நம் தேசத்தில் அரசுப்பணிகளில் இருப்பவர்கள் முதற்கொண்டு - எல்லாத் துறையினரும் தங்கள் குறைகளை களைவதற்கென சங்கங்கள் வைத்துக் கொள்கிறார்கள். அமைப்பு சாராதப் பிரிவில் வேலை செய்பவர்கள்கூட, தங்கள் குறைகளை எடுத்துக் கூறி நிவர்த்தி செய்ய வழிமுறைகள் இருக்கின்றன .
ஆனால், தாம் யாரிடத்தில் தொழில் செய்கின்றோம், எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறோம், வாங்கும் சொற்ப சம்பளத்துக்கு எவ்வளவு பெரிய 'விலை' தருகிறோம் என எதுவுமே தெரியாதவர்கள் குழந்தை தொழிலாளிகள் மட்டுமே. குழந்தைப் பருவத்துக்கென்று இருக்கும் மகிழ்ச்சி, குறும்பு, சலுகைகள், உரிமைகள் என அனைத்தையும் சொற்ப கூலிக்காக இழக்கின்றனர்.
கிராமங்களில் வீட்டு வேலை, விவசாயம் - அதனைச் சார்ந்த கால்நடை பராமரிப்பு போன்ற சிறு வேலைகள் என பல வேலைகளிலும் மற்றும் நகர்ப் பகுதிகளில் 'டீ' கடைகள்- இருசக்கர மெக்கானிக் கடைகள், சலவைத் தொழில், மளிகைக் கடைகள், துணிக் கடைகள், முறுக்கு போன்ற பட்சணங்கள் தயாரிப்பது, விற்பது, உணவகங்கள் என பல வேலைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதைவிட கொடுமை, மதுக் கடைகளிலும் அதனை அடுத்துள்ள 'பார்'களிலும் எடுபிடி வேலை செய்யும் அவல நிலை.
பல சிறு தொழிற்கூடங்களில் சிறுவர்கள் வேலை செய்வதும் நிகழ்கிறது; ஜொலிக்கும் கண்ணாடி வளையல் முதல் தீப்பெட்டி, செங்கல் சூளை என நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல பொருட்களுக்குப் பின்னால் ஏராளமான குழந்தைகளின் உழைப்பும் கண்ணீரும் கலந்திருக்கிறது.
சில குடும்பங்களில் தந்தை உயிரோடு இல்லாத சூழல், குடும்பத்தின் பாரத்தை பங்கு போட வேண்டிய நிலைக்கு குழந்தைகளைத் தள்ளுகிறது. சில குறிப்பிட்ட தொழில்களில் சிறுவர்களது உடல்வாகு, சுறுசுறுப்பு, வேகம், இவை தவிர, மலிவான கூலி, இவர்களை அதிக அளவில் வேலைக்கமர்த்தத் தூண்டுகிறது.
அவர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லை, கால நேர வரம்புகள் இல்லை; இன்றைக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில், இரவு நேரத்தில் தொழிற்கூடத்தை பெருக்குதல், இயந்திரங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவது பலருக்கும் தெரிந்ததே.
சில குறிப்பிட்ட வேலைகளில், பெரியவர்கள் எவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியுமோ அதே அளவுக்கு சிறார்கள் செய்ய முடியும் என்ற நிலை இருக்கும்போது, அங்கு பெரியவர்களைவிட சிறாருக்கு முன்னுரிமை -காரணம் சிறுவர்களுக்கு சம்பளம் குறைவு.
இதன் தொடர் விளைவாக, அத்தொழிலில், பெரியவர்களின் தினசரி சம்பளமும் குறைக்கப்படுகிறது; குழந்தை தொழிலாளர்கள் - பெரியவர்கள் வேலை இழப்பு - பெரியவர்கள் சம்பளக் குறைப்பு - செலவினத்தை ஈடுகட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிர்பந்தம் என்ற விஷ வளையம் இவ்விரு சாராரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும்.
