காவிரியைப் பொய்யாக்கலாமா?

நாடோடி வாழ்க்கை ஓரிடத்தில் நங்கூரம் பாய்ச்ச நதிக்கரைகள் தேவைப்பட்டிருக்கின்றன. நதிகள் விவசாயத்தையும் நாகரிகத்தையும் வளர்த்திருக்கின்றன. 
Updated on
3 min read

நாடோடி வாழ்க்கை ஓரிடத்தில் நங்கூரம் பாய்ச்ச நதிக்கரைகள் தேவைப்பட்டிருக்கின்றன. நதிகள் விவசாயத்தையும் நாகரிகத்தையும் வளர்த்திருக்கின்றன. 
உலகின் தலைசிறந்த தொன்மையான நாகரிகங்கள் நான்கும் நதிக்கரை நாகரிகங்களே. இரண்டு நதிகளுக்கு இடையில் மெசபொடேமியா நாகரிகம்; நைல் நதிக் கரையில் எகிப்து நாகரிகம்; சிந்துநதிக் கரையில் திராவிட நாகரிகம்; மஞ்சள் நதிக்கரையில் சீன நாகரிகம். காவிரிக் கரைகளில் தமிழ் நாகரிகம்.
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே
இது கம்பர் பாடிய அரைப்பாட்டாம்! மீதியை ஒளவையார் பாடினார் என்றொரு கதை உண்டு. சோழமண்டல சதகமும் இக்கதையை வழிமொழிகிறது. 
தண்ணீரும் காவிரியே! சரி, தண்ணீர் மட்டுமா காவிரி?
சங்க இலக்கியங்களில் அகநானூற்றில் 15 இடங்களிலும் புறநானூற்றில் 10 இடங்களிலும் ஐங்குறுநூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகியவற்றிலும் காவிரி பற்றிய குறிப்புகள் வருகின்றன. பத்துப் பாட்டில் ஒரு பாட்டு (பட்டினப்பாலை) காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. ஐயாறு, குரங்காடுதுறை, காழி, கண்டியூர், பொன்னி நிலவு திருநல்லூர், புள்ளமங்கை, மயிலாடுதுறை, குடந்தை ஆகிய காவிரிக் கரையோரச் சிவத்தலங்களைச் சம்பந்தர், பாடியுள்ளார். 
அப்பர், 'திரையரும் புனல் பொன்னித் தீர்த்தத்தைப்' பாடியுள்ளார். தொண்டரடிப் பொடியாழ்வார், 'கங்கையின் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தில்' என்று கங்கையிலும் காவிரி புனிதமானது என்று பாடியுள்ளார். 
காவிரிக் கரையின் விளைச்சலான கம்பர், கங்கையைச் சொல்லும் போதெல்லாம் காவிரியைக் குறிப்பிடுகிறார். பால காண்டத்தில் இராமனும் இலக்குவனும் மிதிலைக்குச் செல்லும் வழியில் கங்கையைப் பார்க்கிறார்கள். அதைக் கம்பர், 'பொன்னியைப் பொருவும் என்னும் அக்கரை பொருதிரு நதி கண்டனர்' என்று காவிரியைப் போல இருக்கும் கங்கை நதியைப் பார்த்ததாகப் பாடுகிறார்.
பாரதியார், 'காவிரி தென்பெண்ணை பாலாறு' என்று நதிகளின் பட்டியலில் காவிரிக்கு முதலிடம் தருகிறார். 'கங்கையைப் போல் காவிரி போல் கருத்துகள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்' என்று சிந்தனை விளைவிக்கும் வயல் காவிரி என்று பாரதிதாசன் பாடுகிறார். இப்படிப் பட்டினப்பாலை உருத்திரங்கண்ணனார் முதல் பாரதி வரை காவிரியைப் பாடியுள்ளனர். 
காவிரி, நீர் தரும் ஆறாக மட்டுமிருந்தால், கடல் நீரைக்கூட மாற்றாகப் பயன்படுத்தலாம். ஆனால் காவிரி, தமிழர் நாகரிகம் வளர்த்த நதி - வளர்க்கும் நதி. காவிரி போலக் கடல் நீர் தமிழ் வளர்க்குமா? காவிரி நீர் விவசாயத்துக்கு மட்டுமில்லை; மொழிக்கும் பண்பாட்டுக்கும் உயிர் நீர். அந்நியர் ஆட்சியிலும் தமிழ் வளர்த்த நீர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டில் தமிழுக்குச் சொத்து சேர்த்தவர்கள்; தமிழின் கருவூலங்களை மக்களிடம் சேர்த்தவர்கள் இருவர். இப்போதும் தமிழின் சொத்தாக இருக்கும் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையையும் தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்களையும் தந்தது காவிரி.
அது சரி, தண்ணீருக்காகவா இப்படிப் பாடியிருப்பார்கள்?
