புதிய இந்தியா கனவை சிதைக்கும் கும்பல்கள்!

இந்தியாவில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் (மாஃபியா) பண பலத்தாலும், ஆள்பலத்தாலும் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றன.
புதிய இந்தியா கனவை சிதைக்கும் கும்பல்கள்!

இந்தியாவில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் (மாஃபியா) பண பலத்தாலும், ஆள்பலத்தாலும் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றன. சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு நாணமற்று சிறைக்குச் செல்லும் சிலர், அங்கு நவீனரக செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தியபடி ராஜபோக வாழ்க்கை வாழ்வதுடன், சிறைக்குள்ளிருந்தே தங்களது அரசியல் மற்றும் குற்ற நடவடிக்கைகளை எந்தவித தங்கு தடையும் இன்றி மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது அசுரத்தனமான பண பலத்தை வைத்தே, சிறையில் இருந்தபடியே சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல், சுரங்கத் தொழில், கட்டுமானத் தொழில், புகையிலைப் பொருள்கள், மதுக் கடத்தல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் அளவுக்குத் திறன்பெற்றதாக இந்தக் கும்பல்கள் உள்ளன.
எல்லாம்வல்ல, உலகின் வலிமை மிக்க சட்டவிரோதக் கும்பல்களான டிரையாட்ஸ், யகுஸா, ரஷியாவின் பிராட்வா போன்றவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது இத்தாலி மாஃபியாவாகும்.
இதுபோன்ற ஆபத்தான, தேசத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கும்பல்கள் இந்தியாவிலும் பல்வேறு நிலைகளில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன.
வினாத்தாள் கசிவு காரணமாக, அண்மையில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் நிலைகுலைந்து போயினர். கல்வித் துறையில் செயல்படும் சட்டவிரோதக் கும்பலே இதற்குக் காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது. நிலக்கரி கொள்ளை கும்பலைவிட கல்வித் துறை மாஃபியா மிகவும் அபாயகரமானது என மிகவும் மதிக்கத் தகுந்த, நம்பகத்தன்மை வாய்ந்த, திறமைவாய்ந்த கல்வித் துறைச் செயலர் அனில் ஸ்வரூப் தொலைக்காட்சிப் பேட்டியில் ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்தியாவின் எதிர்காலத்தையே இந்த கும்பல் சீரழித்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
திரைமறைவில் செயல்படும் இந்த கும்பல்கள், கட்டுமானப் பணி ஒப்பந்தங்கள், மது உரிமம், அரசுத் திட்டங்கள், முக்கிய அதிகாரிகள் நியமனம், பணியிட மாறுதல் போன்றவற்றில் தீவிரப் பங்காற்றி வருகின்றன.
இந்திய சமூகத்தின் எல்லா விஷயங்களையும் தீர்மானிக்கும் சக்திகளாக இத்தகைய கும்பல்கள் விளங்குகின்றன என்பது வியப்புக்குரியதாக இல்லை. எவ்வளவு பால் விற்கப்பட வேண்டும், எந்த நாளிதழ்கள், பத்திரிகைகள் விற்கப்பட வேண்டும், மருத்துவமனைகளுக்கு எந்த நிறுவனத்தின் மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும், சிறிய தேநீர் கடை எங்கு திறக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களைக் கூட இவர்கள் நிர்ணயிக்கிறார்கள்.
ஊரகப் பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மளிகைப் பொருள்கள் விநியோகித்தல், வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள, வட கிழக்கு மற்றும் தெற்கு இந்தியப் பகுதிகளைச் சேர்ந்த, சுலபமாக ஏமாறக்கூடிய, கடத்தி வரப்பட்ட அப்பாவிப் பெண்களுக்குப் போலி அடையாள அட்டை வழங்கும் கும்பல்கள் நாடு முழுவதும் புற்றீசல் போல் பெருகியுள்ளன. சட்டத்துக்கு உள்பட்டும், சட்ட விரோதமாகவும் பெரும்பான்மையான சேவைகளை வழங்கும் புதிய இடைத்தரகர்களாக இத்தகைய கும்பல்கள் உருவெடுத்துள்ளன. அதிகரித்துவரும் இத்தகைய ஆபத்தின் சக்தியை அளவிட அனில் ஸ்வரூப்பை விட சிறந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. இதற்கு முன்னர் அவர் நிலக்கரித் துறையில் பதவி வகித்துள்ளார். இந்தத் துறைதான் ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் கோடி கருப்புப் பணம் உருவாவதற்கு களமாக இருந்துவந்துள்ளது. இந்தத் துறையில் இடைத்தரகர்கள் ஊடுருவியதைக் கண்ட பல அதிகாரிகளில் இவரும் ஒருவர். 
