தாய்மொழி அழிப்பும் இந்தித் திணிப்பும்

ஆங்கிலேயர்கள் இந்திய பகுதிகளைப் பிடித்துக் கொண்டு ஆட்சி புரிய ஆரம்பித்தக் காலத்தில் சமஸ்கிருத, பாரசீக பள்ளிக்கூடங்களை ஆரம்பித்து வேதம், புராணம், குர்ஆன்தான் கற்றுக் கொடுத்தார்கள்.
தாய்மொழி அழிப்பும் இந்தித் திணிப்பும்
Updated on
4 min read

இந்தியா பழம்பெரும் நாடு. பரந்துபட்டது. பல வகையான நிலப்பரப்புகள் கொண்டது. பல இன, நிற மக்கள் நகரங்களிலும் வனங்களிலும் வாழ்கிறார்கள். அவர்கள் 1,652 தாய்மொழிகளையும், அவற்றின் கிளை மொழிகளையும் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். பல மொழிகளுக்கு எழுத்து இல்லை. சில மொழிகள் எழுதப்படும் மொழிகளாகவும் பேசப்படும் மொழிகளாகவும் இருக்கின்றன.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் இருந்தது. இந்தியா சுதந்திரத்திற்குப் போராடிய காலத்திலேயே பல தேசபக்தர்கள் ஆங்கில மொழியை அடிமைத் தனத்தின் சின்னமாகக் கருதினார்கள். பன்மொழிகள் பேசப்படும் நாட்டில் அந்நிய மொழியொன்று ஆட்சி மொழியாக இருப்பது அவர்களால் சகிக்க முடியாததாக இருந்தது.
ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் சுப்பிரமணிய பாரதியார், இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் பேசும் இந்தி மொழி ஆட்சி மொழியாக வேண்டுமென்று 'இந்தியா' பத்திரிகையில் எழுதிவந்தார். இந்தி மொழி பாடங்கள் நடத்தினார்.
சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த பாலகங்காதர திலகரின் தாய்மொழி மராத்தி. அவருக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். தாய்மொழியும் இந்தியும், சமஸ்கிருதமும் கற்றுக்கொண்டு இருந்தார். அவர் நாடு சுதந்திரம் பெறும்போது ஆங்கில மொழியும் போய்விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டும், எழுதிக்கொண்டும் வந்தார்.
இந்தி மொழியின் மிகப்பெரிய பற்றாளர் மகாத்மா காந்தி. அவர் தாய்மொழி குஜராத்தி. இங்கிலாந்து சென்று ஆங்கிலம் படித்து பாரிஸ்டர் (வழக்குரைஞர்) வேலைக்குப் படித்து வந்தவர். அவரின் ஆங்கிலப் படிப்பு அம்மொழிக்கு அவரை ஆதரவாளராக்கி விடவில்லை. அவர் தீவிரமாக இந்தி மொழி ஆதரவாளராக இருந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல தலைவர்கள் ஆங்கிலம் நன்கு பயின்றவர்கள். அம்மொழி படிப்பால் சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி இவற்றில் ஈடுபாடு கொண்டு உழைத்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியே இருக்க வேண்டும். அந்நியர்களின் மொழி அடிமைச் சின்னம். ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்படும்போது, அவர்கள் மொழியையும் கப்பலேற்றி அனுப்பிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் இந்திய பகுதிகளைப் பிடித்துக் கொண்டு ஆட்சி புரிய ஆரம்பித்தக் காலத்தில் சமஸ்கிருத, பாரசீக பள்ளிக்கூடங்களை ஆரம்பித்து வேதம், புராணம், குர்ஆன்தான் கற்றுக் கொடுத்தார்கள்.
இந்தியாவின் சமூக, கலாசார, இலக்கிய மறுமலர்ச்சியின் தந்தையென போற்றப்படும் ராஜாராம் மோகன் ராய், பிரிட்டிஷ் கம்பெனி சமஸ்கிருதம், பாரசீகம் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் ஏற்படுத்துவதைக் கடுமையாக எதிர்த்தார்.
'அது இந்தியர்களை இருளில் தடுமாற வைத்துவிடும். மேற்கில் ஏற்பட்டுவரும் கலாசார, தொழில் வளர்ச்சியோடு இந்தியர்கள் இணைந்து சென்று முன்னேற்றம் அடைய வேண்டுமானால் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்' என்று அரசுக்கு விண்ணப்பம் போட்டார்.
தனது வீட்டில் ஆங்கில மொழி கற்பிக்க பள்ளிக்கூடம் திறந்தார். சாதி, சமய வேறுபாடுகள் பார்க்காமல் எல்லோருக்கும் ஆங்கில மொழி கற்பிக்க ஆரம்பித்தார். பெரும் திரளான வங்காளிகள் ஆங்கிலம் படிக்க வந்தார்கள். நண்பர்கள், உறவினர்கள், ஜமீன்தாரர்களிடம் நன்கொடைகள் வாங்கி ஆங்கிலப் புத்தகங்களை வெளியிட்டு விநியோகம் செய்தார்.
