தத்தளிக்கும் தண்ணீர் தேசம்!

மனிதர்களை எச்சரிப்பதற்காகவே இவ்வுலகைப் படைத்த இறைவன், நாலா பக்கமும் தண்ணீராகவும் நடுவிலே திட்டுத்திட்டு நிலங்களாகவும் படைத்திருக்கிறான். அதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கு அறிவுறுத்துவதற்காகவே, மூன்று பக்கம் தண்ணீராகவும் ஒரு பக்கம் நில பாகமாகவும் அமைத்திருக்கிறான்.மேலும், தென்னாடுடைய சிவனே தண்ணீரைப் போற்றுவதற்காக, அதனைத் தலையிலே தாங்கி நிற்கிறான் போலும். தண்ணீரின் பெருமையைத் தரணிக்கு உணர்த்துவதற்காகவே, திருமாலும் பாற்கடலில் பையத் துயிலும் பரமனாகக் காட்சி தருகிறான்.மற்றும் திருவள்ளுவப் பெருந்தகையே கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தை அடுத்து, வான்சிறப்பு எனும் அதிகாரத்தை அமைத்திருப்பது, தண்ணீரின் மகத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்துவதற்காகவே எனலாம். என்றாலும் இன்றைக்குத் தண்ணீர் தேசம், குடிப்பதற்கு நீரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.மனிதர்களை மனிதர்களே ஏமாற்றிக் கொண்டிருப்பதால், மாதம் மும்மாரிப் பொழிய வேண்டிய மேகமும், இன்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தொடு உணர்ச்சியிலேயே சுரக்கின்ற மணற்கேணிகளை, மணல் அள்ளும் லாரிகள் இன்று மலடிகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாளிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் காவிரியின் கருப்பையை, இன்று ஜே.சி.பி. இயந்திரங்களே கருச்சிதைவு செய்து கொண்டிருக்கின்றன.காவிரியாற்றில் கரிகாற்சோழன் கட்டிய கல்லணையைப் பார்த்து, (பட்ங் எழ்ஹய்க் அய்ண்ஸ்ரீன்ற்) பெரிய அணை என வியந்தனர் பிரிட்டிஷ் பொறியியல் வல்லுநர். ஆங்கிலேயர் கல்லணையைப் "பெரிய அணைக்கட்டு என எண்ணி வியந்ததால், கீழணை ஒன்று கட்ட வேண்டிய அவசியம் நம்மவர்க்கு ஏற்பட்டது.சோழமன்னர்கள் ஒவ்வொரு வெற்றியை அடுத்தும் ஓர் ஆற்றையோ, ஓர் ஏரியையோ வெட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கண்டராதித்த சோழன் எனும் மதுராந்தகச் சோழன், செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வெட்டியது, "மதுராந்தகப் பேரேரி என இன்றும் வழங்கப்படுகின்றது.திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த உய்யங்கொண்டான் ஆறும், கோனேரிராசபுரத்தில் ஓடும் கீர்த்திமான் ஆறும் இராசராசசோழனால் உருவாக்கப்பட்டவையாகும்.தஞ்சை மாவட்டம் சுந்தரப்பெருமாள் கோயில் அருகில் பிரியும் முடிகொண்டான் ஆற்றையும், கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழ கங்கம் எனும் ஏரியையும் உருவாக்கியவர், இராசேந்திர சோழன்.தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வர வடவாற்றை வெட்டியவன் முதற் பராந்தகச்சோழன். இப்படிப் போற்றி வளர்க்கப்பட்ட நீர் ஆதாரங்கள் இன்று மணற்கொள்ளைக்காரர்களாலும், அடுக்குமாடி கட்டும் கோடீசுவரர்களாலும் வற்றி வரண்டு போய்விட்டன.புதுவை மாநிலத்தில் வளம் சேர்க்கும் ஏரி, பாகூர் ஏரி. இந்த ஏரியின் நீளம் எட்டுக் கிலோ மீட்டர். அதன் நீர்ப்பிடிப்பு ஆறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரிக்குத் தென்பெண்ணை ஆற்றிலிருந்து இரண்டுக் கால்வாய்களை வெட்டி நீர் ஆதாரங்களை ஏற்படுத்தியவர்கள் இரண்டு தேவதாசிகள். ஒருவர் பெயர் பங்காரி, அடுத்தவர் அவளுடைய சகோதரி, சிங்காரி.