கேடில் விழுச்செல்வம் கல்வி!

சங்க இலக்கியமான புறநானூறு, 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவன் அவன்கட் படுமே' என்று கல்வியின் சிறப்பை எடுத்துக்கூறுகிறது.
கேடில் விழுச்செல்வம் கல்வி!
Updated on
3 min read

சங்க இலக்கியமான புறநானூறு, 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவன் அவன்கட் படுமே' என்று கல்வியின் சிறப்பை எடுத்துக்கூறுகிறது. பத்தாம் திருமுறையாக விளங்கும் திருமந்திரம், 'துணையது வாய்வரும் தூயநற்சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வியே' என்று கூறி நற்கல்வியே வாழ்விற்குத் துணையாய் வரும் என்று எடுத்துரைக்கிறது.
'நெஞ்சத்து நல்லம்யாம் எனும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு, எம்மை உலகத்தும் யாம்காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து' என்று நாலடியார் கல்வி பற்றிக் கூறுகிறது. ஒளவையாரும் மூதுரையில் 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்று கல்வியினால் கிடைக்கும் அறிவு பற்றிக் குறிப்பிடுகிறார்.
குமரகுருபரர் தனது நீதிநெறிவிளக்கத்தில், 'அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்காவலொன்று உற்றுழியுங் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை' என்று கல்வி குறித்துக் கூறியுள்ளார். தேசியக்கவிஞர் பாரதியாரும் 'அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்று கல்விக்குரிய இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
இவ்வாறெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் கல்வி அனைவருக்கும் கிடைக்கத்தக்கதாக அமைய வேண்டியது அவசியம். அதற்கேற்றாற் போல தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, மக்கள் அனைவரும் வரவேற்கத்தக்க வகையிலே ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.
மன அழுத்தம், இறுக்கம் இவற்றோடு பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இவ்வளவு காலமாக இறுதித்தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். மனவலிமை குன்றிய மாணவர்கள் தங்களை மாய்த்துக்கொள்ளும் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. அதைப் போக்கக்கூடிய வகையிலே தமிழக அரசு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
ஆந்திரம் போன்ற மாநிலங்களிலே ஏற்கெனவே இருக்கக்கூடிய நடைமுறை என்றாலும் தமிழகத்தின் தற்காலச்சூழலுக்கு இம்மாற்றங்கள் தேவை. பல பள்ளிகளிலே பதினொன்றாம் வகுப்பு பாடநூல்கள் புறந்தள்ளப்பட்ட ஒரு சூழலிலே பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு மாணவர்களின் மனச்சுமையை மாற்றுவதோடு அவர்களைக் கல்வி ஆர்வத்தோடு பள்ளியில் பங்குபெறவும் துணைபுரியும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரிக்கல்வியில் இரு பருவ முறைத் தேர்வுகள் என்ற அறிவிப்பு வெளியானபோது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டன. இருப்பினும் இன்று கல்லூரி பருவமுறைத் தேர்வுகள் சிறப்பானதாகப் போற்றப்படுகின்றன. மாணவர்களின் அறிவுத்திறமும் வளம் பெற்றிருக்கின்றது.
அதேபோல பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளிலும் வளர்ச்சியைக் காணவேண்டும். அரசு அகமதிப்பீடு மதிப்பெண்ணாக ஒவ்வொரு தாளிற்கும் 10 மதிப்பெண்கள் வழங்கியிருப்பது மாணவர்கள் வகுப்புச்சூழலில் ஈடுபட வளப்படுத்தும்.
கரும்பலகை எழுதுகோல் முறையிலிருந்து மடைமாற்றி மாணவர்களைச் செயல்முறைக் கல்வியில் ஈடுபடுத்த வேண்டும். தமிழகத்தில் பல பள்ளிகள் சிறைக்கு இணையாக மாணவர்களை ஈராண்டுகள் அடைத்து வைத்துக் கொடுத்த - கெடுத்த நெருக்கடிகள் குறையும். தொலைக்காட்சி, நூல் வாசிப்பு, விளையாட்டு போன்ற எதிலுமே ஈடுபட முடியாமல் இருந்த சூழல் மாறும் என்பதில் ஐயமில்லை.
முந்தைய முறையில் 90-க்கு மேல் பெற்ற மாணவர்கள் கூட உயர்கல்வித்துறையில், குறிப்பாக, மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் முதலாமாண்டிலேயே சாதிக்க முடியாமல் போனதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்த முறையில் நிச்சயம் ஒரு நல்ல கல்விச்சூழல் மாணவர்களுக்கு உருவாகும். உயர்கல்வியும் உன்னதம் பெறும்.
தொடக்கக் கல்வி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் முப்பருவத்தேர்வினை எழுதுகிறார்கள். செயல்முறைக் கல்வியோடு கூடியதாக இருப்பதால் மாணவர்களுக்கு எளிமையாக உள்ளது. பாடத்திட்டங்களும் கற்பிக்கும் முறையும் புதுமையாக இருந்தால் இன்னும் இந்த கல்வி முழுமையாக மாணவர்களைச் சென்று சேர உதவும்.
அதற்கேற்ற வகையிலே இந்தியத்தரத்திற்கு இணையாகவும் உலகத்தரத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலும் பாடத்திட்டங்களை உருவாக்குவதாக அரசும், செயலரும், பள்ளிக்கல்வித்துறையும் அறிவித்திருப்பது பாராட்டுதற்கு உரியது.
