பிரதமர் நரேந்திர மோடியின் அந்த ஒற்றை அறிவிப்பு, ஒட்டுமொத்த இந்தியாவையே இத்தனை பரபரப்புக்குள் தள்ளிவிடும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு, இன்று நாட்டு மக்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை.
சாதாரண டீ கடை முதல் தொலைக்காட்சி வரை இந்த விவகாரம் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள், அறிவுஜீவிகள் என அனைவரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பான தங்களது நேர்மறை - எதிர்மறை கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டு நடவடிக்கையால் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என ஒருதரப்பும், ஊழல் கட்டவிழ்க்கப்பட்டுவிடும் என்று மற்றொரு தரப்பும் சண்டையிட்டுக் கொள்கின்றன. உண்மையிலேயே, இந்த நடவடிக்கை மக்களுக்கு நன்மை பயக்குமா? இல்லையா?
எனக்கு தெரிந்த துறையான தேர்தல் களத்தையும், இந்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையையும் தொடர்புபடுத்த மட்டும் விழைகிறேன். ஏனெனில், தேர்தலுக்கும், ரூபாய் நோட்டுகளுக்கும் இருக்கும் நெருக்கம், நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை!
பணமில்லாமல் தேர்தல் இல்லை என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. வாக்காளர்களைக் கவர்வதற்கும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் பணம் மட்டுமே மூலதனம் என்பதை அரசியல் கட்சிகள் தீவிரமாக நம்புகின்றன. பல தேர்தல் முடிவுகள், அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்துள்ளன.
சுதந்திர இந்தியாவில் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு பெரும் தடையாகவும், சவாலாகவும் விளங்குவது இதுபோன்ற அரசியல் நிதிதான். இது, இந்தியாவில் மட்டுமல்ல பெரும்பாலான உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னை.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே, தேர்தலில் ஒரு வேட்பாளர் இவ்வளவு செலவுதான் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உச்சவரம்பு விதித்துள்ளது. ஆனால், நமது அரசியல்வாதிகள் திறமையானவர்கள் ஆயிற்றே! எந்தெந்தக் குறுக்கு வழிகளிலெல்லாம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியுமோ, அவற்றையெல்லாம் பிரயோகித்து வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.
இவ்வாறு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து பதவிக்கு வரும் ஒருவர், எவ்வாறு மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பார்? தாம் செலவழித்ததைக் காட்டிலும் பத்து மடங்கு பணத்தை மக்களிடமிருந்து இருந்து சுரண்ட வேண்டும் என்பதுதானே அவரது குறிக்கோளாக இருக்கும்? பின்னர் எப்படி அரசியலில் நாம் தூய்மையை எதிர்பார்க்க முடியும்?
எனவே, வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்களை லஞ்சமாகக் கொடுப்பதே அனைத்து தவறுகளுக்கும், ஊழலுக்கும் அடிப்படை ஆகிறது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுத்துவிட்டாலே முக்கால்வாசி வெற்றி பெற்றுவிட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம்.
நான் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றபோது, எனக்கு நானே இரண்டு சவால்களை ஏற்படுத்திக் கொண்டேன். ஒன்று, தேர்தலில் தவறான முறையில் பணம் பயன்படுவதைத் தடுப்பது; இரண்டாவது, தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது. இதற்கான இரண்டு தனித்தனிப் பிரிவுகளை அப்போது உண்டாக்கி செயல்படுத்தினோம். இரண்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன.
அப்போது நடைபெற்ற தேர்தலில், கோடிக்கணக்கான புதிய வாக்காளர்கள் வாக்களித்தார்கள். அதேபோல், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காலத்தில், நாங்கள் எடுத்த நடவடிக்கை, உத்தரப் பிரதேசத்தில் ஓர் ஆளுங்கட்சி எம்எல்ஏவை தகுதியிழக்கச் செய்தது. மேலும், ஜார்க்கண்டில் இரண்டு மாநிலங்களவைத் தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டன.
அதேபோன்று, கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
எனினும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தேர்தல் ஆணையத்தால் முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை. ஒரு தேர்தலில் கருப்புப் பணம் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால், அந்த தேர்தலையை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டால் ஒழிய இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது அரிது.
இந்த அதிகாரத்தை வழங்கக் கோரியே அரசிடம் தேர்தல் ஆணையம் முக்கியமாக விண்ணப்பித்துள்ளது. ஆனால், இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அதேசமயத்தில், தெரிந்தோ, தெரியாமலோ இந்த நேரத்தில் உயர்மதிப்பிலானரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை வந்துள்ளது. அதுவும், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் நெருங்கும் சூழலில், இந்த ரூபாய் நோட்டு வாபஸ்
நடவடிக்கை அமலாகியுள்ளது ஒருவகையில் மிகவும் நல்லதாகவே எனக்கு தோன்றுகிறது.
இந்த நடவடிக்கையால் பல அரசியல் கட்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி. அதுவும் தேர்தல் நெருங்கும் மாநிலங்களில் இருக்கும்
அரசியல் கட்சிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும். தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான கருப்புப் பணம் வெற்றுக் காகிதங்களாக மாறியிருக்கும். எனவே, இந்த தேர்தல்களில் பெரும்பாலும் நேர்மையான வாக்கெடுப்பை நம்மால் உறுதி செய்ய முடியும்.
கட்டுரையாளர்:
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.