தெய்வம் நின்று கொல்லும்

தமிழ் மொழியில் பல ஆயிரம் பழமொழிகள் இன்றும் உயிரோடு இருப்பதை யாரும் அனுபவ வாயிலாக உணரலாம். நாம் செய்கின்ற அத்துணை வினைகளும் எதிர்வினைகட்கு உட்பட்டவையே!
Updated on
4 min read

தமிழ் மொழியில் பல ஆயிரம் பழமொழிகள் இன்றும் உயிரோடு இருப்பதை யாரும் அனுபவ வாயிலாக உணரலாம். நாம் செய்கின்ற அத்துணை வினைகளும் எதிர்வினைகட்கு உட்பட்டவையே! சில நேரங்களில் நமது மதிநுட்பம், உயர் கல்வி, வானளாவிய புகழ், அளப்பற்கரிய ஆற்றல் இவற்றால் எல்லாம் நம்மால் இயலும், நம்மை எதிர்க்கவோ கேள்வி கேட்கவோ எவரும் இல்லை அவனியில், கண்கட்குப் புலப்படா எதுவொன்றையும் இருப்பதாக எண்ணிக் கவலைப்படவோ, அச்சம் கொள்ளவோ தேலையில்லை, நாம் கொண்டிருக்கும் சக்தியின் வழி எவர்க்கும் புலப்படா வண்ணம் வேண்டியதை வேண்டும் அளவில் எவ்வழியிலாவது பெற்றுத் துய்க்கலாம் என்று எண்ணுகிற மனோபாவத்தில்தான் முறை தவறிய, நேர்மையற்ற வழியில் குற்றச் செயல்கள் நாளும் அரங்கேறுகின்றன.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதைப் புறம் தள்ளி, மனம், வாக்கு, காயம் இவற்றில் தூய்மை வேண்டா என்று கருதி, மனத்துக்கண் மாசில்லாதவனாக இருக்க மாட்டாது, அறமற்ற செயல்களை மனமுவந்து செய்கிறான். அரசன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்பதில் பொருள் உண்டு என்பதை காலம் காலமாக நமக்குப் பல சம்பவங்கள் உறுதி செய்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒரு சம்பவம் அண்மையில் நம் நாட்டில் நடைபெற்றது.
1994-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த இரண்டு அழகிய கருங்கல் துவாரபாலர்கள் சிலைகள் திருடு போய்விட்டன. வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆறு மாத காலம் விசாரணை நடைபெற்றது. துப்போ தடயமோ எதுவும் கிடைக்காததால் ஆறு மாதங்கழித்து 1995-இல் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இறைவன் பொன்னில் மாணிக்கத்தைப் பதித்து கையில் ஒரு வேலையும் கொடுத்து பொன்மாணிக்கவேலாக சிலை கடத்தல் தடுப்புத் துறைக்குத் தலைவராக பணியமர்த்துகிறான். இவர் 23 ஆண்டுகட்கு முன்னர் முடித்து வைக்கப்பட்ட வழக்கு ஆவணங்களைத் தூசிதட்டி, உயிர் கொடுக்கிறார். கடந்த 23 ஆண்டு காலமாக சிலை கடத்தலில் தொடர்புடைய, தலைமறைவாக இருந்த நபர் கும்பகோணத்தில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் கைதாகிறார். இந்த நபர் தந்த தகவல் அடிப்படையில் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து அறுவரைக் கைது செய்கிறது காவல் துறை. 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்னுமாப்போல, உயரதிகாரி செம்மையாகப் புலன் விசாரணை செய்கிறார். தற்போது புழல் சிறையில் உள்ள பிரபல சிலை கடத்தல் மன்னன் அந்த சிலைகள் திருடப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் அந்தக் கோயிலுக்குச் சென்று வந்த தகவல் தெரிய வருகிறது. பிறகு திருடப்பட்ட சிலைகள் மும்பை, ஹாங்காங் வழியாக நியூயார்க் சென்றடைகிறது. நியூயார்க்கில் கலைப் பொருள் விற்பனை நிலையத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகிறது. பின்னர் ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக்கூடத்திற்கு ரூ.4.98 கோடிக்கு விற்கப்படுகிறது. தற்போது தமிழ் நாட்டு துவாரபாலர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் என்ஜிஏ கலைக்கூடத்தில் கண்ணாடி அலமாரியில் இருக்கிறார்கள். நமது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து அரசுக்குத் தெரிந்த வரையில் 1,200 தெய்வச் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.
