நிலச்சரிவைத் தடுப்போம்

உதகையில், மாறாமலை போன்ற மலைபகுதிகளில் கோர விபத்தும், அதைத் தொடர்ந்து கடந்த சில காலங்களில் தொடர்ச்சியாக திடீர் வெள்ளமும், நிலச்சரிவுகளும் நீலகிரி மலைகளில் ஏற்பட்டது போல
Published on
Updated on
2 min read

உதகையில், மாறாமலை போன்ற மலைபகுதிகளில் கோர விபத்தும், அதைத் தொடர்ந்து கடந்த சில காலங்களில் தொடர்ச்சியாக திடீர் வெள்ளமும், நிலச்சரிவுகளும் நீலகிரி மலைகளில் ஏற்பட்டது போல, குமரி மாவட்டத்தில் 1992-ஆம் ஆண்டில் நேரிட்டது. 
நிலம் மற்றும் நீர்நிலைகள் மேல் மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பெருக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கத்தின் அதிகரிப்பால் இம்மாவட்டத்தின் நில உபயோகம் திட்டமில்லாத வகையில் மாறி, நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 
எடுத்துக்காட்டாக, இயற்கைக் காடுகளை அழித்து, பணப்பயிர்களான ரப்பர், கிராம்பு, ஏலம், தேயிலை, காபி முதலியவற்றை திட்டமிடுதல் இல்லாமல் பயிர் செய்வதாலும், ஆறுகளில் மணல் எடுப்பதாலும், செங்கல் சூளை தொழிலுக்குத் அனுமதிப்பதாலும், ஆங்காங்கே பாறைகள் உடைப்பதாலும், தாதுச் சுரங்கங்களைத் தோண்டுவதாலும், தாவரப் போர்வையால் நன்கு பாதுகாக்கப்பட்டு வந்த நிரந்தரமான மண்ணும், பாறைகளும் பெருமளவில் அடித்து செல்லப்படுகின்றன.
இதனால், முன்பு அரிதாக இருந்த சாலையோர அரிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இப்பொழுது இம்மலைப் பகுதிகளில் அதிகமாக நிகழ்கின்றன.
இயற்கைக்கு நாம் வளைந்து கொடுக்க வேண்டுமே அல்லாமல் நம் வசதிக்காக நாம் இயற்கையை வளைக்கக் கூடாது. இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். வன உயிரினங்கள் மலைப்பகுதியில் கட்டாயமாக, சுயமாக நடமாடவும், வாழவும் வழிவகை செய்வதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்குப் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் எங்கெல்லாம் மரம், செடி, கொடிகள், புல் வகைகள் நடமுடியுமோ அங்கெல்லாம் நம் நாட்டு மரக்கன்றுகள், புதர் செடிகள், தாவரங்கள் போன்றவற்றை நட்டு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். 
தாவரப் போர்வையற்று நிலச்சரிவு ஏற்பட்ட இப்பாழ் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதிக்கக்கூடாது.
காட்டுத் தீயிலிருந்தும் இம்மலைப் பகுதிகளைக் காப்பாற்ற வேண்டும். இயற்கை சூழலை பேணிப் பாதுகாப்பதே அல்லாமல் வேறு செயற்கை பணிகளையோ, வளர்ச்சி பணிகளையோ நிலச்சரிவு ஏற்பட்ட சேதமடைந்த இந்நிலங்களில் அனுமதிக்ககூடாது. 
வனப்பாதுகாப்பு திட்டங்களை மலைப்பகுதியில் அமலுக்குக் கொண்டுவர ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அடர்ந்த காடுகள் இருந்தால்தான் நிலச்சரிவிலிருந்து நாம் தப்ப முடியும். பாறைகள் உருண்டு விழாமல் இருக்க அடர்ந்த காடுகளைப் பராமரித்தல் மிகவும் அவசியம்.
