பட்டதாரிகள் படும் பாடு

அரசு மற்றும் வங்கிப் பணிகளுக்கு பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வுக்கான ஐ.பி.பி.எஸ். அமைப்பு


அரசு மற்றும் வங்கிப் பணிகளுக்கு பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வுக்கான ஐ.பி.பி.எஸ். அமைப்பு என பல அமைப்புகள் தேர்வை நடத்துகின்றன. இதில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் மட்டுமே தேர்வுக் கட்டணம் குறைவு.
இந்தத் தேர்வுகளுக்கு தேர்வு மையங்களை எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறார்கள் என்பது புதிராக உள்ளது. ஏற்கெனவே வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், பெற்றோரிடம் பணம் வாங்கித்தான் கட்டணமே செலுத்துகின்றனர்.
அவர்களுக்கான தேர்வு மையங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தால் தான் வர முடியும். ஆனால் வெகுதூரத்துக்கு அப்பால் உள்ள கல்லூரிகளே தேர்வு மையங்களாக வைக்கப்படுகின்றன.
உதாரணமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தேர்வருக்கு மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கல்லூரியைத் தேர்வு மையமாக அறிவிக்கின்றனர்.
மதுரையில் உள்ள தேர்வருக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரி தேர்வு மையமாக அறிவிக்கப்படுகிறது. ஏன் இப்படி?
விருதுநகர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால் மதுரை மாவட்டத்தை ஏன் தேர்வு செய்கிறார்கள் என்பதே புரியவில்லை. அதிலும் காலை 8 மணிக்கு தேர்வு மையத்தில் விண்ணப்பதாரர் இருக்கவேண்டும். அழகர்கோவிலில் உள்ள அந்தக் கல்லூரிக்கு மதுரையில் இருந்து செல்வதென்றாலே காலை 6 மணிக்கு புறப்பட்டால் தான் 8 மணிக்குச் செல்ல முடியும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தோ, சிவகாசியில் இருந்தோ வர வேண்டுமானால், முதல்நாளே மதுரை வந்து விடுதியில் அறை எடுத்துத் தங்கினால் தான் சாத்தியமாகும். ஆண்கள்கூட பரவாயில்லை. பெண்களால் எப்படி வர முடியும்?
தேர்வுக் கட்டணத்தையும் செலுத்திவிட்டு அறை வாடகை உள்ளிட்டவையும் பெற்றோரிடம் கேட்டு வாங்க இளைஞர்களால் முடியுமா? விடுதியில் தங்க வேண்டியிருப்பதால், பெண் தேர்வருடன் குடும்பத்தவர் ஒருவரும் வர வேண்டும்.
விடுதி வாடகை மட்டுமின்றி போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கும். இந்த ஒரு தேர்வுக்காக ரூ.2 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். சாதாரண குடும்பத்தால் இவ்வளவு செலவழிக்க முடியுமா?
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், தேர்வு மையம் அமைக்க அதிவேக இணைய தள இணைப்பு வேண்டும். அந்த வேகத்துடன் உள்ள ஒரு சில கல்லூரிகளே தேர்வு மையம் அமைக்கச் சம்மதிக்கின்றன. இதனால் இந்த பிரச்னை ஏற்படுகிறது என்கின்றனர்.
இது ஏற்கக்கூடிய வாதமாக இல்லை. ஏனெனில், ஏறக்குறைய அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அதிவேக இணையதள வசதி தற்போது உள்ளது. மேலும், இவர்கள் தேர்வு மையம் வைத்துள்ள கல்லூரிகள் ஒன்றும் மிகச்சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டவை எனக் கூற முடியாது.
இதைப்போல பல மடங்கு வசதிகளுடன் கூடிய கல்லூரிகளை தேர்வு மையமாக்க அணுகுவதில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கல்லூரிகள் கூடுதலாக தொகை கேட்கலாம். அதைக் கொடுப்பதால் ஐ.பி.பி.எஸ். நிறுவனத்துக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
காரணம் ஒரு மாணவரிடம் தேர்வுக் கட்டணமாக ரூ.600 பெறப்படுகிறது. அனைத்தும் இணைய வழியில் என்பதால், தபால் செலவுகூட கிடையாது.
தேர்வின்போது தேர்வறைக் கண்காணிப்பாளர் ஊதியம், போக்குவரத்து போன்றவைதான் செலவு. இப்படி தேர்வெழுத வராதவர்கள் மூலம் தேர்வு நடத்தும் அமைப்புகளுக்கு கணிசமான ஒரு தொகை கிடைக்கிறது.
அடுத்து தேர்வு மையங்களில் இளைஞர்களை நடத்தும் விதம். அந்தக் கல்லூரிகளைப் பொருத்தவரை தேர்வு எழுத வருவோர் அனைவருமே நவீன கொத்தடிமைகள் தான். நகரை விட்டு ஒதுங்கி பொட்டல்காட்டில் தான் கல்லூரி இருக்கும்.
கல்லூரியின் வாசலில் இருந்து கட்டடத்துக்கு 2 கி.மீ. தூரம் இருக்கும். வாகனங்களை கல்லூரியின் வெளியில் நிறுத்தச் சொல்கிறார்கள். அதற்கு குறைந்தபட்ச பாதுகாப்போ, நிழலோ கிடையாது.
அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வாகனங்களை கல்லூரி வளாகத்துக்குள் நிறுத்த அனுமதிக்கும்போது, கட்டணம் செலுத்தி தேர்வு எழுதுபவர்களின் வாகனங்களை தெருவில் நிறுத்தச் சொல்வது என்ன நியாயம்?
இதைத் தவிர வங்கித் தேர்வுகளுக்கு செலுத்தும் கட்டணத்துக்குக்கூட பரிமாற்றக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் ரூ.10 முதல் ரூ.30 வரை வசூலித்து விடுகின்றன. யார்யாரிடமெல்லாமோ விட்ட பணத்தை பாவப்பட்ட மாணவர்களிடம் வசூலித்து இழப்புகளை ஈடுகட்டிக் கொள்கின்றன வங்கிகள்.
சரி இவர்கள் தான் வசூல் ராஜாக்களாக இருக்கிறார்கள் என்றால், அரசு போக்குவரத்துக்கழகம் அதன் அளவுக்கு வசூலில் முனைப்புக் காட்டுகிறது.
தேர்வு நாள்களில் சாதாரண, வழக்கமான நேரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மீது, சிறப்புப் பேருந்து என ஒரு வில்லையை ஒட்டிவிட்டு, சாதாரண கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை வசூலித்து அதன் கல்லாவை நிரப்புகிறது.
மதிப்புக்குரிய தேர்வாணைய அதிகாரிகளே... அரசு போக்குவரத்துக் கழகத்தினரே... வேலைக்காகத்தான் இவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
அமெரிக்காவில் வழங்குவது போல வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குமாறு கேட்கவில்லை. குறைந்தபட்ச மனிதாபிமானத்தைத் தான் கேட்கிறார்கள். அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் தேர்வு மையத்தை அமைத்துக் கொடுங்கள்.
குறைந்தபட்சம் விண்ணப்பதாரருக்கு அவர் மாவட்டத்திலாவது தேர்வு மையம் இருக்கும்படி செய்து கொடுங்கள். பட்டதாரிகளை வதைக்காதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com