சமூக ஊடக தர்மம்!

இன்றைய அவசியத் தேவைகளில் அறிவியல் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. நாளுக்கு நாள் பெருகி வரும் புதிய கண்டுபிடிப்புகள் நமக்குப் பலவகையிலும் பயனளித்து வருகின்றன.

இன்றைய அவசியத் தேவைகளில் அறிவியல் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. நாளுக்கு நாள் பெருகி வரும் புதிய கண்டுபிடிப்புகள் நமக்குப் பலவகையிலும் பயனளித்து வருகின்றன. அதே வேளையில் சில 'கண்டுபிடிப்புகள்' பாதகத்தையும் விளைவிக்கின்றன. இந்த வரிசையில் இப்போது முகநூல், கட்செவி, செல்லிடப்பேசி, மின் அஞ்சல், சுட்டுரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். நன்மை அளித்தாலும் சில பக்க விளைவுகளும் உண்டு.
முன்பெல்லாம் ஒரு தகவலைப் பரிமாறிக் கொள்ளத் தந்தி, தொலைபேசி, கடிதம் ஆகியவற்றைத்தான் பயன்படுத்தி வந்தோம். இன்றோ, அந்த வசதிகள் பழங்கதையாகிவிட்டன. இப்போது இளையோர் முதல் பெரியவர் வரை செல்லிடப்பேசியைக் கையில் வைத்துக் கொண்டு அத்தகைய தகவல் தொடர்புப் பயன்களைப் பெறுவதைப் பார்க்க முடிகிறது. இது எல்லை மீறாமல் இருக்கும் வரை எல்லாரும் நன்மை கிட்டும். இல்லாவிட்டால் தீங்குதான் அதிகம்.
இன்றைய இளம் தலைமுறையினரில் முகநூல் பக்கம் இல்லாதவர்களே கிடையாது என்று கூறிவிடலாம். அறிதிறன் செல்லிடப்பேசி உள்ளோரில் பெரும்பாலோர் முகநூல்வாசியாகிவிட்டனர். ஆனால், பொதுவாக அனைவருக்கும் பயனளிக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர். 
முகநூல் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். முன்பெல்லாம் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சமயத்தில் வானொலி மட்டுமே கை கொடுக்கும் சாதனமாக இருந்து வந்தது.
அதற்கு அடுத்ததாக செய்தித் தாள்கள். ஒரு காலகட்டத்தில் 'ஹாம்' என்ற தனியார் செய்தி-தகவல் பரிமாறிக் கொள்ளும் வானொலி சேவையும் உதவியது.
இப்போது அனைத்தும் தலைகீழ்!
புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வழியாக நொடியில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. அத்தகு வசதிகளை ஆபத்தில் உதவுதல், நல்ல விஷயங்களைப் பரிமாறுதல், அரிய தகவல்கள், உதவிகள், இலவசச் சேவைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதுதான் நன்று.
ஆனால், பலரும் அதை மறந்துவிட்டுத் தங்களின் சுயபுராணம், புகழ், சொந்தப் பிரச்னைகளைப் பகிர்ந்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குகின்றனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இத்தனை தூரம் பல அந்தரங்க ஆதங்கங்களைப் பொதுதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டுமா? அவர்கள் தங்களை அறியாமலே தவறு செய்கின்றனர். தங்கள் குடும்பப் படங்களை பகிர்ந்துகொள்கின்றனர். மனைவி, மகள் என அனைவரின் படத்தையும் பதிவிட்டு மகிழ்கின்றனர். இது எத்தகு ஆபத்தில் முடியும் என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
முகநூலில் 'ஃபாலோ' என்கிற முறையில் எத்தனை பேர் தங்களைப் பின்பற்றுகின்றனர், எத்தனை பேர் தங்களின் பதிவுகள் விரும்பி 'லைக்' தெரிவிக்கின்றனர் என்று எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தருவது அதிகரித்து வருகிறது.
அதே போல வெறும் விளம்பரம் தேடிக் கொள்வது, காதலைப் பகிர்வது என்பதற்காகவே அதிகம் பேர் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். இது தவிர, கீழ்த்தரமான விமர்சனங்கள், தனிமனித வசைபாடல் வேறு. நெறிகளுக்குப் புறம்பாக, இஷ்டத்துக்கு எழுதிக் குவிக்கின்றனர். இது மற்றவர்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. தன்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்வதும், புகழைக் கேட்டு வாங்குவதும் சரிதானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவை தவிர, தங்களது வீர, தீர, பராக்கிரமங்களை எழுதுவதற்கு 'பிளாக்' என்னும் வலைப்பூக்கள்.
செய்தித்தாள்களைப் பொருத்தவரை, அதில் இடம்பெறும் செய்திகளுக்கு வரம்பு உண்டு. செய்தி-தகவல்களில் பிழைத் திருத்தங்களை நோக்கவும், எத்தகு தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை நோக்கவும் ஆசிரியர் குழு உள்ளது.
ஆனால், இந்த மின் ஊடகங்களுக்கு அத்தகு கட்டுப்பாடுகள் இல்லை. மனம்போன போக்கில் எழுதி எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கின்றனர். முகநூல் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு வெளியாரின் கட்டுப்பாடுகள் இல்லாதபோதிலும், சுயக் கட்டுப்பாடும் வரம்பும் அவசியம் வேண்டும்.
சென்னையில் புயல் மழை, வெள்ளம் வந்தபோது முகநூல் மூலமாக பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டது நினைவிருக்கலாம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது இந்த முகநூலே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. எனவே முகநூல் போன்ற சமூக வலைதளத்தைக் கையாளும்போது கூர்மையான ஆயுதத்தை எச்சரிக்கையுடன் கையாள்வதுபோலவே பயன்படுத்த வேண்டும்.
சில இளைஞர்கள் இந்த வசதியை மிகவும் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் கூட அதைப் பின்பற்றுகின்றனர். எதற்கும் ஓர் எல்லை இருந்தால்தான் நல்லது.
முகநூல் போன்ற வசதிகளைப் பயன்படுத்துவோர், அதிலுள்ள பாதுகாப்பு அம்சங்களை நன்கு அறிந்து பின்பற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். தகவல்களை யாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பது முதல், அறிந்தோர் வட்டத்தில் இல்லாதவர்கள் நமது பக்கங்களைப் பார்ப்பதைத் தடை செய்யும் பல வித பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதே பலருக்குத் தெரியாமல் உள்ளது.
சமூக அக்கறையுடன், நாட்டுக்குத் தேவையான தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்வதில் சிரத்தை காட்ட வேண்டும். சமூக விரோதிகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு தவறான தகவலையும் ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்ப்பதே நலம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com