நாட்டுக்குப் பெயர் காவிரிநாடு; அரசனுக்குப் பெயர் காவிரிநாடன்.
தமிழின் விளைபொருள் காவிரி. 
தமிழின் ஆதி இலக்கணம் தந்ததாகக் கருதப்பெறும் அகத்திய முனிவரின் கமண்டல நீரைக் காக்கை வடிவில் சென்ற பிள்ளையார் கவிழ்த்தார் என்றும் காகம் விரித்த நீர் ஆதலின் காவிரி ஆயிற்று என்றும் கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கும் காவிரியில் கதை உண்டு. 
கா என்றால் சோலை; சோலைகளைச் செழிக்க விரிந்தமையால் காவிரி என்று பெயர் பெற்றது என்று சொல்லாராய்ச்சியாளருக்கும் காவிரியில் இடம் உண்டு.
காவிரி, ஆறு மட்டும் இல்லை; தமிழ்நாட்டை வாழவைக்க வந்த நாட்டுப்பெண். பட்டுப் புடவை, மாலை, மஞ்சள் கயிறு ஆகியவற்றை இலையில் வைத்துக் காவிரி ஆற்று நீரை இப்போதும் வரவேற்கிறார்கள். ஆடிப்பெருக்கில் புது மணமக்கள் வந்து இப்போதும் காவிரியிடம் வாழ்த்து பெறுகிறார்கள்.
'கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை' என்றும், 'தவாநீர்க் காவிரிப் பாவை' என்றும் காவிரியை மணிமேகலை குறிப்பிடுகிறது. 
ஆக்கினேய புராணத்தின் காவேரி மான்மியத்தில் காவிரி பற்றிய கதை ஒன்று வருகிறது. கவேரர் என்பவர் தவம் செய்து பெற்ற மகள், பிரமன் கட்டளைப்படி நதி வடிவு கொண்டாளாம். கவேரகன்னி என்பது காவேரி ஆயிற்று என்று புராணமும் இருக்கிறது.
காவிரி வாழ்க்கையின் அடையாளம்.
வெள்ளப் பெருக்கில் கல்லை மண்ணாக்கிக் கரைத்து, காவிரி அமைத்த நுண்மணல் மேடுகளில் ஊர்கள் உருவாகி மக்கள் வாழ இடங்களைத் தந்திருக்கின்றன. இதை அகநானூறு, 'எக்கர் இட்ட குப்பை வெண்மணல்' என்று குறிப்பிடுகிறது. 
காவிரி, வண்டலில் பயிர் வளர்த்திருக்கிறது. வாழ்க்கைக்கு உயிர் அளித்திருக்கிறது. 
அகநானூற்றில், பொருள் தேடிப் போனவன் புலம்புவதாகப் பரணர் பாடுகிறார். சூரியக் கதிர் மறைத்து வானத்தில் வட்டமடிக்கிறது பறவைக் கூட்டம். ஆலமரத்தடியில் பொழில்களில் மணல்வீடு கட்டி விளையாடுகிற சிறுமியர் செய்த மணல் பாவைகளைக் காவிரி வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாம்.
காவிரி, கடலில் கலக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில் மணல்வீடு கட்டிச் சோறு ஆக்கி விளையாடிய பெண்களிடம் காதல் பேசும் ஒருவனைப் போந்தைப் பசலையார் காட்டுகிறார். 
பெண்ணே, எனக்கும் இலைபோட்டு விருந்து வைப்பீர்களா? என்று அவன் கேட்கிறான். பெண்கள் வெட்கத்தில் மணல்வீட்டில் ஒளிய இடமின்றித் தலைகுனிந்து ஒருவர் முதுகில் ஒருவர் ஒளிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அப்போது இந்தக் கொழுமீன் உணவு உனக்கு ஆகாது என்று ஒரு குரல். அவனுக்குத் துணிச்சல் வருகிறது. பூம்புகார்க் கடலில் மிதக்கும் கப்பல்களில் பறக்கும் கொடிகளைக் காட்டிப் பார்ப்போம் வாருங்கள் என்று கூப்பிட்டுக்கொண்டே மணல் வீட்டைக் காலால் சிதைத்து ஓடுகிறான். பெண்கள் அப்படியே நிற்கிறார்கள். திரும்பிப் பார்க்கிறான். கூட்டத்தில் நிற்கும் பெண்களில் குரல் கொடுத்தவளைக் குறிப்பாகப் பார்த்து, நான் வரட்டுமா? என்று கேட்கிறான். அவளுக்குப் படபடக்கிறது நெஞ்சு. சரி என்று சொல்கிறாள். அம்மாவுக்குத் தெரிந்தாலும் தெரியட்டும் அல்லது வம்பளக்கும் இந்த ஊர் மக்களின் வாய்க்கு அவலாக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று தோழியிடம் தெரிவிக்கிறாள். இப்படியான வாழ்க்கையைக் காட்டுகிறது காவிரி.
