அந்நியர் வந்து புகல் என்ன நீதி?

மகாகவி பாரதியார் "அந்நியன் வந்து புகல் என்ன நீதி' எனப் பாடியது அன்றைக்கு மட்டுமன்று என்றைக்கும் பொருந்துவதாகும்.
Updated on
3 min read

மகாகவி பாரதியார் "அந்நியன் வந்து புகல் என்ன நீதி' எனப் பாடியது அன்றைக்கு மட்டுமன்று என்றைக்கும் பொருந்துவதாகும். அடுப்பைப் பற்ற வைப்பதற்காகக் கொளுத்தப்பட்ட தீக்குச்சி, அறை முழுவதற்கும் வெளிச்சத்தைத் தருவதுபோல், ஒரு காலகட்டத்திற்காகப் பாடப்பட்ட பாடல், எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமையும்.
28.01.2017 அன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த ஒரு செயலாணை அகில உலகத்தையும் ஆச்சரியப் பார்வை பார்க்க வைத்திருக்கிறது. அதன்படி இராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய ஏழு நாட்டினரும் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஏழு நாட்டு அகதிகளும் அமெரிக்காவுக்குள் அடுத்த 120 நாட்களுக்கு உள்ளே நுழைய முடியாது. மேலும், சிரியா நாட்டு அகதிகள் எப்போதும் நுழைய முடியாது.
டிரம்பினுடைய செயலாணையை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அதிர்ச்சியைத் தந்தாலும், அதனுடைய உள்ளீடு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாகும். உப்பு, புளி, காரம் சேர்த்துக் கொள்ளாதே என்று நாட்டு வைத்தியர் சொல்லும் பத்தியம், நோயாளிக்கு ஆத்திரத்தை ஊட்டும். ஆனால் அந்தப் பத்தியம், பற்றியிருக்கின்ற நோயினுடைய கொடூரத்தைக் காட்டுவதாகும். டிரம்பினுடைய செயலாணையும் ஒரு பத்தியம்தான்.
துருக்கியிலிருந்து வந்த பார்சி இனம் இந்தியரோடு கலந்தபோது, எந்த பாதகமும் ஏற்படவில்லை. இரண்டு இனங்களும் தனித்தனியாக ஆனால் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ முடிந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததால், ஆங்கிலோ - இந்தியர் என்றொரு புதிய இனமே உருவாகிவிட்டது.
உலகத்திலேயே அறிவார்ந்த ஒரு தேசிய இனம் யூதர்கள். அவர்களை ஏற்றுக்கொள்ள எந்த நாடும் தயங்குவதில்லை. அந்தந்த நாடுகளின் தேசிய வளர்ச்சிக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்ற ஓரினம், யூத இனமாகும். அவர்கள் காப்பதில்லை. அதே நேரத்தில், மற்றவர்களுடைய அடையாளத்தை அழிப்பதும் இல்லை.
ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்குள் ஏற்பட்ட சீரழிவைப் பாரதியார், "ஊணர் செய்த சதியில் இழந்தனன்' எனச் சுருக்கமாகப் பாடுவார். ஊணர் எனும் சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம், பாரதி எவ்வளவு கருத்தாழம் மிக்க கவிஞன் என்பது தெரிகிறது. ஊணர்கள் எனும் சொல் ஹன்ஸ் (ஏன்ய்ள்) என ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்லின் தமிழாக்கம்.
ஹன்ஸ் என்பவர்கள் மங்கோலியாவைச் சேர்ந்த ஒரு நாடோடி இனத்தவர். இவர்கள் கி.பி. 4 மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவில் தொடங்கி, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பிய நாடுகளை மிருகத்தனமாகத் தாக்கிப் படுநாசம் விளைவித்தார்கள். அந்தப் பிரதேசங்களையும் கைப்பற்றினார்கள்.
அவர்கள் செய்த கொலைகள், விளைவித்த நாசங்களினால் ஹன்ஸ் என அழைக்கப்பட்டார்கள். ஹன்ஸ் எனும் சொல்லிற்குக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்பவன் எனப் பொருள்.
மங்கோலியர் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் விளைவித்த கொடுமைகளைப்போல், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் செய்த காரணத்தால், அவர்களை ஊணர் என அழைத்தார், மகாகவி பாரதி (தகவல்: தொ.மு.சி. ரகுநாதன்).
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் புகுந்து விளைவித்த கலாசாரச் சீரழிவை, அந்த நாட்டையே சேர்ந்த ஆலன் அக்டேவியன் ஹியூம் என்பவர் அச்சில் அச்சடித்து, துண்டறிக்கைகளாக "முதியவனுடைய நம்பிக்கை' (பட்ங் ஞப்க்ம்ஹய்’ள் ஏர்ல்ங்) எனத் தலைப்பிட்டு, இங்கிலாந்து முழுவதும் விநியோகித்தார்.