பருவமழை சரியாகப் பெய்தால், அவ்வேரியைச் சுற்றியுள்ள வேளாண் மக்கள் பயிர்த்தொழில் செய்து, உயிர் வளர்ப்பர். பருவமழை பெய்யாவிட்டால், பாகூர் ஏரி வற்றும். மக்கள் பட்டினி கிடப்பர். இத்துயரநிலைகொண்டு உளங்கொதித்து, அத்துயரத்தைத் துடைக்க முன்வந்தவர்கள், பங்காரி, சிங்காரி எனும் தேவதாசியர்.பாகூர் ஏரி எக்காலத்திலும் நீரால் நிரம்பி வழிய, தென்பெண்ணை ஆற்றிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கால்வாயை வெட்டி, பாகூர் ஏரியோடு இணைத்தாள், மூத்தவள் பங்காரி. ஊர் மக்களுடைய முழு ஒத்துழைப்பும் அவளுக்கு இருந்தது. பங்காரி தம்மிடத்திலிருந்த நிதியாதாரங்களைக் கொண்டு, நீராதாரங்களைப் பெருக்கினாள்.அவளுடைய சகோதரி சிங்காரி மேடு தட்டிக் கிடந்த ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, மக்கள் வாழ்வுக்கு வழி செய்தாள். இதனால் 12 கிராமங்கள் வேளாண் தொழிலில் ஈடுபட முடிகின்றது. 6000 ஏக்கர் நிலம் நீராதாரங்களைப் பெறுகிறது.புதுவையில் மற்றுமொரு தேவதாசி, நீராதாரத்தைப் பெருக்கிய சுவையான சம்பவமும் உண்டு. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் மந்திரிப் பரிவாரங்களோடு, முத்தரையர் பாளையம் பக்கம் வந்தார்.மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டு, வாசலில் கோலங்கள் போடப்பட்டு, வரிசையாக விளக்கேற்றி, தூப தீபங்கள் ஏற்றி, சாம்பிராணிப் புகை மணங்கமழ வைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்ட கிருஷ்ணதேவராயர், அதனைக் கோயில் என்று எண்ணி, குதிரையில் இருந்து இறங்கி, கரம் குவித்து வணங்கினார். அவருடன் வந்த பரிவாரங்களும் அப்படியே வணங்கின.அதனைக் கண்டு திடுக்கிட்ட அவ்வூர் மக்கள் மன்னரிடம் சென்று வணங்கி, "சக்கரவர்த்திகள், இதுவொரு கோயிலன்று! இது ஆயி என்னும் தேவதாசியின் வீடு. மாலை நேரத்தில் இப்படி அலங்கரிப்பது அவளுடைய வழக்கம் என்று சொன்னவுடன், அரசர் வெகுண்டு, ஒரு பாவத்திற்கு ஆளாகிவிட்டோமே என்று கருதி, அதனை இடித்துத் தரைமட்டம் ஆக்குமாறு ஆணையிட்டார்.ஆனால், ஆயி, அந்தச் சோதனையையும் ஒரு சாதனை ஆக்க விரும்பி, "சக்கரவர்த்திகளே, இதை இடிக்கும் பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த இடத்தில் ஒரு கிணறும், ஒரு குளமும் வெட்டி, ஊர் மக்களுக்குக் குடிநீர் வசதி செய்வதற்குத் தங்களிடம் அனுமதி வேண்டுகிறேன்' எனக் கெஞ்சினாள். ராயரும் ஆகட்டும் எனத் தலையசைத்தார். ஆயி வெட்டிய குளத்திற்கு ஆயிகுளம் எனப் பெயர் வழங்கலாயிற்று.புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தபிறகு, ஆளுநர் பான்டெம்ப்ஸ் குடிநீருக்கு வேண்டிய நீராதாரங்களைத் தேடும் பணியை, பொறியியல் வல்லுநர் லெமைர்ஸ்சி வசம் ஒப்படைத்தார். லெமைர்ஸ்சி, முத்தரையர் பாளையத்திலுள்ள ஆயிகுளமே புதுச்சேரியினுடைய தாகத்தைத் தீர்க்கப் போதுமானது என்று பரிந்துரைத்தார். இப்பொழுது அங்குப் பல கிணறுகள் தோண்டப்பட்டு, புதுச்சேரி மக்களுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.