மத்திய - மாநில அரசுகள், மக்களின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்தி வருகின்றன. இதற்கென ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, அது குறித்த அறிவிப்புகளை, சாதனைகள்' என்ற பெயரில் விளம்பரப்படுத்தி வருகின்றன. மகளிர், குழந்தைகள், இளைஞர்கள், முதியோர், விளையாட்டு வீரர்கள், தொழில் முனைவோர் என ஒவ்வொரு பிரிவினரையும் ஈர்க்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளில் அனைத்து நாளிதழ்களிலும் மத்திய, மாநில நிதியமைச்சர்கள் அறிவித்திருக்கும் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், சலுகைகள் என தனித்தனியாக வெளியிட்டிருப்பர். எதிர்க்கட்சிகளின் ஏமாற்றங்களும் இவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நிதிநிலை அறிக்கை வெளியான சில நாள்களுக்கு இவை தொடரும். இது ஆண்டுதோறும் நடக்கும் சடங்கு. சில வாரங்களுக்குப் பிறகு, ஆட்சியாளர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி அனைத்தும் மறந்து போகும்.
இத் திட்ட அறிவிப்புகள் எல்லாம் ஏட்டில் மட்டும் தானா? இதுதான் நம் முன் எழுந்திருக்கும் கேள்வி. இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.
தற்போது, செயலற்றுக் கிடக்கும் சில திட்டங்கள் குறித்துப் பார்ப்போம்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' என்றொரு திட்டம். அதாவது, அனைவருக்கும் வீடு என்பதே இத் திட்டத்தின் கருப்பொருள். நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவதுதான் இத் திட்டத்தின் நோக்கமாகும். இத் திட்டத்தின்கீழ் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் சுமார் 2 கோடி வீடுகளைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம் அளிக்கப்படும். இத் திட்டத்தின்கீழ் வீடு வாங்க, வீடு கட்ட, விரிவாக்கம் செய்ய கடன் பெறலாம். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வருவாய் உள்ளவர்கள் என பிரிவினருக்கேற்ப, அளிக்கப்படும் கடன்தொகை வேறுபடும். இதற்கான கடனுதவியை தனியார் வங்கிகளிலோ, பொதுத்துறை வங்கிகளிலோ பெறலாம். பிரதம மந்திரியின் இந்த வீட்டு வசதித் திட்டம், அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், கடந்த நிதியாண்டில் (2017-18) ஒன்பது மாநிலங்களில் சுமார் 20 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த குறிப்பிட்ட நிதியாண்டில் சுமார் 5 சதவீத வீடுகளே கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, 20 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இத் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 90,000 வீடுகள் கட்ட அனுமதியளித்துள்ளனர். ஆனால், ஒரு வீடு கூட கட்டப்படவில்லை. ஹரியாணா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் இதே நிலைதான். திட்டத்தை முறையாகச் செயல்படுத்த முடியாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம், மாநில அரசுகளிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாததே என்று மத்திய அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
அதுபோல, ஸ்மார்ட் சிட்டி' (பொலிவுறு நகரம்) திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய அரசு அறிவித்தது. அத் திட்டத்தின்கீழ், பல கட்டங்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அவை எல்லாம் எழுத்து வடிவத்திலேயே உள்ளன. செயல் வடிவத்துக்கு வரவில்லை. இன்னும் ஆலோசனைக் கூட்டங்கள் நிலையிலேயேதான் அத் திட்டம் உள்ளது.
அந்த்யோதயா மிஷன்' என்றொரு திட்டம். இதுவும் மத்திய அரசால் கிராமப்புற மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம். இந்தியாவில் சுமார் 8.88 கோடி குடும்பத்தினர் ஏழைகளாக உள்ளனர். இவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே இத் திட்டத்தின் நோக்கம். நகர்ப்புறங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் கிராமப்புறங்களில் கிடைக்கச் செய்வதுவதுதான் இத் திட்டத்தின் நோக்கம். கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என பல்வேறு தரப்பினரையும் மேம்படுத்த இத் திட்டம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளின் கீழ் 25-க்கும் மேற்பட்ட துறைகள், அமைச்சகங்கள் உள்ளன. கிராமங்களில் தன்னிறைவை ஏற்படுத்துவதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத் திட்டத்தின்கீழ், கிராமப்புறங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படுகின்றன. நம் நாட்டில் மொத்தம் சுமார் 6.50 லட்சம் கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 15,600 கிராமங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 3,474 கிராமங்களில் ஒரு கிராமத்தில் கூட திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படவில்லை. அதுபோல, ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களிலும் பெரும்பாலான கிராமங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படவில்லை என்று மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கும் மாநில அரசுகள்தான் காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.
காந்திஜியின் கிராம சுயராஜ்யம் பற்றியும், இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில்தான் உள்ளது என்றும் நாம் பேசி வருகிறோம். ஆனால், சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் கிராமப்புற இளைஞனுக்கு இன்னும் அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லையே! இதை என்னவென்று சொல்வது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.