வன்முறைக்கு மண்வாசனை கிடையாதா?

பாம்புக்கு நம்மைப்போல் பாத்தி கட்டி, கீரை விதைத்து, அதன் மூலம் உண்டு உயிர் வாழத் தெரியாது. அதனால், தவளையைத் தின்று வாழ்கிறது.
வன்முறைக்கு மண்வாசனை கிடையாதா?
Updated on
3 min read

பாம்புக்கு நம்மைப்போல் பாத்தி கட்டி, கீரை விதைத்து, அதன் மூலம் உண்டு உயிர் வாழத் தெரியாது. அதனால், தவளையைத் தின்று வாழ்கிறது. பருந்திற்கு வெண்டைக்காய், கத்தரிக்காயைப் பயிரிட்டு, வாழத்தெரியாது. அதனால், பாம்புகளைக் கொத்திக் கொன்று வாழ்கிறது.
சிங்கத்திற்குப் பொன்னியரிசி, பாசுமதி என்று வேளாண்மை செய்து வாழத் தெரியாது. அதனால், ஆடு மாடுகளை அடித்துத் தின்று வாழ்கிறது. மனிதனுக்கு அனைத்தும் தெரியுமே, அப்படியிருக்கையில் விலங்குகளைப்போல் ஏன் மனிதனை மனிதன் கொன்று வாழ்கிறான்?
இங்கிலாந்து மான்செஸ்டரில் ஒரே இரவில், சல்மான் அபேதி என்பவன் மனித வெடிகுண்டாகி, 22 பேரைக் கொன்று குவித்திருக்கிறான். 'மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே அது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலே' என மருதகாசி பாடியது இன்றைக்கும் சத்தியசாட்சியாய் ஒலிக்கின்றதே!
மே 22-ஆம் நாள், இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் அமெரிக்க நாட்டு பிரபல பாப் இசைப்பாடகி ஆரியானா கிராண்டின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அந்த அரங்கம் 21,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து மகிழ்ந்து கேட்கக்கூடிய அரங்கம். பாப் இசை என்பதால், சிறுவர் சிறுமியர் கணிசமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
இரவு 10.35 மணிக்கு நிகழ்ச்சி முடியப்போகின்ற நேரத்தில், அங்கே மனித வெடிகுண்டாகி வந்த சல்மான் அபேதி எனும் 22 வயது இளைஞன், மடியில் கட்டிக் கொண்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டான். 22 பேர் (சிறுவர்கள் உட்பட) களப்பலி ஆயினர். 59 பேர் படுகாயமடைந்தனர்.
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், 'இதுவொரு தனி நிகழ்ச்சியன்று. செப்டம்பர் 11-ஆம் நாள் நியூயார்க்கிலே தகர்த்தெறியப்பட்ட பென்டகன் கட்டடம்(Twin buildings)சர்வதேசக் கட்டடங்களின் தொடர்ச்சிதான்' என்றார். வாடிகனிலிருக்கும் போப், 'இது மிகப்பெரிய காட்டுமிராண்டித்தன செயல்' என்றார்.
இங்கிலாந்து மண்ணிலே பிறந்த சேக்ஸ்பியர், 'இசையை இசைக்கத் தெரியாதவனும், அதனை ரசிக்கத் தெரியாதவனும், நயவஞ்சகர்கள், கொலையும் செய்வார்கள்' என்றார். அந்த மான்செஸ்டர் மண்தான், இன்று இரத்தவாசல் ஆகியிருக்கின்றது. வன்முறைக்கு மண்வாசனையே கிடையாதா? இந்தப் பயங்கரவாதத்திற்கு இசுலாமிய அகிலம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் சுமார் 600 பயங்கரவாத செயல்களைச் செய்திருப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அடிப்படைவாதிகள் தெரிவித்திருக்கின்றனர். ஐந்து கடமைகளில் புனிதமான ஒன்று நோன்பு. உயிரிரக்கத்தை உலகத்திற்குப் போதிக்கும் நோன்புக் காலத்தில், மான்செஸ்டரை மரணக்கிணறு ஆக்கலாமா?
2015-ஆம் ஆண்டு குவைத்திலிருந்த சியா பிரிவினர் தொழும் மசூதியை புனித மாதத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மனிதவெடிகுண்டு மூலம் தகர்த்தெறிந்தனர். அங்குத் தொழுது கொண்டிருந்த 26 இசுலாமியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். வணக்கம் சொல்லும்போதே 'சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' எனக் குவிகின்ற கரங்கள், கந்தகத்தையும் வெடிமருந்துகளையும் ஏந்தலாமா? வன்முறைக்கு மண் வாசனையே கிடையாதா?
பயங்கரவாதம் இன்று நேற்றன்று, தங்ககாலம் என்று சொல்லுகின்ற சங்கக் காலத்திலிருந்தே தொடர்கின்றது. அக்காலத்தில் 'ஆறலைக்கள்வர்' என்றொரு பயங்கரவாதக் கூட்டம் இருந்தது. வெளிநாடுகளில் வணிகம் செய்து பொருளீட்டிக் கொண்டு வரும் வணிகர்களிடம் இருக்கும் பொருளைக் கொள்ளை அடிப்பதோடு, அவர்களைக் கொன்று விடுவர்.
