அண்மையில் நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் உரையாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது நியாயமா எனும் வினாவுக்கு எல்லாரையும் இந்தியில் உரையாற்றச் சொல்லவில்லையே இந்தி தெரிந்தவர்களை மட்டும்தானே உரையாற்றச் சொன்னோம் என்று பதில் சொல்லுகிறார்கள்.
இந்தி தெரியாத உறுப்பினர்கள் அமைச்சரோ அல்லது வேறு பதவியில் உள்ளவர்களோ இந்தியில் பேசினால் எப்படிப் புரிந்துகொள்ளுவார்?
இந்தி உண்மையில் இந்திய மக்களில் பெரும்பான்மையினரின் தாய்மொழியா என்று பார்ப்போம்.
2001-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 41.03 விழுக்காட்டினரே இந்தி பேசுபவர்கள். இவர்களில் இந்தியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களோ 25 விழுக்காட்டினர் மட்டுமே. ஏனையோர் இந்தியின் வேறு மாறுபட்ட - ஆனால் இந்தியைப் புரிந்துகொள்ளும் கிளை மொழியினர்.
இந்தி அறிந்தவர் நம் நாட்டில் முப்பது விழுக்காட்டினர் என்றே வைத்துக்கொண்டாலும் முப்பது விழுக்காட்டினரின் மொழியை மீதமுள்ள எழுபது விழுக்காட்டினர் மீது திணிப்பது என்ன நியாயமோ தெரியவில்லை.
முதலில் இந்தி இந்தியாவின் பெரும்பான்மையினர் மொழி என்கிற மயக்கத்திலிருந்து வடநாட்டினர் விடுபட வேண்டும்.
இந்தி பேசுவோர் மற்ற தனித்தனி மொழிவாரியான எண்ணிக்கையினரையும்விட அதிகம்தான். அதாவது largest single group தானே ஒழிய, majority அன்று. இந்தியர்கள் இந்தி கற்பது நல்லதுதான். வடக்கே போனால் அது பயன்படும் என்பதால் மட்டுமே. மற்றபடி, அது ஆங்கிலத்தின் இடத்தைப் பிடித்து ஒரே அரசு மொழியாக அரியணை ஏறுவது நமக்கு நல்லதன்று.
ஆங்கிலத்தின் உதவி யில்லாமல் தகவல், தொழில் நுட்பத்துறையிலும், இன்ன பிற விஞ்ஞானத் துறைகளிலும் பெருமளவு முன்னேறியுள்ள சீனா, ஜப்பான், ரஷியா போன்ற நாடுகளிலேயே கூட ஆங்கிலம் கற்கத் தொடங்கியிருக்கும் நிலையில், நாம் அதைப் புறக்கணிக்கலாகுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் ஆங்கிலத்தில் இந்து மதம் சார்ந்த தம் எண்ணங்களைப் பல நூல்களிலும் பதிவுசெய்ததால் இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையை நாம் மறத்தலாகாது. ஆங்கிலம் இன்று உலகத்தின் பொது மொழியாகிவிட்டது. அதை நாம் புறக்கணித்தால் நமக்குத்தான் இழப்பு.
உலகம் மிகவும் சுருங்கிவிட்ட நிலையில் ஆங்கிலத்தின் தேவை இன்றியமையாதது. வெள்ளைக்காரன் எத்தனையோ கொடுமைகளை இங்கே செய்திருப்பினும் அவனால் நமக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம் ஆங்கிலம். தாய்மொழி, இந்தி, ஆங்கிலம் மூன்றையுமே நாம் கற்க வேண்டும்.
வடக்கிலிருந்து பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு வடக்கத்திய அரசியல்வாதி பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் இந்திக்கு ஆதரவாக எழுதியிருந்த கட்டுரையொன்றில், இந்தி படித்தால் தென்னிந்தியர்களுக்கு வடக்கே வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறியிருந்தார், ஏதோ வட மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டமே கிடையாது என்பது போல.
இந்தி படித்தால் வேலை கிடைத்துவிடும் என்றால், வடக்கிலிருந்து தழிழ்நாட்டுக்கு உடலுழைப்புச் செய்யும் தொழிலளர்கள் ஆயிரக்கணக்கில் வருவதேன்?
இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் ஏற்பு வழங்குவதே சரியான அணுகுமுறையாகும். ஒரு குறிப்பிட்ட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அம்மொழிக்காரர்களுக்கு மட்டுமே நலன் பயப்பதாக இருக்கும்.
மொழிவெறிக்கும் மொழிப்பற்றுக்கும் உள்ள வேறுபாட்டை நம் தலைவர்கள் கூடப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொண்டிருந்தால் காஷ்மீர்ப் பிரச்னை பற்றிப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முதல் இன்றைய சுஷ்மா சுவராஜ் வரை ஐ.நா. அவையில் இந்தியில் உரையாற்றுவார்களா?
என்னதான் இருந்தாலும் நேரடியாய்ப் புரிந்துகொள்ளப்பட்டு மனத்தில் பதிவது போல் போல் மொழிபெயர்ப்புக் கட்டுரை உயிரோட்டத்தோடு இருக்குமா? மேலும் ஐ.நா. அவை உறுப்பினர்கள் அதைப் படிப்பார்கள் என்பதற்குத்தான் என்ன உத்தரவாதம்?
ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே ஆட்சிமொழியாக்குவது கண்டிப்பாக இந்திக்காரர்களுக்கு அதிகப் பயனளிக்கும் ஓரவஞ்சனையே. அது காலப் போக்கில் இந்தியாவையே பிளக்கும்.
மொழிவாரியாக இந்தியாவைப் பிரித்த காலகட்டத்தில் தி.மு.க. தலைவர் அண்ணாதுரை இந்திக்கு எதிராய்ப் பேசுகையில் ஒரு கேள்வி கேட்டார்.
'ஸ்விட்சர்லாந்து போன்ற மிகச் சிறிய நாடுகளிலேயே 3 ஆட்சிமொழிகள் இருக்கும்போது மிகப் பெரிய நாடான இந்தியாவில் ஏன் பல மொழிகள் ஆட்சிமொழிகளாய் இருக்கக் கூடாது?' இதுவே அவர் கேட்ட கேள்வி.
ஆங்கிலம் அந்நிய மொழி என்கிற வாதமே தவறானது. எத்தனையோ துறைகளில் அந்நிய நிலைகளைக் கடைப்பிடிக்கும் நாம் மொழி விஷயத்தில் ஏன் தேசியப் பார்வை பார்க்க வேண்டும்?
அனைவர்க்கும் நியாயமும் நன்மையும் வழங்கக்கூடிய ஒன்று அந்நியமாக இருந்தால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? நாட்டுப் பற்று என்பது கடுகளவும் இல்லாத பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழி விஷயத்தில் மட்டும் தேசியம் பார்ப்பது விந்தையானது.
எது எப்படி இருந்தாலும், முப்பது விழுக்காட்டினரின் மொழியை எழுபது விழுக்காட்டினர் மீது திணிப்பது தகுமா? முறையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.