தண்ணீர் அரசியல்!

மக்களவைத் தேர்தல் அல்லது மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டிதான் கோடையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிப்பது வழக்கம்.

மக்களவைத் தேர்தல் அல்லது மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டிதான் கோடையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிப்பது வழக்கம்.
ஆனால், இந்த முறை காவிரி நதி நீர்ப் பங்கீட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பதையடுத்து, அரசியல் களத்தில் முன்கோடையாக மாநிலமெங்கும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வார கால கெடு முடியும் வரை ஆற அமரப் பொறுத்திருந்து, 'ஸ்கீம்' என்றால் என்ன என்றும், காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் வேண்டுமென்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதுதான் தாமதம். தமிழக அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர் எனப் பல்வேறு தரப்பினரும் கொதித்தெழுந்துள்ளனர்.
மத்திய அரசு ஆறு வார அவகாசத்துக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, தங்களின் விருப்பப்படியான ஒரு 'ஸ்கீமையாவது', அதாவது, செயல் திட்டத்தை, முன்வைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் மத்திய பாஜக அரசு ஆளாகாமல் இருந்திருக்கக் கூடும்.
ஆனால், பாஜக அவ்வாறு செய்யாததற்கு கர்நாடக சட்டப் பேரவைக்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் மட்டும்தான் காரணமென்பது ஊரறிந்த ரகசியம். 
அதுவும் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற தனது இலக்கை நோக்கிய பயணத்தில் இம்மி அளவும் தொய்வு வந்துவிடக் கூடாது என பாஜக கருதுவதிலும், அதன் வெளிப்பாடாக காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் நடவடிக்கைகளை ஆறப் போடுவதிலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
காவிரி பிரச்னை நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், இன்று இந்த விஷயத்தில் கர்நாடக பேரவைத் தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவதன் மூலம், இதில் தொடர்புடைய பிற மூன்று மாநிலங்களான தமிழகம், கேரளம், மற்றும் புதுச்சேரியில் எதிர்காலத்திலும் தம்மால் காலுன்ற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்பதை பாஜக கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
இம்மூன்று மாநிலங்களில் பாஜகவைவிட அதிக செல்வாக்கு படைத்த மற்றொரு பிரதான தேசியக் கட்சியான காங்கிரஸின் தலைமையும் காவிரி விவகாரத்தில் இதுவரை தீர்க்கமான எந்த முடிவையும் அறிவிக்காமல் மெளனம் சாதித்தே வருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா மட்டும் வாரியம் வேண்டாம், வேண்டாம் என கூப்பாடிட்டுக் கொண்டிருக்கிறார். அவரது இந்தக் கருத்தே, ராகுல் காந்தியின் கருத்தாக இருக்குமேயானால், தமிழகத்தில் தமக்குள்ள கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அக்கட்சி எதிர்காலத்தில் இழக்க நேரிடும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் காங்கிரஸுக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு கர்நாடகத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
தமிழகத்தின் ஆளுங்கட்சி என்ற முறையிலும், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற வகையிலும் இந்தப் பிரச்னையில் எதிர்வினை ஆற்ற வேண்டிய முதன்மை பொறுப்பும் கடமையும் அதிமுகவுக்குத்தான் உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சட்ட ரீதியாக போராட்டங்கள் நடத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் தங்களின் ஆட்சி நடைபெறுவதாக கூறிக் கொள்பவர்கள், நடுவர் மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சமான மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசு திட்டமிட்டு கால தாமதம் செய்யும்போது, அதனை எதிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்.பி.க்கள் கடுமையான நிலைப்பாட்டினை எடுக்கலாம். அதை விடுத்து, 'தற்கொலை செய்து கொள்வோம்' என மிரட்டுவது, உண்ணாவிரதம் இருப்பது என ஏதோ இவர்களும் தங்கள் பங்கிற்கு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என்றே தோன்றுகிறது. இதற்கான காரணமும் ஊரறிந்த ரகசியமே.
கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தராமையா, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே சமயம், தமிழகத்தில் திமுக தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முழு அடைப்புப் போராட்டத்தில் காங்கிரஸ் முதல் ஆளாய் நிற்பது நகை முரணாகவே தெரிகிறது.
இவ்வாறு இருப்பினும், தமது தலைமையில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் பங்கேற்றதை, இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக தமக்கு கிடைத்த வெற்றியாகவே திமுக பார்க்கிறது.
நீட் தேர்வு தமிழகத்துக்கு வேண்டாமென்றபோது, உச்ச நீதிமன்ற உத்தரவைக் காரணம் கூறியும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தத்தான் இத்தேர்வு எனக் கூறியும், அதனை நடைமுறைப்படுத்திய மத்திய பாஜக அரசால், கர்நாடகம் வேண்டாம், வேண்டாம் எனக் கதறினாலும், அதனைப் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாதா என்ன?
கர்நாடக மாநில பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கிறது பாஜக. காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களின் விருப்பப்படி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
இவர்களின் இந்த விளையாட்டில் இன்றைக்குத் தோற்றுப் போயிருப்பதென்னவோ வழக்கம்போல் அப்பாவித் தமிழக மக்களும் விவசாயிகளும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com