களமாட வேண்டிய காலம்

உலகின் மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் சில நூறு பேருடன் தொடங்கியப் போராட்டம் லட்சக்கணக்கானவர்களை கொண்டு வந்து நிறுத்தியது. சென்னையில் மட்டுமல்ல கோவையில்,
Published on
Updated on
2 min read

உலகின் மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் சில நூறு பேருடன் தொடங்கியப் போராட்டம் லட்சக்கணக்கானவர்களை கொண்டு வந்து நிறுத்தியது. சென்னையில் மட்டுமல்ல கோவையில், மதுரையில், நெல்லையில், திருச்சியில் இன்னும் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் திரள் போராட்டமாக மாறியது.
அமைதியாகத் தொடங்கிய போராட்டம் அமைதியாக நிறைவடையவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. நாம் அதனை ஆராயாமல் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே ஒரு முன்மாதிரியாக அமைந்த இளைஞர்களின் போராட்ட முறையை பார்ப்போம்.
இது வெறும் உணர்ச்சி சார்ந்ததல்ல. அவர்கள் மிகத்தெளிவாகவே இருந்தார்கள். போராட்டத்தில் பங்கேற்பதைக்கூட பெற்றோரிடம் தெரிவித்தார்கள். ஜனநாயக நாட்டில் ஒரு கருத்தை வலியுறுத்த, மறுக்க, எதிர்ப்பைக் காட்ட இப்படிப்பட்ட போராட்டங்களே சாத்தியமானவை என்பதை நாடு உணர்ந்தது.
அண்மைக் காலங்களில் பெரிய அரசியல் கட்சிகள்கூட பணமும், பானமும் கொடுத்து வாகனங்களில் ஏற்றி "கூட்டத்தைக் காட்டுவது'தான் வழக்கமாகிப் போனது. ஆனால் எந்தவித அறிவிப்பும், அழைப்புமின்றி கணம்தோறும் பெருகியது கூட்டம்.
ஒரு நிலையில் ஜல்லிக்கட்டு மீதான கோரிக்கை நியாயத்தைவிட, அதற்காகப் போராடுபவர்களின் உணர்வுகளை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவுமே கூட்டம் கூடியது.
எந்தவித விளம்பரமுமின்றி உணவுப் பொட்டலங்களும், தண்ணீர் பாக்கெட்டுகளும் விநியோகம் செய்யப்பட்டன. அவரவர் அவரவருக்கு இயன்ற அளவில் தங்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். "தன்னெழுச்சி' என்பதற்கு முன்மாதிரியில்லாத முன்மாதிரியாக இப்போராட்டம் அமைந்துவிட்டது.
கைக்குழந்தைகளுடன் பெண்கள், ஊன்றுகோல்களுடன் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விடுப்பெடுத்துக்கொண்டு ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் போராட்டத்தில் முன்னிலைப் பெற்றனர். கொள்கை உறுதியும், கோரிக்கை முழக்கமும், போராட்ட நேர்த்தியும் மிக்க மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட வழிமுறை முற்றிலும் புதியது.
இரவு, பகல் பார்க்கவில்லை, வெயில், பனி, மழையைக் கருதவில்லை. பசி, தூக்கம் அயரவில்லை. வந்த அரசியல்வாதியையும் அனுமதிக்கவில்லை. நடிகர்கள், ஊடகங்கள் எனும் வெளிச்ச மின்னல்களுக்குப் பின்னால் விட்டில் பூச்சிகளாகிவிடவில்லை.
அதே நேரத்தில் கணம்தோறும் முழக்கங்கள் மாறின, வலுத்தன. ஜல்லிக்கட்டு தடை நீக்கமும், பீட்டா அகற்றமும்தான் உடனடி கோரிக்கைகள். ஆனால் அங்கே குழுமியவர்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் அலசினார்கள்.
வயிற்றுக்குச் சோறிட்ட உழவன் கயிற்றுக்கு இரையாவதை வேதனையோடு சுட்டினார்கள். கல்லறையெனத் திகழும் கூடங்குளத்தைத் திட்டினார்கள்.
ஆறுகளை மலடிகளாக்கிய மணல் கொள்கையை, கோயில்களைக் கபளீகரம் செய்த சிலை திருட்டை, காவிரி டெல்டாவை பாலையாக்கும் மீத்தேன், ஷெல் வாயுத் திட்டங்களை, முல்லைப்பெரியாறு சோகத்தை, செல்லாக்காசின் துயரத்தை, நீட் தேர்வின் ஆபத்தை - இப்படி தங்கள் மனங்களில் அடக்கி வைத்தவற்றையெல்லாம் பொதுவில் போட்டு உடைத்தார்கள்.
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை' என்பான் வள்ளுவன். தங்கள் காலத்தில் தொடர்ந்து நிகழும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான நிகழ்வுகள் இவர்களை ஒன்று கூட்டியுள்ளது.
சமூக வலைதளங்கள் இளைஞர்களைச் சீரழிக்கின்றன என்ற பொதுக் குற்றச்சாட்டை அவற்றின் வழி ஒன்றுகூடிய இவர்கள் பொய்யாக்கி உள்ளார்கள். "ஜல்லிக்கட்டு' என்பது ஓர் அடையாளம்தான்.
ஈழத்தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது எழுந்த தீக்கங்கின் மிச்சம், காவிரி உரிமையில் கனன்று, இப்பொழுது ஜல்லிக்கட்டு தடைநீக்கத்தில் பிரவாகமாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டைப் பற்றியேகூட எதிரும் புதிருமாக விவாதிக்க இவர்கள் தயங்கவில்லை.
இந்தப் போராட்டக்களம் பல நல்லவற்றைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. குறிப்பாக இளம் பெண்களின் பங்கேற்பு. அண்மைக் காலமாகப் பெருகிவரும் பெண்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.
ஒரு கொள்கையின் கீழ் ஒன்றிணைவதும் போராடுவதும்தான் மாற்றத்தைத் தரும். விவாதங்களும், ஒன்று கூடலும்தான் மாற்றத்தை நோக்கி நகர்த்தும் வல்லமை மிக்கவை.
அறிவுபூர்மாகவும் "ஜல்லிக்கட்டு' அலசப்பட்டது. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டின் சமூகப் பின்னணி, ஜாதிப் பின்புலம் போன்றவற்றையும் விவாதித்தார்கள்.
இது சமயம் சார்ந்த நிகழ்வா? இது தமிழர்களின் பொதுப் பண்பாட்டு அடையாளமா? நிலக்கிழமை முறையின் எச்சமா? என்றெல்லாம் தங்களுக்குள் கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.
பீட்டா அமைப்பின் தலைமையகம், அதன் பின்னணி, உள்நோக்கம், காளைத் தடைக்கும் பசு, பால் இறக்குமதிக்கும் உள்ள தொடர்பு - இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
நாட்டின் விடுதலைப்போரில், எல்லைக் காப்புப்போரில், மொழிப் காப்புப் போரில் முன்னிலை பெற்ற மாணவர்கள், தமிழ்நாட்டின் புதிய அரசியலுக்கு வழிவகுக்க வேண்டும். யார் இவர்களை வழி நடத்துவது?
தமிழ்நாட்டில் திரைக் கலைஞர்கள்கூட அவ்வப்பொழுது சமூகத்தளத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மெளனித்து நிற்கின்றார்கள்.
மாணவர்களோடு பெரிதும் தொடர்புடைய அவர்களிடம் செல்வாக்குப் பெறத்தக்கவர்களாகி அறிவுத்துறையினர் களமாட வேண்டிய தருணமிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com