பசவரை மறந்துவிட்ட லிங்காயத்துகள்

வால்மீகி பார்த்த கிரெளஞ்ச பறவைகளில் ஒன்று மடிந்ததால்தான், மற்றொன்று அழுதுகொண்டிருந்தது; மனுநீதிச் சோழன் நாட்டில் கன்றுக்குட்டி மாண்டதால்தான், தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது;
Updated on
3 min read

வால்மீகி பார்த்த கிரெளஞ்ச பறவைகளில் ஒன்று மடிந்ததால்தான், மற்றொன்று அழுதுகொண்டிருந்தது; மனுநீதிச் சோழன் நாட்டில் கன்றுக்குட்டி மாண்டதால்தான், தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது; சீர்காழிக் குழந்தைக்குப் பசி எடுத்ததால்தான் 'அம்மே' என்று அழைத்தது. ஆனால், இன்றைய மனிதன் பசியிலும் அழுகிறான்; அஜீரணத்திலும் அழுகிறான்! செல்வத்திலும் அழுகின்றான்; அது செலவாகின்றதே என்றும் அழுகின்றான். அதுபோல 17 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட லிங்காயத்துகள், பி.டி. ஜட்டி எனும் குடியரசு துணைத் தலைவரைப் பெற்றும், நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், ஜே.எச். படேல், எடியூரப்பா போன்ற முதலமைச்சர்களைப் பெற்றும், இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டில் கணிசமான அளவு விகிதாசாரத்தைப் பெற்ற பிறகும், அதற்கு மேலும் இட ஒதுக்கீடு வேண்டும் எனப் போராடுகிறார்கள்; இந்து மதத்திலிருந்து பிரிந்துபோவதற்குரிய கிளர்ச்சியையும் மேற்கொண்டு, இப்போது வென்றும் இருக்கிறார்கள்; ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்தைப் பிரிப்பதற்கு இந்திய அரசமைப்பு வரைவியல் மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அனுமதியளித்திருக்கிறதா என்பது ஆய்வுக்குரியது. ஓர் ஆற்றிலிருந்து கரை பலவீனமான இடத்தில், வெள்ளம் உடைத்துக் கொண்டுப் போனால், அது கால்வாயாக முடியுமே தவிர, பேராறாகப் பெருக்கெடுக்க முடியாது.
வீர சைவம் (லிங்காயத்துகள்) எனும் அருமையான கோட்பாட்டை வளர்ப்பதற்காக அரும்பாடுபட்டவர்கள், பசவேசர், அக்கமாதேவி, அல்லமப்பிரபு, சென்ன பசவண்ணர், சர்வக்ஞர், மடிவாள மாச்சையா போன்ற பெருமக்களாவர். அவர்களே இந்து மதத்திலிருந்து பிரிந்து போகும் உரிமையைக் கேட்கவில்லை! 1964-ஆம் ஆண்டு 'பசவ சமிதி' எனும் அமைப்பைத் தொடங்கி வைத்த பி.டி. ஜட்டி, 'பசவருடைய கொள்கைகளை மேலும் பரப்புவதற்காகத்தான் இந்த அமைப்பே தவிர, வேறு எதற்காகவும் இல்லை' எனக் குறிப்பிட்டதை, இன்றைய லிங்காயத்துகள் மறந்துவிட்டனர் போலும். அந்தக் கொள்கைக்காக இன்றுவரை தொண்டாற்றி வரும் மயிலம் வீரசைவ மடம், பிரிந்து போகும் உரிமையைக் கோரவில்லையே!
பசவேசர், கர்நாடக மாநிலத்தில் பீஜப்பூர் மாவட்டத்தில் பாகேவாடி என்ற சிற்றூரில் ஒரு வைதிக சைவ அந்தணர் மரபிலே கி.பி.1134 -இல் பிறந்தார்.
குழந்தைப் பருவத்திலேயே பசவேசர் புரட்சிகரமான சிந்தனையுடையவராக விளங்கினார். ஒருமுறை தம் தமக்கையாரிடம், 'நம் வீட்டிற்குள்ளே நாய்களும் பூனைகளும் குருவிகளும் காக்கைகளும் வந்து போகின்றன. ஆனால், விறகு வெட்டுபவன் ஏன் வெளியே நிற்கிறான்; பால் கறப்பவன் ஏன் உள்ளே வர மறுக்கிறான்; வீடு கட்டுபவர்களைக் கட்டியபின், ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள்?' எனக் கேட்டவர், பசவேசர்! 
வளர்ந்த பிறகு தாழ்த்தப்பட்ட மக்களின் அவலநிலையைக் கண்டு கொதித்தெழுந்தார். அவர்கள் வாழ்கின்ற பகுதிக்கே சென்று, அவர்களுடைய நல்வாழ்விற்கு வழிதேடினார். அவர்களைக் கருவாக வைத்து உயர்ந்த கவிதைகளைப் படைத்தார். உயர்குலத்தில் பிறந்தது என் தலைவிதி' என்றார். விதவைத் திருமணத்தை ஆதரித்து முதற்குரல் கொடுத்தவர் பசவரே! 
