விதியே! பத்திரிகையாளரை என் செய நினைத்தாய்?

கோழிக்குஞ்சுகளை ஒரு பருந்து அடித்துத் தூக்கிப் போக வந்தால், தாய்க்கோழி அப்பருந்தைத் தன் இறக்கையால் அடித்துத் துரத்திவிடும்.
Updated on
3 min read

கோழிக்குஞ்சுகளை ஒரு பருந்து அடித்துத் தூக்கிப் போக வந்தால், தாய்க்கோழி அப்பருந்தைத் தன் இறக்கையால் அடித்துத் துரத்திவிடும். கங்காரு தன் குட்டிகளைப் பொல்லாத விலங்குகளிடமிருந்து காப்பாற்ற தன் உடம்பிலேயே ஒரு பையை வைத்திருக்கிறது. பூச்சி வகைகளில் எந்தப் பூச்சி செத்தாலும், அதனை இழுத்துக்கொண்டு போய் இறுதி மரியாதை செய்வதற்கு எறும்புக்கூட்டம் தயாராய் இருக்கிறது. ஆனால், ஒரு பத்திரிகையாளன் அநியாயமாகக் கொல்லப்பட்டால், கேட்பதற்கு நாதியில்லை இந்தப் புண்ணிய பூமியில்!
திரிபுரா மாநிலத்தில் சாந்தனு பெளமிக் எனும் தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் (வயது 28) பட்டப்பகலில், காவல் துறையினர் கண்முன்னரே, வன்முறையாளர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். அடுத்து அதே திரிபுராவில் துணை இராணுவப்படை அதிகாரியின் மெய்க்காப்பாளரால், 'சியந்தன் பத்ரிகா' பத்திரிகையின் துணையாசிரியர் சுதீப் தத்தா பெளமிக் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார், பட்டப்பகலில்! தேசத்தைக் காப்பதற்காகப் புறப்படும் போர் வீரனைப் போலப் புறப்படும் பத்திரிகையாளர்களைக் கொடுங்கோலர்கள் ஈவிரக்கமின்றிக் கொலை செய்கிறார்கள் என்றால், 'விதியே! பத்திரிகையாளரை என் செய நினைத்தாய்' எனக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
சாந்தனு பெளமிக், சுதீப் தத்தா பெளமிக் இருவரும் புலனாய்வு இதழியலாளர்கள் ஆவர். புலனாய்வு இதழியல் என்பது (இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்) பத்திரிகை உலகத்துக்குப் பாய்ச்சப்பட்ட புது ரத்தம் ஆகும். ஆங்கில நாட்டுப் புலனாய்வு இதழியல் வல்லுநர் ஹியூகோ டிபர்க் என்பவர், 'புலனாய்வு இதழியல் என்பது ஒரு துறைக்குள்ளே மறைக்கப்பட்டிருக்கும் உண்மையை அல்லது நிகழ்ந்திருக்கும் தவறான நடைமுறைகளைக் கண்டறிந்து சொல்வதாகும். புலனாய்வு இதழியலாளர் பணி என்பது, உளவுத் துறையினர், காவல் துறையினர், கணக்காயர், வழக்கறிஞர்கள் ஆற்றுகின்ற பணிகளுக்கு ஈடானதாகும்' என்றார்.
மரபார்ந்த இதழியல் துறைக்கும் புலனாய்வு இதழியல் துறைக்கும் வேறுபாடு உண்டு. கம்பெனிகள், காவல் துறையினர், அரசுத் துறையினர் தரும் செய்திகளை ஒருங்கிணைத்துப் பிரசுரிப்பது, மரபார்ந்த இதழியல். நடந்திருக்கும் ஊழலை, சமூகக் கொடுமையைக் கண்டறிவதற்காகப் புலனாய்வு நிருபரே, நேரடியாகக் களத்தில் இறங்கி, தரவுகளை உள்வாங்கிக் கொண்டு, நேர்முகம் கண்டு ஆய்வது, புலனாய்வு இதழியல் ஆகும்.
புலனாய்வு இதழியலில் புலிட்ஸர் பரிசு பெற்றவர், வால்டர் லீப்மான்! 'உண்மைகளையும் வெட்கக்கேடான செயல்களையும் கண்டறிந்து மக்கள் முன் கொண்டு வருவதைக் காட்டிலும், இதழியலில் வேறு உயர்ந்த விதிகள் எதுவும் கிடையாது' என்றார், புலிட்ஸர் விருதுபெற்ற அவ்வல்லுநர்.