பிரான்சிலிருந்து மன்னன் மூன்றாம் நெப்போலியன் ஆயினுடைய தியாக உணர்வைச் செவிமடுத்து, அத்தாய்க்குப் பொருத்தமான வகையில் நினைவிடம் உருவாக்கும்படி ஆணை பிறப்பித்தான். அப்படி உருவாக்கப்பட்டதுதான் புதுவை மாநகரத்தின் மையப்பகுதியில் காண்போர் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவான ஆயி மண்டபம்!சென்னை மாநகரத்தில் கடுமையான பஞ்சம். தாது வருட பஞ்சம். குடிதண்ணீர் இன்றி மக்களை வாட்டி வதைத்தபோது, கிழக்கிந்தியக் கம்பெனியில் அதிகாரியாக இருந்த எல்லீஸ் துரை, பெரியபாளையத்தில் இருந்து சென்னை ஏழுகிணறு பகுதிவரை 27 கிணறுகளைத் தோண்டி, செத்துக் கொண்டிருந்த மக்களின் வாய்க்கு உயிர்த்தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினார்.அதுபோலவே பென்னி குயிக் மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள வயல்களில் வளர்ந்த பயிர்களைக் காக்க, பெரியாறு நீர்த்தேக்கத்தைக் கட்டினார். அந்நீர்த்தேக்கத்தைக் கட்டிக் கொண்டிருந்த வேளையில், இடையில் அவருக்கு மிகப் பெரிய பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.அப்பொழுது பென்னி குயிக் இங்கிலாந்து சென்று தமது பூர்வீகச் சொத்துகளையும் மனைவியின் நகைகளையும் விற்று, அப்பணத்தைக் கொணர்ந்து, நீர்த்தேக்கத்தைக் கட்டி முடித்தார்.2012}இல் வெள்ள மேலாண்மைக்குழு ஓர் ஆய்வு செய்து, சென்னை மாநகரத்தில் 650 ஏரிகள் இருந்ததாகப் பதிவு செய்கிறது. அவற்றுள் இப்பொழுது 30 நீர்ப்பிடிப்புகள் மட்டும் எஞ்சி இருப்பதாக அறிக்கை தருகின்றது.மேலும், நீராதாரங்களைப் பராமரிக்கும் துறை, 1130 ஹெக்டேர் பரப்பிலிருந்த 19 பெரிய ஏரிகள் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டதாக கூறுகிறது. சென்னை மாநகரத்தில் அடையாறு, கூவம், எழும்பூர் என மூன்று ஆறுகள் செழிப்போடும், தூய்மையோடும் ஓடியிருக்கின்றன.வள்ளல் பச்சையப்ப முதலியார் கூவம் ஆற்றில் அமாவாசை அன்று நீராடி, பிதுர்க்கடனை நிறைவேற்றியதாக தம் குடும்பத்திற்கு மடல் எழுதியிருக்கிறார். கூவம் ஆற்றில் பல்வேறு வகையான விதவிதமான மீனினங்கள் வாழ்ந்ததாகக் கோட்டைப் பதிவேடுகள் கூறுகின்றன.அக்கூவத்தின் கரைகள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் வாழ்விடங்களாக மாறிவிட்டன. அம்மக்களின் காலைக்கடன்களும், மாலைக்கடன்களும் கூவம் ஆற்றில்தான் கலக்கின்றன. கூவத்தின் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் குறுந்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள், கூவத்தில்தான் சங்கமம் ஆகின்றன.உயிர் வாழ்வதற்குப் பயன்பட்ட கூவம், இன்றைக்குத் தற்கொலைகளுக்கே பயன்படுகிறது. எழும்பூர் ஆறு ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பங்கிங்காம் கால்வாயோடு இணைக்கப்பட்டது. அது இன்றைக்குக் கொசு உற்பத்தி சாலைகளாக மாறிவிட்டது.மூன்று போகம் விளைந்து கொண்டிருந்த செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள வயல்களில், இப்பொழுது ரியல் எஸ்டேட்காரர்கள் செம்மண்ணைக் கொட்டி, தார் சாலை போட்டு, பசித்த வயிறுகளில் மண்ணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொன் விளையும் பூமியாக இருந்த வயல்கள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு அடித்தளமாகிவிட்டன.தமிழகத்தின் நீராதாரங்களுக்கு வந்த நீரிழிவு நோயை யார் குணப்படுத்துவது? 
