துன்பந்தரும் பயணங்கள்

கடந்த சனவரி மாதம் மூன்று நாட்கள் மதுரையிலிருக்கும் உலகத் தமிழ்ச் சங்கம் ஒரு கருத்தரங்கை நடத்தியது.

கடந்த சனவரி மாதம் மூன்று நாட்கள் மதுரையிலிருக்கும் உலகத் தமிழ்ச் சங்கம் ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில் பங்கேற்று உரைவழங்கச் சென்னையிலிருந்து ஒரு பெண் பேராசிரியர் வந்தார். அவரின் உரையும் நடந்தேறியது. முன்னரே பதிவுசெய்யப்பெற்ற பயணச் சீட்டுடன் முன்னிரவில் மதுரை புகைவண்டி நிலையத்துக்கு அப்பேராசிரியை வந்தபோதுதான் அதிர்ச்சி அங்கே காத்திருந்தது.
சல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் திண்டுக்கல் அருகில் ஒரு தொடர்வண்டி மறிக்கப்பெற்றுத் தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாக மதியமே செய்தி வந்தது. அந்தப்பேராசிரியை பதிவு செய்திருந்த தொடர்வண்டி நெல்லைவழியே மதுரைவந்து சென்னை செல்ல வேண்டும்.
மதுரை நிலையத்துக்கு வண்டி வந்து சேரவேண்டிய நேரத்துக்கு அரைமணிக்கு முன்பாகத் தொலைபேசி வழியே குறுஞ்செய்தி ஒன்று வந்தது. மதுரை புகைவண்டி நிலையத்திலும் ஒலிபெருக்கி வாயிலாக ஒரு தகவல் தரப்பட்டது. இரண்டிலும் பொதிந்திருந்த செய்தி ஒன்றுதான். நெல்லை வழியே வரும் புகைவண்டி, விருதுநகர் நிலையம் வந்து, பிறகு மானாமதுரை, காரைக்குடி வழியாகத் திருச்சிராப்பள்ளிக்குச் சென்று சென்னைக்குச் செல்லும் என்பதுவே அந்தச் செய்தி.
மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் வண்டியேறப் பதிவு செய்தவர்கள் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தனர். பேருந்து மூலம் மதுரையிலிருந்து விருதுநகருக்குச் செல்ல நேரமும் இல்லை. இந்தச் சிக்கலுக்கு இந்திய தொடர்வண்டி நிறுவனம் காரணமில்லைதான். ஆனால் இரண்டு முதன்மைச் சிக்கல்களை இவண் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மதுரையில் கூட்டத்திலிருந்த இரயில்வே துறையின் முன்னாள் அலுவலர் ஒருவர் உரத்த குரலில் ஒன்றைத் தெரிவித்தார். இதுபோல ஒருமுறை ஒரு இரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு நின்ற சூழல் ஏற்பட்டது. அப்போது பதிவுசெய்திருந்த, பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகளை ஒரு சிறப்புத் தொடர்வண்டி மூலம் அடுத்த நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சிறப்பு வண்டி வந்து சேர்ந்த பிறகே முன் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வண்டி புறப்பட்டு, மாற்றுவழியில் பயணித்தது.
ஆனால் தற்போது இவ்வாறு விருதுநகருக்கு மதுரையிலிருந்து ஒரு மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. நடைமேடையிலிருந்த அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது முறையாக பதில் கிடைக்கவில்லை. தொடர்வண்டித் துறையின் மெத்தனப் போக்கை இது காட்டுவதாகப் பலர் முழங்கக் காணமுடிந்தது.
இன்று தொடர்புக் கருவிகள் அருமையாகப் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. மதியத்திலேயே மாற்றுவழி என்பது உறுதிப்பட்டிருக்கிறது. குறைந்தது இரண்டுமணி நேரத்துக்கு முன்பாகவாவது பயணர்கட்குச் செய்தியை அனுப்பியிருக்க வேண்டும். அதையும் செய்யாமல், விருதுநகருக்குப் பயணர்களை எந்த வழியிலாவது அழைத்தும் செல்லாமல் நடுவீதியில் நிற்கவைத்த பெருமை தொடர்வண்டித் துறைக்கே உரியது.
