நீதியின் மேலான அநீதி

மரண தண்டனை என்பது கொலைகாரர்களுக்கும் அரசுக்குமானது மட்டுமல்ல. அது சமூகம் சம்பந்தப்பட்டது. ஒரு நாட்டின் நீதி, பண்பு பற்றியது.
Updated on
3 min read

மரண தண்டனை என்பது கொலைகாரர்களுக்கும் அரசுக்குமானது மட்டுமல்ல. அது சமூகம் சம்பந்தப்பட்டது. ஒரு நாட்டின் நீதி, பண்பு பற்றியது. மக்களின் தாராள குணம், கலாசாரம், மன்னிக்கும் மாண்பு பற்றியது. எனவேதான் அரசும், ஆளப்படும் மக்களும் எல்லா அம்சங்களிலும் ஒன்றில்லை. பல அம்சங்களில் எதிரெதிராக இருக்கிறார்கள். அதில் முதலில் இருப்பது மரண தண்டனை வழங்குவது பற்றியதுதான்.
ஒரு நாடு நாகரிகமான நாடு, முன்னேற்றம் அடைந்த நாடென்றால் அது மரண தண்டனையை ஒழித்த நாடுதான்.
உலகத்தில் 147 நாடுகள் சட்டப்பூர்வமாக மரண தண்டனையை ஒழித்துவிட்டன. ஆனால், செல்வ வளம் கொழிக்கும் நாடான, படித்தவர்கள் நிறைந்த நாடான அமெரிக்கா மரண தண்டனை விதிக்கும் நாடாக இருக்கிறது. பழைமையான நாகரிகமும், பண்பாடும் கொண்ட சீனாவில்தான் அதிகமானவர்கள் மரண தண்டனை பெறுகிறார்கள். ஜப்பான், வங்கதேசம், பல அரபு நாடுகள் உள்பட 47 நாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உண்டு. இந்தியாவில் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய கோட்பாடுகளில், மரண தண்டனை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
1983-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம், 'அரிதினும் அரிதான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கலாம்' என்றது. அரிதான ஒன்றுக்கு மரண தண்டனை என்பதால் அது புனிதமானதாகிவிடாது. அது உயிர் பறிக்கும் கொடுஞ்செயல்தான்.
மனிதர்கள் ஏன் சகோதர மனிதர்களை கொலை செய்கிறார்கள் என்பதை அரசியல், சமூக, பொருளாதார உளவியல் அடிப்படையில் ஆராய்ந்தார்கள். கொலைக்கு உளவியல் ஒரு காரணமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது மற்றவர்கள் மீது கொள்ளும் வெறுப்பு, பகைமை, பொறாமை அவர்கள் அவதூறு செய்வது, அவமானப்படுத்துவது என்பனவற்றாலும், பாலியல் ஈடுபாட்டாலும் கொலை செய்கிறார்கள். கொள்ளையடிக்கும்போது எதிர்க்கிறவர்களையும் கொல்கிறார்கள். தன் குடும்பத்தின் கௌரவம், பெண்களின் மாண்பு நிந்திக்கப்படும்போது நேரடியாகவோ, கூலிப்படையை விட்டோ கொலை செய்கிறார்கள்.
பிடிபட்டால் உயிர் பறிக்கப்படும் என்பது தெரிந்து இருந்தாலும், அது பற்றி கவலைப்படாமல் கொலை செய்கிறார்கள். இது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது என்பதால் அரசு பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எதற்காக நடந்தது என்பது அதற்கு முக்கியமில்லை. நடந்துவிட்டது. அதற்குக் காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக காவல் துறை, நீதி துறையை அரசு அமைத்து இருக்கிறது. இவை மக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு. ஆனால் இவ்விரண்டும் எப்பொழுதும் எல்லா மக்களுக்கும் சம அளவில் கிடைப்பதில்லை.
மரண தண்டனை பெறுகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள், படிப்பறிவு அற்றவர்கள். பெரிய வக்கீல்கள் வைத்து வாதாட பண வசதியற்றவர்கள். எனவே 'சந்தேகத்தின் பலனைப் பெற முடியாமல்', தூக்கு தண்டனை பெற்றுவிடுகிறார்கள்.
