இயற்கையும் இணக்கமும்

இந்தியா, உலகின் நிலப்பரப்பில் இரண்டரை சதவீதமும், மக்கள்தொகையில் இருபது சதவீதமும், 45,000 தாவர வகைகளையும், 9,000 வகை உயிரினங்களையும் தன்னகத்தே கொண்ட பல்லூயிர்ச் சூழல் அமைந்த
Updated on
2 min read

இந்தியா, உலகின் நிலப்பரப்பில் இரண்டரை சதவீதமும், மக்கள்தொகையில் இருபது சதவீதமும், 45,000 தாவர வகைகளையும், 9,000 வகை உயிரினங்களையும் தன்னகத்தே கொண்ட பல்லூயிர்ச் சூழல் அமைந்த நாடாகும்.
இந்த தாவரங்கள் - உயிரினங்களின் சிறப்பே, அவை ஒன்றினை ஒன்றும் சார்ந்து இயங்கி வருவதும், மண்ணையும், சுற்றுப்புறத்தையும் காப்பாற்றுவதும்தான். அது மட்டுமல்ல, அது மனிதகுலத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.
ஒரு காட்டின், ஏதோ ஒரு பகுதியில் ஏற்படும் தாவர அழிவு அல்லது விலங்குகள் அழிக்கப்படுதல், அக்காட்டின் பிற பகுதிகளிலும் சில தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
அதுபோல பூமியின் ஒரு மூலையில் ஏற்படும் நிகழ்வின் தாக்கம், பல்வேறு பகுதிகளுக்கும் வெவ்வேறு விதமாக சென்றடையும். உலகின் ஒரு மூலையில் ஒரு வண்ணத்துப் பூச்சி ஏற்படுத்தும் சிறு சலனம்கூட, பூமியின் இன்னொரு பக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனை butterfly effect  என்பர்.
இயற்கையின் பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் இயைபோடு இயங்குவதைத்தான் உயிரியல் பன்மை என்கின்றனர். இந்த உயிரியல் பன்மைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த இயைபு சிதைவுறும்போது, ஒன்றினை ஒன்று சார்ந்திருக்கும் பல விலங்கினங்களும், தாவர வகைகளும் அழிவினை எதிர்நோக்கும். இந்த அழிவு, இயற்கை தன் மீது தானே ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றல்ல. மனிதன் இயற்கையின் மீது ஏற்படுத்தும் காயங்களாகும்.
கலாசார பன்முகத்தன்மை என்பது சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும். இது குறித்த ஆழமான புரிதல் மக்களிடையே, பகிர்ந்து கொள்ளும் மனோபாவம், பிறரது திறமையை, தனித்தன்மையை மதிக்கும் பேருணர்வு, ஆக்கபூர்வமான படைப்பாற்றல், நல்லெண்ணம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் என்று மனிதவள மேம்பாட்டு துறையினர் கூறுகின்றனர்.
அமெரிக்கா அடைந்திருக்கும் பொருளாதார வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக, இந்த பன்முகத்தன்மையும், பல நாட்டினர், மொழியினர், மதத்தினர், இனத்தவர் அங்கு இணக்கமாக வாழ்வதும் ஒன்று என அவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய பின்னணியில், பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகமயமாதல் ஏற்படுத்தும் தாக்கங்களையும் கவனிக்க வேண்டியதும் அவசியம். உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்களிடம் ஏற்படும் உரசல் - பிரிவு - ஒற்றுமையின்மையின் பாதிப்பு, ஏனைய பகுதிகளை பாதிக்கும் அளவுக்கு உலகம் இன்று சுருங்கியிருக்கிறது.
தொழில் - பொருளாதார வளர்ச்சி, உலகமயம் என்பன ஒருநாட்டின் சுற்றுப்புற சூழலை மட்டுமல்ல, அம்மக்களின் முக்கிய அடையாளங்களான மொழி பண்பாடு கலாசாரம் மீதும் ஓரளவு பிற நாட்டு தாக்கம் ஏற்படுத்தும். பல நாடுகள் இத்தகைய பிரச்னையை சந்திக்கின்றன. அப்படி நிகழும்போது, அத்தாக்கத்தின் பாதிப்பைக் குறைக்க ஒவ்வொரு மொழியினரும் - குழுவினரும் முயற்சி மேற்கொள்ளுவர்.