சிறுவர்களைப் பணிக்கமர்த்தும் தொழிற்கூடங்களில் - குடிசைத் தொழில்களில், பெரும்பாலும் உற்பத்தி எண்ணிக்கையின் அடிப்படையில் சம்பளம் தரப்படுவதால் அதிக கூலி கிடைக்கும் என்ற நப்பாசையில் சிறுவர்கள் அதிக நேரம் வேலை செய்வர்.
உரிமையாளர், கண்காணிப்பாளர்களால் நிந்திக்கப்படுதல்; தம் வயதுடையோர் பள்ளிக்கு செல்வதனைப் பார்த்து ஏக்கம்; கிடைக்கும் சம்பளம் பெற்றோரால் பிடுங்கிக் கொள்ளப்படுதல் போன்றவை பெரும் மன அழுத்தம் தரும்... மன அழுத்தம் என்றால் இன்னதென்று பொருள் அறியாதவர்கள் அதனை அனுபவிப்பதுதான் கொடுமை.
இவர்கள் மலிவான கூலியினர், தங்கள் உரிமைகளை அறியாதவர்கள் என்பதால், தமது இஷ்டப்படி வேலை வாங்குகின்றனர் உரிமையாளர்கள். குழந்தை தொழிலாளர்களை மீட்பது என்பது, வெறுமனே அவர்களை அந்தத் தொழிற்கூடத்தில் இருந்து வெளிக்கொணர்வது மட்டும் அல்ல; குழந்தை தொழிலாளி உருவாவது என்பது ஒரு விளைவு ஆகும்; அதன் காரணங்கள் கண்டறியப்பட்டு, அவை முழுதுமாய் அகற்றப்பட வேண்டும்; மீண்டும் அத்தகைய சூழல் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும்.
இதனை சாதிக்க, அரசு இயந்திரங்கள் மட்டும் போதாது; தனியார் தொழில்துறை - அரசு சாரா பொதுநல அமைப்பினர், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், உளவியல் வல்லுநர்கள், ஊடகங்கள் என பலரும் முழுமனதோடு ஈடுபாடு காட்ட வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில், பள்ளிக்கூடங்கள் அநேகமாக எல்லா கிராமங்களில் இருப்பதாலும், அங்கு மதிய உணவு உறுதி செய்யப்படுவதாலும், விழிப்புணர்வு பெருகியிருப்பதாலும், கடந்த 30ஆண்டுகளில் பெருமளவு குழந்தை தொழிலாளர்கள் குறைந்திருப்பது கண்கூடு; தற்போது, இந்தியாவில், மிகக் குறைந்த குழந்தை தொழிலாளர்கள் பட்டியலில் தமிழகம் 5-ஆம் இடம் வகிக்கிறது. 1990-இல் 6 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் என இருந்த கணக்கெடுப்பு, தற்போதைக்கு, ஏட்டளவில், பதினைந்தாயிரத்துக்கும் குறைவு எனக் கூறப்படுவது ஆறுதலான விஷயம்.
சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் பயந்து, பல இடங்களில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தும் போக்கு குறைந்துவருகிறது என்பது உண்மைதான். இப்படிப்பட்ட சூழலில், தனி மனிதன் செய்யக் கூடியது என்ன?
நாம் தனிப்பட்ட முறையில் 15 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் இருப்பது, மற்றும் நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் சிறுவர்களை பணிக்கமர்த்துவது தவறு என்றும் எடுத்துரைப்பது; நம்மிடம் பணிபுரிபவர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைத் தடுப்பது. அவர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு எடுத்துரைத்து, சிறார்களை மீட்டு கல்விக் கூடங்களுக்கு அனுப்ப உதவலாம்; அரசு சாராத சேவை அமைப்புகளின் உதவியைப் பெற்றும் தரலாம்.
இவற்றை செய்வதன் மூலம், ஒரு சில குழந்தைகளின் முகத்தில் புன்னைகை மலரச்செய்யலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.