மயக்கங்கள் மாறவேண்டும்!

மரபுகள் என்பவை ஒரு குழுவினால் அல்லது ஓர் இனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பெற்ற தொடர் நிகழ்வுகளே என்பர். அவற்றிற்குரிய காரணகாரியங்களும் ஆங்காங்கே தென்படும்.
மயக்கங்கள் மாறவேண்டும்!
Updated on
3 min read

மரபுகள் என்பவை ஒரு குழுவினால் அல்லது ஓர் இனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பெற்ற தொடர் நிகழ்வுகளே என்பர். அவற்றிற்குரிய காரணகாரியங்களும் ஆங்காங்கே தென்படும். மரபுகள் சிலவற்றின் அடிப்படை புலனாகாதபோது ஒரு தடுமாற்றமோ சின்ன மயக்கமோ ஏற்படுவது இயல்பானது.
சான்றாக, நேர்ப்பொருளை உணர்ந்து கொள்ளாமையும் பேச்சு மரபும் காரணமாக அமையும் ஒரு மயக்கத்தை முன்வைக்கலாம். ஒரு பொழிஞர் மேடையில் நம்முடைய தலைவர் போராட்டங்களுக்கு அஞ்சாதவர், அவர் எத்தனைமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கால்நடையாய்ச் சென்று மோதியிருக்கிறார் என்பதை உலகறியும் என முழக்கினார்.
மேடையில் இருந்தோர்க்கும் அரங்கில் இருந்தோர்க்கும் அவர் சரியாகப் பேசுவதாகவே தோன்றியது. பிழையாக எந்தச் சொல்லும் தோன்றவில்லை. கூர்ந்து பார்த்தால் கால்நடையாய் நடந்தார் என்ற தொடரின் குறைபாடு தெரியவரும்.
ஊர்திகளைப் பயன்படுத்தாமல் கால் வலிக்க அவர் நடையாய் நடந்தது என்னவோ உண்மை. ஆனால், கால்நடை என்ற சொல் ஆடு, மாடுகளைக் குறிப்பது. காலால் நடத்தல் என்ற வேலையைக் குறிக்கக் கால்நடையாய்ச் சென்றார் என்று உச்சரிக்கும்போது இந்தப் பொருள் மயக்கம் உண்டாகும்.
பாரதியார் புதிய ஆத்தி சூடியில் கூறும் சொல்வது தெளிந்து சொல் என்பதை இவண் நினைவுகூர்தல் வேண்டும்.
முப்பதாண்டுகளுக்கு முன்னால் சென்னையிலிருந்து தேவகோட்டைக்குச் செல்ல நேர்ந்தது. புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் அரசுத்துறை ஒன்றின் தகவல்பலகை பெரிய அளவில் நின்று கொண்டிருந்தது. வேளாண்மைத்துறை சார்ந்தது அது. அதில் இடம்பெற்ற சொல்லாட்சிகளில்தான் ஒரு மயக்கம் அமைந்தது.
சிறு நீர்ப்பாசனத் திட்டம் என்ற தலைப்பும் அதன்கீழே(Small Irrigation Project)  என்ற ஆங்கிலக் குறிப்பும் இருந்தன. பலகை எழுதுவதற்கான செய்திகளை எழுதிக் கொடுத்தவரின் தவறா அல்லது எழுதியவரின் தவறா எனப் புரியவில்லை. சிறுநீர்ப்பாசனத் திட்டம் என்ற தொடர் அங்கே காணப்பெற்றது. சிறு விற்கும், நீர்ப்பாசனத்திற்கும் இடையே இடைவெளி இல்லை.
குறைவான அளவு அல்லது குறைந்த காலம் போன்றவற்றைக் குறிக்கச் சிறு என்ற முன்னொட்டு அமையும். Small scale Industries எனச் சிறு தொழிலகங்கள் இன்றும் குறிக்கப்படுவதை உடன்வைத்துப் பார்க்க வேண்டும். சிறுசேமிப்பு என்பதை Small savings என்பதையும் இணைத்துக் கொள்ளலாம். சிறிய அளவிலான நீர்ப்பாசன முறையைக் குறிக்கச் சிறுநீர்ப்பாசனம் என்ற சொல்லைப் பெய்தால் பொருள் விபரீதமாக அமையும்.
ஊர்திரும்பியவுடன் புதுக்கோட்டை வேளாண்துறைக்குத் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பலகையை மாற்றக் கோரி ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதற்கு முன்னதாகவே தமிழ் ஆர்வலர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டியதால் அந்தப் பலகை கழற்றப்பட்டு, சிறிய நீர்ப்பாசனத் திட்டம் என்ற வரியாக உரிய மாற்றம் பெற்றபின் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுவிட்டதாகத் தகவல் தந்தனர்.
சரியான சொற்களிலிருந்தும்கூடத் தடுமாற வைக்கும் இதுபோன்ற சொல்லடுக்குமுறைகள் உற்றுநோக்குதலுக்கு உரியன. சிவபுராணம் பாடும் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் என்பது நடைமுறையாகாமையே இம்மயக்கத்திற்குக் காரணம்.
