வாரிசுகளைப் போற்றுவோம்!

எண்பத்தேழு வயதைத் தாண்டிய ஒரு முதியவர், எண்பத்தைந்து வயதை நிறைவு செய்த அவரது துணைவி - இருவரும் 08.05.2016 அன்று புதுதில்லியின் நகர்ப்புறத்தில் இயங்கிவரும் ஒரு முதியோர் இல்லத்தில் சேருகிறார்கள்.

எண்பத்தேழு வயதைத் தாண்டிய ஒரு முதியவர், எண்பத்தைந்து வயதை நிறைவு செய்த அவரது துணைவி - இருவரும் 08.05.2016 அன்று புதுதில்லியின் நகர்ப்புறத்தில் இயங்கிவரும் ஒரு முதியோர் இல்லத்தில் சேருகிறார்கள். வெயிலின் கொடுமை தாங்காததால் அவர்கள் தங்கும் அறைக்கு குளிர்சாதன வசதி செய்து தரப்படுகிறது.
அந்த முதியோர் இல்லத்தின் நிறுவனரிடம் அந்த முதியவரும், மூதாட்டியும் 'நாங்கள் வசிப்பதற்கு வீடு இல்லை; இருக்க இடம் தந்ததற்கு நன்றி. 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அமெரிக்காவில் உழைத்து, வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறோம்.
இன்று எங்கள் தேவைகள் எங்களைப் போன்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்குவதற்கான ஒரு முதியோர் இல்லம். அடுத்து நாங்கள் நேசிக்கும் இந்திய மக்களின் அன்பும் பிரார்த்தனையும் மட்டுமே. எங்களுக்குப் பணம் வேண்டாம். எங்கள் தேவையை நாங்களே சமாளித்துக் கொள்வோம்' என்று சொல்லியிருக்கிறார்கள் அவர்கள் இருவரும்.
இப்படிச் சொல்லியிருப்பவர்கள் யார் தெரியுமா? தெய்வத்தின் குரலாக, தேசத்தின் பிதாவாக, சத்தியம் அகிம்சையை உலகுக்குப் போதித்த உத்தமராக, அண்ணலாக, மகாத்மாவாக வாழ்ந்து மறைந்த 'காந்திஜி'யின் மூன்றாவது மகன் ராம்தாஸ் காந்தியின் மகன் கனுபாய் ராம்தாஸ் காந்தியும், அவரது துணைவியார் டாக்டர் சிவலட்சுமியும் தான்.
இந்தத் தகவலை செய்தித்தாள்கள் மூலம் படித்தபோது, இலட்சக்கணக்கான இதயங்கள் துடித்தன; கோடிக்கணக்கான கண்கள் குளமாயின.
தொழில்துறையாகட்டும், நிர்வாக நீதித்துறையாகட்டும், அரசியல் துறையாகட்டும் எங்கும் எதிலும் வாரிசுகளே வளர்ந்து, ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் இன்றைய இந்தியாவில், மகான் காந்தியின் பேரன் கனுபாய் காந்தி, இன்று முதியோர் இல்லத்தில் இடம் தேடி நிற்கிறாரே! இந்த அவலத்தை எங்கே போய்ச் சொல்வது?
இந்த செய்தியைக் கேட்டு இந்திய மக்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்களா? அவர்கள் விரும்பியபடி, அவர்களது நலனுக்கு பிராத்தனையாவது செய்தார்களா? தெரியவில்லையே! பிரதமர் அலுவலகத்திலிருந்து, தொலைபேசியில் அந்த முதியோர் இல்ல நிர்வாகியிடம் தொடர்பு கொண்டு, 'அரசு உதவி செய்ய விரும்புகிறது; என்ன உதவி தேவை, கேட்டுச் சொல்லுங்கள்' - எனக் கேட்டபோது, அத்தம்பதி 'இப்பொழுது இருப்பதே போதும்; கூடுதலாக எதுவும் தேவையில்லை' - எனக் கூறிவிட்டார்கள்.
