இன்று உலகில் இருக்கும் பெரும்பிரச்னைகளுள் ஒன்று அகதிகள் பிரச்னையாகும். உலகில் இரண்டு கோடி பேர் அகதிகளாக தங்கள் நாட்டினை விட்டு பிற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்று உலக நாடுகளின் அகதிகள் ஆணையம் தெரிவிக்கிறது.
உலகச் சரித்திரத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக பலநாடுகளில் திரிந்து இன்னலுற்றவர்கள் யூதர்கள்தாம். கி.மு. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1948-இல் தமக்கென நாடு அமைந்த பின்னரும்கூட அகதிகளாக திரிந்த சரித்திரம் அவர்களுடையது.
இன்று, உலக அகதிகளில் பாதி பேர் சிரியா நாட்டினர். அவர்களில் பாதிக்கும் மேலானோர் துருக்கியில் தஞ்சமடைந் துள்ளனர். லெபனானில் வாழும் ஐந்து பேருக்கு ஒருவர் சிரிய நாட்டு அகதி.
அகதிகளுக்கு, தாங்கள் தஞ்சம் புகுந்த எல்லா நாடுகளிலும் ஆதரவும் பரிவும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில், எண்ணெய் சட்டிக்கு பயந்து நெருப்பில் விழுந்த கதையாகஆவதுமுண்டு.
இந்தியாவுக்கு நான்கு திசைகளில் இருந்தும் அகதிகள் வந்து சேர்ந்த விசித்திர சிறப்பு உண்டு.
வடகிழக்கில் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்த திபெத் நாட்டில் இருந்து திபெத்தியர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்தியாவுக்கு 1959-இல் நுழைந்தனர்
மேற்கில், சுதந்திரத்தை ஒட்டிய பிரிவினையின்போது, இந்தியாவில் இருந்து மேற்கு பாகிஸ்தானுக்கும், அங்கிருந்து இந்தியாவுக்குமாக சுமார் ஒன்றரை கோடி பேர் இடம் பெயர்ந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்கம் - அஸ்ஸாம் பகுதிகளுக்கு சுமார் 35 லட்சம் பேர் வந்தனர்.
கிழக்கில், 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் பிரச்னை மூண்டபோது, கிழக்கு பாகிஸ்தானத்தில் இருந்து, சுமார் ஒரு கோடி பேர் இந்தியாவுக்குள் - குறிப்பாக அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர்.
தெற்கிலிருந்து எண்பதுகளில் சுமார் 4 லட்சம் பேர் தமிழகத்துக்குள் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தனர்.
இது மட்டுமல்ல, தம் சொந்த நாட்டுக்குள்ளே, ஒரு பகுதி விட்டு இன்னொரு பகுதிக்கு, அரசியல் - மத - இன - துவேஷங்களினால் இடம் பெயர்ந்து வசிப்போரும் உண்டு. அவர்கள் அகதிகள் என்று அழைக்கப்படுவது இல்லையே தவிர, அகதிகளின் இன்னல்கள் அனைத்தையும் இவர்களும் அனுபவிப்பவர்களே. அவர்கள் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்தோர்(IDP - internally displaced persons) எனப்படுவர்.
சொந்த நாட்டுக்குள்ளே அகதியாக ஒரு மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறு பகுதிக்கு அல்லது மாநிலத்துக்கு செல்லும் பாதுகாப்பு அற்ற நிலை, காஷ்மீர் பண்டிதர்களுக்கு உருவானது.
1948-க்கு பின்பும், பிறகு 1990-களிலும் காஷ்மீர் பகுதியிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் ஜம்முவுக்கும் தில்லிக்கும் இடம் பெயர்ந்தவர்கள் இன்னமும் தங்களது சொந்த பகுதிக்கு திரும்ப இயலாத நிலையில்தான் இருக்கிறார்கள்.
இதேபோன்ற கொடுமை, இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த தமிழர்களுக்கு இன்னும் நீடிக்கிறது.
