தமிழகத்தில் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மணல் குவாரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைநகரில் 4 குவாரிகள், திருச்சியில் 23 குவாரிகள், மதுரையில் 10 குவாரிகள் என மணல் அள்ளப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியில் இப்போது மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சில மாவட்டங்களில் விளைநிலங்களில் மணல் குவாரிகள் அமைத்து அந்த பகுதியில் உள்ள சிலர் மணல் அள்ளி விற்பனைசெய்து வருகின்றனர்.
2003-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி சிறிய லாரிகளுக்கு 2 யூனிட் மணல் ரூ.1,000-த்திற்கும், கனரக டாரஸ் லாரிகளுக்கு 3 யூனிட் மணல் ரூ.1,500-க்கும் டிடி பெற்றுக்கொண்டு ஓரளவு முறைகேடு இல்லாமல் அரசு மணல் குவாரிகளில் லோடு வழங்கி வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக அரசாணைக்கு புறம்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் லாரிகளை மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. லோடிங் ஒப்பந்ததாரர்களின் பினாமிகளால் அரசு குவாரிகளுக்கு அருகில் வெளி இடங்களில் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் மணல் சேமிப்புகிடங்குகளில் யார்டு அமைத்து இரண்டாம் விற்பணைக்கு லா ரிடிரைவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இதன்படி சிறிய லாரிகளுக்கு 2 யூனிட் மணலுக்கு 1,000 ரூபாய்க்கு பதிலாக 3 யூனிட் மணல் 6,600 ரூபாய்க்கும் கனரக டாரஸ் லாரிகளுக்கு ஒரு யூனிட் மணல் 1,500 ரூபாய்க்கு பதிலாக 5 யூனிட் மணல் 11 ஆயிரத்திற்கும் அரசாணை பிறப்பிக்கப்படாத 12 சக்கர லாரிகளில் 8 யூனிட் மணல் 17 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் டி.டி. பெறாமல் ரொக்கம் பெற்று விற்பனை விலை விற்பனை வரி மற்றும் விற்பனைரசீது கொடுத்து மணல் ஏற்றப்படுகிறது.
மேலும் மணல் சேமிப்பு கிடங்குகளின் ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் குண்டர்கள் ரவுடிகள் என லாரியை வழிமறித்து ஊர் வரி, கோயில் வரி, தட வழி வரி என்றும் ஊர் பொது காரியங்களுக்கு ஒரு லாரிக்கு ரூ.700 என்றும் வசூல் செய்கிறார்கள்.
இப்படி கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு குவாரிகளிலிருந்து பொதுப்பணித்துறை அனுமதிசீட்டு இல்லாமல் திருட்டுதனமாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் லோடிங் ஒப்பந்ததாரர்களால் தினமும் மணல் அள்ளப்படுகிறது.
வேலூர் மாவட்டம் பாலாற்றில் பள்ளிகொண்டா, வாலாஜாபேட்டை, அணைகட்டு பகுதிகளில் பொதுப்பணித்துறையால் மணல் குவாரிகள் நடத்தப்படுகின்றன. இதில் வாலாஜாபேட்டை பகுதியில் பூண்டி, வள்ளிவேடு, குடிமல்லூர் உள்பட பல பகுதிகளில் மணல் குவாரிகள் நடத்திவந்த சிலர் கைதாகி சிறையிலுள்ள நிலையில் வாலாஜா பாலாற்றில் மணல் கொள்ளை நின்ற பாடில்லை. தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.
பாலாற்றில் எந்த சுணக்கமும் இன்றி விதிகளை மீறி தினமும் 4 ஆயிரம் லாரிகளில் பொக்லைன் மூலமாக 40 அடி ஆழத்திற்குமேல் தோண்டப்படுகிறது. அரசு குவாரிகளில் அள்ளப்படும் மணலுக்கு விலையாக ரொக்கமாக மட்டுமே வசூலிக்கின்றனர்.
காசோலை, வரைவோலை மட்டுமே வாங்க வேண்டுமென்று அரசு உத்தரவு இருந்தும் அது மீறப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 4 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலாகிறது. இதில் 10-இல் 1 மடங்குகூட அரசு கஜானாவுக்கு செல்வதில்லை.
ஆறுகளில் 3 அடி ஆழம் வரைமட்டுமே மணல் அள்ள வேண்டும் என்பது பொதுப்பணித் துறையால் நிர்ணயிக்கப்பட்ட அளவு ஆகும். ஆனால் அதைமீறி 30 முதல் 40 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது.
அதுமட்டுமின்றி அரசு அமைத்துள்ள குவாரிகளை காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு ஒரு யூனிட்டுக்கு 400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அங்கிருந்து அள்ளும் மணலை காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள யார்டுகளில் சேமித்து வைத்து செகண்ட் சேல்ஸ் ஆக விற்கும்போது ஒருயூனிட் மணலை 1,200 ரூபாய் வீதம்தான் விற்கவேண்டும். ஆனால் அதைகாட்டிலும் பலமடங்கு விலைக்கு விற்கின்றனர். இதற்கெல்லாம் அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
பொதுவாக மணல் தொழில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகள், வருவாய்துறை, காவல்துறை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய கட்சி பிரமுகர்களை மணல் தாதாக்கள் "கவனித்து' விடுகின்றனர். இதன் மூலமும் தங்கள் வருவாயை பல மடங்கு பெருக்கி கொள்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அதிகாரிகளை கவனிப்பதற்காக தனியாக புரோக்கர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எடுக்கும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்படிதான் கோடிகளில் புரள்கின்றனர், இந்த மணல் தாதாக்கள்.
இவற்றையெல்லாம் பற்றி கண்டு கொள்ளாத அரசும், காவல்துறையும் ஆறுகளில், கண்மாய்களில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் கூலி தொழிலாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
சிலர் மீது வழக்கு பாய்ந்து அவர்கள் புழல் சிறைக்கு சென்றாலும் காவிரி ஆற்றுப்படுகை உட்பட மாநிலம் முழுவதும் உள்ளமணல் குவாரிகள் எந்ததொய்வும் இல்லாமல் இயங்கி வருகின்றன.
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தின் சொத்தாக, எதிர்கால வாழ்க்கையின் வெளிச்சமாக இருக்கும் தென்பெண்ணையாறு மணல் கொள்ளையர்களின் அகோர பசிக்கு உணவாகிவரும் பரிதாப நிலையை கண்டு மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்த ஆற்றை காணவில்லை என புகார் கொடுக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிடும்.
மணல் கொள்ளையடிக்கும் தாதாக்களை அரசு கட்டுப்படுத்துமா என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.