ஆன்மிகக் கருத்துகளைப் பரப்புவதற்குப் பலதரப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்களைக் கொண்ட அடியார் கூட்டத்தை உருவாக்கினார். மடிவாள மாச்சையன் எனும் தொண்டர் துணிவெளுக்கும் தொழிலாளி ஆவார். மாரய்யன் என்பவர் விறகு வெட்டும் தொழிலாளி; செளடையன் என்பவர் படகோட்டி; மேதர கேதையன் என்பவர் கூடை முடைபவர்; பொம்மையன் ஒரு நாடக நடிகர்; அரளய்யன் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி; ஒக்கல முத்தையன் ஒரு விவசாயி; மாதர சென்னையன், டோகர கக்கையன் ஆகிய இருவரும் தாழ்த்தப்பட்டவர்கள். இப்படியாகத் தமது சமரச சன்மார்க்க சங்கத்தைப் பசவர் கூட்டினாரே தவிர, பிரிந்து போகும் உரிமை கோரவில்லை. 
சாளுக்கிய பேரரசில் - கல்யாண் எனும் தலைநகரில் பிஞ்ஞளன் எனும் ஜைன மன்னனுக்குக் கீழ் கருவூல அதிகாரியாகவும் பணியாற்றினார் பசவேசர். 
பசவேசர் ஏற்படுத்தி வரும் சமூகப் புரட்சியைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஜைன மன்னனாகிய பிஞ்ஞளன், பசவேசருக்குப் பலவிதத் தொல்லைகளைத் தர முற்பட்டான். அவருடைய சிவநெறியாளர்களாகிய தொண்டர்களையும், மனம் மாறிய மக்களையும் கடுமையாகத் தண்டிக்க முற்பட்டான். 
அதனால், அம்மன்னனுடைய அரசிலிருந்து வெளியேறினார் பசவர். அதே கல்யாண் நகரில், 'அனுபவ மண்டபம்' எனும் ஞானசபையை நிறுவினார். எல்லாத் தரப்பு மக்களையும் அங்குக் கூட்டி, வீர சைவ மரபை வளர்ப்பதற்குரிய பத்துக் கட்டளைகளை உருவாக்கினார். அவை யாவன:
ஒருவனே இறைவன்; அவனை மனம் உருக வழிபடுதல்; இலிங்க வடிவே இறைவடிவென்று, இலிங்கச் சின்னத்தை உடலில் அணிதல்; செய்யும் தொழிலில் திறமை காட்டி, அதனை முடித்த பிறகே இறை வழிபாட்டில் ஈடுபடுதல்; 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற தொண்டுள்ளத்தோடு, பயன் நோக்காது வாழுதல்; இல்லறம் பேணி, இனியன விழைந்து மக்களைக் காத்துச் சிறத்தல்; 
எல்லாரும் சமம் என்று எண்ணி வாழ்தல்; பிறர் பசித்திருக்க, தான் மட்டும் உண்ணாமல் பகிர்ந்து உண்ணுதல்; நேரிய சிந்தனையுடன் இலக்கியப் பணியில் ஈடுபடுதல்; மூடப்பழக்கத்தை ஒழிக்கும் பகுத்தறிவைப் பெருக்குதல்; இலிங்கத்தில் ஐக்கியமாகி, தன்னை இழத்தல் என்ற சூன்ய சம்பாதனை அடைதல்.
இவற்றைத்தாம் பசவேசர் வகுத்தாரே தவிர, தனி மதமாகப் பிரிந்து போவதைப் பேசவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களைச் சமநிலைப்படுத்துவதற்கு அவர்களுடைய இருப்பிடங்களுக்கே சென்று, அவர்கள் மன இருளில் புதைந்து கிடக்கும் பழைமைகளைக் கிள்ளி எறிந்தார், பசவர். மூடப் பழக்கங்களைப் பல்லக்கில் ஏறிய நாய்க்கு ஒப்பிடுகிறார் அவர். பல்லக்கில் ஏறிய நாய், மற்றவர்களை ஏறவிடாமல் கடித்துத் துரத்துமாம். அதுபோன்றே, பல்லக்காகிய மனத்தில் ஏறிவிட்ட மூடப் பழக்கங்கள், நற்குணங்களையும், நற்சிந்தனைகளையும் உள்ளே ஏறி வர விடாதாம். அதனைப் 'பல்லக்கு ஏறிய நாயைப் போலப் பற்றிய முந்தையப் பழக்க வழக்கம் உள்ளே விடாமல் இருந்திடும், சுட்டழி' என்றார்.