'ஆங்கிலம் படித்த மிகவும் சாதாரண - எளிய மக்கள் வாழ்க்கை முறை மாறியது. அவர்களின் வறுமை ஒழிந்தது. சமய ரீதியிலும், பொருளாதார முறையிலும், கலாசாரத்திலும் ஒரு பெரிய மாறுதலை கொண்டு வந்திருக்கிறது' என்று எழுதினார்.
ராஜாராம் மோகன் ராய் இடைவிடாது வற்புறுத்தியதன் பேரிலேயே தாமஸ் பாபிங்டன் மெக்காலே 'இந்தியர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும். அது கலாசார ரீதியில் அவர்கள் மனோநிலையை மாற்றி அமைத்துவிடும்' என்று கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கிற்கு 1835-ஆம் ஆண்டில் பரிந்துரை செய்தார்.
மொழி என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. எந்த மொழியிலும் அறிவு கிடையாது. ஆனால் மனித அறிவு மொழி வழியாகவே சொல்லப்படுகிறது. அதோடு மொழியென்பது வாயொலி. அதாவது சப்தம். உலகத்தில் இருக்கும் 7,000 மொழிகளும் ஒலிகளாகவே இருக்கின்றன. எழுத்துகள் கோடுகள்தான் என்று சொல்லி மொழியின் ஒலியில் இசையையும், கோடுகளான எழுத்துகளில் இருக்கும் வனப்பையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
எனவேதான் மனிதர்கள் தாங்கள் கண்டுபிடித்த மொழி மீதும், எழுத்தின் மீதும் மாறாதப் பற்றுக் கொண்டிருக்கிறார்கள். மொழியின் வழியாகவே தாங்கள் அறியப்பட வேண்டுமென்று விருப்பங்கொண்டு இருக்கிறார்கள்.
பழங்காலத்தில் தொலைதூரத்தில் இருந்து நாடு பிடிக்க வந்த சர்வாதிகாரிகள் மக்களின் பேச்சு மொழியாக இருந்து வந்த தாய்மொழிகளைப் பேசவும், அதில் எழுதவும் விடாமல் தடுத்து தங்களது கூட்டத்தின் மொழி ஆட்சிமொழியாக்கிக் கொண்டார்கள். அந்த மொழியையே ஒவ்வொரு குடிமகனும் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பணிய வைத்தார்கள்.
ஆதிக்க மனோபாவம் என்பது பெருங் கூட்டத்தின் பலம். பழங்காலத்தில் ஆயுதங்கள் தூக்கிக் கொண்டு போய் போரிட்டு தங்கள் ஆட்சி, தங்கள் மொழி, தங்கள் சமயம், தங்கள் பண்பாடு என்பதை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
ஜனநாயக சுதந்திர நாடுகளில் வாக்குச்சீட்டு மகத்தான ஆயுதமாகிவிட்டது. அரசியல் கட்சியினர் பெரும்பான்மையான மக்களின் மொழி, சமயம், கலாசாரம் என்பனவற்றோடு சேர்ந்துக் கொண்டு சிறுபான்மையினர் வாழ்க்கையை நிர்மூலமாக்கி விடுகிறார்கள். அதுதான் முன்னூறு ஆண்டுகளாக ஜனநாயக நாடுகளின் சரித்திரமாக இருந்து வருகிறது.
ஜனநாயக நாடென்றால் அது ஒரு மொழி, ஒரு எழுத்து முறை கொண்ட நாடு. ஒரே கலாசாரம், ஒரே நாணயம், ஒரே வரி, ஒரே பாடத்திட்டம் என்பதுதான் வளர்ச்சி முன்னேற்றம் என்பதை முன்னெடுத்து செல்கிறது. அதுவே எல்லா குடிமக்களையும் தேசிய நீரோட்டத்தில் ஒன்றாக இணைக்கிறது.
எனவே தனித்தன்மைகளை விட்டுவிட்டு மகத்தான தேசத்தை நிர்மாணிப்பதில் தங்களையே அர்ப்பணித்து கொண்டு விடுங்கள் என்கிறார்கள்.
இந்தியாவிற்குப் பெரும் பிரச்னையாக இருப்பது பல மொழிகள் இருப்பதுதான். 'அது தேவையே இல்லை. பெரிய நாட்டின் ஆட்சிமொழியான இந்தி மொழியைக் குடிமக்கள் கற்றுக் கொண்டு விடுங்கள். இந்தியைக் கற்றுக் கொண்டால் இந்தியா முழுவதும் மற்றவர்களோடு உரையாடிக் கொண்டு போகலாம்; அங்காடியில் பொருள்கள் வாங்கலாம். ரயில்வே டிக்கெட், விமான பயண அறிவிப்புகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சினிமா பார்க்கலாம். பாட்டுக் கேட்கலாம்' என்று சொல்லப்படுகிறது.
