தொழில் துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய தொழிலை வளர்த்துக்கொள்வதையே, சுரண்டல் முதலாளித்துவம்' என்று பொருளாதாரம் கூறுகிறது. சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவதிலும், நிதி நல்கைகள் பெறுவதிலும் சிறப்பு வரிச் சலுகைகள் பெறுவதிலும் இதர அரசு சார்ந்த வசதிகளைப் பெறுவதிலும் சுரண்டல் தன்மை வெளிப்படுவதே சுரண்டல் முதலாளித்துவம்.
பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு, அரசாங்கம் இதையே வேறு விதமாக செய்து கொண்டு இருந்தது. ஒருவருக்கு இத்தகைய சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவர் வேண்டப்பட்டவராக இருந்தால் இத்தகைய சலுகைகளை வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய தாராளவாத பொருளாதாரத்தில், அரசாங்கம் ஒருசில சொத்துகளின் மீது கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு இருந்தாலும், பாதுகாப்பு போன்ற துறைகளில் அது தாராளமாகச் செலவு செய்து வருகிறது.
அதேசமயம், நிலம், கனிம வளங்கள் போன்ற இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், சுரண்டல் முதலாளித்துவம்தான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஒரு சில தொழிலதிபர்கள், அரசாங்கத்திடம் இருக்கும் நெருக்கத்தினால் கவனம் பெற்றுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக நடந்ததே, ரபேல் ஒப்பந்தம்.
இந்திய அரசாங்கத்துக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான டஸ்ஸல்டு'க்கும் இடையே ரபேல் ராணுவ விமானங்களை வாங்குவதற்குப் போடப்பட்ட ஒப்பந்தம், சுரண்டல் முதலாளித்துவத்துக்குச் சரியான உதாரணம். முந்தைய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை மிக நேர்த்தியாகவும் இந்தியத் தரப்புக்கு லாபகரமாகவும் வடிவமைத்திருந்தது. ஆனால், இன்றைய பிரதமரோ, இந்த ஒப்பந்தத்தை தூர எறிந்ததோடு, இந்திய பொதுத் துறை நிறுவனத்துக்குக் கிடைக்கவேண்டிய ஒப்பந்தத்தை, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கிடைக்கும் விதத்தில் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்துவிட்டார்.
ரபேல் ஒப்பந்தத்தில் சுரண்டல் முதலாளித்துவம் எப்படிச் செயல்பட்டிருக்கிறது? நீங்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்குவதற்கு திட்டமிடுகிறீர்கள். அந்த பிளாட் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கவேண்டும், குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். அதற்குமேல் அது நீண்டகாலம் உழைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். இந்தத் தேவைகளோடு இருக்கும் நீங்கள், எப்படிப்பட்ட பில்டரைத் தேடுவீர்கள்?
அதேதுறையில் நீண்டகாலம் செயல்படும் தரமான அதேசமயம் சரியான நேரத்துக்கு கட்டிக் கொடுக்கும் பில்டரைத்தானே தேடுவீர்கள்? அதேபோல், அந்த பில்டர் பணச்சிக்கல் இல்லாத வசதியானவராகவும் இருக்கவேண்டும் என்று யோசிப்பீர்கள். இல்லையென்றால், அவர் உங்கள் பணத்தை வாங்கி, பிற கடன்காரர்களுக்குக் கொடுத்துவிடலாம். அல்லது வேறு கட்டுமானத்துக்கு செலவழித்துவிடவும் செய்யலாம் அல்லாவா?
இந்த நிலையில் நீங்கள் இரண்டு பில்டர்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதில் ஒருவர் உங்கள் மகனே. அவர் இந்தத் துறையில் பல்லாண்டுகள் முட்டி மோதி, பல்வேறு சிரமங்களைச் சந்தித்து முன்னுக்கு வந்தவர். அவருக்கு நீங்களே உங்கள் பணத்தைக் கொடுத்து, சிரமமான நேரங்களில் காப்பாற்றியுள்ளீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம்.
