புதிய இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளில் மிகமுக்கியமானவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். இந்திய அரசியல் சாஸனத்தை வகுத்துக் கொடுத்த சட்ட மேதை அம்பேத்கர் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. தீண்டாமை இழிவுகளை ஒழிக்கவும் சாதி ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்து சமத்துவத்தை நிலைபெறச் செய்யவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர் என்பதும் நமக்குத் தெரியும். பல்துறை வித்தகரும் தலைசிறந்த படிப்பாளியுமான அம்பேத்கர் ஒரு மேன்மையான பொருளாதார வல்லுநர், மிகச்சிறந்த அரசியல்வாதி, தேர்ந்த வழக்கறிஞர், சமூக நீதி போராளி என்பது மிக முக்கியமானதாகும்.
1921-இல் தொழில்முறை பொருளாதார அறிஞராகப் பணியாற்றியபோது பொருளாதாரம் குறித்து மூன்று புத்தகங்களை எழுதினார். 1. கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company). 2. பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India), , 3. ரூபாயின் சிக்கல்கள் மூலம் தீர்வும் கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்காற்று அமைப்பான SEBI உரு வாக்கப்பட்டதற்கும், அம்பேத்கரின் புத்தகங்களே ஆதாரமாகும். பாரத நாட்டின் பொருளாதார நிதி நிலைகளை உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒப்புநோக்கி ஆராய்ச்சி செய்து அவர் எழுதியுள்ளார்.
பரோடா மன்னரின் உதவியுடன் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடம் பயில 1913-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை பெற்றார். அப்பல்கலைகழகத்தில் பொருளாதரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களில் தலைச்சிறந்த மாணாக்கராய் திகழ்ந்தார். 1915-இல் பண்டைய இந்தியாவில் வணிகம் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி முதுகலைப்பட்டம் பெற்றார். மேலும் இந்திய தேசிய பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு எனும் தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார். இக்கட்டுரைக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இன்றளவும் இந்தியாவில் நிதி நிலை அறிக்கை வெளியிடும்போது பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் எடுத்துப் படிக்கும் உயர்ந்த நூலாக விளங்குகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை பரவலாக்குதல் எனும் ஆராய்ச்சி கட்டுரைக்கு 1921-இல் முதுகலை அறிவியல் பட்டம் வென்றார். ரூபாயின் பிரச்னை என்கிற ஆய்வுக்கட்டுரைக்கு 1923-இல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். இந்தியாவின் அரசியல் சாஸனத்தை உருவாக்கும்போதும் சட்ட அமைச்சராக பணியாற்றும்போதும் பாரதநாட்டின் பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
சாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட அன்றைய சமுதாய சூழலில், தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினரும் கல்வி கற்க முடியும், கல்வியின் மூலம் சாதனைகள் படைக்க முடியும் என்பதை நிரூபித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று, தான் ஒரு தலைசிறந்த கல்விமான் என்பதை நிரூபித்தார். வறுமையிலும், தீண்டாமைக் கொடுமைகளிலும் நேரடியாக பாதிக்கப்பட்ட அம்பேத்கர், தனக்கு வந்த துன்பங்களை பொறுத்துக் கொண்டு கல்வியில் பெரும் சாதனை படைத்தார்.
'தீண்டாமைக் கொடுமைகள் குறித்து அதில் பாதிக்கப்படாத பிறர் என்னதான் பேசினாலும் அதன் கொடுந்தன்மையை புரியவைக்க முடியாது. யார் இக்கொடுமைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு துன்பம் அடைகின்றார்களோ, அவர்கள்தான் அந்த வேதனையையும் வலியையும் உணர முடியும். தீண்டாமைக் கொடுமைகளை மாற்றி அமைக்க அவர்களிடமிருந்தே தீர்வு பிறக்கும்' என்று கூறினார்.
அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டாத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதே நேரத்தில் சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையிலும் அதிகாரம் இருக்க வேண்டும் என்று கருதினார். பொது நீர் நிலைகளில், கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை என்பதை சட்டமாக்கி வைத்தார். இந்தியாவில் தீண்டாமை இழிவுகள் சட்டப்பூர்வமாக ஒழிய வழிவகை செய்தார்.
1930-இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்குச் செல்லும்போது, 'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்க வேண்டுமோ அதற்காகப் போராடுவேன். அதே நேரத்தில் சுதந்திர போராட்டத்தையும், இந்திய விடுதலையையும், சுயராஜ்யத்தையும் முழுமையாக ஆதரிப்பேன்' என்று கூறினார். பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஒருபோதும் அவர் பலியானதில்லை. அவர் பாரத நாட்டிற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக இருந்தவர் அல்ல. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், அதாவது, சாதிவாரியாக அதிகாரப் பகிர்வு மற்றும் சலுகைகள் குறித்து விவாதிக்கும்போது, தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினருக்கு (தீண்டாமை இழிவுகளுக்கு ஆளானவர்கள்) தனி வாக்குரிமை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதன் காரணமாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என அண்ணல் காந்தி கடுமையாக எதிர்த்தார், உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24, 1931-இல் காந்திஜிக்கும் அம்பேத்கருக்கும் இடையே 'புனா' ஒப்பந்தம் ஏற்பட்டு இதன்படி தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக தேர்தல் முறையில் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி முறை (Reserve Constituency) உருவாக்கப்பட்டது.