இந்தச் சிலை கடத்தலில் படிக்காத பாமரர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை. மெத்தப் படித்த, புகழ் உச்சியில் இருப்பவர்கள்தான் தொடர்புடையவர்கள் என்பதை அறியும்போது தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை எப்படி மறந்தார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
திருடப்பட்ட சிலைகள் இருக்கும் இடம் 23 ஆண்டுகட்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடியவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புத் துறையின் காவல் அதிகாரியை இடம் மாற்ற முயற்சித்தபோது நீதிமன்றம் அதனை தடுத்து இவரே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்துள்ளது.
சிலைத் திருட்டைப் போலவே வேறொரு பெரிய அளவிலான மோசடி நடைபெற்று வந்ததும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகழ் பெற்ற ஸ்தபதி ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியான செய்தி. காஞ்சிபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன்னாலான அழகிய சோமாஸ்கந்த மூர்த்தி பழுதாகிவிட்டது. இதனை வைத்துப் பூஜை செய்தல் கூடாது என்று கூறி புதிதாக சோமாஸ்கந்தர் திருமேனியை ஐம்பொன்னால் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சுமார் 100 கிலோ தங்கத்தைப் பொதுமக்களிடமிருந்து பெற்றதாக செய்தி. 
இந்தச் சிலை செய்ததில் மோசடி நடந்து இறுப்பதாகப் புகார் எழுகிறது. சிலை கடத்தல் தடுப்புத் துறையினர் தீவிர புலன் விசாரணை செய்ததில், ஒரு குண்டுமணி அளவிற்குக் கூட அந்தச் சிலையில் தங்கம் இல்லை என்று புலனாகிறது. உண்மையான சோமாஸ்கந்தர் சிலை இப்போது அமெரிக்காவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கு தொடுக்கப்படுகிறது என்றவுடன் முன்பிணையில் வெளியில் வருகிறார், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர். சட்டப் பாதுகாப்பில் வலம் வருகிறார். ஆனால் பழநியில் தண்டாயுதபாணியாக இருக்கிற இறைவன், எனக்கும் ஐம்பொன்னால் ஒரு விக்ரகம் செய்வதாகக் கூறி திருத்தணி கோயிலில் இருந்து 40 கிலோ தங்கம் பெற்று (என்னிடம் பழநியில் இல்லாத தங்கமா!) சிலை செய்தார்கள். இதிலும் தங்கம் இல்லை. இதையும் விசாரியுங்கள் என்று புகார் ஓலை அனுப்பினார். புலன் விசாரணையில் தங்கத்திற்கும் இந்த சிலைக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிந்தவுடன், ஸ்தபதி கைது செய்யப்பட்டார். சிறையிலும் அடைக்கப்பட்டார். 
அறிவார்ந்தவர்கள் சிலர், இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் விசாரிக்க இயலாது; எனவே வேறு ஒரு மோசடி என மாற்ற வேண்டும் என்று உத்தரவு பெற்று மீண்டும் பிணை மூலம் வெளிவர முயற்சித்தார்கள். ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதையும் இறைவன் மெளன சாட்சியாக இருந்து பார்த்து வருகிறான்.