இந்நேரத்தில், அறிவியல் வல்லுனர்கள் தரும் ஒரு எச்சரிக்கை, நம்மை சிந்திக்க வைக்கிறது. பூமியில் ஏற்படுகின்ற புவி வெப்பமயமாதல், வறட்சி, கடல் நீர்மட்டம் உயர்தல், புதிய பாலைவனங்கள் உருவாகும் அபாயம் போன்றவற்றால், பல நாடுகளிலும், உள்நாட்டில் இடம் பெயர்வோர் எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளுக்குள் பெருகக் கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள். இப்படி இடம் பெயர்வோரை, வல்லுனர்கள் Environmental Refugees என்று அழைக்கிறார்கள்.
ஒரு நாட்டிலே பல தலைமுறைகளாய் வாழ்ந்து, தங்களது கடும் உழைப்பால்அந்நாட்டைச் செழிக்க வைத்தவர்கள், அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு - அவர்களது மூதாதையர் சில நூறாண்டுகளுக்கு முன்னர் வேறு நாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்ற காரணத்தால் -stateless persons - குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்ட அநீதியையும் கொடுமையையும், 1948-இல் அன்றைய சிலோன் (இலங்கை) ஆட்சி தமிழ் பேசும் மலையகத் தமிழர்களுக்கு இழைத்தது.
1948-இல், சுமார் 10 லட்சம் பேர் அடையாளம் - உரிமை - சமவாய்ப்பு ஆகியவற்றை இழந்தார்கள். 1964-இல், இவர்களில் 5 லட்சம் பேரை இந்தியா ஏற்றுக் கொள்ளுவதாகவும், 3.5 லட்சம் பேருக்கு சிலோன் குடியுரிமை வழங்குவதாகவும், 1.5 லட்சம் பேர் பற்றி பின்னர் முடிவு செய்யலாம் என்றும் சாஸ்திரி - ஸ்ரீமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் போடப்பட்டது.
இன்னொரு சரித்திர நிகழ்ச்சி: இது 1948 இல் பர்மா சுதந்திரம் அடைந்தபின் நடந்தது. சுமார் 150 ஆண்டுகள் பர்மாவில் வாழ்ந்த தமிழர்கள், அவர்கள் உழைப்பால் வாங்கிய நிலம் அனைத்தையும், பர்மா தேசியமயம் ஆக்கியது.
சுமார் 27 லட்சம் ஏக்கர், கையகப்படுத்தப்பட்டு, சந்தை விலையில் சொற்பத் தொகையே இழப்பீடாக தரப்பட்டது. அதுவும் சிலருக்கே கிடைத்தது, பலர் ஏமாற்றப்பட்டனர்.
1823-க்கு முன்னர் குடியேறியவர்களின் சந்ததியினருக்கு மட்டுமே குடியுரிமை - சொத்துரிமை என்று சட்டம் கொண்டு வரப்பட்டு, 5 லட்சம் இந்தியர்கள் - பெரும்பாலான தமிழர்கள் - உரிமை இழந்து அகதிகளாக இந்தியா வர நேர்ந்தது.
மீண்டும் 1963-இல் ரங்கூனில், தமிழர்களின் 12,000 கடைகள்,சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் விரட்டப்பட்டனர், அவர்களது பணம் செல்லாத நோட்டு (demonetization) ஆக்கப்பட்டது. உயிருக்கு அஞ்சி, தமிழ்நாட்டுக்கு திரும்பியவர்கள், இங்கு நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்வை மீண்டும் துவக்கினர்.
இன்றும் கூட, மியான்மாரில் (முந்தைய பர்மா), தமிழர்களுக்கு, சட்டப்படியும் தஸ்தாவேஜுக்களின் அடிப்படையிலும் சேர வேண்டிய சொத்துக்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலாக இருக்கும் என்கிறார்கள்.
அகதிகள் பிரச்னை, மனித உரிமை மீறல் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணம், மக்களிடம் மனித நேயம் குறைவதுதான். சக மனிதனிடமும் அண்டை அயலாரிடமும் அன்பு, மனித நேயம் பெருகுவது மட்டுமே, ஒற்றுமையும் - அமைதியும் நிலைப்பதற்கு, வாய்ப்பாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.