விபத்தைத் தவிர்ப்போம்

தினம்தோறும், பத்திரிக்கைகள் விபத்துகள் பற்றிய செய்திகளைத் தாங்கி வந்தாலும், அச்செய்திகளை நாம் சற்று அலட்சியமாக கடந்து செல்லுகிறோம் என்பதே உண்மை.
Updated on
2 min read

தினம்தோறும், பத்திரிக்கைகள் விபத்துகள் பற்றிய செய்திகளைத் தாங்கி வந்தாலும், அச்செய்திகளை நாம் சற்று அலட்சியமாக கடந்து செல்லுகிறோம் என்பதே உண்மை.
நம் தமிழ்நாட்டில் நிகழும் விபத்துக்கள் குறித்த சில விபரங்களைப் பார்ப்போம்.
ஆண்டொன்றுக்கு 16,000 பேர் சாலை விபத்துகளிலும், 26,000 பேர் இதர விபத்துகளிலும் உயிரிழக்கின்றனர். மேலும், பல விபத்துகள், பதிவு செய்யப்படாமல் விடப்படுகின்றன. அகில இந்தியாவில் நிகழும் விபத்துகளில் சுமார் 15 சதவீத சாலை விபத்துகளும், 6 சதவீத இதர விபத்துகளும் தமிழ்நாட்டில் நிகழ்கின்றன.
மரணம் விளைவிக்கும் விபத்துகள் மட்டுமல்ல, அங்கஹீனம் உள்ளிட்ட பெரும் காயங்கள் ஏற்படும் விபத்துகள், சிறு காயங்களை ஏற்படுத்திடும் விபத்துகள், நிகழத்தவறிய விபத்துகள் என இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது பாதுகாப்பது விதிமீறல்கள் மற்றும் நடைமுறை மீறல்கள் ஆகும்.
விபத்துகள் பற்றிய மேலை நாட்டு ஆய்வு கூறும் முடிவு: உயிரிழப்பு ஏற்படுத்திடும் ஒவ்வொரு விபத்துக்கும் பின்னால் 10 பெரும் மற்றும் 100 சிறு விபத்துகள், 500 நிகழத்தவறிய விபத்துகள், சுமார் 30,000 பாதுகாப்பு விதிமீறல்கள் - அல்லது நடைமுறை மீறல்கள் இருக்கின்றன.
அவ்வடிப்படையில், தமிழ்நாட்டில், தினமும் 110 பேர் விபத்துகளில் உயிர் இழக்கிறார்கள் என்றால், 1,100 பெரும் காயங்கள் அல்லது அங்கஹீனம் ஏற்படுத்தும் விபத்துகளும், 1,000 சிறு காயங்கள் ஏற்படுத்தும் விபத்துகளும், 55,000 நிகழத்தவறிய விபத்துகள், மற்றும் பொதுவான பாதுகாப்பு விதிமீறல்கள் சுமார் மூன்று லட்சம் நிகழ்கின்றன என்றே சொல்ல வேண்டும். இத்தகைய விபரம் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றது.
எந்தவோர் இடத்திலும் - வேலையிலும் அனைவரும் விதிமுறைகளையும் - நடைமுறைகளையும் அனுசரித்து நடக்கும்போது, விபத்துகள் நிகழ்வதில்லை. மாறாக, எவரேனும் அவற்றை மீறும்போது விபத்துகள் ஏற்படுத்தப்படுகின்றன.
பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்கூடங்களில், நிர்மாணப் பணிகளில், பாதுகாப்பு முறையை எவ்வாறு கையாளுகின்றன?
பொதுவாக அங்கு, பாதுகாப்பு - தரம் - காலவரையறை ஆகியவை ஒரு திட்டம் அல்லது பணி என்ற முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக கருதப்படும்.
ஒரு வேலை, பாதுகாப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செய்யப்படும்போது அது தரம் மிகுந்த சேவையை உருவாக்கும். விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், லாபத்தையும் ஈட்டி தரும் என்ற அடிப்படையிலும் அந்நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தொழிற்கூடத்தில் - நிர்மாணப் பணிகளில் நடைபெறும் எந்த வேலையானாலும் அவற்றில் ஏற்படக்கூடிய விபத்துகள் - அவை தவிர்க்கப்படும் முறை - எவரது பொறுப்பு - பயிற்சி மற்றும் உபகரணங்களின் தேவை, பழைய விபத்துகளில் பெற்ற பாடம், போன்ற தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படும். பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பணியிலிருக்கும் அனைவருக்கும் தொடர்ந்த பயிற்சியும் அட்டவணை அடிப்படையில் தரப்படும்.