Updated on
3 min read

மனிதர்களை எச்சரிப்பதற்காகவே இவ்வுலகைப் படைத்த இறைவன், நாலா பக்கமும் தண்ணீராகவும் நடுவிலே திட்டுத்திட்டு நிலங்களாகவும் படைத்திருக்கிறான். அதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கு அறிவுறுத்துவதற்காகவே, மூன்று பக்கம் தண்ணீராகவும் ஒரு பக்கம் நில பாகமாகவும் அமைத்திருக்கிறான்.
மேலும், தென்னாடுடைய சிவனே தண்ணீரைப் போற்றுவதற்காக, அதனைத் தலையிலே தாங்கி நிற்கிறான் போலும். தண்ணீரின் பெருமையைத் தரணிக்கு உணர்த்துவதற்காகவே, திருமாலும் பாற்கடலில் பையத் துயிலும் பரமனாகக் காட்சி தருகிறான்.
மற்றும் திருவள்ளுவப் பெருந்தகையே கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தை அடுத்து, வான்சிறப்பு எனும் அதிகாரத்தை அமைத்திருப்பது, தண்ணீரின் மகத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்துவதற்காகவே எனலாம். என்றாலும் இன்றைக்குத் தண்ணீர் தேசம், குடிப்பதற்கு நீரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மனிதர்களை மனிதர்களே ஏமாற்றிக் கொண்டிருப்பதால், மாதம் மும்மாரிப் பொழிய வேண்டிய மேகமும், இன்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தொடு உணர்ச்சியிலேயே சுரக்கின்ற மணற்கேணிகளை, மணல் அள்ளும் லாரிகள் இன்று மலடிகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாளிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் காவிரியின் கருப்பையை, இன்று ஜே.சி.பி. இயந்திரங்களே கருச்சிதைவு செய்து கொண்டிருக்கின்றன.
காவிரியாற்றில் கரிகாற்சோழன் கட்டிய கல்லணையைப் பார்த்து, (பட்ங் எழ்ஹய்க் அய்ண்ஸ்ரீன்ற்) பெரிய அணை என வியந்தனர் பிரிட்டிஷ் பொறியியல் வல்லுநர். ஆங்கிலேயர் கல்லணையைப் "பெரிய அணைக்கட்டு என எண்ணி வியந்ததால், கீழணை ஒன்று கட்ட வேண்டிய அவசியம் நம்மவர்க்கு ஏற்பட்டது.
சோழமன்னர்கள் ஒவ்வொரு வெற்றியை அடுத்தும் ஓர் ஆற்றையோ, ஓர் ஏரியையோ வெட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கண்டராதித்த சோழன் எனும் மதுராந்தகச் சோழன், செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வெட்டியது, "மதுராந்தகப் பேரேரி என இன்றும் வழங்கப்படுகின்றது.
திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த உய்யங்கொண்டான் ஆறும், கோனேரிராசபுரத்தில் ஓடும் கீர்த்திமான் ஆறும் இராசராசசோழனால் உருவாக்கப்பட்டவையாகும்.
தஞ்சை மாவட்டம் சுந்தரப்பெருமாள் கோயில் அருகில் பிரியும் முடிகொண்டான் ஆற்றையும், கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழ கங்கம் எனும் ஏரியையும் உருவாக்கியவர், இராசேந்திர சோழன்.
தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வர வடவாற்றை வெட்டியவன் முதற் பராந்தகச்சோழன். இப்படிப் போற்றி வளர்க்கப்பட்ட நீர் ஆதாரங்கள் இன்று மணற்கொள்ளைக்காரர்களாலும், அடுக்குமாடி கட்டும் கோடீசுவரர்களாலும் வற்றி வரண்டு போய்விட்டன.
புதுவை மாநிலத்தில் வளம் சேர்க்கும் ஏரி, பாகூர் ஏரி. இந்த ஏரியின் நீளம் எட்டுக் கிலோ மீட்டர். அதன் நீர்ப்பிடிப்பு ஆறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரிக்குத் தென்பெண்ணை ஆற்றிலிருந்து இரண்டுக் கால்வாய்களை வெட்டி நீர் ஆதாரங்களை ஏற்படுத்தியவர்கள் இரண்டு தேவதாசிகள். ஒருவர் பெயர் பங்காரி, அடுத்தவர் அவளுடைய சகோதரி, சிங்காரி.