இந்தத் தத்துவத்தை அறிந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் அருண் ஷெளரி, மகாராட்டிரத்தின் முதல்வர் ஏ.ஆர். அந்துலே செய்த அப்பட்டமான ஊழல்களை வெட்ட வெளிச்சமாக்கினார். அதன் விளைவு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியே ஏ.ஆர். அந்துலேவை பதவி விலகும்படி செய்துவிட்டார். அப்பொழுது வென்ற புலனாய்விதழியல், இப்பொழுது திரிபுராவில் இரண்டு பேர்களை இரத்த வெள்ளத்தில் மிதக்கச் செய்திருக்கிறது.
ஆனானப்பட்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சனையே வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற்றியது, புலனாய்வு இதழியல் ஆகும். அதலபாதாளத்தில் மறைந்து கிடந்த வாட்டர் கேட் ஊழலை, உட்வேர்டு, கார்ல் பென்ஸ்டீன் எனும் இரண்டு பத்திரிகையாளர்களும் வேரோடு கிள்ளிக் கொண்டு வந்து, 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் பிரசுரித்ததால், நிக்சன் பதவி விலக வேண்டி வந்தது. அமெரிக்காவில் வென்ற புலனாய்வு இதழியல் துறை, திரிபுராவில் தோற்றது ஏன்?
சாந்தனு பெளமிக் எனும் 28 வயது இளைஞர், 'தின் ராத்' எனும் உள்ளூர் தொலைக்காட்சிக்குச் செய்திகளைச் சேகரிப்பவர். எந்த அபாயகரமான கூட்டங்களிலும் உள்ளே நுழைந்து சம்பவங்களைப் படமெடுத்து, அலைவரிசைக்குத் தருவதில் தேனீயைப் போல சுறுசுறுப்பானவர். அவர் எடுத்துத் தரும் படங்களும் தொகுத்துத் தரும் செய்திகளும் நம்பகத்தன்மை பெற்றதால், நகர மக்களிடம் நல்மதிப்பைப் பெற்றிருந்தார்.
20.09.2017 அன்று திரிபுராவில் நடந்த மறியலைப் படமெடுக்க 'மண்டை' எனும் பகுதிக்கே சென்றார். திரிபுராவில் நடந்து கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் ஆட்சியை எதிர்த்து, மண்ணின் மைந்தர்களாகிய மலைவாழ் மக்கள் அதிதீவிரமான மறியலில் ஈடுபட்டனர். 'மக்கள் முன்னணி தீவிரவாதிகள்' என்று அதற்குப் பெயர். 'மலைவாழ் மக்களுக்குத் தனி மாநிலம் வேண்டும்' என்பது அவர்களுடைய கோரிக்கை.
அன்றைய சாலை மறியல், அடாவடித்தனமான முறையில் நடந்தது. சாலைப் போக்குவரத்தைத் தட்டிகளையும் மரங்களையும் வைத்து முற்றாக அடைத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் கால்சட்டை மட்டும் அணிந்து, மேல் சட்டை அணியாமல் சாலையில் படுத்துவிட்டனர்! வருவோர் போவோர் மீது கற்களை வீசிக் கொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் மறைவாக இருந்து, கைப்பேசியில் படமெடுத்துக் கொண்டிருந்தார் சாந்தனு பௌமிக்.
திடீரென்று அவர் மேல் பாய்ந்த அந்த வெறிக்கூட்டம், அவருடைய கால்களைக் கட்டிவிட்டுச் சாலையில் தூக்கி எறிந்தது. கட்டைகளால் ஓங்கி அடித்து அடித்து, உடம்பு முழுமையும் புண்ணாகிவிட்டது. காவல் துறையினரின் கண்முன்னரே, அந்தப் பாதகச் செயல் அரங்கேறியது. அப்படியும் ஆத்திரம் தீராததால், அவரை அரிவாளால் வெட்டியே கொன்றுவிட்டனர். பின்னர் அந்தப் பத்திரிகையாளருடைய உடலை விளையாட்டரங்குக்குப் பின்னால் வீசிவிட்டுப் போய்விட்டனர். விதியே பத்திரிகையாளரை என் செய நினைத்தாய்?
அடுத்து அதே திரிபுராவில், ஆர்.கே. நகர் எனும் பகுதியில் அமைந்திருந்த துணை இராணுவ முகாமிலே சுதீப் தத்தா பெளமிக் எனும் மூத்த பத்திரிகையாளர் இராணுவத்தின் மெய்க்காப்பாளராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சுதீப் தத்தா 'சியந்தன் பத்ரிகா' எனும் பத்திரிகையில் துணையாசிரியர். அத்துடன், 'வேன்கார்டு' எனும் தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் இருந்தார். புலனாய்வு இதழியல் முறையில் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் செய்திகளை வெளியிடக் கூடியவர் அவர்.
