விருந்தோம்பல் என்பது தமிழர்களின் தனிப்பண்பு. நம் வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புவோம். வீடு தேடி வருபவர் உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும், வசதி படைத்தவர்கள் விருந்தளிப்பதும், வசதியில்லாதவர்கள் ஒரு கோப்பை தேநீராவது கொடுப்பதும் காலம் காலமாய் நடப்பதுதான்.
வீட்டுக்கு வருகின்ற ஒரு சில விருந்தினர்களைக் கவனிப்பது போன்றே, திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளுக்கு வருகின்ற அதிக விருந்தினர்களையும் தனித்தனியே உபசரிக்கும் வழக்கம் முன்பெல்லாம் இருந்தது. அது இக்காலத்தில் மெல்ல மெல்லத் தேய்ந்து வருகின்றது என்பதே உண்மை.
முன்பெல்லாம் திருமணம் போன்ற வீட்டு விசேஷங்கள் அவரவர் வீடுகளிலேயே நடபெறுவது வழக்கம். காரணம் அன்றைய ஜமீன்தாரர்கள், அரச பரம்பரையினர் போன்ற பெரும் பணக்காரர்களின் வீடுகள், இன்றைய திருமண மண்டபங்களை விட விசாலமாகவும் வசதியாகவும் இருந்தன.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வீடுகள் வசதியாக இல்லாவிடினும், அக்கம் பக்கத்து வீட்டினர் ஒத்துழைப்புடன் வீட்டிலேயே விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம்.
மணமகள் அல்லது மணமகனின் வீட்டில் திருமணமும் அண்டை வீடுகளில் குளியல், சாப்பாடு போன்றவையும் இடம்பெறும்.
திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டினரும் அதைத் தங்கள் வீட்டு விசேஷமாகவே கருதி, ஒவ்வொருவரும் தங்களாலான உதவிகளைச் செய்வதுடன், திருமணம் நடந்து முடிந்து வெளியூர் விருந்தினர்கள் அனைவரும் கிளம்பும் வரை, தங்களது அன்றாடச் செüகரியங்களைச் சற்றே குறைத்துக் கொண்டு ஒத்துழைப்பார்கள்.
அவ்வளவு ஏன், திருமணத்துக்கு சில நாள்கள் முன்பாகவே, பெண்கள் அனைவரும் ஒன்று கூடி, திருமணத்திற்கு வேண்டிய நூற்றுக்கணக்கான அப்பளம், கூடைகூடையாக வற்றல்-வடகம் இவற்றைத் தயாரித்துக் கொடுப்பார்கள். திருமண நாளன்று சிற்றுண்டி, சாப்பாடு, இனிப்பு, பலகாரம் போன்றவற்றையும் அண்டை வீட்டுப் பெண்களே செய்து கொடுத்து உதவுவதும் உண்டு.
வீட்டில் நடைபெற்ற பெரிய விசேஷங்கள் ஒரு காலகட்டத்தில், மெல்ல மெல்ல திருமணக் கூடங்களுக்கு இடம் பெயரத்தொடங்கின. திருமணங்களுக்கு சமையல்காரகளை வைத்துச் சமையல் செய்யும் வழக்கம் உருவானது.
அதன் பின்னர், வளைகாப்பு, சீமந்தம், பிறந்த நாள், அறுபதாம் கல்யாணம் போன்ற சற்றே சிறிய அளவிலான நிகழ்வுகளும் மெதுவாக வீடுகளை விட்டு திருமண மண்டபங்களின் "மினி ஹால்'களுக்கு இடம்பெயரத் தொடங்கின. அவற்றுக்கான சமையலையும் சமையல்காரர்களைச் செய்யச் சொல்வது வழக்கமானது.
சமையல்காரர்கள் சமையலை மட்டும்தான் செய்தார்கள்; வாழைமரம், பந்தல், பால், காய்கறி, பழம், மளிகை, மேளக் கச்சேரி, புரோகிதர் முதலிய மற்ற ஏற்பாடுகளை விசேஷத்தை நடத்தும் வீட்டினரே செய்து வந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக, சமையல்காரர் "சமையல் கான்டிராக்டர்' என்றும் பின்னர் "திருமண ஏற்பாட்டாளர்' என்றும் மறு அவதாரம் எடுக்கத் தொடங்கினார். அவர் கேட்கும் தொகைக்கு ஏற்பாடு செய்து விட்டு, நாம் பத்திரிகை விநியோகிக்கும் கடமையை மட்டுமே கவனித்தால் போதும் என்று ஆகிவிட்டது.
