விவசாயம் காப்போம்

ஒரு பிடி சோறுக்காக வாழ்க்கைப் பந்தை உதைத்து விளையாடுகிறோம். இந்த உயிர் காக்கும் உணவுப்பந்து நம்மை மிரட்டுகிறது.
Updated on
2 min read

ஒரு பிடி சோறுக்காக வாழ்க்கைப் பந்தை உதைத்து விளையாடுகிறோம். இந்த உயிர் காக்கும் உணவுப்பந்து நம்மை மிரட்டுகிறது. "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதியார்.
விவசாயம் பொய்த்துப் போய் இனி நெல்பயிர் விளையுமா என்ற பயம் வந்துவிட்டது. இருப்பில் இருக்கும் அரிசி எத்தனை நாளைக்கு நமக்குப் பயன் தரும்? இப்படி பயமுறுத்தும் உணவுப் பிரச்னை தலைக்குமேல் தொங்கும் கத்தி போல இருக்கிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் தற்போது ஏற்பட்டு வரும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
ஏற்கெனவே ரேஷனில் வழங்கப்படும் அரிசியே பிளாஸ்டிக் போன்றுதான் உள்ளது. அதை நம்பி ஏழைகள் வயிற்றுப்பாட்டை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் நிலையில் தமிழக ஆட்சியாளர்களின் நிலையோ மோசமாகிவிட்டது.
அவர்களுக்கு விவசாயம் பற்றியோ, உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு பற்றியோ கவலையில்லை. ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.
தமிழகத்தில் தற்போது பேசப்பட்டுவரும் பிளாஸ்டிக் அரிசி பிரச்னையை மட்டுமே பார்ப்பவர்கள், சத்தமின்றி விண்ணைத் தொட்டு வரும் அரிசி விலை உயர்வு பற்றி பேச மறந்துவிட்டார்கள் எனலாம்.
இதுவரை இல்லாத அளவுக்கு சுமாரான அரிசி கிலோ ரூ.35 முதல் விற்கிறது. உயர் ரக அரிசி விலை கிலோ ரூ.50 முதல் வசதிக்கேற்ப விற்கப்படுகிறது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழகத்தில் இருந்துகொண்டு கர்நாடக பொன்னி, ஆந்திர சம்பா என வெளி மாநில அரிசி வகைகளை நாம் வாங்கி சாப்பிடுகிறோம். ஒரு காலத்தில் ஏராளமான பாரம்பரியரக நெல் வகைகளை விதைத்து சாகுபடி செய்த தமிழகம் இன்று அரிசிக்காக தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இப்படியே போனால் பிளாஸ்டிக் போல செயற்கை அரிசியைத்தான் நாம் இனி பயன்படுத்த வேண்டுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஏழைகளுக்கு ரேஷன் கடையில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. இதை வாங்காத நடுத்தர மற்றும் உயர்தர குடும்பத்தினருக்கு அரிசி விலை உயர்வு கவலையை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் பருப்பு, காய்கறி, வெங்காயம் போன்றவை தாறுமாறாக விலை உயர்ந்து பயமுறுத்தின.
இப்போது அரிசி விலை உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் விளைச்சல் குறைவால் உளுந்து. துவரை போன்ற பருப்புகள் விலை உயர்த்தப் பட்டது. ஆனால் அரிசி அப்படியில்லை, தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற தென்மாநிலத்தினரின் உணவே அரிசிதான். இவர்களுக்கு இரண்டாவது விருப்பமாக கோதுமை இருக்கிறது.
பூரி, சப்பாத்தியில் கோதுமை பயன்படுத்தப்படுகிறது. அதிலும் சர்க்கரை நோயாளிகளின் முதல் விருப்பம் கோதுமை பதார்த்தங்கள்தான். ஆனால் 90 சதவீத மக்களின் உணவு அரிசி சாதம். மேலும் காலையில் இட்லி,தோசை போன்ற உணவு வகைகள் விரும்பிசாப்பிடுகின்றனர். இப்போது அரிசி விலை உயர்வு இவர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் பிரச்னை. ஒரு காலத்தில் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை பூமி இப்போது வறட்சி களஞ்சியமாக மாறிவிட்டது. முப்போகம் விளைந்த நிலமெல்லாம் இன்று தாகத்துக்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மாறிவிட்டன.
இதற்கு இயற்கையைப் பழிபோடுவதை ஏற்க முடியாது. காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என தொடரும் பிரச்னையால்தான் இத்தனை கஷ்டம். இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம்தான். ஆறுகளில் கொள்ளை போகும் மணலால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. கிணறுகளில் தண்ணீர் கிடையாது. இதற்குக் காரணம் மணல் கொள்ளைதான்.
தமிழக கனிமவளங்களை வெளிமாநிலங்களுக்கு விற்கின்றனர். இதை தொடர்ந்து செய்வதால் விவசாயம் செய்யமுடியாத நிலை. அண்டை மாநிலங்களின் திட்டமிட்ட அல்லது மறைமுக வீழ்த்தலால் தமிழகத்துக்கு இப்படி ஒரு அவலம்.
காவிரி நீர் தந்துவிட்டால் மெல்ல மெல்ல விவசாயம் பெருகும். வெளிமாநிலங்களிலிருந்து நாம் அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது.
தமிழகத்துக்கு மற்ற மாநிலங்கள் தண்ணீர் கொடுக்க பிரச்னை செய்துவருகின்றன. தற்போது பெருமளவில் ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலிருந்துதான் தமிழக்ததுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு அரிசி அதிகமாக ஏற்றுமதியானது. அது இப்போது குறைந்துவிட்டது. எனவே அண்டை மாநிலங்களிடம் தமிழகம் கையேந்த வேண்டியுள்ளது.
இதை சரிசெய்யவோ, பிரச்னையைத் தீர்க்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நெல்விளைச்சலை பழையபடி தொடர்ந்தால் மட்டுமே அரிசிப் பஞ்சம் தீரும். முதலில் ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைவரும் பெயரளவுக்கு மட்டுமே அரிசியை வாங்குகின்றனர். அதையும் கால்நடைகளுக்குத் தீவனமாக பலர் பயன்படுத்துகின்றனர்.
இன்னும் சிலர் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்று லாபம் பார்க்கின்றனர். இதைக் கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நியாயவிலையில் தரமான அரிசியை தமிழக அரசே விற்கலாம். வகைவகையான கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்கப்படும் அரிசியை இன்னும் எத்தனை நாளைக்கு வாங்க முடியும்?
அரசியல் ரீதியாக விவசாயப் பிரச்னைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com