தங்களுடைய எதிர்காலத்தை அறிந்துகொள்வதில் அனைவரும் ஈடுபாடு காட்டுவர். அதில் பிழையில்லை. ஆனால், சில நேரங்களில் உணர்வுகளை மீறிய எதிர்பார்ப்புகள் மயக்கத்தை வழங்கக்கூடும்.
ஒருவர் சித்திரை மாதம் முதல்நாளில் ஓர் இதழில் வரும் ஆண்டுப் பலனைப் படிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அன்று தொடங்கி - அடுத்த சித்திரை மாதப்பிறப்பு அமைவதற்கு முதல்நாள் வரை - பங்குனி மாத நிறைவு நாள் வரையிலான பலன்கள் கூறப்பட்டிருக்கும். நட்சத்திரத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுப் பலன் எல்லாருக்கும் கூறப்பட்டிருக்கும்.
திடீரென ஆங்கிலப் புத்தாண்டு வரும்போது சனவரி முதல்நாள் தொடங்கி அவ்வருடத் திசம்பர் நிறைவுநாள் வரையிலான பலன்கள் என மற்றொரு பலன்கூறு படலம் இடம்பெறும். ஒன்று, தமிழ் மாத முறையில் பன்னிருமாதங்கள் என இருக்க வேண்டும் அல்லது பன்னிரண்டு ஆங்கில மாதங்களைக் கணக்கிலெடுக்க வேண்டும்.
சித்திரை மாதத்திலிருந்து பலன்களை அறிந்துவரும் ஒருவருக்கு மார்கழிமாத இடையில்வரும் ஆங்கில ஆண்டுப் பலன் எதற்கு? அடுத்த சில மாதங்களுக்கு ஏற்கெனவே பலன் கூறப்பட்டுள்ள நிலையில் ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் வரும்போது ஏற்கனவே கூறப்பட்ட தமிழ் மாதங்களுக்கான பலன்கள் என்னவாகும்? இடைமறித்து வேறோர் ஆண்டுப் பலன் ஏன் சொல்லவேண்டும்? மனித மனங்களின் மயக்கத்திற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.
பிறந்த நாளன்று அமையும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் அந்த நட்சத்திரம் வரும்நாளில் பிறந்தநாள் கொண்டாடுவது பொதுமரபு. தமிழ்நிலச் சூழலில் இந்நடைமுறையே பெரும்பான்மை. நட்சத்திரமே முதன்மையாக்கப்பெறும்.
இராசராசசோழனுடன் சதய நட்சத்திரம் தொடர்புபடுத்தப்படுவதும் திருவனந்தபுர மன்னர்களுடன் சுவாதித்திருநாள் என்ற சொல்லமைவு தொடர்புபடுத்தப்படுவதும் உடன் வைத்து எண்ணத்தக்கவை.
மேலைநாட்டுப் பதிவுமுறை மக்கள் தொகைக் கணக்கீடு போன்றவற்றில் நடைமுறைப் படுத்தப்பட்டபின் பிறந்தநாள் ஆங்கில நாட்டு முறைமையில் பதிவானது. ஒருவருடைய ஆங்கில முறையிலான பிறந்தநாள் மாறவே மாறாது.
தமிழர் மரபுப்படி நட்சத்திரம் கணக்கிடப்படும்போது எல்லா ஆண்டும் ஒரே தேதியில் பிறந்தநாள் வராது. எனவே ஒரு நபருக்கு இரண்டு பிறந்த நாட்கள் வரும். சமயங்களில் பள்ளிக்கூடத்தில் சேரும்போது (இந்த நாட்களை விடுத்து) வேறொரு நாளைக் குறிப்பிட்டிருந்தால் மூன்று பிறந்தநாள்கூட வரும்.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள்கூட எல்லா ஆண்டும் ஆங்கில மாதத்தின் ஒரே தேதியில் வருவதில்லையே! திசம்பர் 25 என்பது எந்தக் கிழமையில் வந்தாலும் கிறித்து பிறந்தநாள் எனக் கொண்டாடப்படும். இஃது ஆங்கில வழிமுறை. அதனால் சிக்கலில்லை.
நாள் கணக்கு மட்டுமில்லை. நேரக்கணக்கிலும் நம்மிடையே இனந்தெரியாத ஒரு மயக்கம் தென்படுகிறது. நாளொன்றின் நள்ளிரவு 12 மணிக்குமேல் வரும் நேரத்தை அடுத்த நாளாகக் கருதுவது மேலைமுறை. தொடர்வண்டிக்குப் பயணச் சீட்டு வாங்குபவர்களில் பலருக்கும் முன் பதிவு செய்யும் நாளைக் குறிப்பிடும்போது தடுமாற்றம் உண்டாகும்.
மகாகவி பாரதியார் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பின்னிரவில் (1.30 மணியளவில்) இறந்தார். அதனால் 11.09.21 எனக் கொள்கிறோம். ஆங்கில முறைமையில் 12.09.21 அதிகாலை என வரவேண்டும். இப்படி சின்னச் சின்ன மயக்கங்கள் உள. ஏதேனும் ஒரு முறைமையை மட்டும் ஏற்காத வரை இத்தகு குழப்பங்கள் வரும்.
