

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் குசினரா என்னும் சிற்றூரில் பகவான் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார். அப்பொழுது அவருக்கு எண்பது வயதாகி இருந்தது. முப்பத்து நான்காவது வயதில் ஞானம் அடைந்ததில் இருந்து கால்நடையாகவே ஊர் ஊராகச் சென்று சகல மக்களும் சீலத்தோடு வாழ்ந்து ஞானத்தைப் பெற வழிகாட்டி வந்தவர் மூச்சு அடங்கிவிட்டது.
அவரின் பிரதான சீடனாகிய ஆனந்தனில் இருந்து, அன்றுதான் புத்த பிட்சுவானவர் வரையில் அழுது புலம்பினார்கள். கண்ணீர் விட்டுக் கொண்டே சால மரங்களுக்கிடையில் சந்தன மரக் கட்டைகள் வைத்து, நறுமண திரவியங்கள் தெளித்து எரித்தார்கள். பின்னர் தாள முடியாத துக்கத்தோடு அழுது புலம்பிக் கொண்டு பிரிந்து சென்றார்கள்.
சில மாதங்களுக்குப் பிறகு இனி யார் நமக்கு வழிகாட்டப் போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டு ராஜ கிருகத்தில் ஒன்றாகக் கூடினார்கள். "உங்களுக்கு யாரும் வழிகாட்ட முடியாது. நீங்களே விளக்காகவும், ஒளியாகவும் இருக்கிறீர்கள்' என்று பகர்ந்த பகவான் இடத்தை நிரப்ப இன்னொருவரைத் தேடினார்கள்.
அதுதான் மனித இயல்பு. துயரம் துணை தேடுகிறது. ஆறுதல் கூற இன்னொரு ஆளைத் தேடுகிறது. பெரும்பாலான மனிதர்கள் தங்களை அடக்கி ஆள, கட்டளைகள் பிறப்பிக்க, முரட்டுத்தனமாக நடத்த மற்றொரு ஆளை தேடுகிறார்கள். அது இன்று, நேற்று இல்லை. நெடுங்காலமாக நடந்து வருவது.
சரித்திரம் முழுவதிலும் சமயத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், பேரரசர்களுக்கு அடங்கி ஒடுங்கி வந்த மனிதர்கள், நவீன காலத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பணிந்து கிடக்கிறார்கள். அது நெடுங்கால மரபின் நீட்சி என்றே சொல்ல வேண்டும்.
தன் கட்சித் தலைவர் மனிதர்களில் மாணிக்கம். மகத்தான ஆற்றல் கொண்டவர். ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே அவருக்கு அடங்கி நடந்தால் தானாகவே வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்தடைந்துவிடும். தலைவரின் கட்டளைகளைக் கேட்டுக் கொண்டும், அவரின் கூட்டங்களுக்குச் சென்று கோஷம் போட்டுக் கொண்டும், தேர்தலின்போது தலைவரின் கட்சிக்கு வாக்களித்தால் போதும் என்றும் பலர் இருக்கிறார்கள்.
உண்மையில் மனிதர்கள் எதற்கும் பணிந்து, அடங்கி நடக்கிறவர்கள் இல்லை. வரம்பு மீறுவதும், எல்லை தாண்டுவதும்தான் அவர்கள் இயல்பு. மனிதர்கள் பற்றி சொல்லப்பட்டதைவிட சொல்லப்படாதது அதிகம். ஒவ்வொரு தனி மனிதனும் ஓர் ஆள் கிடையாது. அது மனிதர்கள் உயிர் வாழ்க்கையை மட்டும் வைத்துக் கொண்டு சொல்வதில்லை; மரணத்திற்குப் பின்னும் சொல்லப்படுவதுதான்.
மரணம் மனிதர்களை ஒட்டுமொத்தமாகப் புனிதர்களாக்கி விடுவதில்லை. வாழ்ந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டதைவிட கடுமையாக மரணத்திற்குப் பிறகு பலர் விமர்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உயிரற்ற உடலை நெருப்பால் எரித்து நீரில் கரைத்து விட்டாலும், மண்ணில் குழி தோண்டி புதைத்து விட்டாலும் அவர்கள் இல்லாமல் போவதில்லை. செத்துப் போவதால் மனிதர்கள் இல்லாமல் போவதில்லை.
