பிரதிகூலமான அனுகூலம்!

அட்வான்டேஜ் ஸ்டாடர்ஜிக் கன்சல்டன்ஸி நிறுவனம் (அட்வான்டேஜ் இந்தியா), சிங்கப்பூரில் செயல்படும் அதன் துணை நிறுவனமான அட்வான்டேஜ் சிங்கப்பூர் ஆகியவற்றிற்கும் முன்னாள் மத்திய அமைச்சர்
பிரதிகூலமான அனுகூலம்!

அட்வான்டேஜ் ஸ்டாடர்ஜிக் கன்சல்டன்ஸி நிறுவனம் (அட்வான்டேஜ் இந்தியா), சிங்கப்பூரில் செயல்படும் அதன் துணை நிறுவனமான அட்வான்டேஜ் சிங்கப்பூர் ஆகியவற்றிற்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து கடந்த ஒன்றரை வருடங்களாகக் கூறி வருகிறேன்.
அட்வான்டேஜ் இந்தியா, அட்வான்டேஜ் சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்களுக்குப் பல்வேறு வழிகளில் கோடிக்கணக்கில் பணம் வந்து குவிந்துள்ளது. அட்வான்டேஜ் நிறுவனத்துக்குக் கார்த்தி சிதம்பரம் மறைமுக உரிமையாளராக இருந்தாரா? அந்நிறுவனம் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததா? இல்லையா? என்பதுதான் நான் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்வி.
அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு மறைமுக உரிமையாளராக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைக் கார்த்தி மறுத்துள்ளார். அவரது தந்தை ப. சிதம்பரமும் அதை வழிமொழிகிறார். அப்படியானால், அவர்கள் ஏன் இதுகுறித்த எனது பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்குத் தொடுக்கத் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
கார்த்தி மீது மே 15-ஆம் தேதி சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது. அதில், 'பீட்டர்-இந்திராணி முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ். ஊடக நிறுவனம், சட்டவிரோதமாகப் பெருமளவில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றதில் தனது தந்தை வகித்த நிதியமைச்சர் பதவியை கார்த்தி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். இதற்குக் கைமாறாக ஐ.என்.எக்ஸ். நிறுவனம், அட்வான்டேஜ் நிறுவனத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் அளித்தது என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு' என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அட்வான்டேஜ் நிறுவனம் முக்கிய ஆதாரமாக உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார்?
ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் முதலீட்டு நிறுவனம் மூலம் கடந்த 2006 மார்ச் முதல் 2011 மே மாதம் வரை அட்வான்டேஜ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட உரிமையாளராக கார்த்தி இருந்துள்ளார். பின்னர், தந்தையின் பதவியைத் தனது தொழில் நலன்களுக்கு கார்த்தி பயன்படுத்தியது குறித்து ஊடகங்கள் விசாரிக்கத் தொடங்கியவுடன் தனது நெருங்கிய நண்பரான மோகனன் ராஜேஷிடம் அந்த நிறுவனத்தின் உரிமையை மாற்றிக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த உண்மையை ஊடகங்கள் கண்டுபிடித்து வெளியிட்டுவிட்டன.
2011-க்குப் பிறகு அட்வான்டேஜ் நிறுவனத்தின் உரிமையாளர்களும், பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பவர்களும் கார்த்தியின் நண்பர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும்தான். அவர்கள் கார்த்தியின் பினாமிகள். கார்த்தி மறைமுக உரிமையாளராக உள்ள நிறுவனத்துக்கு 20 நாடுகளில் சொத்துகள் உள்ளன என்பது வரை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.
அட்வான்டேஜ் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்த கார்த்தியின் பினாமிகள் சி.பி.என். ரெட்டி (கார்த்தியின் நிழல் என்று கூறப்படுபவர்), பத்மா விஸ்வநாதன், ரவி விஸ்வநாதன், பாஸ்கரராமன் ஆகியோர் நிறுவனத்தின் பங்குகளை ப. சிதம்பரத்தின் பேத்தியும், கார்த்தியின் மகளுமான அதிதி நளினி சிதம்பரத்தின் பெயரில் மாற்றி உயில் எழுதியுள்ளனர். பல்வேறு நாடுகளில் அந்த நிறுவனத்துக்கு உள்ள சொத்துகளும் அதிதிக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் 2013 ஜூன் 19-ஆம் தேதி ஒரே நாளில் நடைபெற்றுள்ளது. இதில் கவனிக்கத்த விஷயம் அனைத்து உயில்களுமே இரு பகுதியாக எழுப்பப்பட்டுள்ளது. பினாமிகள் நால்வரும் மிக்குறைந்த அளவு பங்குகளைத் தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு அளித்துவிட்டு, பெரும்பான்மையான பங்குகளை ப. சிதம்பரத்தின் பேத்தி அதிதியின் பெயருக்கு எழுதியுள்ளனர்.
அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு கார்த்திதான் மறைமுக உரிமையாளர் என்பதற்கு பினாமிகள் நால்வர் எழுதிய உயில்களே சாட்சியாக உள்ளன. பெரும்பான்மையான சொத்துகளை கார்த்தியின் மகளுக்கு அளிப்பதாக உயிலில் அந்த நால்வரும் தெரிவித்துள்ளனர்.
அதில், சி.பி.என். ரெட்டி கூறியுள்ள காரணம்: 'மறைந்த டாக்டர் பி. ரங்கராஜன் (கார்த்தியின் மாமனார், சிதம்பரத்தின் சம்பந்தி) எனது நண்பரும், வழிகாட்டியும் ஆவார். அவரது குடும்பம் கடனில் உள்ளதாக அறிந்தேன். எனவே, அந்தக் குடும்பத்தின் மீதான அன்பை வெளிக்காட்டும் வகையில் ரங்கராஜனின் பேத்திக்கு (அதிதி) 3 நிறுவனங்களில் உள்ள எனது பங்குகளை அளிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பங்குகளின் மதிப்பு பல நூறு கோடிகளாகும். இந்தப் பங்குகள் 2008-இல்தான் கார்த்தி குடும்பத்திடம் இருந்து சி.பி.என். ரெட்டிக்கு சென்றது. 2013-இல் கார்த்தியின் மகளுக்குத் திரும்ப வந்துவிட்டது. அதற்கு ஒரு காரணம் கூறப்பட்டிருக்கிறது, அவ்வளவே.
இதே பாணியில்தான் மற்ற 3 பினாமிகளின் உயில்களிலும் அதிதிக்குப் பங்குகளை அளிப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த 4 உயில்களிலுமே அதிதி, ப. சிதம்பரத்துக்கு பேத்தி என்பதும், கார்த்திக்கு மகள் என்பதும் வேண்டுமென்றே குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் உயிலை அமல்படுத்தும் முதன்மையான நபராக கார்த்தியை நால்வரும் நியமித்துள்ளனர். உயில் எழுதிய நபர்களில் ஒருவர் இறந்துவிட்டாலும் அந்தப் பங்குகளை நிர்வகிக்கும் பொறுப்பு சட்டப்படி கார்த்தியிடம் சென்றுவிடும். அந்த அளவுக்கு சட்ட நுணுக்கங்களுடனான புத்திசாலித்தனம் இதில் காணப்படுகிறது.
வழக்கமாக பினாமி பெயரில் உள்ள சொத்துகளை உறுதி செய்வது கடினமாக இருக்கும். ஏனெனில், பினாமி மீது முழுநம்பிக்கை வைக்கும் சொத்தின் உரிமையாளர், அவரிடம் இருந்து சொத்து தனக்கு மீண்டும் கிடைக்க எந்த சட்ட முன்னேற்பாடுகளையும் செய்ய மாட்டார். ஆனால், கார்த்தி விஷயத்தில் அவரது பினாமிகள், கார்த்தி குடும்பத்துக்கு மீண்டும் பங்குகள் செல்லும் வகையில் உயில் எழுதியுள்ளனர். மேலும், 2015-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினரும், அமலாக்கத் துறையினரும் நடத்திய சோதனையின்போது கார்த்தியிடம் இருந்து இந்த உயில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த உயில்களின்படி அட்வான்டேஜ் நிறுவனத்தின் 3 லட்சம் பங்குகள் (60%) கார்த்தி குடும்பத்துக்கு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 லட்சம் பங்குகள் (40%) என்ன ஆனது என்ற கேள்வி இப்போது எழுகிறதல்லவா? அந்தப் பங்குகளை ஆஸ்பிரிட்ஜ் நிறுவனத்தின் மூலம் கார்த்தியின் நண்பர் மோகனன் ராஜேஷ் வைத்துள்ளார். இதன் மூலம் அட்வான்டேஜ் நிறுவனத்தின் முழு உரிமையையும் கார்த்தி - ப.சிதம்பரம் குடும்பத்தினர் பினாமிகளின் பெயரில் வைத்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணையின்போது கார்த்தியின் பங்குகளை வைத்துள்ள பினாமிகள் குறித்த முழு ஆதாரங்களும் கிடைக்கும்.
