ஜெயிக்குமா 'புதினிஸம்'? 

சர்வதேச அளவில் சரிந்து கிடந்த ரஷியாவின் செல்வாக்கை மீட்டெடுத்தவர் அதிபர் விளாதிமிர் புதின் என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இருக்க முடியாது. இப்போதும் ரஷியாவின் முகமாக அறியப்படும் ஒரே தலைவர்
Updated on
2 min read

சர்வதேச அளவில் சரிந்து கிடந்த ரஷியாவின் செல்வாக்கை மீட்டெடுத்தவர் அதிபர் விளாதிமிர் புதின் என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இருக்க முடியாது. இப்போதும் ரஷியாவின் முகமாக அறியப்படும் ஒரே தலைவர் புதின் மட்டுமே.
1999-ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து இப்போது வரை சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர், அதிபர் என பதவியை மாற்றி, ரஷியாவில் அதிகாரத்தைத் தொடர்ந்து தன் கையில் வைத்துள்ளார். 
ரஷிய உளவுத்துறையான கேஜிபி-யில் 16 ஆண்டுகள் பணியாற்றியதும், அதன் பிறகு அரசியலில் களமிறங்கி எதிர்கொண்ட அனுபவங்களும்தான் புதினை சாமர்த்தியமான அரசியல் தலைவராக மாற்றியுள்ளது. கேஜிபி-யில் தன்னுடன் பணியாற்றிய திமித்ரி மெத்வதேவ் உள்ளிட்ட நம்பிக்கைக்குரியவர்களை மட்டுமே அரசியலில் தன்னருகில் வைத்துள்ளார்.
'புதின் சர்வாதிகாரியுமல்ல, கம்யூனிஸவாதியுமல்ல, ரஷியாவில் ஒற்றை அதிகார மையத்தைக் கொண்ட ஜனநாயகத்தை வடிவமைத்தவர்' என்று ஆதரவாளர்களால் புகழப்படுபவர். ரஷியாவில் ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்த படியாக, இரும்பு மனிதராக தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டுள்ளார். அவர் நடைமுறைப்படுத்தும் கொள்கைகளும், அரசியல் செயல்பாடுகளும் மேற்கத்திய நாடுகளால் 'புதினிஸம்' என்றே வர்ணிக்கப்படுகின்றன. 
புதினின் வளர்ச்சி தங்களுக்கு பிரச்னை என்று கருதும் சில மேற்கத்திய நாடுகள், நாசிஸம், பாசிஸம் போன்ற சர்வதேச அளவில் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்த கொள்கைகளின் பாணியில் புதினின் கொள்கைகளுக்கு 'புதினிஸம்' என்று பெயர் சூட்டி, அவர் மீது எதிர்மறை முத்திரையைப் பதிக்கவே முயற்சித்தன. ஆனால், அதனையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார்.
எப்போதும் மக்களிடம் நேரடியாகத் தொடர்பில் இருக்க விரும்பும் புதின், தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடுவதுடன், தொலைபேசி மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்விதத் தயக்கமுமின்றி உடனுக்குடன் பதிலளித்து 'புதினிஸம்' என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை உருவாக்கினார்.
2000-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி வருகிறார் புதின்.1,500-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் புதின், 5 மணி நேரம் வரைகூட சளைக்காமல் பதிலளித்துள்ளார்.
1999-இல் ரஷியாவில் 36.5 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை 6.5 சதவீதமாகக் குறைத்தது; தலா வருமானத்தை உயர்த்தியது; கடன் அளவைக் கட்டுப்படுத்தியது; உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தது என புதினின் சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன. 
எனினும் உள்நாட்டில் அவர் மீது அதிருப்திகள் வளராமல் இல்லை. அதிபர், பிரதமர் நாற்காலிகளில் புதினும், அவருக்கு நெருக்கமான மெத்வதேவும் மாறிமாறி அமர்ந்து விளையாடியது ரஷிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ரஷிய சட்டப்படி ஒருவர் இருமுறைக்கு மேல் தொடர்ந்து அதிபராக தொடரக் கூடாது. 2000-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த புதின், அடுத்த 4 ஆண்டுகளுக்கு தனது நம்பிக்கைக்குரிய மெத்வதேவை அதிபராக்கினார். மெத்வதேவ் வகித்து வந்த பிரதமர் பதவியை, தான் பெற்றுக் கொண்டார். 
2012-இல் மீண்டும் புதின் அதிபராகிவிட்டு, மெத்வதேவைப் பிரதமராக்கினார். முன்னதாக, 2008-ஆம் ஆண்டில் 4 ஆண்டுகளாக இருந்த ரஷிய அதிபர் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளாக நீட்டித்தார்.
கடந்த தேர்தலில் ரஷியாவில் புதினுக்கு எதிராக அதிருப்தி அலை இருந்தது. எனினும், அவர் 63 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளை போலீஸார் ஒடுக்கினர்.
இதைத் தொடர்ந்து, தனக்கு எதிராக மக்களின் மனநிலை மாறி இருப்பதை உணர்ந்து கொண்ட புதின் அதனை மாற்ற பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். முக்கியமாக சர்வதேச விவகாரங்களில் அவர் எடுத்த அதிரடி முடிவுகள் ரஷியாவில் மக்கள் ஆதரவை மீட்டுத் தந்தன. சிரியா விவகாரத்தில் புதின் எடுத்த தாக்குதல் நிலைப்பாடு, உக்ரைனின் கிரீமியா பகுதியை மீண்டும் ரஷியாவுடன் இணைத்தது ஆகிய நடவடிக்கைகள், புதினின் செல்வாக்கை அதிகரித்துள்ளது.
அண்மையில் ரஷியாவில் புதின் செல்வாக்கு குறித்து எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் புதினுக்கு 67 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அந்த உற்சாகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக புதின் அறிவித்துள்ளார். தனது ஐக்கிய ரஷிய கட்சி சார்பில் அல்லாமல் அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கவும் அவர் முடிவெடுத்துவிட்டார்.
வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'பியூவ்' ஆய்வு மையம் சில மாதங்களுக்கு முன்பு, சர்வதேச விவகாரங்களில் சரியான முடிவு எடுக்கும் தலைவர் யார் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோரை முன்வைத்து 36 முக்கிய நாடுகளில் ஆய்வு நடத்தியது. 
இதில் 23 நாடுகளைச் சேர்ந்த மக்கள் புதினுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். டிரம்ப்புக்கு 13 நாடுகளில் மட்டுமே செல்வாக்கு இருந்தது. அமெரிக்காவின் தீவிர ஆதரவு நாடுகளான தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பாவில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாட்டு மக்களும் அதிக அளவில் புதின் பக்கம் நின்றனர். இதன் மூலம் சர்வதேச அளவில் நம்பகத்தன்மை வாய்ந்த தலைவராகவும் புதின் உயர்ந்துள்ளார்.
பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயு சார்ந்த வளத்தை பொருளாதார வளமாக நம்பியிருக்கும் ரஷியாவுக்கு, அண்மையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது பின்னடவை ஏற்படுத்தியது. புதினின் சகாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற மக்கள் பிரச்னைகள் உள்ளன. எனினும், தனக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகளை வளரவிடாத புதினின் அரசியல் இந்தத் தேர்தலிலும் அவருக்கு கைகொடுக்கும் என்றே கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com