தண்டனை என்பது இரண்டு அம்சங்கள் கொண்டது. முதல் அம்சம், குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். இரண்டாவது அம்சம், மக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் பயம் கொள்ள வைப்பது. சட்டம் ஒரே நேரத்தில் இரண்டு காரியங்கள் செய்கிறது. ஒன்று வெளிப்படையாகத் தெரிவது. அதுதான் கொலைக்குப் பதில் கொலை. இரண்டாவது ஓர் உயிரைப் பறித்தால் பறிக்கிறவர் உயிர் பறிக்கப்படும் என்று சொல்லாமல் சொல்வது.
கொலைக்குக் கொலை என்பது பழி வாங்குவதுதான். நீதி வழங்குவதல்ல. ஆனால் உயிர் என்பது பண்டமாற்றுப் பொருளில்லை. ஓர் உயிரைக் கொடுத்து இன்னோர் உயிரை மீட்டெடுக்க முடியாது. போனது, இல்லாமல் போனதுதான்.
எனவேதான் மரண தண்டனை என்பது எதற்கும் தீர்வாகாது. அது அப்பட்டமான பழி வாங்கும் காரியம். நாகரிக உலகத்தில் நகைப்பிற்குரியது. மனித வளர்ச்சி, முன்னேற்றம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
மரண தண்டனை என்பது, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 'பழி வாங்கப்பட்டுவிட்டது' என்ற மன நிறைவு ஏற்படலாம். ஆனால், குற்றத்திற்கு தண்டனை இருக்கிறது என்பதாலேயே அதற்கு பயந்து எவரும் குற்றம் செய்யாமல் இருப்பது இல்லை. பயமுறுத்தி மனிதர்களை அடக்கிவிட முடியாது என்பதுதான் சரித்திரமாக இருக்கிறது.
ஏசுநாதர் பிறப்பதற்கு 1,700 ஆண்டுகளுக்கு முன்னால் சுமேரியாவை ஆண்ட ஹம்முராபி என்ற மன்னன் குற்றம்-தண்டனை பற்றி கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறான். அதில் முதல் சட்டம், கொலைக் குற்றம் செய்தவனுக்கு மரண தண்டனை. அவன் கல்வெட்டில் 25 வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை என்று இருக்கிறது. அது காலத்தால் பழையதாகிவிடவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் சிறிது மாற்றிக்கொண்டு செயல்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கண்ணுக்குக் கண் என்றால் உலகம் முழுவதும் பார்வையற்றவர்களே இருப்பார்கள்' என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டார்.
ஒரு நாட்டில் மரண தண்டனை என்பது திருடர்கள், கொள்ளைக்காரர்கள், பயங்கரவாதிகளுக்கானது என்பது மட்டுமல்ல. அசலான காரணங்களுக்காக அரசை எதிர்த்துப் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள், புரட்சி செய்கிறவர்களுக்கும்கூட ஆனதுதான்.
அரசாங்கம் என்பது மேதைகள், மனிதாபிமானிகள், சமூக சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானிகள், சமரசம் அற்ற எழுத்தாளர்கள் மட்டுமே கொண்டதில்லை. சர்வாதிகாரிகள், மக்கள் விரோதிகள் ஆட்சியைப் பிடித்துக்கொண்டு உத்தமர்களைப் பிடித்து மரண தண்டனை கொடுப்பதும் காலம் காலமாக நடந்துகொண்டே வருகிறது. அதில் பொதுமக்களும் உற்சாகத்தோடு கலந்துகொண்டு தண்டனை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதுதான் வரலாற்றின் முரண்.
'சிந்தியுங்கள். ஒவ்வொன்றையும் நன்கு பரிசீலனை செய்யுங்கள். பரிசீலனைக்கு உட்படாத வாழ்க்கை சாரமற்றது' என்று சொன்ன சாக்ரடீஸை குற்றவாளி என்று பிரதிநிதிகள் சபைதான் அறிவித்தது. பின்னர் அதுவே அவர் நஞ்சுண்டு சாக வேண்டுமென தீர்ப்பு வழங்கியது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார். சிறைக்குச் சென்றார். நண்பர்களோடும், சீடர்களோடும் உரையாடிக் கொண்டே இருந்தார். ஒரு காவலர் நஞ்சோடு வந்தார். சாக்ரடீஸ் நஞ்சுக் கோப்பையை கையில் வாங்கிக்கொண்டு, ''நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் சாகப் போகிறேன். அவர்கள் வாழப் போகிறார்கள். ஆனால் யார் சாகப் போகிறது, யார் வாழப் போகிறது என்று கடவுள் அறிவார்'' என்றார்.