முதல்நாள் சென்னையிலிருந்து வந்ததுபோலவே மறுநாள் இரவும் பயணத்தை மேற்கொண்டு அடுத்தநாள் காலையில் கல்லூரிப் பணிக்குச் செல்ல எண்ணிய பெண் பேராசிரியர் திகைத்தார். இரவு விடுதியில் தனித்துத் தங்கவேண்டிய சூழல், மூன்றாம் நாளுக்கான மாற்று ஆடையும் கைவசமில்லை. யாரை நோவது எனப் புரியாமல் அவர் புலம்பியதைப்போல எத்தனை பேர் அவதிக்கு ஆளாகியிருப்பார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது குறிப்பு உள்ளம் சார்ந்ததில்லை. ஆனால் பொருளியல் சார்ந்தது. மூன்றாம் வாரத்தில் சென்னையிலிருந்து நெல்லைக்குக் கல்விசார் பணி ஒன்றிற்காக இன்னொரு பேராசிரியர் பயணப்பட வேண்டியிருந்தது. இடக்காப்பும் (தங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ர்ய்) செய்யப்பட்டு இருந்தது. பயண நாளன்று மதியம் தொடர்வண்டிகள் பலவற்றை விலக்கிக் கொண்டதாக ஒரு பட்டியலைத் தொலைக்காட்சி வழியாகவும் பயணர்கட்குக் குறுஞ்செய்தி வாயிலாகவும் புகைவண்டித்துறை அனுப்பியது.
பேராசிரியர் பயணம் செய்யவிருந்த வண்டி இரத்து செய்யப்படவில்லை. ஆனால் திண்டுக்கல் வரைதான் செல்லும் என்ற தகவல் பரிமாறப்பட்டது. பேராசிரியரால் பயணத்தை விலக்கிக் கொள்ளவும் (இஹய்ஸ்ரீங்ப்ப்ஹற்ண்ர்ய்) இயலவில்லை. பயணத்துக்குமுன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பதிவும் கிடையாது. பதிவான பயணச்சீட்டை விலக்கவும் இயலாது. நள்ளிரவில் வேறோர் ஊரிலிருந்து பயணத்தைத் தொடர்வதும் சிக்கலானது.
திண்டுக்கல் வரையில் செல்பவர்களுக்கு எஞ்சிய பயணத்துக்கான தொகை திருப்பித் தரப்படுமா என்றறிய அவர் தொடர்வண்டித் துறையைத் தொடர்புகொண்டார். கிடைத்த பதில் வருமாறு : "தொடர்வண்டித் துறையே வண்டியை இரத்து செய்திருந்தால்தான் பணம் கிடைக்கும். நாங்கள்தான் வண்டி விடுகிறோமே எதிர்பாராத வகையில் பாதியில் வண்டியின் தொடரோட்டம் நிற்பதற்காக எப்படிப் பணம் தரமுடியும்?' பயணத்தின் நிறைவுப் பகுதிக்கு வராமலேயே, பாதிப்பயணத்துக்கு முழுப்பயணத்திற்கான தொகையையும் செலுத்த வேண்டிய தலையெழுத்து அந்தப் பேராசிரியருடையது.
தரைவழிப் பயணச்சிக்கல்கள்தான் இப்படி என்றால் வான்வழிப்பயணச் சிக்கல் மிகப்பெரியது வானைப்போலவே. கடந்த மாதம் 13-ஆம் தேதி பல்கலைக்கழக நல்கைக் குழுவின் (ம.எ.இ) பணி ஒன்றிற்காக அழைக்கப்பட்டேன். பிப்ரவரி 12-ஆம் நாள் மாலை வானவூர்திக்கான பயணச்சீட்டை நல்கைக் குழுவே அனுப்பியிருந்தது. உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு அது.
வானவூர்தி புறப்பட இருந்த நேரத்துக்கு ஒருமணிநேரத்துக்கு முன்பாகவே பயணச்சீட்டுடன் விமானநிலையத்தில் நுழைந்தேன். உள்நுழைவுப் பயணச்சீட்டை (ஆர்ஹழ்க்ண்ய்ஞ் டஹள்ள்) வழங்கவுள்ள இடத்தில் பயணச்சீட்டைக் காட்டியபோது "விமானத்தில் இடமில்லை' என்றனர். "உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டாளருக்கு எப்படி இடமில்லை என்கிறீர்கள்' என்பது என் வினா. "விமான இருக்கைகளின் எண்ணிக்கை எவ்வளவோ அதைவிடக் கூடுதலாகப் பயணச்சீட்டு வழங்குவது வழக்கம். அதனால் மற்றவர்களுக்கு இடம் வழங்கி உள்நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு விட்டன' என்பது அந்த வான்வெளிப் பயண நிறுவனத்தாரின் பதில்.
