

இந்திய பொதுத்துறை வங்கி வரலாறு ஒரு முக்கிய கட்டத்தை கடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. நோயாளியை, உயிர்ப்பிக்க பல விதமான சிகிச்சை முறைகள் பின்பற்றப்படலாம். அவற்றைத் தாங்கி கொண்டு பிழைத்து எழுவதற்கான பலம், அந்த நோயாளிக்கு இருந்தால்தால்தான், சிகிச்சை பளனளிக்கும்.
அதே போல், சமீபத்திய அவசர சட்டத்தின் மூலம், வங்கி வாராக்கடன் வசூலில் தனக்கு அளிக்கப்பட்ட கூடுதல் அதிகாரங்களை சோதனை முறையில் ரிசர்வ் வங்கி செயல்படுத்த துவங்கி இருப்பது வங்கிகளுக்கு அளிக்கப்படும் ஒரு மாற்று சிகிச்சை முறை என்றுதான் தோன்றுகிறது.
இம்மாதிரி மாற்றி, மாற்றி சோதனை செய்யப்படும் சிகிச்சை முறைகளை மூலதன பலமிழக்காமல் எதிர் கொள்ள வங்கிகளால் முடியுமா என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கேள்வியாகும்.
முழு உடல் பரிசோதனைக்கு பிறகு, அதிகம் பழுதுபட்ட உறுப்புகளை சீர் செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதுபோல், வங்கிகள் சேமித்து வைத்திருக்கும் 6 லட்சம் கோடிக்கு மேலான வாரக்கடன் எனும் நோய் திசுக்களின் ஒரு பகுதியை வெட்டி எடுக்கும் முயற்சியை ரிசர்வ் வங்கி தற்போது துவங்கியுள்ளது.
வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை நீண்ட காலமாக திருப்பி செலுத்தாத கடனாளிகளின் பட்டியலை ஆராய்ந்த ரிசர்வ் வங்கி, அவற்றில் 12 கணக்குகளை தங்கள் முதல் கட்ட நடவடிக்கைகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
இந்த கணக்கு ஒவ்வொன்றிலும், நிலுவையில் இருக்கும் வாராக்கடன் தொகை 5,000 கோடி ரூபாய்க்கு மேலாகும். பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் பரப்பில், இந்த பன்னிருவர் சுமார் 25 சதவீதத்தை (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) ஆக்கிரமித்திருக்கின்றனர்.
பூஷன் ஸ்டீல், லான்கோ இன்ஃப்ராடெக், எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் பவர், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஆம்டெக் ஆட்டோ, மொன்னத் இஸ்பத், எலெக்ட்ரோ ஸ்டீல், எரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங், ஜெய்பீ இன்ஃப்ராடெக், ஏ.பி.ஜி. ஷிப்யார்ட், ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் ஆகிய தொழில் நிறுவனங்கள் சார்ந்த வாராக்கடன்கள் இந்த சோதனை பட்டியலில் அடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரும்பு, கட்டமைப்பு, ஜவுளி உற்பத்தி போன்ற துறைகளை சார்ந்த இந்த நிறுவனங்களில் பல தற்போது முழுவீச்சுடன் செயல்படவில்லை.
உலக மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மந்த நிலை, நிர்வாகத் திறமை குறைபாடுகள், நுகர்வோரின் பொருள் நாட்டங்களில் மாற்றம், ஆரோக்கியமற்ற தொழில் போட்டி, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களின் விலை ஏற்றம், மலிவு விலையின் இறக்குமதி செய்யப்படும் உற்பத்தி பொருள்கள், சுற்று சூழல் விதிகளில் மாற்றம், நிலம் கையப்படுத்துவதில் தீர்க்க முடியாத சிக்கல் ஆகிய காரணிகள் தொழில் கூடங்களின் தொடர் நலிவிற்கு முக்கிய காரணங்களாக பட்டியலிடப்படுகின்றன.
இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, முன்னிலைப்படுத்தப்படவேண்டிய ஒரு முக்கிய காரணம், வங்கிகளால் வழங்கப்பட்ட கடன், தொழிலுக்கு பயன்படுத்தப்படாமல், உரிமையாளரின் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தப்படுவதாகும் (Diversion of funds).
திரும்ப செலுத்துவதற்கான வருமானத்தை ஈட்டாத கடன் தொகை பெரும்பாலும் வாராக்கடனாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இம்மாதிரி குறைபாடுகளைக் கண்டுபிடித்து, தக்க தருணத்தில் நடவடிக்கை எடுக்கும் திறமையை வங்கிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இக்கடன்கள் அனைத்தும், வங்கிகளின் கூட்டமைப்பு கடன் திட்டத்தின் கீழ் (Consortium advances) வழங்கப்பட்ட கடன்களாகும். இம்மாதிரித் திட்டத்தில், தொழில் நிறுவனங்களுக்குப் பெருந்தொகை கடன்களை வழங்கும்போது, ஒரு வங்கியின் தலைமையில், பல வங்கிகள் கடன் தொகையைப் பங்கிட்டு கொள்ளும். அதே விகிதத்தில், பிணைய சொத்துகளும் கடன் வழங்கும் வங்கிகளிடையே பொது பங்கீட்டுக்குள்ளாகும்.
பிணைய சொத்துகள் என்பவை, ஆபத்து காலத்தில், கடன் வழங்கும் நிறுவனங்கள், சட்டப்படி சொத்துகளை விற்று, கடனை வசூலிக்க உறுதுணையாக நிற்க வேண்டும். ஆனால், அந்த வரம்புக்குள் கொண்டு வரமுடியாத சொத்துகள், ஏட்டு சுரைக்காய் போன்றதுதான்.
பெரும் கடன் தொகையை கபளீகரம் செய்துவிட்டு நிற்கும் நிறுவனங்களின் சொத்துகளும் அதே நிலையில் இருப்பதாகத்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில நிறுவனங்களின் தேவைக்காக, பிரத்தியேகமாக வடிவைக்கப்பட்ட இயந்திரங்கள் (Specialized machinery) போன்ற சொத்துகளை விற்று பணமாக்குவது(Monetization of assets) என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை.
இம்மாதிரி நிறுவனங்களின் பெயரில் நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களுக்கான முழு ஒதுக்கீடுகளை(Provision for bad debts) லாபத்திலிருந்து எடுத்துவிட்டு, அக்கடன்களை வசூலிக்க, வருடக்கணக்காக வங்கிகள் வரிசையில் காத்து நிற்கின்றன.
அந்த நிறுவனங்களில் எஞ்சியிருக்கும் சொத்துகளை மேற்பார்வையிட்டு பாதுகாத்தல், அவற்றை மதிப்பீடு செய்தல், விலை பேசுதல் ஆகியவற்றிற்கான தனி திறமையும், அதற்கான ஆள் பலமும் கடன் வழங்கிய வங்கிகளிடையே இல்லை என்பதுதான் நிதர்சனமாக உண்மையாகும்.
வங்கி நிர்வாகத்தால் மேற்கொள்ள முடியாத நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி எடுத்து செயல்படுத்த ஆரம்பித்திருப்பதை ஒரு நல்ல முன்னேற்ற நடவடிக்கையாக கருதலாம்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், நீண்ட காலமாக பெரும் கடன் தொகையை திருப்பி செலுத்தாத பன்னிரெண்டு தொழில் நிறுவனங்கள் சோதனை அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் முதல் கட்ட சிகிச்சைக்கு தேர்வாகி உள்ளன.
தேர்வின் அடிப்படையில், இந்த நிறுவனங்களைப் பற்றிய முழுவிவரங்கள், வணிக நிறுவனங்களின் தேசிய சட்ட தீர்ப்பாயத்திற்கு (National company law tribunal) கடன் வழங்கிய வங்கிகளால் உடனடியாக தெரிவிக்கப்படவேண்டும்.