ஆனால், சில நாடுகளில் பெரும்பான்மையினர், தமது மொழியினை - கலாசாரத்தை காப்பதாக - வளர்ப்பதாக எண்ணிக் கொண்டு, தங்கள் நாட்டிலேயே வசிக்கும் சிறுபான்மையினரது கலாசாரம் - மொழி ஆகியனவற்றை பாதிப்புக்கு உள்ளாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். இது விரும்பத்தகாத, வேறு விளைவுகளை ஏற்படுத்திடும்.
நாம் மொழியினை மட்டும் பிரதானமாக எடுத்துக்கொண்டு சில விஷயங்களை பார்ப்போம்:
தங்களது தாய்மொழியினை வளர்க்க முயற்சி செய்பவர்கள், அம்மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர்களை, அம்மொழியினை ஆழமாக படிக்க செய்ய வேண்டும். மாறாக, தங்களது ஆளுமைக்கு உட்பட்ட - பிற மொழியினர் மீது, தங்களது மொழியினை வலுக்கட்டாயமாக கற்க வற்புறுத்துவது, அம்மொழியினை வளர்த்தெடுக்க உதவாது. மாறாக, அம்மக்களிடையே மனத்தாங்கலையும் - நம்பிக்கையின்மையையும் - வெறுப்பையும் வளர்க்கும்.
நம் தமிழ்நாட்டு, களநிலவரத்தையே சற்று நிதர்சனமாக பார்ப்போம்:
பல சாதீய சமூக அமைப்புக்களை உள்ளடக்கிய தமிழ் நாட்டில், தமிழ் மொழியே ஒரு பெரும் பிணைப்பு சக்தியாக விளங்குகிறது. மொழி வலுப்பெறும்போது, பிணைப்பும் வலுப்பெறுகிறது. இம்மொழி பலவீனப்படும்போது, இங்குள்ள கட்டமைப்பு தளரும் அபாயம் உள்ளது.
40 - 50 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தி, வங்காளம், பீகாரி என பல்வேறு மொழி பேசுபவர்கள் தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளாக வருவத்தைத்தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இன்று பல்வேறு மாநிலத்தவர், மொழி பேசுவோர் - தமிழகத்தில் பணி புரிகின்றனர். அதேபோல, தமிழர்கள் பல வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று பணிபுரிகின்றனர்.
இங்கு வந்தும் - இங்கிருந்து வெளியில் சென்றும் பணி புரிபவர்களுக்கும், மொழி ஒரு பெரும் பிரச்னையாகத் தெரிவதில்லை. மாறாக, வெகு எளிதில் கற்று நட்புணர்வோடு வசிக்கிறார்கள்.
வளர்ச்சியும் உலகமயமாதலும், பல்வேறு மொழி பேசும் மக்களிடையே நெருக்கத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு இன மத மொழியினர் தாமாகவே நெருங்கி வருகின்றனர்.
இங்கு, இது வெகு இயல்பாக எந்த அழுத்தமும் இன்றி நிகழ்ந்து, ஒரு இணக்கமான நிலையை எட்டியிருக்கிறது என்பது மிகமிக முக்கிய அம்சமாகும். இது தொடர எல்லாத் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய இணக்கமான நிலை, எக்காரணம் கொண்டும் சிதையக் கூடாது ஏனெனில் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்த வற்புறுத்தல் - அதிகார வரம்புமீறல் ஆகியன இத்தகைய நிலையை மாற்றக்கூடிய வல்லமை மிக்கது.
இந்த சூழலில், அரசுகளும் அரசியல்வாதிகளும் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்: அவர்களது தலையீட்டின் காரணமாக, இந்த இயல்பான - இணக்கமான தன்மையை மாற்றி - தேவையற்ற அச்ச உணர்வினையும் வெறுப்பினையும் வளர்த்து விடக்கூடாது என்பதுவே ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com