விளைநில வயல்களில் வளரும் பயிர்களை மிதித்துத் துவைக்கும் நாரைகளை விரட்டும் மகளிரையும் அணிகலன்களைக் கழற்றாது காவிரிக் கரை ஊர்களில் இரவிலும் பகலிலும் குரவைக்கூத்து ஆடும் மகளிரையும் பதிற்றுப்பத்து (73) காட்டுகிறது. 
நாகநாட்டு அரசன் மகள் பீலிவளை நெடுங்கிள்ளியைக் காதலித்ததாகவும் காதலன் பிரிந்தபின் மகனுடன் மணிபல்லவத் தீவில் புத்தர் கோவிலில் வழிபட்டுக்கொண்டிருக்கும்போது மரக்கலத்தில் வந்த கம்பளச் செட்டியிடம் மகனை நெடுங்கிள்ளியிடம் ஒப்புவிக்குமாறு சொல்கிறாள். வழியில் மரக்கலத்தோடு அவள் மகனும் மூழ்கிய செய்தி அறிந்து நெடுங்கிள்ளி, காவிரிக் கரைகளிலும் காவிரிப்பூம்பட்டினக் கடலோரத்திலும் தேடி அலைகிறான். இந்தத் துயரில் வழக்கமாகக் கொண்டாடும் இந்திரவிழாவை மறக்கிறான். இந்திரவிழா நின்றுபோன கோபத்தில் மணிமேகலை தெய்வம் சாபம் இடுவதால் காவிரிப்பூம்பட்டினம் கடலுக்குள் மறைகிறது என்று மணிமேகலையில் கதை ஒன்று வருகிறது.
காவிரி தமிழர்களின் தன்னம்பிக்கை.
பொருள்தேடிப் போகிறவன், மனைவியிடம் சொல்லிவிட்டுப் போகிற ஆறுதலைச் சொல்கிற பட்டினப்பாலை 301 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 296 அடிகளில் காவிரியின் பெருமையும் காவிரிப் பூம்பட்டினத்தின் புகழும் சொல்லப்படுகின்றன. இப்படிப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு 16 கோடிப் பொன் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டதாகக் கலிங்கத்துப்பரணி சொல்கிறது. 
திருவெள்ளறை சாசனத்தில், படையெடுத்து வந்த பாண்டியன் செயமாறன், பட்டினப்பாலை அரங்கேறிய பதினாறு தூண் மண்டபம் தவிர அரண்மனை முழுதையும் அழித்தான் என்று உள்ளது. இடிக்கிறவனுக்குள் கூட காவிரியின் ஈரம் இருந்திருக்கிறது.
காவிரி தமிழர்களின் வளர்ப்புத் தாயாகவும் இருந்திருக்கிறது. 
சூரியன் நான்கு திசைகளிலும் தோன்றினாலும் வெள்ளி விண்மீன் தென்திசை செல்லினும் அழகிய குளிர்ந்த காவிரி, வாய்க்கால்களாகப் பிரிந்து ஓடி உயிர்களை ஊட்டி வளர்ப்பதை,
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தன் காவிரி வந்து கவர் பூட்ட 
என்று புறநானூறு சொல்கிறது.
சனி புகைந்தாலும், தூமகேது தோன்றினாலும், விரிந்த கதிரினையுடைய சுக்கிரன் தென் திசைக்குச் செல்லினும், காற்று மோதும் குடகுமலையின் உச்சியில், இடியுடன் மேகம் நீர் பொழியும் வளத்தைக் குடமலைப் பிறந்த பொருள்களோடு கடல்வளம் நோக்கி வரும் காவிரிப் புதுநீர் என்று,
கரியவன் புகையினும்
புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந்து ஒலிக்கும்
என்று தடை பல கடந்து வரும் காவிரிப் புது நீரைச் சிலப்பதிகாரம் பாடுகிறது.
பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யாதளிக்கும் புனல் நாடு
என்று சேக்கிழார் சொல்கிறார்.
விக்கிரமச் சோழன் 'உலா பொய்யாத பொன்னி' என்று போற்றுகிறது. 
'வற்றாத பொன்னி நதி' என்று வாழ்த்துகிறது தக்கயாகப் பரணி. 
'காவிரியன்னத் தப்பாக் கருணையான்' என்பது வில்லிபாரதம்.
இப்போது பட்டினங்கள் பாலையாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பட்டினப்பாலை,
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைஇய கடல் காவிரி
புனல் பரந்து பொன்கொழிக்கும்
என்று போற்றுகிறது. இப்படி, எல்லாக் காலத்தும் மக்களை வளர்த்து வந்த, பொய்க்காத காவிரியை இப்போது பொய்யாக்கலாமா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com