இதைக் கூட ஒருவிதத்தில் ஏற்றும் கொள்ளலாம். வரவேற்று உபசரித்தலைக் கூட "ஏற்பாட்டாளர்' பொறுப்பில் விட்டுவிடுவதைத்தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
திருமணமோ, வரவேற்போ எதுவாயினும் அந்த நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் வருகை தருவது சகஜம்தான். திருமண வீட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் சிலர் திருமண மண்டப வாசலில் நின்று புன்னகைத்தபடி சந்தனம் கொடுத்தும், பன்னீர் தெளித்தும் வரவேற்பார்கள். இப்போது, அதற்கும் கான்டிராக்டர் மூலம் சில "ஒப்பனை' செய்த பெண்கள் சந்தனக் கிண்ணம், குங்குமம், பூக்கள் மற்றும் சாக்லெட்டுகள் வைத்த தட்டுகளுடன் நிறுத்தப்படுகின்றனர். பன்னீர் தெளிக்க மிஷின் வந்துவிட்டது.
சாப்பாட்டுக் கூடத்தில், திருமண வீட்டைச் சார்ந்த பொறுப்பான சிலர் இருந்துகொண்டு, அங்கு வருகிறவர்ளை வரவேற்பார்கள். "கூச்சப்படாமல் சாப்பிடுங்கள்', "உங்களுக்கு எல்லா ஐட்டமும் வந்ததா', "இன்னும் ஏதாவது பரிமாறச் சொல்லவா' என்றெல்லாம் பந்தி விசாரணை செய்வார்கள். இப்போது அதற்கும் "கான்டிராக்ட்'தான். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிவிக்கப் பட்ட கான்டிராக்டரின் ஆட்கள் ஒருசிலரே பந்தி விசாரணை செய்கிறார்கள்.
சில இடங்களில் அதுவும் கிடையாது. பந்தி பரிமாறுபவர்களின் தயவிருந்தால் சற்றே ஆர்வத்துடன் விருந்துண்ணலாம். காதில் கேட்காததுபோல் அவர்கள் போய்க் கொண்டிருந்தால் அதோகதிதான். இலையில் விழுந்த வரையில் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ள வேண்டியது தான். திருமண வீட்டினரே பந்திவிசாரணை செய்யும்போது சாப்பிடுகின்ற திருப்தி, அந்த வீட்டிற்குச் சம்பந்தமில்லாத ஒருவரின் கவனிப்பில் சாப்பிட நேரும்போது நிச்சயம் ஏற்படுவதில்லை.
சின்னச் சின்ன விசேஷங்கள் நடக்கும் போது மட்டுமின்றி, கோயில் திருவிழாக் காலங்களிலும் கூட உறவினர் வீடுகளுக்குச் சென்று நாள்கணக்கில் தங்கியிருந்த காலம் இல்லை இது. நெருங்கிய உறவினர்களையும், குடும்ப நண்பர்களையும் கூட, திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளில் மட்டுமே நேரில் சந்திக்க முடிகின்றது. அதிலும், முதல்நாள் வரவேற்புக்கு வருபவர்கள் மறுநாள் முகூர்த்தத்துக்கு வருவதில்லை.
நிலைமை இப்படி இருக்க, திருமண மண்டப வாசலில் நின்று வந்தோரை வரவேற்கவும், உணவுக் கூடத்தில் அவர்களைப் பந்தி விசாரணை செய்யவும் மட்டுமாவது காண்டிராக்ட் ஆட்களை விடாமல், திருமண வீட்டினரே பொறுப்பேற்றுக்கொண்டு வரவேற்று உபசரித்தால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் ?
இக்காலத்தில் கல்யாணம் என்பது ஒருநாள் நிகழ்வாக சுருங்கி விட்டது. அந்த ஒரு நாளில் கூட நம்மை மதித்து வருகை தரும் விருந்தினர்களை உபசரிக்கவில்லையென்றால் வேறு எப்போதுதான் நாம் உபசரிக்கப்போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.