"இங்கிலாந்து வாழ் மக்களே! இந்தியாவில் வாழ்கின்ற எண்ணற்ற மக்கள், மகிழ்ச்சி என்றால் என்னதென்று தெரியாமலே வாழ்கின்ற வாழ்வின் வேதனைகளை நீங்கள் அறிவீர்களா? ஏதோ பிறப்பெடுத்த இவர்கள் இறக்கும் வரை வறுமை, வேலையின்மை, அடக்குமுறை, ஆணவக் கொடுங்கோல் கொடுமைகள் எனும் காரிருளில் மூழ்கிக் கிடக்கத்தான் வேண்டுமா?
நாடோறும் உதயமாகி வரும் கதிரவனுடைய எண்ணற்றக் கதிர்களுக்கே கூடத் தெரியாமல், இருளிலே முடக்கப்பட்டு வாழ்கிறார்களே, இந்தியர்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியான உயர்வு என்பதே கிடையாதா? உழைக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள். விவசாய மாடுகளைப் போல உழைக்கிறார்கள். ஆனால் பசி, பசி பசி என்றே நாள்தோறும் பரிதவிக்கிறார்கள்.
இந்திய மக்கள் இந்த அவலங்களால் பூட்டப்பட்ட இருட்டுக்கோட்டையிலே அடைக்கப்பட்டுத் திணறுகிறார்கள் - திகைக்கிறார்கள்' என்பதுதான் அவர் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்.
டிரம்ப் இவற்றையெல்லாம் படித்திருப்பாரோ என்னவோ. மேலும், செயலாணையை நிறைவேற்றியவர் டிரம்பே தவிர, இச்செயலாக்க வரைவினை ஏற்கனவே வரைந்து வைத்துவிட்டுப் போனவர், ஒபாமா.
தனது தேர்தல் அறிக்கையிலேயே முதன்மை பெற்றிருந்த திட்டத்தைத்தான், இப்பொழுது நிறைவேற்றியிருக்கிறார் டிரம்ப். அவருடைய தேர்தல் பிரசாரமே, அமெரிக்காவைக் கலப்பில்லாத வெள்ளையர்களுக்கு உள்ளாக்குவது என்பதைத்தான் மையம் கொண்டிருந்தது.
இன்றைய அமெரிக்கா சிவப்பிந்தியர்கள் எனும் பழங்குடி மக்களுக்குச் சொந்தமானது. அங்கு குடியேறிய ஆங்கிலேயர்களும், ஸ்பானிஷ் இனத்தவரும், அங்கிருந்த பழங்குடியினரை ஓரங்கட்டிய வரலாறு, டிரம்பிற்கு நினைவு வந்திருக்கக்கூடும். இவர்கள் நேற்று என்ன செய்தார்களோ, அது நாளைக்கு இவர்களுக்கு நேரிடலாம் அல்லவா?
ஆஸ்திரேலியாவும் இப்படித்தான் தன் மண்ணின் மாண்பை இழந்தது. அங்கிருக்கும் அபோர்ஜினீஸ் என்னும் பழங்குடி மக்களைப் பார்த்தால், முப்பதாண்டுகளுக்கு முன்னர் நம்மடைய தென்மாவட்டங்களிலிருந்த விவசாயிகளைப் போலத்தான் தோற்றமளிக்கிறார்கள்.
மேல் சட்டையில்லாமல் இடுப்பிலே பெல்ட்டைக் கட்டிக்கொண்டு, மாட்டுக்கொம்பை ஊதிக்கொண்டுதான் திரிகிறார்கள். அவர்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள்.
இங்கிலாந்திலே ஒரு காலத்தில் குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்குச் சிறைச்சாலைகளில் இடமில்லை. அதனால், அக்கைதிகளை எல்லாம் கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் ஆஸ்திரேலியாவில் இறக்கிவிட்டனர். இறக்கிவிடப்பட்ட கைதிகளுக்கும் அங்கிருந்த பழங்குடி மக்களுக்கும் ஓர் உள்நாட்டுப் போரே ஏற்பட்டு, இரண்டு பக்கமும் பலத்த உயிர்ச் சேதம்.
கைதிகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாவதற்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட விளையாட்டுதான் ரக்பி கால்பந்து (தன்ஞ்க்ஷஹ் ஊர்ர்ற்க்ஷஹப்ப்) விளையாட்டாகும். (கால் பந்து, முட்டை வடிவத்தில் இருக்கும்). இவ்விளையாட்டில் பந்தையும் உதைக்கலாம் ஆளையும் அடிக்கலாம்). இன்றைக்கு ஆஸ்திரேலியா பழங்குடியினரிடமிருந்து கைவிட்டுப்போய், ஆங்கிலேயர்களாகிய ஆஸ்திரேலியர் வசம் இருக்கிறது. இந்த வரலாறும் டிரம்பிற்குத் தெரிந்திருக்கும்.