அவர்களைப் பற்றிப் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 'கொடும் புலியின் பார்வை போன்று பிறர்பால் அச்சம் தோன்ற பார்ப்பவர் கொடுமையே உருவானவர். கையிலே வில்லேந்தி குன்றுகளின்மேல் நின்று, அவ்வழியே வருபவர்களைக் கொல்லுவர். கொன்றபின் அவர்களின் பொருளைக் கொள்ளையடிப்பர்.
இரக்கம் சற்றேனும் இல்லாதவர், எதிர் வருபவர்களிடம் கொள்ளும் பொருள் ஏதேனும் இல்லையாயினும், அவர்களுடைய உயிரைக் கொன்று, அந்த உடலங்கள் துள்ளுவதைக் கண்டு மகிழ்வர். அவர்களுடைய கொடுமைக்குப் பறவையினங்கள்கூட அஞ்சி அங்குப் பறக்கமாட்டா' எனக் கலித்தொகையில் (பாலைக்கலி 3-ஆம் பாடல்) பாடுகின்றார்.
1739-ஆம் ஆண்டு பெர்சிய மன்னனாகிய நாதிர்ஷா இந்தியாவிற்குள் நுழைந்து, செங்கோட்டைக்குள் தீ வைத்தான். அங்கிருந்த மயிலாசனத்தையும், கோகினூர் வைரத்தையும் கொள்ளையடித்தான். ஷாஜகானாபாத்தில் உள்ள அனைவரையும் கொன்று குவித்தான். தோற்றுப் போன மகாத்மாஷா, நாதிர்ஷா முன்னர் கூனிக்குறுகி நின்று, 'மேன்மை தங்கிய நாதிர்ஷா ஓர் உயிரைக்கூட விடாமல் கொன்று குவித்துவிட்டீர்கள்.
இனிக் கொல்ல வேண்டுமென்றால், இறந்துபட்டவர்களின் சடலங்களை எழுப்பி, உயிர் கொடுத்து, மீண்டும் அவர்களைக் கொலை செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் இரத்தவெறியைத் தணித்துக் கொள்ளலாம்' எனக் கூறியதிலிருந்து, அன்றிருந்த பயங்கரவாதத்தின் உச்சக்கட்டத்தை நாம் அறியலாம்.
இந்திராகாந்தி அம்மையார் தலைமையமைச்சராக இருந்தபோது சம்பல் பள்ளத்தாக்குத் தீவிரவாதிகள் நடத்திய உயிர்க்கொலைகள், எண்ணி பார்க்க முடியாத ஒன்றாகும்.
மத்தியப் பிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்கு ஆயிரக்கணக்கான மைல்களைக் கொண்டது. அதன் முழு ஆதிக்கமும் கொள்ளைக்காரக் கும்பலின் வசம்தான் இருந்தது. ஒருநாள் ஒரு குக்கிராமத்திற்குள் புகுந்த கொள்ளைக்காரர்கள் அங்கிருந்த பழங்குடி மக்களை மிரட்டி, ஒரு மைதானத்தில் தங்கச் செய்தனர்.
அக்கூட்டத்தின் தலைவன் தாசில்தார் சிங், அங்கிருந்த ஓர் இளைஞனைப் பிடித்துக் கொணர்ந்து, 'நீ தானே காவல்துறைக்கு உளவு சொன்னவன். சொல்' எனச் சாட்டையோடும், சாட்டை போன்ற சொற்களோடும் அவனை நடுநடுங்கச் செய்தான்.
அந்த இளைஞன் 'ஐயோ, எனக்கு ஒன்றுமே தெரியாது' எனக் கெஞ்சினான். உண்மையில் அந்த இளைஞன் ஒன்றும் தெரியாத அப்பாவி. எனினும் ஏன் அவனைக் கொடுமைப்படுத்தினார்கள் என்றால், மக்களிடத்தில் பீதியை உருவாக்கி, யாரும் காவல்துறைக்கு உளவு சொல்லக்கூடாது என்பதற்காகத்தான், அவனைப் பலிகடா ஆக்கினர்.
அந்த இளைஞனை அங்கிருந்த மரக்கிளையில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டனர். பின்னர் ஒரு கத்திரிக்கோலால் அவன் சதையை அங்குலம் அங்குலமாக வெட்டி, காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் விட்டெறிந்தனர். உடம்பெல்லாம் இரத்தம் சொட்டச் சொட்ட அந்த இளைஞன் மரண வேதனையில் துடித்தான். கூடியிருந்த மக்கள் ஓவெனக் கதறி அழுதனர்.
இருந்தும் அந்தக் கொள்ளைக் கூட்டத்தலைவன், அந்த இளைஞனை விடுவதாக இல்லை. தலைகீழாகத் தொங்கும் அந்த இளைஞன் தலைக்குக் கீழ் கட்டைகளை அடுக்கி, தீ வைத்தான். அந்த நல்லுயிர் துடிக்கத் துடிக்க மடிவதைப் பார்த்து ஊர் அழுதது. அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தாசில்தார் சிங், இனி யாராவது உளவு சொன்னால், அவர்களுக்கும் இதே கதிதான் என எச்சரித்துப் போனான். வன்முறைக்கு மண் வாசனை என்பது கிடையாதா?