இப்படிச் செய்வது சரிதானா எனக் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் என்னைப் போலவே பயண உறுதிச் சீட்டுடன் நடுவணரசின் கப்பல் துறையில் பணிபுரியும் மற்றோர் அன்பர் அங்கே வந்தார். நிறுவனத்தாரின் விடையைக் கேட்டு, சற்றே கோபத்துடன் "இருபது நாட்கட்கு முன் பயணச்சீட்டு வாங்கியவர்களை நிறுத்திவைத்துவிட்டு நேற்றைக்கு அல்லது இரண்டு நாள் முன்பு பயணச்சீட்டை வாங்கியவர்களை அனுப்புவது எவ்வகையில் சரியானது? எனக் கேட்டார்.
அங்கும் இங்கும் உலாவியவர்கள் கடைசிவரை அவருடைய கேள்விக்கு விடைதரவே இல்லை.
அடுத்த ஐந்தாம் மணித்துளியின்போது புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியராகவும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலராகவும் பணிபுரிந்துவரும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஐ.அ.ந) ஒருவர் இதே அனுபவத்தைப் பெற்று எங்களுடன் அணிசேர்ந்தார்.
"எனக்கொன்றுமில்லை, உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் பணிக்காகத் தேர்தல் ஆணையம் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. நடுவணரசும் இசைவு தந்து என்னை அழைத்துள்ளது. நான் பயணம் செய்ய உங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை என்றால் இந்த இரு தரப்பாருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று கூறிவிட்டு அங்கே கைகட்டி, அமைதியாக அமர்ந்துகொண்டார்.
சிக்கலில் அழுத்தம் கூடிவிட்டதால் எங்களை அமைதிப்படுத்த அந்நிறுவனத்தார் முயன்றுகொண்டிருந்தபோதே உரிய நேரத்தில் விமானம் புறப்பட்டும் போய்விட்டது.
பலரைக் கெஞ்சி, கூத்தாடி அடுத்த ஒருமணி நேரத்தில் புறப்படும் விமானத்தில் இடம்பெற்றுத் தருகிறோம் எனச் சொல்லி விட்டுப் போனவர்கள் திரும்ப வந்து ஒரே ஒரு இருக்கைதான் கிடைத்தது, உங்களில் யார் போகிறீர்கள் என எவ்விதமான பதற்றமோ, குற்றவுணர்வோ இல்லாமல் - சர்வசாதாரணமாக - கேட்டனர். கப்பல்துறையாளர் பயணத்திற்கு ஆளானார்.
உரிய எண்ணிக்கையைவிடக் கூடுதலாகச் சீட்டுகள் வழங்குவது முறையானதா எனத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் நாங்கள் இல்லை. ஆனால் பதிவு செய்தவர்களின் வரிசைப்படியே நாள் வரிசையாகப்-- பயணர்கட்கு உள்நுழைவுச் சீட்டு வழங்குவதே சரியானது, முறையானது, நேர்மையானது.
எண்ணிக்கை கடந்து சீட்டுகள் வழங்கப்படும்போது தொடர்வண்டித் துறையினர் தருவதுபோலக் காத்திருப்போர் பயணச்சீட்டென (ரஹண்ற் கண்ள்ற்) வழங்கி ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.
ஐந்து மணியளவில் விமானத்துள் இருக்க வேண்டிய நாங்கள் ஒருவழியாக ஒன்பது மணியளவில் விமானத்துள் அனுமதிக்கப்பட்டோம். அந்த விமான நிறுவனம் நாங்கள் வீணாகக் கழித்த நேரத்தைத் திருப்பித்தர இயலுமா? மனத்தளவில் உருவான காயங்களுக்கு மருந்துதான் கொடுக்க முடியுமா?
முறையற்ற பணிகளை இவ்வாறான சில நிறுவனங்கள் எந்த வரன்முறையுமின்றிச் செய்கின்றன. இதனால், அரசுப் பணியாளர்களும் பிற பயணிகளும் சுமந்து நிற்கும் தொல்லைகள்தாம் எத்தனை எத்தனை என எண்ணி வருந்துவதைத் தவிர வேறெதையும் எங்களால் செய்ய இயலவில்லை.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com