திரிபுராவின் தலைநகரம் அகர்தலாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ரைபிள்ஸ் இராணுவத் துணைப்படைத் துறையின் நிதித்துறையில் நிகழ்ந்த தில்லுமுல்லுகளை ஊடகங்களின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர், பத்திரிகையாளர் சுதீப். 
அதற்குப் பிறகும் நிதித்துறையில் ஊழல் மிகுந்ததால், சுதீப், துணைப்படையின் தலைவரிடம் முன்கூட்டியே நேரம் பெற்று, 21.11.2017 அன்று இராணுவ வளாகத்திற்குள் நுழைந்தார். சுதீப் தத்தா உயிரோடு இருக்கின்ற வரையில், தங்களுக்குப் பாதுகாப்பில்லை என உணர்ந்த சில அதிகாரிகள், அன்றைக்கே அவருக்கு முடிவு கட்டத் தீர்மானித்தனர்.
நேர்முகத்திற்கு நேரம் பெற்றிருந்த சுதீப் தத்தா, துணைப்படைத் தலைவர் தபான் டெபாமாவின் அலுவலக வாசலுக்கு வந்தார். அவரை வாசலில் நின்ற மெய்க்காப்பாளன் முரட்டுத்தனமாகத் தடுத்து நிறுத்தினான். இரண்டாவது துணைப்படைத் தலைவரிடம் நேரம் பெற்று வந்திருப்பதாக சுதீப் தத்தா சொல்லியும், அந்த மெய்க்காப்பாளன் அநாகரிகமான வார்த்தைகளைக் கொட்டித் திட்டினான். இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியதைச் செவிமடுத்த படைத் தலைவர் தபான் டெபாமா வாசலுக்கு வந்து, அந்த வாய்ச்சண்டைக்குச் சாட்சியாக நின்றார். நேருக்கு நேர் நின்று பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த மெய்க்காப்பாளன், தன் இடையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்துச் சுதீப் தத்தாவின் வயிற்றை நோக்கிப் பலமுறை சுட்டான்.
முற்பகல் 11.30 மணியளவிலேயே அந்தக் கொலை பாதகம், துணைப்படைத் தலைவரின் சாட்சியத்தோடு அரங்கேறியது. செய்தியறிந்த மேற்குத் திரிபுரா காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிஜித் அந்த இடத்திற்கு விரைந்தார். சுதீப் இரத்த வெள்ளத்தில் துடிப்பதைப் பார்த்த அவர், உடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல விரைந்தார். ஆனால், இரணியன் போல் நின்ற தபான் டெபாமா அவரைக் கையமர்த்தித் தடுத்து, அங்கேயே துடித்துச் சாகட்டும் என்று மெளனத்தால் பேசினான்.
ஊர்க் குடும்பங்களை ஊட்டி வளர்ப்பதற்காகத் தன் குடும்பத்தை உதறிவிட்டுப் புறப்படுபவர், செய்தியாளர். இன்றைக்கு அந்தப் பத்திரிகையாளரின் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிட்டதே! அக்குடும்பத்தை எடுத்து நிறுத்துபவர் யார்? உயிரோடு சென்ற கணவன் பிணமாகத் திரும்பி வந்ததைப் பார்த்து அழுது புலம்பிய சுதீப்பின் மனைவிக்கு யார் வாழ்க்கையைத் தர முடியும்? கண்ணீரும் கம்பலையுமாகத் திகழ்ந்த அவரின் மகளுக்கு யார் காத்திரத்தைத் தர முடியும். விதியே! பத்திரிகையாளரை என் செய நினைத்தாய்?
துணை இராணுவத் துறையின் நிதித் துறையில் நடந்த சீர்கேடுகளை சுதீப் தத்தா சுட்டிக் காட்டியபொழுதே அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், ஓர் உயிர்க்கொலையைத் தடுத்திருக்கலாம்.
சனநாயகத்தின் மூன்று கால்கள் உடைபடுகின்ற பொழுதெல்லாம், அதனைத் தடுத்து நிறுத்திக் காப்பவர் பத்திரிகையாளர். ஆனால், அந்த நான்காவது கால் உடைபட்டாலும், முறிக்கப்பட்டாலும், மற்ற மூன்று கால்களும் தூங்குமூஞ்சி மரங்களாகிவிடுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com