பருவமழை சரியாகப் பெய்தால், அவ்வேரியைச் சுற்றியுள்ள வேளாண் மக்கள் பயிர்த்தொழில் செய்து, உயிர் வளர்ப்பர். பருவமழை பெய்யாவிட்டால், பாகூர் ஏரி வற்றும். மக்கள் பட்டினி கிடப்பர். இத்துயரநிலைகொண்டு உளங்கொதித்து, அத்துயரத்தைத் துடைக்க முன்வந்தவர்கள், பங்காரி, சிங்காரி எனும் தேவதாசியர்.
பாகூர் ஏரி எக்காலத்திலும் நீரால் நிரம்பி வழிய, தென்பெண்ணை ஆற்றிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கால்வாயை வெட்டி, பாகூர் ஏரியோடு இணைத்தாள், மூத்தவள் பங்காரி. ஊர் மக்களுடைய முழு ஒத்துழைப்பும் அவளுக்கு இருந்தது. பங்காரி தம்மிடத்திலிருந்த நிதியாதாரங்களைக் கொண்டு, நீராதாரங்களைப் பெருக்கினாள்.
அவளுடைய சகோதரி சிங்காரி மேடு தட்டிக் கிடந்த ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, மக்கள் வாழ்வுக்கு வழி செய்தாள். இதனால் 12 கிராமங்கள் வேளாண் தொழிலில் ஈடுபட முடிகின்றது. 6000 ஏக்கர் நிலம் நீராதாரங்களைப் பெறுகிறது.
புதுவையில் மற்றுமொரு தேவதாசி, நீராதாரத்தைப் பெருக்கிய சுவையான சம்பவமும் உண்டு. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் மந்திரிப் பரிவாரங்களோடு, முத்தரையர் பாளையம் பக்கம் வந்தார்.
மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டு, வாசலில் கோலங்கள் போடப்பட்டு, வரிசையாக விளக்கேற்றி, தூப தீபங்கள் ஏற்றி, சாம்பிராணிப் புகை மணங்கமழ வைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்ட கிருஷ்ணதேவராயர், அதனைக் கோயில் என்று எண்ணி, குதிரையில் இருந்து இறங்கி, கரம் குவித்து வணங்கினார். அவருடன் வந்த பரிவாரங்களும் அப்படியே வணங்கின.
அதனைக் கண்டு திடுக்கிட்ட அவ்வூர் மக்கள் மன்னரிடம் சென்று வணங்கி, "சக்கரவர்த்திகள், இதுவொரு கோயிலன்று! இது ஆயி என்னும் தேவதாசியின் வீடு. மாலை நேரத்தில் இப்படி அலங்கரிப்பது அவளுடைய வழக்கம் என்று சொன்னவுடன், அரசர் வெகுண்டு, ஒரு பாவத்திற்கு ஆளாகிவிட்டோமே என்று கருதி, அதனை இடித்துத் தரைமட்டம் ஆக்குமாறு ஆணையிட்டார்.
ஆனால், ஆயி, அந்தச் சோதனையையும் ஒரு சாதனை ஆக்க விரும்பி, "சக்கரவர்த்திகளே, இதை இடிக்கும் பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த இடத்தில் ஒரு கிணறும், ஒரு குளமும் வெட்டி, ஊர் மக்களுக்குக் குடிநீர் வசதி செய்வதற்குத் தங்களிடம் அனுமதி வேண்டுகிறேன்' எனக் கெஞ்சினாள். ராயரும் ஆகட்டும் எனத் தலையசைத்தார். ஆயி வெட்டிய குளத்திற்கு ஆயிகுளம் எனப் பெயர் வழங்கலாயிற்று.
புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தபிறகு, ஆளுநர் பான்டெம்ப்ஸ் குடிநீருக்கு வேண்டிய நீராதாரங்களைத் தேடும் பணியை, பொறியியல் வல்லுநர் லெமைர்ஸ்சி வசம் ஒப்படைத்தார். லெமைர்ஸ்சி, முத்தரையர் பாளையத்திலுள்ள ஆயிகுளமே புதுச்சேரியினுடைய தாகத்தைத் தீர்க்கப் போதுமானது என்று பரிந்துரைத்தார். இப்பொழுது அங்குப் பல கிணறுகள் தோண்டப்பட்டு, புதுச்சேரி மக்களுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.