வியாசர், வால்மீகி, திருவள்ளுவர், இளங்கோ அடிகள், பாரதியார் எல்லாம் தங்கள் படைப்புகள் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நஞ்சு கொடுத்து கொல்லப்பட்ட சாக்ரடீஸ், சிலுவையில் ஆணி அடித்து மரணமடைய வைத்த ஏசுநாதர், துப்பாக்கிக் குண்டுகளால் சாகடிக்கப்பட்ட மகாத்மா காந்தி எல்லாரும் ஜீவிதமாகவே இருக்கிறார்கள்.
நல்லவர்கள் கொண்டாடப்படுவது மாதிரியே சர்வாதிகாரிகள், மக்கள் விரோதிகள் ஆகியோர் சரித்திரம் முழுவதிலும் நிந்திக்கப்பட்டே வருகிறார்கள். ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், மெயின் கேம்ப் - என்ற கெட்டப் புத்தகம் எழுதி மானிட சமூகத்தை வதைத்தவர் என்று பழிக்கப்பட்டு வருகிறார்.
ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கேலி செய்து சார்லி சாப்ளின் "தி கிரேட் டிக்டெட்டர்' என்ற படம் எடுத்தார். அது ஹிட்லர்க்கான சினிமா படம் மட்டுமல்ல, எல்லா சர்வாதிகாரிகளையும் மிரட்டும் படமாக இருந்து வருகிறது.
சோவியத் ரஷியாவின் சர்வாதிகாரி, கம்யூனிஸத்தின் பெயரால் செய்த கெட்டக் காரியங்களை ஜார்ஜ் ஆர்வெல், "விலங்குப் பண்ணை', "1984' என்று இரண்டு நாவல்கள் எழுதி வெளிப்படுத்தினார். ஸ்டாலின் இறந்து போன பின்னரும், சோவியத் ரஷியா சிதைந்து போன பிறகும் ஜார்ஜ் ஆர்வெல் காலாவதியாகி விடவில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரிய, சிறிய சர்வாதிகாரிகளின் மூர்க்கத்தனத்தை, அதிகார வெறியை எடுத்துச் சொல்லி மகத்தான சக்தி கொண்ட மனிதர்கள் விழிப்போடு இருந்து தங்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று சொல்கின்றன.
விழிப்புணர்வு என்பது மனிதர்களின் மகத்தான சொத்து. அது பிறப்பின் வழியாக அவர்களுக்கு வந்தது. அதனை அறியாமல் பலர் வாழ்ந்தாலும், சிலர் அறிந்து கொண்டு வாழ்ந்தாலும் வாழ்க்கை தன் போக்கில் போய்க் கொண்டுதான் இருக்கிறது.
அதில் அறிந்து வாழ்வது, அறியாமல் வாழ்வது என்பவை முக்கியமல்ல. வாழ்வது என்பதே முக்கியமானது. அதற்கு ஓர் ஆள் வேண்டும். குரு வேண்டும். தலைவர் வேண்டும் என்பதில்லை.
"உனக்கு யாரும் வழி காட்ட முடியாது. நீயே உனக்கு வழிகாட்டிக் கொள்ள வேண்டும்' என்று இடைவிடாது உரைத்துக் கொண்டிருந்த பகவான் புத்தர் வாழ்க்கையே அதை சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர் மகா பரிநிர்வாணம் அடைந்த பின்னர் பிட்சுக்கள் எல்லாம் ராஜ்கிருகத்தில் ஒன்றாகக் கூடி நமக்கு யார் வழி காட்டுவது என்பது பற்றி ஆலோசனை நடத்தினார்கள். சிலர் ஆனந்தனையே சுற்றி வந்தார்கள்.
ஆனந்தன், புத்தர் ஞானமடைந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அவரிடம் வந்து சேர்ந்தவன். அவன் புத்தருடைய சிறிய தந்தையின் முதல் மகன். அவரைவிட ஒரு வயது சிறியவன். புத்தரின் பணியாளாகவும், பாதுகாவலனாகவும் இருபத்தைந்து ஆண்டுகள் உடன் இருந்தான்.
புத்தரிடம் வந்தவர்கள் எல்லாம் ஞானம் பெற்று போய்விட்டார்கள். ஆனால் ஆனந்தன் ஞானம் அடையாமல் பணியாளாகவே இருந்தான். புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த பிறகு ஞானமடைந்தான்.
