பத்துக்கு நூறு

அண்மையில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது பாராட்டத்தகுந்த விஷயமாகும். அதே வேளையில் இதனால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம்.
இத்தனை காலமும் சீமைக் கருவேல மரங்கள் ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களோடு ஒன்றிணைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. இந்த சீமைக் கருவேல மரங்களால் பாதிப்புகள் அதிகம். ஆழமாக வேர்கள் நிலத்தில் ஊடுருவி நீரை உறிஞ்சுவதால் நிலம் வறண்டுவிடுகிறது.
அதேபோல இம்மரங்களால் சுற்றுப் புறங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இது காலம் காலமாக நடைபெற்று வந்தது. திடீரென இந்த மரங்களை வெட்டி அழிப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இம் மரங்களைப் போலவே சவுக்கு, யூகலிப்டஸ் மரங்களின் வேர்களும் மண்ணுக்குள் ஆழமாகச் சென்று நீரை உறிஞ்சுபவைதான்.
எனவே இம்மரங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக தமிழகத்தில் வறண்ட நிலங்களில் அதிகமாக பரவிகிடப்பவை சீமைக் கருவேல மரங்கள். இம்மரங்களினால் காடு அதிகமாக உருவானது. இக்காட்டினால் நிழல் உண்டு.
அதேபோல கருவேல மரங்களின் காய்களை ஆடுகள் உண்டுவந்தன. நிழல் தந்ததுடன் தோட்டம், வயல்வெளிகளுக்கு செலவில்லா வேலிகளை இவை அளித்துவந்தன.
இவற்றால் எந்த பயனுமே இல்லை என்று கூறினால் கிராமவாசிகள் சண்டைக்கு வருவார்கள். காரணம் விறகு, எரிபொருள் போன்ற பலவழிகளில் இவை உதவி வந்தன.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வருவாய் தரும் தொழிலாக இருப்பது கரித்தொழில். இந்த கரியானது சீமைக்கருவேல மரங்களினால் உருவாகுபவை.
இதை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் இக்கரி விற்பனைக்குச் செல்கிறது. இதனால் கணிசமான வருவாயும் கிட்டுகிறது. இப்படி சில வழிகளில் கருவேல மரங்கள் பயன்தருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஊமத்தைச் செடிகள், கருவேல மரக் கன்றுகளை விதைகளாக அமெரிக்காவினர் தூவியதாகவும் சில செவி வழிக் கதைகள் உண்டு.
அதன் சமீபத்திய வடிவம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள். இப்படி இந்தியாவை வறட்சியாக்கி தங்களிடம் கையேந்தவைக்க நினைக்கும் நாடு அமெரிக்கா. இப்படி பல முரண்பாடுகள் நிலவும் வேளையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.
அதேவேளையில் புதர்கள், காடுகளாக மண்டிக்கிடந்த நிலங்கள் இன்று கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு வெறும் திடலாகவே காணப்படுகின்றன. இப்படி வறண்டு கிடப்பதால் நமக்கு என்ன லாபம்? இதனால் என்ன சாதனை செய்துவிட்டோம்? எதுவுமில்லை.
காடுகளை அழிப்பது குற்றமே. அதேபோல கருவேல மரங்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் வேறு மரக்கன்றுகளை நட்டால் என்ன? அத்துடன் பனைமரங்களும் வறண்ட பூமியில் விளைபவை. இந்த மரங்களை வளர்க்க ஏற்பாடு செய்யலாம்.
தண்ணீரின்றி கிடக்கும் இந்த நிலங்களில் மாற்று வழி பயிர்களை விளைவிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். மழைக் காலங்களில் வீணாகும் நீரை சேமிக்கும் வகையில் இப்பகுதிகளில் சிறிய குட்டைகளை அமைக்கலாம். குறைந்த அளவு நீரில் மட்டும் பயிராகும் சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்யலாம். இது தவிர பூங்கா, சிறு தொழில் நிறுவனங்களையும் ஏற்படுத்தலாம்.
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில்தான் பெருமளவில் கருவேல மரங்கள் உள்ளன. அப்படிப்பட்ட இடங்களில் மாற்றுவழிக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது அரசின் கடமை. தரிசுநிலப் பகுதிகளில் மேம்பாடு செய்ய வேளாண் துறையினர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.
எண்ணெய்ப் பனை, எள், கொள்ளு, பேரீச்சை மரங்களை இங்கு வளர்க்க முடியும். இயற்கை வேளாண் விஞ்ஞானியான மறைந்த நம்மாழ்வார் எந்தவித பயன்பாடும் இல்லாத நிலத்தை சிறந்த நிலமாக மாற்றி பயிர்களைச் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தினார்.
அவரின் கொள்கைகளைப் பின்பற்றி இன்று பல இயற்கை வேளாண் நிபுணர்
களும் பல்வேறு முறைகளில் சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர். எனவே காடுகளை வளர்ப்பது, தரிசு நிலங்களை மேம்படுத்துவது, ஏரி, குளங்களைத் தூர்வாருவது போன்ற திட்டங்களின் கீழ் கருவேல மரங்களை அகற்றிய நிலங்களிலும் சாகுபடி செய்ய வழி காணவேண்டும்.
இதற்கு ஓய்வுபெற்ற வேளாண் நிபுணர்கள், சமூக அமைப்புகள், இயற்கை ஆர்வலர்களை ஒன்றிணைத்து அரசு உதவியுடன் புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். அதை செய்யாமல் வெறும் சீமைக் கருவேல மரங்களை மட்டுமே அழித்துவருவதால் பயன் இல்லை.
மேலும் தமிழகம் முழுவதும் மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும். வயது முதிர்ந்த மரங்கள், இடையூறாக உள்ள மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும். அதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுமாறு செய்ய வேண்டும்.
மரங்களை வெட்டுவதில் மின்வாரியத்தை மிஞ்ச ஆளில்லை. மின் கம்பியை அப்பகுதியில்தான் கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் மாற்று வழி தேட வேண்டும்.
பத்து மரங்களை வெட்டுவோர் நூறு மரக்கன்றுகளை நட வேண்டும் என சட்டம் பிறப்பித்தாலும் தவறில்லை. மரங்கள் ஏராளமாக வெட்டப்பட்டு வருவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இப்படி வன பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படாத வகையில் திட்டங்களைச் செயல்படுத்தினால்தான் மழைவளம், நிலத்தடி நீர்மட்டம், வனவளம் சிறக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com