பிரான்சிலிருந்து மன்னன் மூன்றாம் நெப்போலியன் ஆயினுடைய தியாக உணர்வைச் செவிமடுத்து, அத்தாய்க்குப் பொருத்தமான வகையில் நினைவிடம் உருவாக்கும்படி ஆணை பிறப்பித்தான். அப்படி உருவாக்கப்பட்டதுதான் புதுவை மாநகரத்தின் மையப்பகுதியில் காண்போர் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவான ஆயி மண்டபம்!
சென்னை மாநகரத்தில் கடுமையான பஞ்சம். தாது வருட பஞ்சம். குடிதண்ணீர் இன்றி மக்களை வாட்டி வதைத்தபோது, கிழக்கிந்தியக் கம்பெனியில் அதிகாரியாக இருந்த எல்லீஸ் துரை, பெரியபாளையத்தில் இருந்து சென்னை ஏழுகிணறு பகுதிவரை 27 கிணறுகளைத் தோண்டி, செத்துக் கொண்டிருந்த மக்களின் வாய்க்கு உயிர்த்தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினார்.
அதுபோலவே பென்னி குயிக் மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள வயல்களில் வளர்ந்த பயிர்களைக் காக்க, பெரியாறு நீர்த்தேக்கத்தைக் கட்டினார். அந்நீர்த்தேக்கத்தைக் கட்டிக் கொண்டிருந்த வேளையில், இடையில் அவருக்கு மிகப் பெரிய பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அப்பொழுது பென்னி குயிக் இங்கிலாந்து சென்று தமது பூர்வீகச் சொத்துகளையும் மனைவியின் நகைகளையும் விற்று, அப்பணத்தைக் கொணர்ந்து, நீர்த்தேக்கத்தைக் கட்டி முடித்தார்.
2012}இல் வெள்ள மேலாண்மைக்குழு ஓர் ஆய்வு செய்து, சென்னை மாநகரத்தில் 650 ஏரிகள் இருந்ததாகப் பதிவு செய்கிறது. அவற்றுள் இப்பொழுது 30 நீர்ப்பிடிப்புகள் மட்டும் எஞ்சி இருப்பதாக அறிக்கை தருகின்றது.
மேலும், நீராதாரங்களைப் பராமரிக்கும் துறை, 1130 ஹெக்டேர் பரப்பிலிருந்த 19 பெரிய ஏரிகள் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டதாக கூறுகிறது. சென்னை மாநகரத்தில் அடையாறு, கூவம், எழும்பூர் என மூன்று ஆறுகள் செழிப்போடும், தூய்மையோடும் ஓடியிருக்கின்றன.
வள்ளல் பச்சையப்ப முதலியார் கூவம் ஆற்றில் அமாவாசை அன்று நீராடி, பிதுர்க்கடனை நிறைவேற்றியதாக தம் குடும்பத்திற்கு மடல் எழுதியிருக்கிறார். கூவம் ஆற்றில் பல்வேறு வகையான விதவிதமான மீனினங்கள் வாழ்ந்ததாகக் கோட்டைப் பதிவேடுகள் கூறுகின்றன.
அக்கூவத்தின் கரைகள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் வாழ்விடங்களாக மாறிவிட்டன. அம்மக்களின் காலைக்கடன்களும், மாலைக்கடன்களும் கூவம் ஆற்றில்தான் கலக்கின்றன. கூவத்தின் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் குறுந்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள், கூவத்தில்தான் சங்கமம் ஆகின்றன.
உயிர் வாழ்வதற்குப் பயன்பட்ட கூவம், இன்றைக்குத் தற்கொலைகளுக்கே பயன்
படுகிறது. எழும்பூர் ஆறு ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பங்கிங்காம் கால்வாயோடு இணைக்கப்பட்டது. அது இன்றைக்குக் கொசு உற்பத்தி சாலைகளாக மாறிவிட்டது.
மூன்று போகம் விளைந்து கொண்டிருந்த செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள வயல்களில், இப்பொழுது ரியல் எஸ்டேட்காரர்கள் செம்மண்ணைக் கொட்டி, தார் சாலை போட்டு, பசித்த வயிறுகளில் மண்ணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொன் விளையும் பூமியாக இருந்த வயல்கள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு அடித்தளமாகிவிட்டன.
தமிழகத்தின் நீராதாரங்களுக்கு வந்த நீரிழிவு நோயை யார் குணப்படுத்துவது?

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com