இதைப் போலவே மற்றொரு சுவையான சம்பவம். 1967-இல் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்ந்தது. அப்போதைய முதலைமைச்சர் சி.என்.அண்ணாதுரை நாடே வியந்து பாராட்டிய உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார். இதில் பங்கு கொண்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் சிலர் தமிழக கோயில்களைப் பார்க்க விரும்பினர். தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. தமிழறிஞர்கள் செல்ல விரும்பிய கோயில்களில் சிவபுரம் சிவன் கோயிலும் ஒன்று. கோயிலுக்குச் சென்ற வெளிநாட்டு அறிஞர்கட்கு அந்தக் கோயிலில் உள்ள ஒரு சிறப்பான சம்பவத்தை விளக்கினார்கள் கோயில் நிர்வாகிகள்.
'இதோ இருக்கிறதே, இந்த அழகிய நடராஜர் திருவுருவச்சிலை பல ஆண்டு காலமாக மண்ணில் புதையுண்டிருந்தது. விவசாயி ஒருவர் தன் வயலை ஆழ உழவு செய்தபோது கண்டெடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் சில காலம் இங்கே வைத்துப் பூஜித்து வந்தோம். பிறகு இந்தச் சிலையில் இருந்த களிம்பு, தூசி போக்கி மெருகேற்ற கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற ஸ்தபதியிடம் கொடுத்து செப்பம் செய்து கொண்டு வந்து ஆராதித்து வருகிறோம்' என்றனர்.
வந்த தமிழறிஞர்களில் ஒருவர் இதைக் கேட்டு வியப்புற்று, நடராஜரை பல கோணங்களில் நிழற்படம் எடுத்துக் கொண்டார். சிறிது நேரம் அங்கே தங்கி நடராஜ பெருமானைக் கண்களால் அர்ச்சித்தார். கோயில் நிர்வாகிகள் மிகவும் மகிழ்ந்தனர். அந்த தமிழறிஞர் சென்னை திரும்பியதும் தொல்லியல் துறையினரை சந்தித்து, சிவபுரம் நடராஜரை நிலத்திலிருந்து மீட்ட நேரத்தில் எடுத்த நிழற்படங்களின் நகல்களைக் கேட்டுப் பெற்றார். தன் நாடு ஏகினார். சில மாதங்களுக்குப் பிறகு மேனாட்டு சஞ்சிகை ஒன்றில் சிவபுரம் கோயிலில் உள்ள நடராஜர் அசல் அல்ல, அது 'ரெப்ளிகா'தான் (பிரதி), அதாவது, அசலைப் போன்ற தோற்றம் கொண்ட போலியானது, உண்மையான நடராஜர் சிலை அமெரிக்காவில் நியூயார்க்கில் ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கிறது என்று எழுதினார்.
தொல்லியல் அறிஞர்களிடத்து அதிர்வலை தோன்றியது. அரசுக்குத் தகவல் எட்டியது. முதலமைச்சர் அண்ணாதுரை அப்போது தமிழக காவல் துறை தலைமை அதிகாரியான எப்.வி. அருளிடம் இந்த விவகாரத்தில் தனிகவனம் செலுத்த ஆணையிட்டார். புலன் விசாரணை சூடு பிடித்தது. சிவபுரம் கோயிலில் இருந்து மெருகேற்ற கும்பகோணத்திற்கு ஸ்தபதியிடம் வந்த உண்மையான விக்ரகம் முதலில் நேபாளம் சென்று, பின்னர் அமெரிக்கா சென்றடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அசலைப் போலவே ஒன்றை கும்பகோணத்தில் சிற்பக்கூடத்தில் தயாரித்து அதனை மேளதாளத்தோடு சிவபுரம் கோயிலுக்கு அனுப்பியதும் கண்டறியப்பட்டது.
எப்.வி. அருள் சர்வதேச காவல் துறையில் (இன்டர்போல்) துணைத்தலைவராகப் பணியாற்றியவர் என்பதால் மத்திய அரசு மற்றும் அமெரிக்க, சர்வதேச காவல் துறையின் உதவியோடு, தனது அயரா தொடர் முயற்சி மூலம் தக்க சான்றுகளோடு அமெரிக்காவில் இருந்தது சிவபுரம் நடராஜர் என்பதை நிரூபணம் செய்து வழக்கில் வென்றார். 