இந்த விவகாரம் குறித்து கடந்த 2015-ஆம் ஆண்டு செய்தி வெளியானபோது, 'முட்டாள்தனமானது' என்றும் 'நகைப்புக்குரியது' என்றும் ப. சிதம்பரம் விமர்சித்தார். தொடர்ந்து சில ஊடகங்கள் இது குறித்து செய்திகளை வெளியிட்டபோதும் அவர் அமைதியாக இருக்கவில்லை; வழக்கு தொடுக்கப்போவதாகக் கூறினார். ஆனால், சிதம்பரம் அதன் பிறகு அமைதியாகிவிட்டார். இதுவரையில் எந்த வழக்கும் தொடுக்கவில்லை.
2015-ஆம் ஆண்டு கார்த்திக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையும், அமலாக்கத்துறையும் சோதனை நடத்தியபோது அதனை சிதம்பரம் கண்டித்தார். 'மத்திய அரசு என்னைக் குறிவைத்தால் நேரடியாக என் மீது நடவடிக்கை எடுக்கலாம்' என்றார். அதன் பிறகு கார்த்தியின் பினாமி சொத்துகள் குறித்த தகவல்கள் 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளிப்படுத்தப்பட்டபோது, சிதம்பரம் முழுமையாக மெளனித்துவிட்டார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதியின் ஐ.என்.எக்ஸ். நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றதில் கார்த்தி இடைத்தரகராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சராக இருந்த தனது தந்தை ப. சிதம்பரத்தின் பதவியை இதற்காகப் பயன்படுத்தி, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை கார்த்தி பெற்றார் என்பது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் சாராம்சமாகும்.
கார்த்தி மேற்கொண்ட இடைத்தரகர் வேலைக்காக அவரது அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதியின் ஐ.என்.எக்ஸ். நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் அளித்தது. அந்தக் காலகட்டத்தில் கார்த்தி, அட்வான்டேஜ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தார். பின்னர் தனது பினாமிகளின் பெயருக்கு பங்குகளை மாற்றி, அவர்களை தனது மகளின் பெயருக்கு உயில்களை எழுதச் செய்தார். அத்துடன், அந்த உயில்களைத் தன்வசம் வைத்துக் கொண்டார்.
இந்த உயில்கள் தொடர்பான செய்தி பத்திரிகையில் வெளியானபோது, கார்த்தியும், சிதம்பரமும் இதுவரை அதனை மறுக்கவில்லை. வழக்கு தொடுக்கும் தைரியமும் அவர்களுக்கு வரவில்லை. அதற்குக் காரணம், தாங்கள் உருவாக்கிய உயில்கள் மூலம் அனைத்து உண்மைகளையும் அவர்களே ஒப்புக் கொண்டுவிட்டிருப்பதுதான்.
'அட்வான்டேஜ்' என்கிற ஆங்கில வார்த்தைக்கு அனுகூலம் என்று பொருள்.
'டிஸ்அட்வான்டேஜ்' என்பதற்கு பிரதிகூலம் அல்லது பாதகம் என்று பொருள். 'அட்வான்டேஜ்' நிறுவனத்தைத் தனக்கு அனுகூலமாக பயன்படுத்தி வந்த கார்த்தி சிதம்பரமும், அவருக்குப் பின்துணையாக செயல்பட்ட அவரது தந்தையும் அதுவே தங்களுக்கு டிஸ்அட்வான்டேஜாக மாறப் போகிறது என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சட்டப்படி திட்டமிட்டவர்கள் பட்டவர்த்தனமாகத் தெரியும்படியாகவா உயில் எழுதுவார்கள்?
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் எனும் இயற்கை தர்மத்தை ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் மட்டுமல்ல, இதுபோல சட்டப்படி தவறு செய்ய முற்படுபவர்கள் அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும்!

கட்டுரையாளர்:
பொருளாதார, அரசியல் விமர்சகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com