமே தவிர முழுத்தலையையும் குறிக்காது. (சான்று: சிகை அலங்கார நிலையம்) எனவே அது தவிர்க்கப்பட்டது.
"என்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்பது எல்லாருக்கும் தெரிந்த பயில்மொழிதான். ஆயினும் சிரசு என்பது வடபுலமொழி என்பதால் அதுவும் ஒதுக்கப்பெற்றது. இலக்கியத்தில் இடம்பெறல், பெரும்பான்மைப் பயன்பாடு, நயம் கலந்த தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எஞ்சிய சொற்களான மண்டை, தலை ஆகிய சொற்கள் அலசப்பெற்றன.
"மண்டை உடைந்தது', "ஒரே மண்டையடி' என்பன பேச்சுவழக்கில் மிகுதியும் வரும். இலக்கியங்களில் அதன் பயில்வு மிகக்குறைவு. "தாளை வணங்காத் தலை', "தலையே நீ வணங்காய்', "தலையாலே தான் தருதலால்' போன்றவை இலக்கிய உலகில் இழைந்து வருபவை.
ஏங்ஹக் என்பது மூலச்சொல், அதனுடன் இணைந்து வருபனவும் கணக்கிலெடுக்கப்பட்டன. தலைமையாசிரியர் (Head Master) தலைமைக் காவலர் (Head Constable) தலைமை அஞ்சலகம் (Head Post office) போன்ற மிகுபுழக்கப் பாங்கும் கருதப்பட்டது. இங்கெல்லாம் மண்டைக்கு வேலையில்லை. எனவே, ஏங்ஹக் என்ற உடலுறுப்புக்குத் தலை என்ற சொல்லே தரமானது எனக் குழு முடிவெடுத்தது.
மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் மாணவர் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் தன் ஆசிரியரைத் தஞ்சைக்கு ஓர் இலக்கிய விழாவிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். இசைவு கிட்டியதும் தஞ்சை வந்து திரும்ப ஒரு பேருந்தில் சீட்டும் பெற்றார். பேராசிரியருக்கு எழுதிய மடலில் "பேருந்தில் ஓர் இருக்கைக்கு ரிசர்வ் செய்துள்ளோம்' என விழாக்குழுவினர் எழுதியனுப்பினர்.
இப்போது முன்பதிவு என்ற சொல் நடைமுறையில் உள்ளது. ஆனால் அது Advance booking என்பதற்கான தமிழாக்கம் ஆகுமே தவிர Reserve  என்ற ஆங்கிலச் சொல்லின் முழுமைப் பாட்டை உணர்த்தாது. பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார், "தஞ்சை வந்து திரும்ப இடக்காப்பு செய்தமைக்கு நன்றி' என மறுமொழி வரைந்தார்.
மொழிஞாயிறு எனப் போற்றப்பெறும் ஞா. தேவநேயப் பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர விழைந்தார். பல்கலைக் கழகம் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம் உற்றுநோக்கத்தக்கது. விரிவுரையாளர் (Lecturer) என்ற பதவிக்கும், பேராசிரியர் (Professor) என்ற பதவிக்கும் இடையில் ஒரு பதவி உண்டு. அஃது ஆங்கிலத்தில் தங்ஹக்ங்ழ் எனப்படும்.
இதற்குரிய தமிழ்ச் சொல்லைத் தேர்வதில் பல்கலைக்கழகம் கடினப்படவில்லை போலும். மேலோட்டமான "வாசகர்' என்ற சொல்லையே விளம்பரத்திலும் இடம்பெறச் செய்தனர். காலையில் எழுந்து அன்றைய தினத்தாளைப் படிக்கும் எல்லாருமே வாசகர்கள்தாம். அச்சொல் பொருத்தமானதாகவுமில்லை மதிப்புக்குரியதாகவும் இல்லை என்பது தமிழறிஞர்களின் ஒட்டுமொத்தக் கருத்து.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் அதே Reader பதவிக்கு விண்ணப்பித்து, வேலையும் கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அன்றைய பேராசிரியர் ந.சஞ்சீவி நீளநினைந்து துணைப்பேராசிரியர் பதவிக்கு மேலானது அப்பதவி என்பதால் "பெருந்துணைப் பேராசிரியராகத் தேர்வானமைக்கு வாழ்த்துக்கள்' என
எழுதினார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியிற் சேர்ந்தபோது தங்ஹக்ங்ழ் என்பதற்குரிய தமிழ்ச் சொல்லாக "இணைப்பேராசிரியர்' என எழுதினேன். பின்னர் அங்கேயே பேராசிரியராகப் பொறுப்பேற்ற முனைவர் க.ப. அறவாணன் "பிற்காலத்தில் பேராசிரியராக இணைய இருப்பவர் என்பது பொருளாயின் இணை பேராசிரியர் என எழுதவேண்டுமே தவிர இணைப் பேராசிரியர் என எழுதலாமா' என வினவினார்.