இந்தியாவின் காலடிக்குக் கீழே இருக்கும் நாட்டில் நடந்த பயங்கரவாதம் இரத்தத்தை உறைய வைக்கக்கூடியதாகும். 19.01.1986-இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருதயபுரம் தேவாலயத்திலிருந்த மூன்று வேலையாட்களை, வெளியே இழுத்து வந்து சிறப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து 21 தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர்.
ஜனவரி 25-இல் கிளிநொச்சி இரயில் நிலையத்தில் காத்திருந்த தோட்டத் தொழிலாளர்கள் (பெண்கள், குழந்தைகள் உட்பட) 11 பேரை 50 இராணுவத்தினர் படுகொலை செய்தனர். பிப்ரவரி 19-இல் அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம் பகுதியில், நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த உழவர்கள் 100 பேரை, அவர்களுடைய அரிவாளைக் கொண்டே தாக்கி, பூட்ஸ் காலால் மிதித்து, கால்களைக் கட்டிவைத்து, சுட்டுக்கொன்று, நெற்கதிர்களோடு எரித்து மகிழ்ந்தது இராணுவம். வன்முறைக்கு மண்வாசனை கிடையாதா?
தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்வதுபோல், இந்தியா தலைமாட்டிலே பாகிஸ்தானைக் குடிவைத்திருக்கிறது. எல்லா நாட்டிலும் இராணுவம் உண்டு. ஆனால், பாகிஸ்தானில் இராணுவத்திடம் நாடு இருக்கிறது.
எப்போதும் இல்லாத அளவிற்குப் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உற்பத்தி செய்து, காஷ்மீருக்குள் பயங்கரவாத செயலில் ஈடுபடுத்தி வருகிறது. இதுவரை பயங்கரவாதத்திற்குப் பலியானவர்கள் 30,000 பேர் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் - இந்தியா எல்லைக்கோடாகிய வாகாவிலே ஆறு எல்லை காக்கும் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக, ஆறு பயங்கரவாதிகள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அப்பாவியாக வரும் இந்தியர்களைச் சுட்டுக் குவிப்பதுதான், அவர்களுடைய வேலை.
சமீபத்திலே இரண்டு உயர்பதவியிலுள்ள இராணுவ வீரர்களை, அநியாயமாகக் கொன்று, அவர்களுடைய தலைகளையும் துண்டித்துத் தலை வேறு, முண்டம் வேறாக அனுப்பியிருக்கின்றனர், அந்த அநாகரிக மனிதர்கள். ஹிட்லர் காலத்தில்கூட நடந்திராத, இராணுவ அவமரியாதை. இது அராஜகமும் ஆகும்.
பயங்கரவாதம் எல்லா மண்ணிலும் செழித்து வளருகிறது. புத்தன் வந்த மண்ணிலும் இரத்தவாடை ஒவ்வொரு நாளும் வீசுகின்றது. நாடாளுமன்ற சனநாயகத்தை, உலக நாடுகளுக்குச் சொல்லிக் கொடுத்த இங்கிலாந்தில் சிறுகதையாக ஆரம்பித்துத் தொடர்கதையாகத் தொடர்கிறது, பயங்கரவாதம். கன்னி மாதாவை மார்பிலே சுமந்திருக்கின்ற போதகர்கள் பூமியிலும், அரக்கத்தனமான பயங்கரவாதம் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.
பயங்கரவாதத்தைக் கையிலே எடுப்பவர்கள், பயங்கரவாதத்தாலேயே கொல்லப்படுவர். நூறு ஆண்டுகள்வரை போரைக் கையிலே எடுக்காத இங்கிலாந்து, அரசன் எட்வர்டு மூலம் 1280-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் மீது போர் தொடுத்தது.
ஸ்காட்லாந்தின் மாவீரன் வில்லியம் வாலஸ் உழைக்கும் வர்க்கத்தை ஒன்று திரட்டி, 1297-ஆம் ஆண்டு அதுவரை சூரியன் அஸ்தமிக்காத இங்கிலாந்தை, முதன்முறையாக அஸ்தமிக்க வைத்தான்.
ஆணவமும் எதேச்சதிகாரமும் படைத்த இங்கிலாந்து, வஞ்சக வலைவீசி, போர் தர்மங்களை எல்லாம் கடந்து, மாவீரன் வாலசை கைது செய்து, நடுத்தெருவில் தூக்கிலிட்டது.
என்றாலும், அவனை முழுமையாகச் சாகடிக்காமல் கீழே இறக்கி, அவனை அங்கம் அங்கமாக வெட்டி, நாலு திசைகளிலும் தோரணம் கட்டித் தொங்கவிட்டது. அன்றைக்கு விதைத்த விதையை, இன்றைக்கு மான்செஸ்டரிலே அறுவடை செய்கிறது இங்கிலாந்து.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com