மொழி என்பது தன் அறிவை சபையில் பேசியும், எழுதியும் நிலை நாட்டுவது.
மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள உதவுவது. உயர் கல்வி பெற பயன்படுவது. 'கற்றதனால் ஆன பயன்' என்றார் திருவள்ளுவர்.
இந்திய அரசியல் சாசனம் எழுதிய மகா மேதைகள், சட்ட வல்லுநர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், தேச அபிமானிகள் அனைவரும் நாட்டின் ஒரு பகுதியில் அடர்த்தியாக வாழும் மக்கள் பேசும் மொழியான இந்தி மொழி ஆட்சி மொழி ஆக்கினார்கள். 'பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாகச் செயல்படும். பின்னர் 35 சதவீதம் மக்கள் பேசும் மொழியே இந்தியாவின் ஆட்சியாகும்' என்றார்கள்.
புதிய ஆட்சிமொழி உயர்கல்வி கொடுப்பதற்கு வேண்டிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? புத்தகங்கள் இருக்கின்றனவா? பேராசிரியர்கள் இருக்கிறார்களா? என்பதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
நாட்டின் சட்டம் - ஒழுங்கு, நீதி பரிபாலனம் செய்யும் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் எம்மொழியில் தீர்ப்புகள் வழங்கும் என்ற கேள்விக்கு மழுப்பலான பதில் சொன்னார்கள். அவர் சொல்லாதது ஆங்கிலம் நீடிக்கும் என்பதுதான்.
இந்தியாவில் இருந்து ஆங்கிலத்தை வெளியேற்றி, சுதேசி மொழியும், ஒரே ஆட்சிமொழியுமான இந்தி மொழியைப் பரப்ப, வளர்ச்சியடைய என்ன செய்ய வேண்டுமென பரிந்துரை வழங்க நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அமைத்தார்கள்.
இந்திய ஆட்சி மொழி பற்றிய நாடாளுமன்ற 9-ஆவது நிலைக்குழு 2009-ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டது. 30 உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழுவிற்கு 20 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மற்றவர்கள் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்கள்.
2011-ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் 117 பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை வழங்கியது. காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. பிரதமராக நரேந்திர மோடி வந்தார். கிடப்பில் கிடந்த ஆட்சிமொழி பரிந்துரைகளில் 110 பரிந்துரைகள் செயற்பாட்டிற்கு வருகிறது என்று குடியரசுத் தலைவர் அறிவித்து இருக்கிறார்.
9-ஆவது நாடாளுமன்ற ஆட்சிமொழி நிலைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று, குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி, இதர அமைச்சர்கள், பிரமுகர்கள் இந்தி அறிந்தவர்களாக இருந்தால் இந்தி மொழியில் பேச வேண்டும். தங்கள் அறிக்கைகளை இந்தியில் வழங்க வேண்டும்.
127 கோடி மக்கள் வாழும் நாட்டில் குடியரசுத் தலைவர் பேச்சைக் கேட்டு எத்தனைப் பேர் பொருள் புரிந்து கொள்வார்கள் என்பது பற்றி நிலைக்குழு கவனத்தில் கொள்ளவே இல்லை. பேசுகிறவர்கள் பெரிய மனிதர்கள். தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது உங்கள் பாடு. அரசு பொறுப்பு கிடையாது என்பதுதான் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற ஆட்சி மொழி நிலைக்குழு பரிந்துரைகள் இந்தி மொழி தெரியாதவர்கள் பற்றி கவலைப்படவே இல்லை. அதற்கு ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் இந்தி மொழியை ஏற்றி வைக்க வேண்டும் என்ற பேரவாதான் இருப்பதாகத் தெரிகிறது.
ஜனநாயக நாடென்பது பெரும்பான்மையால் ஆளப்படுவது இல்லை. சிறுபான்மையான மொழி பேசுவோர், இரண்டாந்தர, மூன்றாம் தர குடிமக்கள் கிடையாது. ஜனநாயகத்தின் பலம் என்பது சிறுபான்மையினர்களை எப்படி நடத்துவது என்பதில்தான் இருக்கிறது.
9-ஆவது நாடாளுமன்ற ஆட்சிமொழி பரிந்துரைகள் என்பது ஆங்கிலத்திற்கு எதிரானது; இந்தி மொழிக்கு ஆதரவானது என்பது இல்லை. இந்திய தாய்மொழிகள் எல்லாவற்றுக்கும் எதிரானது.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com