அரசுப் பள்ளிகளின் அருமை

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதற்குப் பெற்றோர்களிடம் தோன்றிய ஆங்கில மோகமே
அரசுப் பள்ளிகளின் அருமை
Updated on
2 min read

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதற்குப் பெற்றோர்களிடம் தோன்றிய ஆங்கில மோகமே காரணம் எனலாம். ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே ஒருவரை அறிவாளி என்று நினைப்பது தவறு.
தாய் மொழியில் அடிப்படைக் கல்வி கற்பதென்பது எளிதானது. படிப்பில் ஆர்வமும், தன்னம்பிக்கையும் வளரும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் படித்தது தமிழ் வழியில்தான்.
உயர்கல்வியை மட்டுமே ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலப் புலமை பெற்ற பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து, தங்களது ஆங்கிலப் புலமையால் ஆங்கிலேயர்களையே வியக்க வைத்திருக்கிறார்கள்.
ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? மருத்துவம், பொறியியல் முதலிய படிப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதனால் தொடக்கக் கல்வியே ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆரம்பத்தில் தாய்மொழியில் படித்து அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டபின், உயர்கல்வியை ஆங்கிலத்தில் படிக்கலாம். நோபல் பரிசு பெற்ற எத்தனையே அறிஞர்கள் தங்கள் தாய்மொழியிலேயே தங்கள் படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதுள்ள பெற்றோர்களில் பலரும் தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் கல்வி பயின்றால் மட்டுமே உயர்நிலைக்கு வருவர் என்ற தவறான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். தங்களால் முடியாததைத் தங்கள் குழந்தைகளின் மூலம் சாதித்துவிட வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பையும் மனத்தில் சுமந்து கொண்டுள்ளனர்.
குழந்தைகளுடன் அன்பாகப் பேசி, அவர்களைச் சற்றுநேரம் சுதந்திரமாக விளையாடக்கூட விடுவது இல்லை. தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய சிறு குழந்தைகளையும் ஆங்கில மோகத்தால் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் அவலநிலை ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போதுகூடக் கிடையாது.
ஆங்கிலவழிப் பள்ளிகள் ஆண்டுதோறும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், பெற்றோர்களை ஈர்த்துத் தங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கச் செய்திடும் விளம்பர யுக்திகளைப் போட்டி போட்டுக் கொண்டு கல்வி நிறுவனங்கள் செய்து வருகின்றன. தங்கள் குழந்தைகள் சீருடையுடன் டையும், ஷூவும் அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
குழந்தைகள் வீடு திரும்பிய சற்று நேரத்திலேயே தனிப்பயிற்சிக்கு அனுப்புவது வீட்டுப் பாடங்களை முடிக்க வற்புறுத்துவது என அதிகச் சுமையை அவர்கள் மேல் ஏற்றி உடலளவிலும், மனத்தளவிலும் அவர்களைத் தளர்வுறச் செய்கின்றனர்.
பெற்றோர்கள் இதனைக் கண்டு கொள்ளாமல், தங்கள் பிள்ளைகள் நான்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசினாலே அறிவாளி ஆகிவிடுவதாக நினைத்து ஆங்கிலவழிக் கல்வி கற்க அனுப்புவதையே பெரும் பேறாகக் கருதும் நிலை வருந்தத்தக்கது.
அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் திறமையான ஆசிரியர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதுவும் சமீப காலத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் தகுதியான, திறமையான ஆசிரியர்களை நியமனம் செய்வதால் அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் திறன் சற்று மேம்பட்டுள்ளது எனலாம்.
தகுதியான ஆசிரியர்கள் பலர் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற எத்தனையோ மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வி பயின்று உயர்ந்த நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு சில லட்சங்கள் வரை மீதமாகியிருக்கும். அதனை அவர்களது உயர்கல்விக்கோ சுயதொழில் தொடங்குவதற்கோ பயன்படுத்த ஏதுவாக அமையும்.
அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர்களைவிட, ஆங்கிலவழிப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மிகுந்த பரபரப்புக்குள்ளாகின்றனர். காலை 8 மணிக்கு முன்பே குழந்தைகளை ஆயத்தப்படுத்தி அவசர அவசரமாகக் காலை உணவு கொடுத்து, சீருடை அணிவித்து, மதிய உணவு எடுத்து வைத்து, பள்ளி வாகனங்களிலோ, தம் சொந்த வாகனங்களிலோ அனுப்புவது வரை இயந்திர கதியாகிவிடுகின்றனர்.
அவ்வாறு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை, 'தங்கள் பள்ளியில்தான் சிறந்த கல்வி கற்பிக்கப்படுகிறது' என்பதைப் பறைசாற்றும் விதமாகக் குழந்தைகளை கல்வி கற்கும் இயந்திரங்களாக மாற்றவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் பெற்றோர் உணர்வதில்லை.
குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பு வரையிலாவது தாய்மொழியில் கற்பது என்பது படிப்பில் ஆர்வமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். அது மட்டுமின்றி மிகுந்த பொருட்செலவும் தவிர்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களின் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தைப் பிறப்பித்து, அதனை அடுத்த கல்வி ஆண்டிலாவது செயல்படுத்த வேண்டும்.
இதன் மூலம் மற்ற பெற்றோர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதோடு, அவர்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீது ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.
தமிழக அரசும் வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கி, பள்ளிகளில் தமிழ்வழியில் பயில்வோரை ஊக்கப்படுத்தலாம்.
படிப்படியாக உயர்கல்வியும், சீனா, ஐப்பான் போன்று தாய்மொழியில் கற்பதற்கேற்ப பாடப்புத்தகங்கள் தகுந்த அறிஞர்களைக் கொண்டு தமிழில் வெளியிடத் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற வெற்று முழக்கங்களால் யாதொரு பயனும் விளையப்போவதில்லை, மாறாக தாய்மொழிக் கல்வியைக் காக்கவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கவும், கல்வி வியாபாரமாவதைத் தடுத்து நிறுத்தவும் அரசு முனைப்புடன் செயலில் இறங்கினால் மட்டுமே தமிழ்வழிக் கல்வி ஏற்றமும், எழுச்சியும் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com