ரிசர்வ் வங்கியின் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிய வங்கிகளின் கூட்டமைப்புகள் (Joint lenders' forum) அண்மையில் அவசரமாக கூடி, தீர்ப்பாயத்துடன் தகவல்களை பகிர தீர்மானங்களை நிறைவேற்றி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவல்களின் அடிப்படையில், நிறுவனங்கள், திவால் சட்டத்திற்கு(Insolvency and bankruptcy code 2016) உட்படுத்தப்படும். திவால் சட்டத்திற்குள் நுழைந்த நிறுவனங்களின் நிர்வாகம், கடன் வழங்கியவர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் மேற்பார்வையில் நடக்க ஆரம்பிக்கும்.
நலிவுற்ற தொழிலை செப்பனிட்டு, அதை வேறு யாருக்காவது விற்று கடனை வசூலிப்பது உள்பட பல சாத்தியக்கூறுகளை இந்த நிபுணர் குழு, ஆராய்ந்து, ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்க்கமான முடிவை எட்டவேண்டும். அதற்குள் அது சாத்தியமாகவில்லை என்றால், மேலும் மூன்று மாதங்கள் கால நீடிப்பு வழங்கப்படும்.
அந்த காலநீட்டிப்பின் முடிவில், நிறுவனத்தின் மீது, திவால் நடவடிக்கைகள் பாய்ந்து, அவற்றின் சொத்துகள் கையகப்படுத்தப்படும்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்த புதிய வழிமுறைகள் எளிதாக தெரிந்தாலும், இதுதான் முதல் பரிசோதனை என்பதையும் சொல்ல வேண்டும்.
வங்கிகளின் சொத்து பிணைய ஆவணங்களின் வலிமை, எஞ்சியிருக்கும் சொத்துகளின் தரம் மற்றும் அவற்றின் மதிப்பீடு, கடனாளிகளின் ஒத்துழைப்பு, அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு ஆகிய காரணிகள் தற்போது சோதனை கட்டத்திலேயே நிற்கின்றன. சோதனைப் பட்டியலில் இருக்கும் ஒரு நிறுவனம், 'திவாலுக்கு தயார்' என்று அறிவித்து விட்டதாக தகவல் கசிந்துள்ளது.
விற்று பணமாக்குவதற்கான சொத்துகள் அந்த நிறுவனத்திடம் அதிகம் இல்லை என்பது இதன் மூலம் புலப்படுவதால், அவர்களிடமிருந்து கடன் தொகையின் சிறு பகுதியைகூட வசூலிப்பது கடினமாகும்.
'ஒன்றுமே இல்லாததற்கு, மிஞ்சிய ஒரு பகுதியாவது லாபம்தான்' என்ற அடிப்படையில்தான், இந்த சோதனை நடவடிக்கைகளும், அதற்கான கடன் வசூல் பலன்களும் அமையும்.
வங்கி கடன் வசூல் துறையில் பலவித நல்ல தாக்கங்களுக்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்தில்தான், இம்மாதிரி புதிய வழிமுறைகள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. விளைவுகளை ஆராய்ந்து செயல்பட, பன்னிரெண்டு நிறுவனங்கள், முதல் கட்ட சோதனையில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. நிறை, குறைகள், செயல்பாடுகளின்போதுதான் வெளிப்படும்.
கடந்த காலங்களில், வங்கிகள் தாங்கள் வழங்கிய கடனை வசூலிப்பதில் போதிய கவனம் செலுத்தாததன் காரணமாகத்தான், இம்மாதிரி அதிரடி நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால் இது 'தும்பை விட்டு வாலை பிடிப்பது' போன்ற நடவடிக்கைதான்.
வசூலாகாத வங்கிக் கடன், வரியாக ஒவ்வோர் இந்திய குடிமகனின் தோள்களை அழுத்தும் வல்லமை படைத்தது என்பதை உணர்ந்து, வங்கி நிர்வாகம், வசூல் துறையில் தங்கள் திறமைகளை வேகமாக வளர்த்துக் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.