எல்லா பணிகளுக்கும், தீவிர பரிசீலனைக்குப் பின்னர் வேலைக்கான முன் அனுமதி - work permit - வழங்கப்படும். அதனை பெறுவதற்கு, அப்பணியை செய்பவர்கள் - கண்காணிப்பாளர்கள் ஆகியோர், அப்பணி எவ்வாறு செய்யப்படும் என்ற விரிவான செய்முறையை - work procedure - எழுதித் தந்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பரிசீலனைக்குப் பின்னர் அனுமதி பெற வேண்டும்.
உதாரணமாக 100 கிலோ எடையுள்ள இயந்திரத்தை 100 மீட்டர் நகர்த்துவதாக இருப்பினும் அல்லது ஒரு ராட்சத இயந்திரத்தை துறைமுகத்திலிருந்து 100 கிலோ மீட்டர் கொண்டு செல்வதாக இருப்பினும், விரிவான செய்முறை எழுதப்பட்டு - அனுமதி பெறப்பட வேண்டும்.
இத்தகைய நடைமுறை, அப்பணியினை செய்பவர்கள் மனதில் பாதுகாப்பு என்பது இயல்பாக இயைந்த ஒன்றாக ஆக்கப்படும்; விபத்துகளும் தவிர்க்கப்படும்.
மேலும் இந்நிறுவனங்களின், பாதுகாப்பு குறித்த ஒரு கொள்கை பிரகடனம் இருக்கும், விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து ஒரு குறியீடு - இலக்கு இருக்கும். பெரும்பாலும் - விபத்துகள் இல்லாத நிலையை - zero accident  - என்ற இலக்கை நோக்கி செயல்படும்.
மிக மிக முக்கியமான விஷயம், நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு, நிறுவனத்தில் பணிபுரிவோரின் பாதுகாப்பு குறித்த அக்கறையாகும்.
எனது தொழிற்சாலையில் பணி புரிபவர் அனைவருக்கும் குடும்பம் உள்ளது. வேலை முடிந்து, நாள் இறுதியில் அவர்கள் மகிழ்ச்சியோடு தமது குடும்பத்தினரை சென்று சந்திக்க வேண்டும். எனவே எனது தொழிற்கூடத்துக்குள் சிறு விபத்தும் நிகழாமல் இருக்க உறுதி செய்வேன் போன்ற உணர்வோடு உறுதியளிப்பர். இதனால், அதே அக்கறை - உறுதி அனைத்து அதிகாரிகளுக்கும் ஏற்படும்.
பொதுவாக, அரசுத்துறை நிறுவனங்களில் - போக்குவரத்துக் கழகங்களில் - நெடுஞ்சாலைத்துறையில் இத்தகைய அக்கறையும் உறுதியும் காட்டப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது.
எனது துறையில் விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுவேன் என்று ஒரு அமைச்சரோ, உயர் அதிகாரியோ உறுதியளித்து, அதற்குரிய தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் விபத்துகள் பெருமளவு குறையும்.
ஆனால், இத்தகைய பொறுப்புடைமை (accountability) என்பது இல்லாதிருப்பது ஒரு முக்கியக் குறைபாடு ஆகும்.
லால்பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு, விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்த அமைச்சர் யாரையும் நாம் பார்த்திருக்
கிறோமா?
எனவே, தனியார்துறை - பொதுத்துறை உள்ளிட்ட, எல்லாத் துறைகளிலும், விபத்துகளை தவிர்ப்பது என்பது குறித்த ஆழ்ந்த புரிதலும், அவற்றுக்குரிய செயல் திட்டமும், இடைவிடாத கண்காணிப்பும் ஏற்படுத்தி விபத்துகளை அறவே ஒழிக்க வேண்டும். இந்த இலக்கோடு நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com