நடராஜரும் தனது பல ஆண்டு அமெரிக்க வாசத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார். நமது நாடாக இருந்திருப்பின், தங்கத்திற்காக சிலையை உருக்கி உருக்குலைத்திருப்பார்கள். நியூயார்க் அருங்காட்சிக் கூடத்தின் உரிமையாளரை அமெரிக்க காவல் துறை, 'ஏன் இந்தச் சிலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?' என்று கேட்டபோது அவர் சொன்னாராம்: நான் நினைத்தால் நிமிஷத்திற்கு பல நூறு சிலைகளை அச்சுவார்த்து செய்ய முடியும். ஆனால் இந்தப் புராதனமான தெய்வச் சிலையின் இயற்கையான தெய்விக அதிர்வு ஆற்றல் செயற்கைத் தயாரிப்பில் இருக்காது. மேலும் நான் பல முறை இந்திய கோயில்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இதனின் புனிதத்தை அறிவேன் என்றாராம். 
பொதுவாக நம் நாட்டு நடராஜ மூர்த்தம் விஞ்ஞானிகளைக் கூட ஈர்த்திருக்கிறது. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லுவார், நடராஜர் பிரபஞ்சத்தின் உள்ளீடு என்று. ஈழத்து அறிஞர் ஆனந்த குமாரஸ்வாமி 'டான்ஸ் ஆப் சிவா' என்ற நூலில் நடராஜரின் பெருமைகளைப் பலவாறு புலப்படுத்துவார். அறிஞர் பெர்னார்டு ஷா இந்த மூர்த்தியின்பால் கொண்ட ஈடுபாட்டால் ஹிந்து சமயத்தை ஆழ்ந்து கற்கலானார். பின்னர் ஒரு முறை சொன்னார், ஒரு நாள் ஹிந்து சமயத்தை உலகம் முழுவதுமே ஏற்கும் என்று.
நம் நாட்டில் அந்தோ பரிதாபம்! கோயில்களில் தொடர்பு உடையவர்களே இதன் பெருமை அறியாது மோசடி செய்வதும், திருடி விற்பதும், நாட்டிலிருந்து கடத்துவதுமாக இருக்கிறார்கள். நம் நாட்டுத் தொன்மை சமயம் ஆனாலும் சரி, வந்தேறிய மதங்களானாலும் சரி, எதுவும் திருட்டை, மோசடியை ஆதரிப்பதில்லை. பொய் சொல்லாதே, திருடாதே, ஏமாற்றாதே என்றுதான் அறிவுறுத்துகிறது. இதனைப் பாமரன் கேட்கிறான். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என நம்புகிறான். ஆனால் படித்தவர்கள் கேட்பதும் இல்லை, நம்புவதும் இல்லை. 
நிலையற்ற பொருளுக்காக, புண்ணியத்தைத் துறந்து, வீணே பாபத்தை சுமக்கிறார்கள். இதை பாரதி சொல்வான்: 'படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்.'
அது பொய்யல்ல. 'கோயிற்பூசை செய்வோர் இலையைக் கொண்டு விற்றல் போலும்' என்பதும் உண்மைதான். 'மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே!' என்று மனம் வெதும்பிப் பாடியதும் இற்றை நாளின் அவலக் காட்சியன்றோ!
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 35,595 கோயில்கள் உள்ளன. இவை அனைத்திலும் பல்லாயிர எண்ணிக்கையில் விலை மதிப்பற்ற தெய்விக கருவூலங்கள் இருக்கின்றன. இவைகளைத் தொழுது, வணங்கி பத்திரப்படுத்தி வாழ்வது நமது தலையாய கடமையாகக் கொள்ளல் வேண்டும்.
நாம் தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்பலாம். எந்நாளும் இதனை வேதமென எண்ணி நல்லதை நினைப்போம். நல்லதைச் செய்வோம். நாளும் நல்லதே நடக்கும்!
கட்டுரையாசிரியர்:
தலைவர், 
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com