இன்னொருவரோ உங்களுக்கு நன்கு தெரிந்தவர், அண்டைவீட்டுக்காரர், வெற்றிகரமான பில்டர். தனிப்பட்ட வகையில் செல்வந்தர். அவரது பிளாட்டை வாங்கினால் சிறப்பாகக் கட்டிக் கொடுப்பதாக உறுதியும் அளிக்கிறார். இங்கே பிளாட் என்பதுதான் ரபேல் விமானம், மகன் என்பவர்தான் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்', அண்டை வீட்டுக்காரர்தான் அனில் அம்பானி, நீங்கள்தான் இந்த நாடு.
இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், அனில் அம்பானியின் நிறுவனங்கள் எல்லாம் கடனில் தத்தளிக்கின்றன. விமானத் துறையில் அவருக்கு எந்தவிதமான முன் அனுபவமும் கிடையாது. மேலும், பாதுகாப்புத் துறையில் அவர் மேற்கொண்ட திட்டங்கள் எல்லாம் தோல்வியையே தழுவியிருக்கின்றன. இந்த நிலையில் நீங்கள் யாரிடமிருந்து உங்கள் பிளாட்டை வாங்குவீர்கள்?
அதனால் ஏராளமான பாதிப்புகளும் உண்டு. அதில் ஒன்று, இந்தியாவுக்குத் தம் விமானத் தொழில்நுட்ப அறிவை மாற்றித் தரவேண்டும் என்பது ஒரு விதி. இதனை காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு வலியுறுத்தியதோடு, கடைசிவரை அதில் உறுதியாகவும் இருந்தது. இப்போது இந்த அம்சங்கள் நீக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு பொருளாதார ரீதியான நொண்டிச் சமாதானங்களை இப்போதைய மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
இந்தத் தொழில்நுட்ப பரிமாற்றம் நடந்திருக்குமேயானால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்' நிறுவனம் 108 போர் விமானங்களையும் உற்பத்தி செய்திருக்கும்; எதிர்காலத் தேவைகளுக்கான அடித்தளத்தையும் அமைத்துக்கொண்டிருக்கும். இந்த நிறுவனத்தில் இந்தியர்கள் பணியாற்றுவதற்கும் அதன் நுட்பங்களைக் கற்றுத் தேறுவதற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதோடு, எதிர்காலத்தில் நமக்கே நமக்கான ஓர் உள்நாட்டு ராணுவ விமானத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கும்.
இது ஒரு மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம். இதன்மூலம் நமது ராணுவம் பெரும் பலம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதோடு, விமானத் துறையில் உள்நாட்டிலேயே தயாரிப்புகளை மேற்கொள்வதற்கான வசதிகளும் பெருகியிருக்கும். இந்தத் தொழில்நுட்ப பரிமாற்றம் என்ற விதிமுறை ஏன் கைவிடப்பட்டது? கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானியைக் காப்பாற்றுவதற்காகவா?
முதலாளிகளுக்கு மதிப்புமிகுந்த சேவைகளையோ பொருட்களையோ உருவாக்க, சந்தை ஒரு சிலருக்கும் மட்டும் வாய்ப்பாக இருக்கக்கூடாது. அது எண்ணற்றோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக பிரதமர் ஒரு விஷயத்தை மட்டும் தான் செய்துவருகிறார். அதிகாரமும் செல்வமும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே குவிவதற்காகன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இத்தகைய சுரண்டல் முதலாளிகளைக் கொண்டே இந்த நாட்டை நிர்வகித்துவிட முடியும் என்றும் அவர் நம்புகிறார். இது இந்த நாட்டின் பொருளாதார வளத்துக்கு மட்டும் பாதிப்பில்லை; ஜனநாயகத்துக்கே ஊறுவிளைப்பதாகவும் அமையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.