பாடத்திட்டங்களை வகுக்கும்போதே அரசு கூர்நோக்கர்கள், கல்வியாளர்கள், சான்றோர்களைக் கொண்டு குழு அமைத்துப் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும். சமுதாயம், சுற்றுப்பகுதி, தொழில்மேம்பாடு, மத்திய, மாநிலத் தேர்வாணையத்தேர்வுகளை எதிர்கொள்ளுதல், உலகளாவிய பல்கலைக்கழகங்களில் சென்று பயிலும் வகையிலும் கல்வித்தரம் உயரவேண்டும்.
அதே வேளையில் வரலாறு, புவியியல், குடிமையியல் போன்றவை வட்டாரம் சார்ந்ததாக அமைக்க முயல வேண்டும். உதாரணமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஒன்றியம், வட்டம் பற்றிய செய்திகளையும், ஐந்தாம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான செய்திகள், அடுத்து மாநிலம், நாடு, உலகம் தழுவிய செய்திகள் எனப் படிப்படியான அகன்ற அறிவை வழங்கும் முறையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நல்ல பாடத்திட்டமும் செயலாக்கமும் கல்வித்துறையின் தன்னாட்சித் தன்மையும் பரவலாக்க முறையும் மேற்கொள்ளப்பட்டால் 'நீட்' போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும்போது மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும். எதிர்ப்புகள், போராட்டங்கள் தெரிவித்து, எங்கள் தரம் தாழ்ந்தது, இந்திய அளவில் ஈடுபடக்கூடிய தரம் குறைந்தது எனத் தாழ்த்திக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்காது.
இத்தகைய நடுநிலைக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் ஒன்பது முதல் பனிரெண்டு வரை பொதுத்தேர்வு மட்டும் எதிர்கொள்கின்றனர். இந்த திசைதிருப்பம் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக அமையும்.
அரசு எட்டாம் வகுப்பு வரை முப்பருவத்தேர்வினை அமைத்துள்ளது. பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு உள்ளது. இடையில் உள்ள ஒன்பது, பத்தாம் வகுப்புகள் மட்டும் தனிமையில் விடப்பட்டுள்ளன போல் உள்ளது.
அரசும், அலுவலர்களும் சிந்தித்து பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளைப் போலவே ஒன்பதாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வைக் கைக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இதற்கு அடுத்த கட்டமாக பருவத்தேர்விலேயே பழகிய மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பொதுத்தேர்வை எதிர்கொள்ளக்கூடிய நிலையினை மாற்றி முப்பருவத்தேர்விலிருந்து இருபருவத்தேர்வு நிலைக்கு மாற்ற முயல வேண்டும்.
இதில் பொருளாதாரம், மேலாண்மைச் சிக்கல்கள், பணிச்சுமை போன்றவை இருக்கும் என்பதை அறியலாம். எனினும் படிப்படியாக விரிவாக்கம் செய்து பள்ளி இறுதித்தேர்வு முடிக்கும் மாணவர்கள் நான்கு பருவத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல் மேனிலை வகுப்பிற்கும் நான்கு பருவத்தேர்வு முறை நெறிப்படுத்தினால், உயர்கல்வித்துறையில் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
இத்தகைய முறையை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது பெரிய அளவில் தடைகளை - போராட்டங்களை - எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும். தேர்வு நடத்துதல், விடைத்தாள் திருத்துதல், மதிப்பீடு செய்தல், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் இவற்றில் பெரும் பணிச்சுமைகள் ஏற்படும். அதற்குண்டான வழிவகைகள் காணப்படவேண்டும்.
நடைமுறையில் கட்டுரைவாரியான வினா விடைகள் கொண்டு தேர்வுகள் அமைகின்றன. இதைத் திருத்துவதற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறை. பணிச்சுமை என ஆசிரியர்களுக்குக் கடுமையாகத் தோன்றினால் படிப்படியாக பொதுத்தேர்வுகளை ஒரு மதிப்பெண் தேர்வுகளாக, ஒளிபட்டைக் குறியீட்டு (ஓ.எம்.ஆர்.) முறையில் நடத்தலாம்.
இதன் காரணமாக விடைத்தாள் திருத்தம், தர மதிப்பீடு போன்ற பணிகள் கணினிமயமாக்கப்பட்டு எளிமையாக்கப்படும். கால விரயம் தவிர்க்கப்படும். ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை இராது.
தற்போதுள்ள தேர்வுத்தாள் திருத்தும் முறையில் ஒரு சில இடங்களில் மதிப்பெண்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க இம்முறை துணைபுரியும்.
இதை நடைமுறைப்படுத்தும்போது மாணவர்களிடையே கட்டுரை எழுதும் பழக்கம் இல்லாமல் போய்விடும் என்பது போன்ற கருத்துகள் எழ வாய்ப்புண்டு. அவற்றை அகமதிப்பீட்டுக்கு 25 விழுக்காடாகவோ 40 விழுக்காடாகவோ ஒதுக்குவதன் மூலமாக அந்தந்தக் கல்வி நிறுவனங்களே பத்தி வாரியாக, கட்டுரைவாரியாக எழுத்துத் திறன்களை மதிப்பிடலாம்.
பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாது உயர்கல்வித்துறையிலும் இத்தகைய விடைத்தாள் திருத்தம் முறையில் மாற்றம் இருந்தால் தமிழக அரசின் கல்வித்துறை இந்தியாவுக்கே, ஏன் உலகிற்கு வழிகாட்டும் வகையில் சிறந்து விளங்கலாம்.

கட்டுரையாளர்:
இளையபட்டம், பேரூராதீனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com