ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அன்றைய தெற்காசியாவில் தென்பட்ட பறவைகளைப் பற்றி 1850-ஆம் ஆண்டு 3 பாகங்கள் கொண்ட புத்தகமாக பறவை பட்டியலை வெளியிட்டார் எட்வர்டு பிளைத் என்பவர். அதற்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் டி. சிùஸர்டான் இந்திய துணைக்கண்டத்தில் தென்படும் பறவைகளை மட்டும் பட்டியிலிட்டு 2 பாகங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட்டார். பறவைகளுக்குப் பெயரிடுதல் அவற்றை வகைப்படுத்துதல் ஆகியவற்றின் மீது 1960-களில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களும் புரிதல்களும் உருவாகின. இந்தக் காலகட்டத்தில் அலெக்சாண்டர் வெட்மோர், ஜேம்ஸ் எல்.பீட்டர்ஸ் ஆகியோர் உருவாக்கிய பறவை இனப் பட்டியலை உலகம் முழுவதுமுள்ள பறவையியல் அமைப்புகள் அங்கீகரித்தன.
இப்போது 1,263 பறவை இனங்கள் இந்தியாவில் தென்படுவதாக வகைப்படுத்தப்பட்டடுள்ளது. அவற்றில் 61 பறவை இனங்கள் இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய ஓரிட வாழ்விகள். இவற்றை உலகின் வேறெந்தப் பகுதியிலும் பார்க்க முடியாது.
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் 1,741 பறவைப் பட்டியல்கள் 178 பறவை ஆர்வலர்களால் இணையதளத்தில் வெளிடப்பட்டன. மொத்தம் 346 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட பறவைகளில் முதல் 10 இடங்களில் காகம், மைனா, கரிச்சான் குருவி, அண்டங்காக்கை, பச்சைக்கிளி, மடையான், வெண்மார்பு மீன்கொத்தி, பனை உழவாரன், மணிப்புறா மற்றும் தகைவிலான் ஆகியன இடம் பெற்றன.
இயற்கையின் ஓர் அங்கமாய் விளங்கும் பறவையினங்கள் இன்றைக்கு மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தலைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. நகர்மயமாதல், அழிக்கப்படும் வனங்கள், வேட்டையாடப்படுதல், வேதியியல் பொருட்களின் பயன்பாடு அதிகரித்தல், காட்டுத்தீ போன்ற பல காரணங்களே பறவைகளின் அழிவுக்கு அடிப்படையாக உள்ளன.
சரியான உணவு கிடைக்காதது, செல்லிடப்பேசி கோபுரங்களிலிருந்து வரும் நுண்ணிய கதிரியக்கம் போன்ற பல காரணங்களால் குருவிகள் அழிந்து வருகின்றன. குருவிகளின் அழிவிற்கு பெட்ரோல் புகையிலிருந்து வெளிப்படும் மீத்தைல் நைட்ரேட் எனப்படும் வேதிப்பொருளும் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவை முட்டையிடுவதற்கான கூடுகள், அமைக்கத் தகுந்த இடங்கள் இல்லாததாலும் இன்பெருக்கமும் தடைபட்டுப் போனது. சிட்டுக் குருவிகள் மனிதர்களைவிட்டு அகன்றுவிட்டன.
பெருகும் போக்குவரத்து, வேதிப்பயன்படுகளின் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மயில்கள் அழிவின் விளிம்பை எட்டிக் கொண்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கின்றது.
இறைச்சிக் கழிவுகளை அகற்றும் பிணந்தின்னிக் கழுகுகள், காடு, வயல்வெளி மற்றும் பரந்து விரிந்த குப்பைமேடு உட்பட திறந்தவெளிகளில் அழுகிக் கிடக்கும் எலி முதல் மாடுகள் உட்பட பலவகை இறைச்சிகளைத் தின்று துப்புரவுப் பணி மேற்கொண்ட வல்லூறுகள் தேள், பூரான், விஷவண்டுகளை காலி செய்யும் காடை, கரிச்சான் போன்ற பறவைகள் அழிந்துவிட்டதோ என்ற ஐயமும் அச்சமும் இப்போது ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் மூலம் சுமார் 800 குளங்கள் நீர்ப் பாசனம் பெருகின்றன. அவற்றில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நீர்வாழ் பறவை வகைகள் உள்ளன. இதில் உள்ள பறவைகளை கணக்கெடுக்க கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், வனத் துறையினரை இணைத்து குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தப்படுகிற ஒவ்வொரு குழுவிலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெற வேண்டும். இப்படி பிரிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவுக்கும் பறவைகளை கணக்கெடுப்பதற்கான குளங்களை ஒதுக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குளங்களில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகளை கணக்கெடுத்து பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவுசெய்த எண்ணிக்கைகள் மொத்தமாக தொகுக்கப்பட்டு பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகளை கணக்கெடுத்து அறிவிக்க வேண்டும்.
தாமிரபரணி நீர் பாசனத்துக்கு உட்பட்ட நீர்நிலைகளுக்கு மட்டும் இவ்வாண்டு 38 ஆயிரம் நீர்நிலைவாழ் பறவைகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 68 பறவை வகைகள் உள்ளதாகவும், இது கடந்தாண்டைவிட 3 மடங்கு அதிகம் எனவும் கணக்கெடுப்பில் தெரியவருகிறது. இந்தப் பறவைகள் கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் தகவல் அடிப்படையில் ஒவ்வெரு ஆண்டும் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எந்தவகை பறவைகள் வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன என்பன போன்ற விவரங்களை அறிய முடியும்.
இந்தக் கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்கள் உலகஅளவில் பறவைகளின் புலம் பெயர்வு பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்தக் கணக்கெடுப்பில் மாணவர்களைப் பயன்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறைக்குப் பறவைகளின் முக்கியதுவத்தையும் இயற்கை உயிரினச் சூழலில் பறவைகளின் பங்களிப்பையும் அறிந்து கொள்ளச் செய்ய முடியும்; அழிந்துவரும் பறவை இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்த முடியும்.
பறவைகளின் வாழ்வியல் சூழல் என்பது மரம் செடி, கொடி உட்பட தாவரங்களையும் தட்பவெப்ப சூழலையும் பிற உயிரினங்களின் இருப்பையும் பொறுத்தே அமைகிறது. ஏதேனும் ஒரு மரத்தை வெட்டினாலும் அதனை நம்பி வாழும் பறவைகள் மிகப் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றன. இம்மண்ணுக்கு உகந்ததாய் வாழ்ந்த, வாழ்கின்ற பறவையினங்களையும் மீட்கின்ற மற்றும் பேணிக் காப்பாற்றுகின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
பறவைகளும் சேர்ந்ததுதான் சுற்றுச்சூழல் என்பதை மனிதர்கள் மறந்து போய் கொண்டிருக்கிறோம். பறவைகளையும் பாதுகாத்தால்தான் சுற்றுச்சூழலைக் காக்க முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பறவைகளின் பாதுகாப்பு மனித இனத்தின் பாதுகாப்பும் கூட என்பதை நாம் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.