புத்த பிட்சுக்களின் கூட்டம் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருந்தது. அழுது புலம்பிக் கொண்டு துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிய பலரும் பேசினார்கள். சுபத்திரன் என்னும் முதிய பிட்சு எழுந்து நின்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க பின்னால் இருந்தவர்கள் எல்லாம் சற்று முன்னே வந்தார்கள்.
"நமக்கு ஞானம் பெற வழிகாட்டியாக இருந்து ததாகதர் மகா பரிநிர்வாணம் அடைந்துவிட்டார். அது நல்லதுதான். அவர் உயிரோடு இருந்தவரையில் இது செய்யத் தக்கது; இது செய்யத் தகாதது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நாமும் அவர் சொல்லுக்கு அடங்கி நடந்து வந்தோம். நாம் பெற்ற ஞானத்தின் வழியாக ஒரு காரியமும் செய்ய முடிந்தது இல்லை. இப்போது அவர் இல்லை.
நாம் விடுதலை அடைந்து விட்டோம். சுதந்திரமாகச் செயல்படலாம். அழுது புலம்புவதை விட்டொழியுங்கள்' என்று உரைத்தார்.
சுபத்திரன் பேச்சு பிட்சுக்களிடையே கலவரம் மூட்டிவிடும் போல பட்டது.
புத்தர் இல்லாதபோது கலகக் குரலை அடக்க, புத்தரின் உபதேசங்களைத் திரட்டி தொகுக்க ஆரம்பித்தார்கள். "தம்மபதம்' உட்பட பல புனித நூல்கள் தொகுப்பிற்கு சுபத்திரன் உரைதான் காரணமாகஅமைந்தது.
சாவு கெட்டது என்று சொல்ல முடியாது. அது ஒரு நிகழ்வு. இழப்புதான். ஆனால் பிறந்ததெல்லாம் இறக்கும் என்ற இயற்கை சார்ந்தது. சாவு ஒரு குடும்பத்தின், சமூகத்தின், நாட்டின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. புதிய காற்று வர பல சாளரங்களைத் திறந்து வைக்கிறது.
உலகம் முழுவதையும் வென்று ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு கிரீஸில் இருந்து பெரும்படையோடு புறப்பட்டு பல வெற்றிகளை அடைந்தவன் அலெக்சாண்டர். மகா அலெக்சாண்டர் என்று பெயர் பெற்ற அவன் தன் முப்பத்து இரண்டாவது வயதில் நோயுற்று பாசறையில் கிடந்தான்.
மருத்துவ மேதைகள் பலர் அவனுக்கு சிகிச்சை அளித்தார்கள். விரைவில் அவன் பிழைத்தெழுந்து விடுவான் என்று படை வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனாலும் மகா அலெக்சாண்டர் தன் சாவை அறிந்து கொண்டு, "பல சிறந்த மருத்துவர்களின் உதவியால் நான் செத்துக் கொண்டு இருக்கிறேன்' என்றான்.
மனிதர்களின் உயிரைக் காப்பாற்ற மற்றவர்கள் எத்தனைதான் பெரும் முயற்சிகள் செய்தாலும், கடைசியில் வெற்றி என்பது சாவின் பக்கமே இருக்கிறது. வாழ்க்கை என்பதின் புதிர் மரணந்தான். அதற்கு ஆண், பெண், குழந்தைகள், தலைவர்கள், தத்துவ ஞானிகள் என்ற பேதமெல்லாம் கிடையாது. வயதுமில்லை. எந்த இடத்திலும், எந்த ரூபத்திலும் வரலாம். ஆனால் சாவை யாரும் விரும்புவதில்லை.
எத்தனை இடர்கள், நோய்கள் வந்துள்ளப் போதிலும் வாழவே விரும்புகிறார்கள். அதிலும் தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் சாவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் தனக்கு சாவே வராது என்பது போல நடந்து கொள்கிறார்கள். அதோடு தன் அன்பிற்குரியவர்கள், வழிகாட்டும் தலைவர்கள் சாகவே மாட்டார்கள் என்றும் நம்புகிறார்கள். அது நம்பிக்கை. நம்பிக்கை நல்லதுதான். ஆனால் யதார்த்தம் வேறு. அதை புரிந்து கொள்ளவும் ஏற்கவும் மனம் வேண்டும்.
அந்த மனத் திண்மையை உண்டாக்கத்தான் மகா கவி பாரதியார், "சாதல் இனிது' என்று பாடியிருக்கிறார். சாவை கொண்டாட முடியாவிட்டாலும், அதனை பூரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.