அரசியல் தூய்மை: பகற்கனவா?

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக இருவேறு வழிமுறைகளை நிதிநிலை அறிக்கைல் அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக இருவேறு வழிமுறைகளை நிதிநிலை அறிக்கைல் அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
ஒன்று, அரசியல்கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் வரும் நன்கொடைத் தொகையை ரூ.20,000-த்திலிருந்து ரூ.2,000-மாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று அரசியல் கட்சிகளுக்கு வங்கிகள் மூலம் பத்திரமாக நன்கொடை வழங்குவது.
அதாவது நன்கொடை தர விரும்பும் நபர் அல்லது நிறுவனம் அதற்கானத் தொகையை வங்கியில் செலுத்தி பத்திரமாக தாம் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது. அரசியல் கட்சிகள் இந்த பத்திரங்களைத் தேவையானபோது வங்கிகளில் தந்து பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இப்போது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கிடைத்து வந்தாலும், பெரும்பாலும் யார் கொடுத்தார்கள், என்ன தொகை கொடுத்தார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரியவராது.
தற்போதுள்ள விதிமுறைகளின்படிஅரசியல் கட்சிகள் ரூ.20,000-த்துக்கு மேல் நன்கொடை பெற்றால் மட்டுமே அவை எங்கிருந்து வந்தது என்பது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
இது நடைமுறை சாத்தியமில்லை. ஏனெனில் அரசியல் கட்சிகள் ஒரு நபரிடமிருந்நோ அல்லது ஒரு நிறுவனத்தினடமிருந்தோ ரூ. 20,000 நன்கொடை பெற்றாலும் அதை சிறுசிறு தொகைகளாகப் பிரித்து தங்கள் கணக்கில் சேர்த்துவிடும்.
புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால் அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் தொகையை ரூ.2,000-த்துக்கும் குறைவாக காட்டி பல்வேறு நபர்கள் கொடுத்ததாக கணக்குக் காட்டிவிடும். இந்தப் பணியைச் செய்ய கூடுதல் ஆள்பலம் இருந்தால் போதும்.
எனவே ரூ.2,000 வரை பெயர் குறிப்பிடாமல் நன்கொடை தரலாம் என்ற உச்சவரம்பை நீக்கினால்தான் அரசியல்கட்சிகளின் நன்கொடைகளுக்கு சரியான கணக்கு கிடைக்கும். இல்லையெனில் இவை தவறாகப் பயன்படுத்தப்படவே வழிவகுக்கும்.
உதாரணமாக ஒருவர் தனக்கு பிடித்தமான அரசியல் கட்சிக்கு ரூ.50,000 நன்கொடை வழங்குகிறார் எனில், அந்த அரசியல் கட்சி அதை 25 தனித்தனி நன்கொடையாகப் பிரித்து தங்கள் கணக்கில் பெயர் குறிப்பிட விரும்பாதவர் பட்டியலில் சேர்த்துவிடும்.
இதைத் தடுக்க வேண்டுமானால் நன்கொடை கொடுத்தவர் பெயர், அவரது முகவரி, அவரது பான் கார்டு அல்லது ஆதார் கார்டு இவற்றை தொடர்பு படுத்தினால்தான் அவை வெளிப்படையாக இருக்கும்.
இரண்டாவது யோசனை ஒரு புதுமையான திட்டம் என்றாலும் அதுவும் தவறானது என்றே சொல்ல வேண்டும். யாராவது ஒருவர் அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் பத்திரங்கள் மூலம் அரசியல்
கட்சிகளுக்கு நன்கொடை தந்தால் அது பற்றிய விவரங்கள் வெளிப்படையாகத் தெரியாது.
சம்பந்தப்பட்ட வங்கி, ரிசர்வ் வங்கி மற்றும் அரசுக்கு மட்டுமே இந்த விவரங்கள் தெரியவரும். இது ஆளுங்கட்சிக்குத்தான் சாதகமாக இருக்குமே தவிர எதிர்க்கட்சிகளுக்கு எந்த வகையிலும் சாதகமாக இருக்காது.
சில நிறுவனங்கள் பெருந்தொகையை அரசியல்கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கினாலும் அதன் விவரங்கள் வெளியுலகுக்குத் தெரியவராது.
எனவே பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுப்பது அதிகரித்துவிடும். இதனால் ரூ.2,000 என்று உச்சவரம்பை குறைப்பதால் எந்தப் பயனும் இல்லை.
அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை தரும் நபர்களின் பெயர் விவரங்களை மறைக்கும் எந்த யோசனையும் சரியானதல்ல. இதேபோல ரொக்க நன்கொடைகளுக்கு பதிலாக பத்திரங்கள் என்ற நடைமுறையும் ஏற்புடையதல்ல.
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை விவரம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவற்றின் வரவு - செலவு கணக்குகள் முறையாக இருக்க வேண்டும். இவைதான் முக்கியமானது. அரசியல்கட்சிகளுக்கு எங்கிருந்து நன்கொடை வருகிறது.
அதை கொடுத்தவர்கள் யார்? அந்த தொகை முறையாகச் செலவழிக்கபடுகிறதா என்று தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு. அரசியல்கட்சிகள் தங்களது வரவு - செலவு கணக்குகளை முறையாக பராமரித்து வருகின்றன.
அவை முறையாக பட்டயக்கணக்காளர் மூலம் ஆய்வுசெய்யப்படுகின்றன என்பது ஏற்கெனவே உள்ள நடைமுறைதான். இப்போது புதிது என்னவெனில் அரசியல்கட்சிகள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். சிறிய கட்சிகள் இந்த கணக்குகளை முறையாகப் பராமரிப்பதில்லை என்பது வேறு விஷயம்.
அரசியலில் ஊழல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த இரண்டு யோசனைகளும் சரியானவையல்ல. அரசியல்கட்சிகள், தங்களுக்குக் கிடைக்கும் நன்கொடை தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
ஆனாலும் குறிப்பிட்டகாலத்துக்குள் அவற்றை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு அபராம் உண்டா என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.
நாட்டு மக்களிடம் ரொக்கப் பரிவர்த்தனைக்குப் பதிலாக ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்படி வலியுறுத்தும் மத்திய அரசு, சாதாரண கடைக்காரர்கள், வர்த்தகர்கள், நிறுவனங்களிடம் ரொக்கமில்லா பணபரிவர்ததனைக்கு மாறுமாறு கூறிவரும் மத்திய அரசு, அரசியல்கட்சிகளிடம் இதை வலியுறுத்தாதது ஏன்?
மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கட்சிகள், மக்களுக்கு சேவைபுரிவதையே தங்களது குறிக்கோள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் இதுபோன்ற செயல்களில் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?
தற்போது அரசு தெரிவித்துள்ள இரண்டு யோசனைகளுமே ஓட்டை நிறைந்ததாக உள்ளன. எனவே இதன் மூலம் அரசியல்கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை ஒழுங்குபடுத்த முடியும் என்பதும் அரசியலில் தூய்மையை உருவாக்க முடியும் என்பதும் நிறைவேற முடியாத பகற்கனவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com