சின்னச் சின்னச் சொற்களில்கூட இத்தகைய மயக்கங்கள் வெளிப்படுவதுண்டு. தமிழ் எழுத்துகளை நிரல்படுத்தும்போது உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என்று அமைப்பர். ஆய்தம் என்பது ஒற்றை எழுத்து. அஃது, அடுப்புக் கூட்டின் மூன்று முகடுபோல ஃ என வருமென்பது விளக்கம்.
இந்த ஆய்தத்தையும் படைக்கருவியான ஆயுதத்தையும் ஒன்றெனக் கருதிய சூழலை அலசினால் சில வெளிச்சங்கள் கிடைக்கும். முருகக் கடவுளின் எழில் தோற்றத்தைப் புனையும் ஒரு பக்திப் பாடல் புகழ் வாய்ந்தது. சீர்காழி கோவிந்தராசன் பாடியுள்ள அப்பாடல் "தமிழான உருவம்தான் தண்டபாணி' எனத் தொடங்கும்.
தமிழில் உள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும் முருகனுடைய பன்னிரு விழிகள் என உருவகப்படுத்தியதாக அப்பாடல் புனையப்பெறும். அதன் வரிகளின் ஊடே தமிழ் எழுத்தான ஆய்தம் முருகன் கையில் வேல் என்ற ஆயுதமானது என வருணிக்கப்பெறும்.
ஆய்தம் என்ற முப்பாற்புள்ளிக்கும் வேலுக்கும் தொடர்பில்லை. வேலாயுதம் படைக்கருவியைச் சுட்டும். தமிழர்களில் பலர் ஆய்த எழுத்தை ஆயுத எழுத்தெனப் பிழைபட எழுதியிருக்கவும் கூடும். இரண்டும் ஒன்றென்ற கருத்தும் விளைந்திருக்க வேண்டும்.
அதனால் தமிழின் ஆய்தம் என்ற எழுத்து குமரப்பெருமானின் கையில் உள்ள வேலாயுதமாக மாறிப்போய் மயக்கம் தருவதாக இடம்பெற்றுள்ளது.இஃது எழுத்து மயக்கம்.
இலக்கிய மரபு என்பது வேறு. இயற்கை உண்மை என்பது வேறு. திருவள்ளுவர் தம் காலத்திய தொன்மங்கள், பழக்கவழங்களையெல்லாம் பாடியுள்ளார். யானைப்போர் நடக்கும்போது குன்றின் மேல் இருந்து பார்க்கும் பழக்கத்தைக் குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை.
என்ற குறள் ஓதும். இப்போது யானைப் போருக்கு இடமில்லை. அதனால், குன்றேற வேண்டிய தேவையுமில்லை.
எனினும் அறிவியல் பாதை காட்டியும்கூட இன்றைக்கும் மாறாத சிலவற்றைக் கருதுதல் வேண்டும். அண்மையில் மின்னஞ்சலில் வந்த கட்டுரையின் ஒரு செய்தி குறிக்கத்தக்கது.
காலையில் கதிரவன் கிழக்கே உதிக்கிறான். பகலில் வான்வெளியில் பயணம் செய்கிறான். மாலையில் மேற்குத் திசையில் மறைகிறான் என்றுதான் காலந்தோறும் சொன்னார்கள்; இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அறிவியல் கூறுவதென்ன? சூரியன் என்ற சுடர்க்கோள் ஓரிடத்திலேதான் நிலையாக நிற்கும். அஃது அசைவதுமில்லை, நகர்வதுமில்லை, பயணம் செய்வதுமில்லை. மற்றொரு கோளான பூமிதான் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும். சூரியனுக்கு நேர்எதிரில் பூமியுருண்டை சுழலும்போது மண்ணுலகில் பகல் அமைகிறது.
அவ்வுருண்டையின் நேர்ப்பின்புறத்தில் - சூரியக் கதிர்கள் படியாததால் - இரவு அமைகிறது. இருண்ட பகுதி சூழலும்போது கதிரவனின் கதிர்பட்டு அப்பகுதி பகலாகிறது. இதனை ஒரு பள்ளிக்கூட அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவன்கூட மேசைமீதில் செய்துகாட்ட இயலும்.
இந்தப் பேருண்மையை அழுத்தந் திருத்தமாக நம்மவர்கள் புரிந்துகொண்ட பின்பும் இன்றும் கதிரவனைக் கிழக்கே பள்ளி எழுச்சி கொள்ளச் செய்து, உச்சிவெயிலாக உலாவருவதாகக்கூறி, வெயிலோன் சாயுங்காலமே சாயங்காலமெனப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தொடக்க காலத்தில் இப்படிப் பசுமரத்தாணியாய்ப் பதிந்துபோனவற்றை மாற்றிக் கொள்வதில் உள்ள ஓர் அடையாளம் புரியாத மயக்கமே இதற்குக் காரணம். மயக்கங்கள் மாறவேண்டும். வளர்ச்சிகள் புலர வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com