சாக்ரடீஸ் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
யேசு கிறிஸ்து விஷயத்திலும் அதுவே நடந்தது. யேசுநாதர் மீது குற்றம் இல்லையே என்று அவருக்கு தண்டனை கொடுக்க கவர்னர் மறுத்துவிடுகிறார். ஆனால், கூடி இருந்த மக்கள் யேசுவைத் தண்டிக்க வேண்டுமென்று கூச்சலிட்டு சிலுவையில் அறைய வைத்துவிட்டார்கள்.
ஒரு மனிதரைக் குற்றவாளி என்று தீர்மானித்து மரண தண்டனை கொடுக்க நீதிபதிக்குச் சாட்சிகள், ஆவணங்கள், வக்கீல்கள் மட்டுமே போதுமானவை இல்லை. பல நேரங்களில் உண்மையான குற்றவாளியை விட்டுவிட்டு அப்பாவி மீது சகலவிதமான குற்றங்களையும் ஏற்றி மரண தண்டனை வழங்கப்படுவதும் உண்டு.
நாட்டில் பொது அமைதியை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், மக்களிடையே பயத்தை நிரந்தரமாக ஏற்றி வைக்கவும், சந்தேகப்படும் ஆளை குற்றவாளியாக்கி மரண தண்டனை கொடுத்து அரசாங்கம் திறமையாகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்பதை நிலைநாட்டவும் அவசியம் இருக்கிறது என்று சமூக விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஏற்பட்ட பின்னர், அது நாடு பிடிக்க முற்பட்டபோது, அதனை எதிர்த்த கட்டபொம்மன், மருது சகோதரர்களை பொது இடத்தில் தூக்கில் போட்டு மக்களைப் பயமுறுத்தியது.
இங்கிலாந்தில் திருட்டுக் குற்றத்திற்காக ஒருவனை பொது இடத்தில் தூக்குப் போடவிருந்தார்கள். அதனை வேடிக்கை பார்க்க பெரும் திரளானவர்கள் கூடியிருந்தார்கள். அவர்களிடம் இருந்து பணத்தைத் திருடர்கள் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்.
பிரான்ஸ் நாட்டில் சமூகப் புரட்சி ஏற்பட்டுப் புதிய அரசு ஏற்பட்டது. அந்த அரசு பிரெஞ்சு மன்னர், அரசி உள்பட ஆயிரக்கணக்கானவர்களைக் கில்லட்டின் என்ற இயந்திரத்தில் வைத்து தலையை வெட்டியது.
மனிதர்கள் பற்றி எத்தனைதான் உயர்வாகச் சொன்னாலும், அவர்களிடம் இயற்கையாகவே கொடூரமான எண்ணங்கள் பல இருக்கின்றன. ஒருவனைக் கொல்ல விரும்பாவிட்டாலும், 'குற்றவாளி' என்று அரசு முத்திரை குத்தி மரண தண்டனை கொடுப்பதை மக்கள் அங்கீகரிக்கிறார்கள். அதனைப் படித்து, படமாகப் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். அதனை அரசு நியாயப்படுத்திக் கொண்டே வருகிறது. அதுதான் மிகவும் மோசமான செயற்பாடு.
மரண தண்டனை மூலமாக ஓர் உயிர் பறிக்கப்படுகிறது என்பதைத் தவிர, அதில் வேறொரு பயனுமில்லை. அதோடு அது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
ஒரு கொலையை அங்கீகரிக்க முடியாது என்பதுபோல அரசாங்கத்தின் மரண தண்டனையையும் ஏற்க முடியாது. மரண தண்டனை அவசியம் என்று சொல்வதற்கான எல்லா காரணங்களும் அர்த்தம் இழந்துவிட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com