ஒரு தேசிய இனம், சந்தேகத்திற்குரிய இன்னொரு தேசிய இனத்தைத் தமக்குள் அங்கீகரிக்காது. அமரராகிவிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீகுவான்-யூ "எங்களுக்கு விடுதலை வேண்டாம், வேண்டவே வேண்டாம். மலேசியாவுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றோம்' என மன்றாடிக் கேட்டும், துங்கு அப்துல் ரகுமான் சிங்கப்பூருக்குரிய விடுதலையை வற்புறுத்திக் கொடுத்தாரே என்ன காரணம்?
சிங்கப்பூரில் சீன மக்களுடைய எண்ணிக்கைதான், மக்கட்தொகையில் அதிகம் என்பதால், அங்கு சீனர்தாம் பிரதமராக வர முடியும். மலேசியாவிலும் மலாய் இசுலாமியர்களுக்கு ஈடாகச் சீனர்கள் இருக்கிறார்கள். மலேசியாவும் சீனர்கள் வசம் போய்விடக் கூடாது என்பதால்தான், துங்கு அப்துல் ரகுமான், சிங்கப்பூருக்கு விடுதலை வழங்கி விடுவித்தார்.
தருக்கரீதியான இக்காரணங்களைத் தவிர, இரட்டைக் கோபுரங்கள் - பெண்டகன் கட்டிடம் இடிபாடுகளுக்கு உள்ளாகியதற்குப் பிறகு, அமெரிக்க உளவுத்துறை ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தை உன்னிப்பாகவே கண்காணித்து வருகிறது.
செப்டம்பர் 11 அன்று தாக்குதலில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டே பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, அமெரிக்க உளவுத்துறையின் நெஞ்சத்தில் பசுமையாகவே இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பயங்கரவாதச் செயல்களுக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் பயங்கரவாதிகளே காரணமாக இருப்பதை, அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.
சாம் பெர்னார்டினோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 14 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவரே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஆர்லண்டோ - இரவு விடுதியில் 49 அமெரிக்கர்களை, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதிதான் குண்டுவீசிக் கொன்றிருக்கிறான். அமெரிக்காவில் கால்சட்டைக்குள்ளேயே குண்டுகளை வைத்துக்கொண்டு எறிவதில் ஈடுபட்டவன், நைஜீரியாவைச் சேர்ந்த பரூக் அப்துல் முத்தலீப் என்பவன் ஆவான்.
பாஸ்டனில் நடந்த குண்டுவீச்சை நடத்தியவன், கிர்கிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதி ஆவான். மேலும், நான்கு அமெரிக்க மாலுமிகளைச் சுட்டுக் கொன்றவன், குவைத்திலிருந்து வந்த பயங்கரவாதி ஆவான்.
டிரம்ப்தான் இந்தச் செயலாணையை நிறைவேற்றியிருப்பதற்குக் காரணம், எந்த மதத்தின்மீதும் கொண்ட வெறுப்புணர்வினால் அன்று. உள்நாட்டு இறையாண்மையையும் பாதுகாப்பையும் முன்னிட்டே எனத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அந்த ஏழு நாடுகளைச் சேர்ந்த அறிவாராய்ச்சிகளில் ஈடுபடும் அறிவு ஜீவிகள், முழுத் தகவல்களோடு விண்ணப்பித்தால், அவை பரிசீலிக்கப்படும் என்றும் வெளி விவகாரத்துறையினர் அறிவித்
திருக்கின்றனர்.
இதனால், அமெரிக்கா மீது ஆத்திரப்படுவதைக் காட்டிலும் மத்திய கிழக்கு நாடுகள் சுய பரிசோதனையில் ஈடுபடுவது நல்லதாகும். இரானும், ஈராக்கும் ஒரே கடவுளை நம்புகின்ற - ஒரே கலாசாரப் பின்னணியைக் கொண்ட நாடுகள் ஆகும். இந்த இரண்டுக்கும் ஏற்பட்ட தொடர் போர்கள் உலகம் அறிந்தவை.
குவைத்தும் - ஈராக்கும் பக்கத்துப் பக்கத்து நாடுகள். ஒரே மத நம்பிக்கையைக் கொண்ட நாடுகள். இந்த இரண்டு நாடுகளும் போரிட வேண்டிய அவசியம் என்ன என்பதை இந்த நேரத்திலாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிரியா நாட்டிலிருந்து அகதிகள் பெருவாரியாகப் புறப்பட்டு வருகிறார்கள். வேறு எந்தத் தேசிய இனத்தாலும் அவர்களுக்கு அந்த நெருக்கடி ஏற்படவில்லை. அவர்களுக்குள்ளாகவே, அவர்களே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடி ஆகும்.
பயங்கரவாதம் ஒரு காட்டுமிராண்டிக் காலத்துக் கலாசாரம். நாகரிகம் அடைந்த மனித இனம் அதன் பக்கம் கூடத் திரும்பிப்பாராமல் இருப்பது நல்லது.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com