தனித்தொகுதி முறை என்பது தாழ்த்தப்பட்ட இந்து மக்கள் மட்டுமே போட்டியிட முடியும், இசுலாமியர்களோ, கிறிஸ்தவர்களோ, இந்துக்களின் பட்டியல் சாதியினர் அல்லாதவர்களோ அதாவது உயர் சாதியினரோ ரிசர்வ் தொகுதிகளில் போட்டியிட முடியாது. இந்து பட்டியல் சாதியினர் என போலிச் சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டால் சட்டப்படி குற்றமாகும். பட்டியல் சாதியினரின் இட ஒதுக்கீட்டில் பிறர் ஆகிரமிப்பு செய்வதைத் தடுத்தார். இட ஒதுக்கீட்டு சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றைப் பெற இந்துக்களாக இருந்தால் மட்டுமே முடியும் என்கிற நிலையை அம்பேத்கர் உருவாக்கினார்.
இந்திய -பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜனத்தொகை பரிவர்த்தனை செய்து கொள்வதே இந்து -முஸ்லிம் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்று கூறினார். அதாவது இந்தியாவில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு, பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.
காஷ்மீருக்கு அரசியல் சாஸன பிரிவு 370-இன் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை கடுமையாக எதிர்த்தார். பாரத நாட்டின் இணைப்பு மொழியாகவும், மத்திய அரசின் நிர்வாக மொழியாகவும், சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்ததில் அம்பேத்கருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இதே போல தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள் பலவற்றை உருவாக்கினார். சிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளரான அம்பேத்கர், 'ஆரிய திராவிட இனவாதக் கொள்கைகள் பகுத்தறிவுக்குப் பொருத்தமானவை அல்ல; இத்தகைய பிரிவினைக் கொள்கைகளுக்கு வரலாற்றில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றைத் திரித்து திணித்த ஆரிய- திராவிட இனவாதக் கொள்கைகளை குப்பைத் தொட்டிகளில் போடுங்கள்' எனக் கூறியுள்ளார்.
தீண்டாமை கொடுமைக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினருக்கு பாடம் புகட்டும் வகையில், மதம் மாறப் போவதாக அவர் அறிவித்தார். பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தாலும், சாகும்போது நான் இந்துவாக சாகமாட்டேன்என்று பகிரங்கமாக கூறினார். அவரது மதமாற்ற அறிவிப்பை தொடர்ந்து ஹைதராபாத் நிஜாம் உள்ளிட்ட மன்னர்களும் இசுலாமிய மதத் தலைவர்களும் அம்பேத்கரை அணுகி, இசுலாமிய மதத்திற்கு மாறி வரும்படியும் அவரோடு மதம் மாறி வருகின்ற லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் ஆசைகாட்டி அவரை இசுலாமியராக மாற்ற முயற்சித்தனர். இதே போல ஆங்கிலேய அதிகாரிகளும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் அவரை கிறிஸ்தவராக மதம் மாறும்படி அழைப்புவிடுத்தனர்.
ஆனால் அம்பேத்கர் இந்த அழைப்புகளைப் புறக்கணித்து புத்த சமையத்திற்கு மதம் மாறப் போவதாக அறிவித்தார். 1930 முதல் புத்த சமயத்தின் மீது தனது நாட்டத்தைச் செலுத்தினார். இலங்கையிலும், பர்மாவிலும் (இன்று மியான்மர்) நடைபெற்ற பௌத்த சமய மாநாடுகளில் பங்கேற்றார். 1955-ஆம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபையை தோற்றுவித்தார். 1956-ஆம் ஆண்டு புத்தரும் அவரின் தர்மமும் என்ற புத்தகத்தை எழுதினார். இலங்கை புத்தமத தலைவர் ஹம்மலவா சதாதிஸ்ஸாவை கலந்துபேசிய பின், அம்பேத்கர் அக்டோபர் 14, 1956-இல் நாக்பூரில் உள்ள தீக்ஷôபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர் மதம் மாறினார்கள்.
இந்து சமயத்தில் தீண்டாமைக் கொடுமைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்தார். இந்து சமய சாஸ்திரங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த அம்பேத்கர், மனு ஸ்ம்ருதியில் உள்ள சாதிய அமைப்பு முறை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
வேதங்களில் இருந்தும் புராணங்களில் இருந்தும் தீண்டாமைக்கு எதிராகப் பல்வேறு ஆதரங்களை எடுத்து எழுதியும் பேசியும் உள்ளார். இந்து சமயத்தை சீர்திருத்த பெருமுயற்சி செய்தார். அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமான சாதித் தலைவர் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான, அனைத்து சமுதாயத்திற்கான தேசியத் தலைவர் ஆவார். இந்த மாமனிதரின் பிறந்த நாளில் அவரது கொள்கைகளைப் பின்பற்றி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்.
ஏப்ரல் 14
பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.