மக்களின் அன்றாட வாழ்க்கையில் இத்தகைய கும்பல்களின் பிடி இறுகுவது குறித்து நீதித் துறை முதல் நாடாளுமன்றம்வரை அனைத்து அமைப்புகளும் கவலை கொண்டுள்ளன. சமீபகாலம் வரை, இந்த கும்பல் கலாசாரம் பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்புடைய செயல்களில் மட்டும் இருந்து வந்தது. நதிப்படுகைகளில் இருந்து மணல் திருடுவது, சட்டவிரோதமாக சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டுவது போன்ற செயல்களை பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில ஜாதி தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கடும் குற்றவாளிகள் உள்ளூர் நிர்வாகத்தினருடன் சேர்ந்து கொண்டோ அல்லது லஞ்சம் வழங்கியோ, சுரங்க ஒப்பந்தங்களை மிகவும் சல்லிசான கட்டணத்தில் பெற்றதுடன், ஒதுக்கப்பட்டதைவிட அதிகமான பகுதிகளில் இருந்து நிலக்கரியைத் தோண்டி எடுத்துக் கொண்டனர்.
காலப்போக்கில், வட இந்தியாவில் மட்டுமல்ல, தென் இந்தியாவிலும் அரசியல் தலைவர்களுக்குப் பணம் கொழிக்கும் சுரங்கங்களாக சட்ட விரோத சுரங்கத் தொழில் ஆகியது. தேர்தல்களில் முக்கிய சக்திகளாக இந்த அரசியல் மாஃபியாக்கள் உருவெடுத்தன. இன்று, இத்தகைய கும்பல்களின் ஆதிக்கம் அங்கிங்கெனாதபடி எங்கும், எல்லா விஷயங்களிலும் பரவிவிட்டது.
பல்வேறு மருத்துவமனைகளுக்குப் போலி மருந்துகளை விநியோகிப்பதில் சில கும்பல்கள் ஈடுபட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை உள்ளடக்கிய தேசத்தின் சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் எந்தவிதமான மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதைக் கூட இந்த கும்பல்கள் தீர்மானிக்கின்றன. ஆபத்தான அல்லது பலனளிக்காத மருந்துகள், நோயைக் குணப்படுத்துவதற்கு பதிலாக உடல்நலக் குறைபாடு அதிகரிப்பதற்கு காரணமாக ஆகிவிட்டது. முறையற்ற மருந்துகளின் காரணமாக நோயாளிகள் மரணமடைவதும், ஊனமடைவதும் அதிகரித்துவருகிறது.
இந்தியா முழுவதும் உரிமம் பெற்ற தொழிற்சாலைகளில், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள், கள்ளச் சாராயத்தைக் கடத்துவதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை சில கும்பல்கள் ஈட்டுகின்றன. இதுவே அரசியல் கட்சிகளுக்குப் பெரும் நிதி ஆதாரமாக உள்ளது. வரி ஏய்ப்பையும் தாண்டி, கள்ளச் சாராயம் மற்றும் விஷச் சாராயம் அருந்தி ஒவ்வோர் ஆண்டும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
ஆறுகள் வறண்டுபோவதற்கும், வனங்கள் மாயமாவதற்கும், குடிசைப் பகுதிகள் பெருகுவதற்கும் நில, வன, மணல் மாஃபியாக்களே காரணம். அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இயங்கும் இத்தகைய கும்பல்கள், ஆற்றுப் படுகைகளையும், சுரங்கங்களையும் கையகப்படுத்தி, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத குடிசைப் பகுதிகளை சட்டவிரோதமாக உருவாக்குகின்றன. இந்தியாவின் நகரப் பகுதிகளில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கின்றனர். இந்த கும்பல்கள் பொது இடங்களை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், ஆற்றுப் படுகை, வறண்ட நீர்நிலைகள், வனங்களில் வணிக ரீதியான கட்டடங்களையும், குடியிருப்புகளையும் கட்டியுள்ளனர்.
