பாதுகாப்போம் குழந்தைகளை

குழந்தைகளின் உரிமைகள் குறித்து ஐநாவின் தீர்மானங்கள் கூறும் போது குழந்தைகளுக்கு, உயிர் வாழும் உரிமை, வளர்ச்சி காண்பதற்கான உரிமை, பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை ஆகியவை
Updated on
2 min read

குழந்தைகளின் உரிமைகள் குறித்து ஐநாவின் தீர்மானங்கள் கூறும் போது குழந்தைகளுக்கு, உயிர் வாழும் உரிமை, வளர்ச்சி காண்பதற்கான உரிமை, பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை ஆகியவை மிக அவசியம் என்கிறது. இந்த உரிமைகள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பவையாகும். என்றாலும் அவற்றின் தன்மைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
உயிர் வாழும் உரிமை என்பதில் வாழ்வதற்கான உரிமை, ஆரோக்கியமான உணவை பெறுவதற்கான உரிமை, அடையாளத்திற்கான பெயர் மற்றும் தேசிய அடையாளம் ஆகியவை அடங்கும்.
வளர்ச்சி காண்பதற்கான உரிமை என்பதில் கல்வி கற்பதற்கான உரிமை, குழந்தைப் பருவத்தில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல், சமூகப் பாதுகாப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை ஆகியவை அடங்கும்.
பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமையில், சுரண்டல்கள், கொடுமைகள், மனித தன்மையற்ற முறையில் கேவலமாக நடத்துதல், உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளித்தல் மற்றும் நெருக்கடி காலங்கள் யுத்தகாலங்கள், உடல் ஊனமுற்ற நிலை ஆகிய சமயங்களில் சிறப்பு பாதுகாப்பு வழங்குதல் ஆகியவை அடங்கும்.
பங்கேற்பு உரிமை என்பதில் குழந்தைகளின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிப்பது, எதையும் வெளிப்படுத்துவதற்கான உரிமை, தகவல் கோரி பெறுவதற்கான உரிமை, கருத்தில் எண்ணத்தில் மத நம்பிக்கைகளில் இன்னும் பிற விஷயங்களில் தேர்ந்தெடுக்கவோ அல்லது முடிவெடுக்கவோ சுதந்திரம் என்பவை அடங்கும். இந்த உரிமைகளை எல்லாம் குழந்தைகள் பெற்றிருக்கின்றனவா என்று யோசித்து பாருங்கள்.
ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் வளர்ப்பு தந்தையால் 10 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் நம்மை அதிரவைத்தது என்றால், அடுத்த சில நாட்களில் ஆந்திர மாநிலம் டஜாங்கி என்னும் கிராமத்தை சார்ந்த இரண்டு சிறுமிகள் பூட்டிய கடையருகே மழைக்கு ஒதுங்கியபோது ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளானது பெரும் அதிர்ச்சியினை எற்படுத்தியிருக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் பாதிப்புக்குள்ளான சிறுமிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டுமென கிராம பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பு அதைவிட கொடுமை.
நாகர்கோவிலில் 40 நாட்களாக வீட்டு சிறையில் வைத்து 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் தலைமறைவாகிவிட்ட பின்னணியில் காவல்துறையின் விசாரணையில் சிறுமியை ஒரு லட்சம் ரூபாய்க்கு பெற்றோரே விற்றக் கொடுமை பெரும் அதிர்வலையை எற்படுத்தியுள்ளது.
இப்படியானக் கொடுமைகளுக்கு நம் ஊரிலும் பஞ்சமில்லை. ஏதோ ஒருவகையில் குழந்தைகள் மீதான உரிமைகள் மீறப்படுவதுடன் அவர்கள் மீதான வன்முறையும் நிகழ்ந்துகொண்டேயிருப்பது கவலையளிக்கிறது.
குழந்தைகளை திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது, பீஸ் கட்டவில்லை என்றால் வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கக் கூடாது, என்ன சாதி என்று கேட்கக் கூடாது, தகாத முறையில் பேசுவதை தவிர்த்திட வேண்டும் இப்படி பல உரிமைகளை கல்வி உரிமை சட்டம் அளித்துள்ளது. அவை குழந்தைகளுக்கு கிடைக்கின்றனவா என்றால் நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 13 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 13,000 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் 53 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒன்று அல்லது அதற்கு அதிகமான வகையில் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதில் 22 சதவீத குழந்தைகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 6 சதவீத குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரிவந்துள்ளது.
இதில் தொடர்புடைய 50 சதவீத குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களாக, நண்பர்களாக, அருகில் வசிப்பவர்களாக இருந்துள்ளனர் என்பது மிக அதிர்ச்சியான தகவல்.
சென்னையில் உள்ள 2,211 பெண்களிடம் ஆய்வு செய்ததில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதில் சிறுவர் } சிறுமியர்களும் அடங்குவர்.
சென்னை பிராட்வே பகுதியில் தெருவோரத்தில் தூங்கிய இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கூடுதல் காவல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் சோதனை நடத்தப்பட்டதில் 94 குழந்தைகள் மீட்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் கோவை மாநகர காவல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் 91 குழந்தைகள் மீட்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பிற்கான உரிமைகள் எப்படியெல்லாம் கேள்விகுறியாகியுள்ளன என்பதை யோசித்துப் பாருங்கள்.
குழந்தைகள் தொடர்பான வழக்குகளை நான்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நீடிப்பதும் குழந்தைகள் அலைகழிக்கப்படுவதும் தொடர்கிறது.
2014}ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் குழந்தைகள் உரிமை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் இதுவரை எந்த பள்ளியிலும் அமைக்கப்பட்டதாக தகவல் இல்லை.
மேலும் பாடத்திட்டத்தில் குழந்தைகள் உரிமையைப் பாடமாக வைக்கவேண்டும் என்றும் மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தில் அரசியல் சார்பற்றவர்கள், குழந்தை உரிமை மீது அக்கறை உள்ளவர்கள் மட்டுமே பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் வலியறுத்தி உள்ளது. இதுவும் நடைமுறையில் இல்லை.
இவற்றை எல்லாம் முழுவீச்சுடன் கண்காணித்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com