இணைப் பேராசிரியர் என்பதற்குப் பேராசிரியர் பொறுப்புக்கு இணையான பணிகளைச் செய்பவர் என்பதுவே நேர்ப்பொருள் பேராசிரியர் இல்லாத சூழலில் இணைப்பேராசிரியர் என்பவர் பேராசிரியர் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுவே மரபு.
எனவே Reader என்பதற்குரிய தமிழ்ச்சொல் இணைப் பேராசிரியர் என்ற சொல்லே என்பதை ஏற்கும் முன் பலகட்டச் சோதனைகள் விளைந்தன. தரமான சொற்களை வெகுவிரைவாகவும் பெறமுடியாது போகிற போக்கிலும் அடைய முடியாது.
இணைப்பேராசிரியராகப் பொறுப்பேற்ற பாவாணர் காரைக்குடிக்கு வந்திருந்தார். குழுவாகச் சென்று அவரைத் தங்கும் விடுதியில் அழகப்பர் கல்லூரி மாணவர்கள் சந்தித்தனர்.
அப்போது தமிழ் முதுகலை படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் அவரிடம் ஓர் ஐயம் கேட்டார். "ஐயா, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாகவும், மாதம் இரு தடவையாகவும் வெளிவரும் இதழை ஆங்கிலத்தில் fortnightly என ஒற்றைச் சொல்லால் குறிக்க முடிகிறது. தமிழில் நீட்டி முழக்கித்தான் சொல்ல வேண்டியுள்ளதே தவிர ஒற்றைச் சொல்லால் குறிப்பிட முடியுமா' என்பதே மாணவரால் முன்நிறுத்தப்பெற்ற வினா.
ஒரு மணித்துளி கண்களை மூடிய பாவாணர் "தேநீர் ஒரு குவளை கிடைக்குமா' என்றார். தேநீர் வந்தது. சுவைத்தபடியே "ஒரு தாளில் நான் சொல்வதை அப்படியே எழுதிக் கொள்க' என்றார். அவர் உச்சரித்த சொல் "திங்களீரிதழ்' என்பது. "என்னய்யா - இப்போது ஒற்றைச் சொல்லில் அந்த ஏட்டைச் சுட்ட இயலுமே' என்றவர் "திங்களீரிதழ் என்பது எப்படிப் பல சொற்களின் இணைப்பில் பிறந்த கூட்டுச் சொல்லோ அதுபோலத்தான் பல சொற்களின் பிணைப்பிலேதான் ஊர்ழ்ற்ய்ண்ஞ்ட்ற்ப்ஹ் என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது' என்றார்.
சில நேரங்களில் ஒரு சொல்லுக்கான மாற்றுச் சொல்லை அதே மொழிக்குள்கூடத் தேடவேண்டிவரும். பிறசொல்லை மொழியாக்கும்போது இன்னல்கள் கூடுதலாகிவிடும். நிறையப் படித்து, நிறைய எழுதும்போதுதான் சொல்லின் நிலைமையும் தரப்படுத்துதலும் தெரியவரும். ஒன்றைத் தெரிய முயன்று அதனைத் தெரிந்து கொள்ளும்போது மற்றொன்றைத் தெரியமாலிருக்கும் உண்மை வெளிப்படும்.
அண்மையில் பாரிசில் திருக்குறளுக்கான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்தது. அதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சச்சிதானந்தம். அவரின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது அவரெழுதிய நூல் ஒன்றைப் பரிசளித்தார். தலைப்பு: தெரியத் தெரியத் தெரியாமை தெரியும். உண்மைதானே?
"கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பதும், "சாவு வரும் வரை கற்கவேண்டும்' என்பதும், "அறிதோறும் அறியாமை கண்டு' என்பதும் "கற்பவை கரையில கற்பவர் நாள்சில' என்பதும் சட்டென்று மனத்துள் மின்னின.
ஒரு கல்வி நிறுவனம் குறிப்பிட்ட காலம்வரை கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தியது. அதன்பிறகு பணம் கட்டுவார் தண்டனையாகக் கூடுதல் தொகை கட்டவேண்டும். இதனைத் "தண்டத் தொகை' எனவும் "தண்டனைத் தொகை' எனவும் எழுதினர்.
இலக்கியப் பயிற்சியுடைய தமிழாசான் ஒருவர் அதனை "ஒறுப்புக் கட்டணம்' என மாற்றக் கோரினார். "இன்னா செய்தாரை ஒறுத்தல்' என்ற குறளின் சொல் அவரால் காட்டப்பெற்றது. இப்போது நிருவாகம் "ஒறுப்புக் கட்டணம்' என எழுதியிருப்பது கூடுதல் கவனத்துக்குரியது.
இப்படி துறைதோறும் துறைதோறும் புதிய, பொலிவான தரமான சொற்களை உருவாக்கினால் மொழியும், அம்மொழிபேசும் இனமும், அந்த இனத்தையுடைய நாடும் பெருமிதம் கொள்ளும்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com