வாழ்வாங்கு வாழ்ந்த அண்ணலின் வாரிசுகள் அல்லவா? 'இருப்பதே போதும்' - எனப் போதித்த அண்ணலின் உயர்குணங்கள் பேரன்களிடமும் பிரகாசிக்குமல்லவா?
இந்த நேரத்திலாவது அவர்கள் தொடர்பான முன் தலைமுறைச் தகவல்களை நாம் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?
மகான் காந்தி - மாதா கஸ்தூரிபாவுக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் 1. ஹரிலால், 2. மணிலால், 3. ராம்தாஸ் 4. தேவதாஸ்.
மூன்றாவது மகனான ராம்தாஸ், நிர்மலா பென் என்பவரை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
அவர்களின் பெயர்: மகள் சுமித்ரா காந்தி, மகள் உஷா காந்தி, மகன் கனு காந்தி.
மகன் கனு காந்தியும் அவரது துணைவியார் சிவலட்சுமியும் அமெரிக்காவில் வாழ்ந்தார்கள். அங்கு கனு காந்தி எம்.ஐ.டி. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். அங்கு அறிவியலாளராகப் பணியாற்றினார். எளிமையாக வாழ்ந்தார். காந்தியத் தத்துவங்களைப் பரப்பும் பணியையும் மேற்கொண்டார். இறுதிக்காலத்தில் இந்தியாவில் முதியோர் இல்லத்தில் இடம் தேடி, தன் துணைவியுடன் வந்தார்.
கனு காந்தியின் தந்தையும், காந்திமகாத்மாவின் மூன்றாவது மகனுமான ராம்தாஸ் காந்தியின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் நாம் அறிந்து கொள்வது நல்லது.
ராம்தாஸின் வளர்ப்பில் பாதி காந்திஜியாலும், மீதி அண்ணன் மணிலாலாலும் நிறைவேற்றப்பட்டது. அண்ணல் அவரை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கவில்லை; இயன்றவரை கற்பிக்கும் பணியை தானே ஏற்றுச் செய்தார்.
காந்திஜியின் ஆரம்பகால அரசியல் போராட்டங்களில் அண்ணலின் செயலர் போலப் பணியாற்றினார். 1930 முதல் அண்ணல் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் போராளியாக நின்றவர் அவர்.
1948-ல் அண்ணல் கொலை செய்யப்பட்டு மறைந்தபோது மூத்த மகன் ஹரிலாலின் இருக்குமிடம் தெரியவில்லை. இரண்டாவது மகன் மணிலால் தென்னாப்பிரிக்காவில் பீனிக்ல் ஆசிரமத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் மூன்றாவது மகன் ராமதாஸ்-தான் ஈமக்கிரியைகளைச் செய்தார். கங்கைக் கரையில் அஸ்தியைக் கரைத்தார்.
ராமதாஸை காந்தியின் மறு உரு அல்லது உண்மையான பிரதிபலிப்பு எனக் கூறலாம். அதற்கு ஒரு உதாரணம்: காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் இருந்தபோது: 'கோட்சே மன்னிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்படக் கூடாது' - என்று பகிரங்கமாக வேண்டுகோள் விட்டவர் ராமதாஸ்.
அவரும் அவரது அண்ணன் மணிலாலும், அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் 'கோட்சே மன்னிக்கப்பட வேண்டும்; அதுவே காந்தியின் நினைவுக்கு உகந்ததாக இருக்கும்' - எனப் பரிந்துரைத்தார்கள். அப்பரிந்துரை ஏற்கப்படவில்லை.
எளிமையின் இலக்கணமாக, அறிவுப் பெட்டகமாக, காந்தியச் சிந்தனைகளை மேலை நாட்டில் பரப்பியவர்தான் காந்தியின் பேரன், ராமதாஸின் மகன் கனு காந்தி. அவர்தான் இந்தியாவில் முதியோர் இல்லம் தேடி வந்தவர்.
இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாளில் தேசப்பிதா காந்திஜியின் வாரிசுகளைப் போற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com