மேலும், தாம் பிரிந்து போவதைப் பற்றிப் பேசாமல் வீரசைவ மரபிலே நிலைத்திருக்க ஓர் அழகான உருவகத்தைக் கையாளுகிறார் பசவர். சிவமதம், தங்கத்தால் செய்த ஓர் அழகிய பொற்கூண்டாம். அந்தக் கூண்டிலே 'சிவசிவா' என்று சொல்லிக் கொண்டிருக்கும் கிளியாகத் தம்மைப் படைத்து, அந்தக் கூண்டுக்குள் அடைக்கும்படிக் கூடல சங்கம தேவனை வேண்டுகின்றார், பசவேசர்.
பசவேசர் நாயன்மார்களைப் போலத் திருநீற்றுப் பெருமை பேசுகின்றார். திருநீறால் முன்பிறவியில் செய்த பாவங்கள் போகும். எவ்வாறெனில், ஒரு கசப்புச் சுரைக்காய்க்குள்ளே திருநீற்றை நிரப்பினால், அது இனிப்புக்காய் போல் ஆகுமாம். 
'நமச்சிவாய மந்திரத்தின் பெருமையை சைவ நாயன்மார்கள் பாடியதற்கிணையாகக் கர்நாடகப் பசவேசரும் பாடியிருக்கிறார். 'ஓம் நமச்சிவாய' மந்திரம், வேதத்தைக் காட்டிலும் தர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்தது. 
நமச்சிவாய மந்திரத்தை ஓத முடியாமல் மந்திர தந்திரங்கள் திகைத்தனவாம். சிவபதம் கிடைக்கும் வழி தெரியாமல் திகைத்த உலகத்திற்கு, வழிகாட்டியது நமச்சிவாய மந்திரம். அம்மந்திரத்தைப் புறக்கணிக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவனும் ஓதி உய்வு பெறலாம் என்கிறார் பசவர். பாடல் வருமாறு:
'ஓம்நமச் சிவாய எனும் மந்திரத்தால், வேதம், தர்க்கம் பிரமை கொண்டு இருந்தது!
ஓம்எனும் பொருளை உணர முடியாமல், உயர்ந்த மந்திர தந்திரம் திகைத்தன
சிவபதம் கிடைக்கும் வழியறியாமல், 
சிந்தைவகன்றது உலகம் அனைத்தும்;
தவவலி சங்கமன் கீழ்க்குலத் தோனை விரும்பிடின், சாதி பேதமும் இல்லையே'
பசவேசர் இந்து மதத்திற்குள்ளே இருந்து கொண்டு, அதற்குள்ளே காலதேச வர்த்தமானத்திற்கேற்ற சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினாரே தவிர, தனி மதமாகப் பிரிந்து போக விரும்பவில்லை. இன்று சிறுபான்மையினருக்குரிய ஒதுக்கீட்டையும் கர்நாடக அரசு லிங்காயத்துகளுக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் கோரிய தனி மத அந்தஸ்தையும் வழங்கியிருக்கிறது. ஆனால், பசவேசரும் அல்லமப் பிரபுவும், அக்கமாதேவியும் சர்வக்ஞரும் கோராத ஒன்றைப் போராடிப் பெற்றிருக்கிறார்கள்.
ஒரு பிரம்மாண்டமான மதத்திலிருந்து பிரிந்து போகின்ற உரிமையைப் பெற்றதைக் காட்டிலும், பசவருடைய சமூகச் சீர்திருத்தங்களையும் வீரசைவக் கோட்பாட்டையும் பரப்புவதற்கு முயன்றிருப்பார்களேயானால், அதனால் சமயமும் உயர்ந்திருக்கும்; சமுதாயமும் உயர்ந்திருக்கும். 
இன்று வாக்குச்சீட்டுகளுக்காக பெற்ற வரங்கள், நாளைய தினம் அதே வாக்குச் சீட்டுக்காக மாற்றப்படலாம். ஒரு காலத்தில் கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்த சுவர், ஒரே நாளில் இடித்துத் தள்ளப்பட்டது. தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வலாம்; ஆனால், மறுபடியும் தருமம் வெல்லும்!
தற்காலிக நன்மைக்காகச் சட்டத்தின் ஒருமுனையை வெட்டி ஒட்டினால், அது ஒரு மாநிலத்திற்குள் மட்டும் ஏற்பட்ட விபத்தாகாது; ஏனைய மாநிலங்களையும் அது எட்டிப் பிடிக்க ஏதுவாகும். இந்திய அரசமைப்பு வரைவியல், முக்காலத்தையும் திட்டமிட்டே வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை அக்கோட்டையிலிருந்து, ஒரு கல்லை உருவிவிட்டால், மற்ற கற்களை மற்றவர்கள் உருவ நேரம் ஆகாது. வரலாறு திரும்பும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com