சில மாநிலங்களில், தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் கூட இந்த கும்பல்கள் ஆக்கிரமித்துள்ளன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் மதிப்பு நாட்டின் மொத்த ஜி.டி.பி.யைவிட அதிகம் என அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கல்வித் துறையில் புதிய புதிய கல்வித் தந்தைகள், ஏராளமான மருத்துவக் கல்லூரிகளையும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் நிறுவியுள்ளனர். அறிவுத் திறனை உருவாக்கும் கல்வித் திட்டத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் இவர்கள், பாடத் திட்டத்தை வடிவமைப்பதில் ஆதிக்கம் செலுத்துவதுடன், கற்பிக்கும் முறையையும், தேர்வுகளையும் கூடத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்வு எழுதாமலேயே பட்டம் பெறுவது, மிகவும் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருவது, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பது, பிகாரில் நடந்ததுபோல தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் உள்ளிட்ட சிறப்பிடங்களைப் பெற்றுத் தருவது போன்றவற்றையும் இந்த கும்பல்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு செய்கின்றன.
சிறிய நகரங்களிலும், கிராமப் பகுதிகளிலும் சிறுவர்களைக் கடத்தும் கும்பல்கள் வெகுவேகமாக அதிகரித்து வருகின்றன. கிராமப் பகுதிகளில் வேளாண்மை நஷ்டம் அளிக்கும் தொழிலாக மாறி வருவதால், சிறார் தொழிலாளர்களாகப் பணியாற்றத் தங்கள் குழந்தைகளை நகரப் பகுதிகளுக்கு அனுப்பும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பாலியல் ரீதியாகவும் பெரும் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த வர்த்தகத்தில் மட்டுமே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
நகரப் பகுதிகளில் சிறியசிறிய நிறுவனங்கள் பிரபல நிறுவனங்களின் பொருள்களின் பெயர்களில் போலிப் பொருள்களைத் தயாரிக்கின்றன. அத்தகைய போலிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இதுபோன்ற சிறுவர், சிறுமியர் பணியமர்த்தப்படுகின்றனர். ஏராளமான சிறுவர், சிறுமியர் கடத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, ஊமையாக்கப்பட்டு பிச்சைக்காரர்களாக ஆக்கப்படுகின்றனர்.
இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், ஆளுகை நவீனமாக்கப்பட்டு வருகிறது; கண்காணிப்பு சாதனங்களும் மேம்படுத்தப்படுகின்றன; ஆனால் அதே நேரத்தில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அதிகாரத்தின் பல நிலைகளில் உள்ளவர்களின் துணையுடன் அரசுக்கு இணையாக சாம்ராஜ்யம் நடத்திவருவது முரண்பாடாக உள்ளது.
போலி டாக்டர்கள், தரம் குறைந்த ஆசிரியர்கள், உயிர்கொல்லி மருத்துவமனைகள், நச்சுத் தன்மை கொண்ட நீர்நிலைகள், பயனற்ற ஆயுத தளவாடங்கள், மாசுபடுத்தப்பட்ட சுற்றுச்சூழல் போன்றவற்றை வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடச் செய்யும் சட்டவிரோத கும்பல்கள் புதிய இந்தியா என்ற கற்பனைக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. நேர்மையான, உறுதியான அதிகாரிகளுக்கு ஆதரவளித்து, சட்ட விரோத கும்பல்களின் பிடியை முறியடிக்கவில்லை எனில், இந்தியாவின் ஆன்மா பேராபத்தை சந்திக்க நேரிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com