தண்ணீர் ஓடிச்செல்லும் பாதையில் எல்லாம் குறிப்பாக சதுப்பு நிலங்களில் நடத் தகுந்த மரங்களான நீர்மருது, மூங்கில், நாவல் அத்தி, புன்னை போன்றவற்றையும், மண் வளத்தை பாதுகாக்கும் புல் தாவரங்களான வெட்டிவேர், எலுமிச்சைப் புல், கினிபுல் போன்றவற்றையும் நட வேண்டும். ஓடைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பான நீரோட்டத்திற்கு உறுதியளிக்க வேண்டும். 
எல்லா நீரோடைகளின் இரு கரைகளும் 50 மீட்டர் அகலத்திற்குப் பணப்பயிர்களான ரப்பர், கிராம்பு போன்றவற்றை அகற்றி, அதற்குப் பதிலாக தகுந்த நம் நாட்டு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
மலைச்சரிவுகளில் உள்ள நிலச்சரிவைத் தடுக்க வாய்க்கால்களை மீன்முள் போன்ற வடிவத்தில் அமைத்து, தண்ணீரை பாய்ந்தோடச் செய்ய வேண்டும். 
மனிதர்கள் மற்றும் கால்நடை பெருக்கத்தாலும் செங்குத்தான புல் வெளிகளில் நடைபெறும், முறையற்ற வேளாண்மையாலும் ஏற்பட்டுள்ள இச்சீர்குலைவை ஒழுங்குப்படுத்தி, நிலச்சரிவை சரி செய்ய வேண்டும்.
ஒரு கை ஓசையால் பயனில்லை. எனவே, அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். அழிவின் பாதைகளில் இருந்து விடுதலைபெற குமரியில் நிலப்பட்டாக்களை, நிலமற்ற மக்களுக்கு வழங்குவது ஒரு சாதாரண நிலையில் உள்ள ஒரு தவறான செயலாகும். 
இப்படி கொடுக்கப்பட்ட நிலங்களை தவறான முறையில் பயன்படுத்தி காடுகளை அழித்தும், சரிவுகளில் பயிர் செய்தும், குடிசைகளை கட்டியும் நீரோடைகளின் இருபுறங்களை ஆக்கிரமித்தும் வருகின்றனர். 
இதுபோன்ற குடிசைகள் வன நிலங்களையும், ரெவின்யூ நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்வதால் அகற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகி காடுகளின் நிலப்பரப்பு நலிவடைகிறது. 
எனவே, அரசு அதிகாரிகள் செங்குத்தான மலைப் பிரதேசங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்காமல், வீடு கட்ட உரிய இடங்களில் மட்டுமே பட்டாக்கள் வழங்கி, சூழ்நிலை கெடாமல் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
புவியியல் கண்ணோட்டத்தோடு நிலச்சரிவு ஏற்படுவது பற்றி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு மரங்களை அழித்ததுதான் முக்கியமான காரணம் என்று பரவலாக நம்பப்பட்டாலும் புவியியல் அமைப்பை ஆராய்ந்து சரியான தடுப்பு முறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். 
நம் நாட்டில் ஏற்கெனவே தேசிய வன கொள்கை மற்றும் தேசிய வெள்ளத்தடுப்பு கொள்கைகள் அமுலாக்கத்தில் இருக்கிறது. வல்லுநர்களால் சிபாரிசு செய்யப்படும் ஒருங்கிணைந்த திட்டங்களையும், தடுப்பு முறைகளையும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் விஞ்ஞான ரீதியில் தாமதம் இல்லாமல் கடைப்பிடிக்க வேண்டும். 
அழிவு ஏற்படும் சமயங்களில் மட்டும் திட்டம் இல்லாமல் ஏதோ நிவாரண முறைகளை ஆங்காங்கே கடைப்பிடிப்பதைவிட, மத்திய அரசின் உதவியை உடனடியாகப் பெற்று விஞ்ஞான ரீதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும். 
வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பெரும் அழிவை தடுக்க இப்பொழுதே மேற்கண்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வது அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com